சென்ற இதழ் தொடர்ச்சி…
நிலவில் நீர் இல்லாமல், நாம் புதிதாகக் கேட்டவுடன் வந்துவிடவில்லை. ஏற்கெனவே நிலவில் நீர் இருந்தது. ஆனால், சரியாகப் பார்க்காததால், கண்டுபிடிக்க முடியவில்லை.
அதேபோன்று எல்லாவற்றிலும் கொஞ்சம் பிறழ்ச்சி இருந்தாலும்கூட, அதற்கான கேள்விகளை சரியாகக் கேட்கும்பொழுது, சரியான விடைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் சரியான பதில்களையும் உருவாக்க முடியும். அதுதான் மிகமிக முக்கியம்.
ஏனென்றால், நேற்று இருந்தது இன்றைக்கு இருக்காது. இன்று இருப்பது நாளை இருக்காது. ஆனால், இன்றைக்கு இருப்பது நேற்று இருந்ததைவிட சிறப்பாக இருக்கவேண்டும் என்றால், அதற்கான வழிமுறைகளை நோக்கி நாம் போகவேண்டும். அதற்கான வழிமுறைகள் என்ன என்பது கேள்வியின் மூலமாகத்தான் உருவாகும்.
உறவுகள் கொஞ்சம் சரிகிறது என்றால், எப்படி சரி செய்வது?
கார் சரியாகச் செல்லவில்லை என்றால், ஒரு டயரில் காற்று குறைவாக இருக்கலாம். அதை சரி செய்யவேண்டிய அவசியம் இருக்கும். உறவுகளும் அதேபோன்றதுதான்.
பெரியாருடைய ஒவ்வொரு வார்த்தையிலும், எனக்குத் தெரிந்தது, எனக்குப் புரிந்தது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சொல்லியிருக்கிறார்; சமுதாயத்திற்குச் சொல்லியிருக்கிறார்; நாட்டிற்குச் சொல்லியிருக்கிறார்.
நேற்று இருந்த சமுதாயம்; இன்று இருக்கக்கூடிய சமுதாயம்; நாளை வரக்கூடிய சமுதாயம்.
நேற்றைய தனி மனிதன்; இன்றைய தனி மனிதன்; நாளைய தனி மனிதன்.
சரியாகப் புரிந்துகொண்டால், ஒவ்வொருவருக்கும் சரியான பதில் இருக்கிறது என்று நான் சொல்கிறேன்.
அதேபோன்றதுதான் மொழி – ஒரு காலத்தில் நாம் எப்படிப் பேசிக் கொண்டிருந்தோம் – அதையே இன்று பேச முடியாது.
நேற்று அவர் பேசினார், அதையே இன்றைக்குத் திரும்பவும் பேசுவார் என்பதைத் தாண்டி, இன்றைக்கு ஏதாவது புதிதாகப் பேசுவார்; புதிய முறையில் சொல்வார் என்ற எதிர்பார்ப்பு இயற்கைதான். பல வகையில் பலவற்றைக் கொண்டு வந்திருக்கின்றோம்.
அந்த முறையில், என்னுடைய அறிவியல் கருத்தரங்கில் நடந்ததை, இன்றைக்கு முதன்முறையாக தமிழ் மேடையில் பேச முயற்சி செய்திருக்கிறேன்.
‘பெரியாரும் – அறிவியலும்’ என்று சொல்லுகிறபொழுது, அந்த அறிவியல் நோக்கு என்பது அரைத்த மாவையே அரைக்கக்கூடாது என்பது ஒன்று.
உங்கள் கண்கள் வழியாகவும், காதுகள் வழியாகவும் மெதுவாக இறங்கவேண்டும். ஒரு வார்த்தையாவது பெரியார் சொன்னது சரியாகப் பதிக்கப்படவேண்டும். பதிக்கப்பட்ட அந்த விதை கண்டிப்பாக விருட்சமாக வளரும் என்பதற்காக இதைச் சொல்ல முயற்சி செய்கிறேன்.
‘‘எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறதென்றால் துணிவு ஒன்றுதான் – வேறு எந்த யோக்கியதையும் எனக்குக் கிடையாது’’ – பெரியார்.
தான் பெரிதாகப் படிக்கவில்லை என்பதை பெரியார் ஒப்புக்கொண்டவர்தான்.
எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்றால், துணிவுதான் யோக்கியதை என்பார்.
எனக்கு இதன் பொருள் புரிந்தது. வேறு மாதிரியாகத் தெரிந்தது. உனக்கு என்னதான் யோக்கியதை இருக்கிறது என்றாலும் துணிவு ஒன்று மட்டும் இல்லையென்றால், அந்த யோக்கியதை எதற்குமே பயன் இல்லை, என்பதாய் எனக்குப் புரிந்தது.
பெரிய செல்வந்தனாக இருக்கலாம்; பெரிய படிப்பாளியாக இருக்கலாம்; பெரிய அறிவாளியாக இருக்கலாம்; பெரிய தலைவனாக இருக்கலாம்.
ஆனால், துணிவு மட்டும் உனக்கு இல்லை என்றால், பயனேதும் இல்லை.
இது ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம் அறிவியலைப்பற்றி பேசுகிறோம். இதைத் தர்க்கமாகச் சொல்லிப் பயன் இல்லை.
அறிவியலைப் பற்றி பார்க்கும்பொழுதுகூட, துணிவான வினாக்களுக்கான விடைகள்தான் விஞ்ஞானம் என்பதை சரியாகப் புரிந்துகொள்ள
வேண்டும்.
ஏனென்றால், அமெரிக்கர்கள் போனார்கள்; ரஷ்யக்காரர்கள் போனார்கள் என்று படித்ததை ஒப்புக்கொண்டு என்னுடைய கேள்வித்தாளில் பதிலாக எழுதாமல், அவர்கள் சரியாகப் போனார்களா? இல்லையா? என்று கேள்வி கேட்க முடிந்தது அல்லவா! அந்தத் துணிவு இருந்தது அல்லவா! அந்தத் துணிவுதான் ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பை உருவாக்கியது. எல்லாக் காலகட்டத்திலும் அப்படிதான் இருந்தது.
கலிலியோ காலத்திலிருந்து பார்த்தீர்களேயானால், ஒவ்வொருவரும் துணிவாகக் கேள்வி கேட்டார்கள்.
துணிவாகக் கேள்வி கேட்டதுதான், விஞ்ஞானத்தினுடைய அடிப்படை விதை. அந்த வகையில், மிகப்பெரிய யோக்கியதையை, விஞ்ஞானிக்கான மிகப்பெரிய யோக்கியதையைப் பெரியார் பெற்றிருக்கிறார். அதைத்தான் நான் அழுத்தமாகப் பார்க்கிறேன்.
ஏனென்றால், எல்லாவற்றையும் அவர் புரிந்து கொண்டிருந்திருக்கின்றார். எதையும் புரிந்துகொள்ளக் கூடிய சக்தி அவரிடம் இருந்திருக்கிறது. காலகட்டத்தைத் தாண்டி.
அதற்குத் தகுதி முன்னோக்கியும் இருக்கலாம் அப்படிங்கிற மீட்சியையே பார்க்க முடிந்திருக்கிறது.
அவர் துணிவான பல விடைகளை, பல ஆண்டுகளுக்குமுன்பு சொல்லியிருக்கிறார். அதற்கான கேள்விகளைக் கேட்டிருக்கிறார்.
ஆக, அந்தத் துணிவு என்ற வகையில், அவர் ஒரு சிறந்த விஞ்ஞானி என்றுகூட என்னால் சொல்ல முடியும்.
இருட்டு என்பது பயம்தான் – துணிவான கேள்விகள்தான் ஒரு காலத்தில் விளக்காக வந்தது; மின்சாரம் வந்தது.
இந்தப் பட்டியலை அப்படியே போட்டுக் கொள்ளலாம்.
வறுமை என்றால், உழைப்பு இருந்தால் சரியாகிவிடும்; உடல் உழைப்போடு சேர்ந்த கல்வி என்று சொல்லியிருக்கிறார். உடல் உழைப்பை மட்டும் நம்பியிருக்காதே, உன்னுடைய புத்தியையும் சேர்த்து, அதில் சிறப்பாக இருப்பதற்கு நீ முயற்சி செய்!
பயண தூரம் அதிகமாக அதிகமாக, சீக்கிரம் செல்லவேண்டும் என்று வருகிறபொழுது பலப்பல வாகனங்கள் வந்திருக்கின்றன.
அதேபோன்று, பணியின்மை என்கிறபொழுது, அதற்குரிய திறன்கள் தேவை.
அந்த இடத்திற்கான துணிவான கேள்வி கேட்கும்பொழுது, வரக்கூடிய பதில் சிறப்பாக இருக்கும். விஞ்ஞானத்தினுடைய அடிப்படையே அதுதான்.
கிரகணம் – என்னென்னமோ சொன்னார்கள். அது சரியாக இருக்குமா? ஆண்டுக்கு ஆண்டு பாம்பு வந்து விழுங்கிக் கொண்டிருக்குமா? என்று கேள்வி கேட்கப்பட்டது அல்லவா! அந்தக் கேள்வியினுடைய பதில் நல்ல அறிவியலாக வர ஆரம்பித்தது.
ஆக, அந்தத் துணிவு எனக்கு இருக்கின்ற யோக்கியதையாக இருக்கிறது என்று சொல்லியது மிகமிகச் சிறப்பாக வந்திருக்கிறது.
(தொடரும்)