இயக்க வரலாறான தன் வரலாறு(236) : நெஞ்சில் நிலைக்கும் தஞ்சை சமூகநீதி மாநாடு

அக்டோபர் 16-31 2019

அய்யாவின் அடிச்சுவட்டில்…

கி. வீரமணி

  7.3.1990 அன்று கும்பகோணம் ஆடவர் அரசினர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அப்போது, இந்தக் கல்லூரிக்கு நான் பேச வந்தால் குண்டு வீசித் தகர்ப்பதாய் மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனை நேர்கொள்ள முடிவு செய்து அங்கே சென்று, வந்த மிரட்டலுக்குப் பதிலடி கொடுத்து உரையாற்றித் திரும்பி வந்தேன். கருத்தைக் கருத்தாலே சந்திக்க அஞ்சுகின்ற ஒரு கூட்டம் இருக்கின்றது; அவர்கள் கோட்சேக்களாக மாறலாம் என்று நினைத்தால் அவர்களுக்குச் சொல்கிறேன், “இது காந்தி யுகம் அல்ல _ நீங்கள் கோட்சேக்களாக மாறுவதற்கு. இது பகத்சிங் யுகம் என்பதை தெளிவாகக் சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன் என்று எச்சரிக்கை செய்து எடுத்துரைத்தேன்.

23.3.1990 அன்று முக்கிய அறிக்கையில் காஞ்சி சங்கராச்சாரியாருக்குக் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தேன்.

சோ.இலக்குமணசாமி – வி.ப.பிரசன்னா இருவருக்கும் வாழ்க்கை துணைநல ஒப்பந்தம் ஆசிரியர் நடத்தி வைக்கும் காட்சி. உடன் ஆசிரியரின் வாழ்விணையர் மோகனா அம்மையார்.

(தகவல் சென்ற இதழில் வெளிவந்தது)

 சங்கராச்சாரியார், “மண்டல் கமிஷன் பரிந்துரைகள் சரியாக இருப்பதாக என்னால் கூறமுடியாது, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஆண்டுக்கு ஆண்டு ஒவ்வொரு ஜாதியாக சேர்க்கப்பட்டு வருகிறது. அதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என்னைப் பொருத்தவரையில் ஹரிஜனங்களுக்கும் மலைவாசிகளுக்கும் மட்டும்தான் இடஒதுக்கீடு  கொடுக்கலாம். அதனை, அதுவும் 10 ஆண்டுகளுக்கு மட்டும்தான் கொடுக்க வேண்டும், அதன் பின்பு பொருளாதார அடிப்படையில்தான் இடஒதுக்கீடு செய்தாக வேண்டும்’’ என்று ‘24.3.1990 அன்று ‘நக்கீரன்’ இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இதனை கடுமையாகக் கண்டித்து, ஓடிப்போன சங்கராச்சாரியாருக்கு கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் அறிவிப்பு செய்தேன். பார்ப்பனக் கொட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லையேல் தமிழகத்தை ஒரு ‘குஜராத்’ ஆக்க சதித் திட்டம் போடுகிறது இந்தப் பார்ப்பனக் கூட்டம் என்று எச்சரிக்கை செய்தேன்.

30.3.1990 அன்று லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அப்போது, சமுதாயத்தில் நீதியை நிலைநாட்டத்தான் சட்டம், சமுதாயத்தில் ஒழுங்கு, கட்டுப்பாடு, நேர்மை இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சட்டம் இருக்கின்றது. சமுதாயத்தில் ஜாதிக் கொடுமைகள் மிக ஆழமாக வேரூன்றி இருக்கின்றன என்று சொல்லாதவர்களே கிடையாது.

நம்முடைய நாட்டுச் சட்டத்திலே ஜாதிக்குச் சட்டபூர்வமான அங்கீகாரம் கொடுக்கப் பட்டிருக்கின்றதே! அதுதான் கொடுமையிலும் கொடுமை, சட்டம் ஜாதியைக் காப்பாற்றுகின்றதே தவிர, ஜாதியை ஒழிக்கவே முன்வரவில்லை.

நிறையபேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல் சட்டத்திலே ஜாதியை ஒழித்திருக்கிறார்கள் என்று தவறாகக்கூட பல தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் _ இன்னமும் அதை சரியாகப் படிக்காத காரணத்தாலே என்று உரை நிகழ்த்தினேன்.

1.4.1990 அன்று மாலை நடைபெற்ற ‘டார்பிடோ’ ஏ.பி.ஜனார்த்தனம் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.

ஏ.பி.ஜனார்த்தனம்

இந்த நிகழ்ச்சிக்கு  தலைமையேற்று உரை யாற்றினேன். அப்போது, ‘டார்பிடோ’ என்று கழகத்தினர்களால் அழைக்கப்படும் ஏ.பி.ஜெ. அவர்கள் கடைசிவரை சிறந்த பகுத்தறிவுவாதியாகவும், தந்தை பெரியார் அவர்களின் மேல் நீங்காப் பற்றுக் கொண்டவராகவும் வாழ்ந்தவராவார்.

இடையில் வண்ணங்கள் மாறி இருக்கலாம். ஆனால், அடிப்படை எண்ணத்தில் என்றைக்கும் மாறாதவர். அந்தக் காலத்தில் எம்.ஏ. படித்தவர் என்று எல்லோரும் பெருமையாகச் சொல்லிக் கொள்ள கழகத்திற்குக் கிடைத்தவர் அவர். எப்பொழுதும் கல்லூரி மாணவர்களிடையேதான் இருக்க விரும்புவார். மாணவர்களை இயக்கத்தின்பால் ஈர்ப்பதில் தனித்திறன் கொண்டவர்.

அவருக்குத் தெரியாத பழைய புத்தகக் கடைக்காரர்களே இல்லை எனலாம். அவர்கள்தான் அவருக்கு நெருக்கமான நண்பர்கள். அவரது நினைவு நாளை கருத்தரங்கம் போல நடத்துவது பொருத்தமானது என்று குறிப்பிட்டேன். மூன்று மொழிகளில் திறமை மிக்கவர். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசவும், எழுதவும் வல்லவர். அய்யா அவர்கள் ஆந்திரா சென்றபோது அய்யா ஆற்றிய உரையை தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்தவர் ஏ.பி.ஜெ. அவர்கள்  என புகழாரம் சூட்டினேன்.

2.4.1990 அன்று சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அப்போது, கல்வித் துறையில் சமஸ்கிருதத்திற்கு இருந்த ஆதிக்கத்தை ஒழித்தது நீதிக்கட்சிதான் என்று வரலாற்று ஆதாரங்களை எடுத்துக்காட்டி உரை நிகழ்த்தினேன். குறிப்பாக சமஸ்கிருத பேராசிரியர்களுக்கும் தமிழ் பேராசிரியர்களுக்கும் இருந்த ஊதிய வேறுபாட்டையும், மருத்துவக் கல்வி பயில சமஸ்கிருதம் கட்டாயம் என்று இருந்ததையும் சுட்டிக் காட்டினேன். அது மட்டுமல்ல; தமிழ் ஆனர்ஸ் பாஸ் பண்ண வேண்டுமானால், சமஸ்கிருதம் கட்டாயம் படித்தாக வேண்டும்.

ஆனால், சமஸ்கிருத ஆனர்ஸ் பாஸ் பண்ண வேண்டுமானால் இன்னொரு மொழி படிக்க வேண்டிய அவசியமில்லை.

அது மட்டுமல்ல; அந்தக் காலத்திலே மெடிக்கல் காலேஜிலே சேர்வதற்கே சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்கிற நிலை இருந்தது. அதையும் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகுதான் மாற்றினார்கள் என்கிற வரலாற்றுச் செய்தியை ஆதாரபூர்வமாக எடுத்துரைத்து உரை நிகழ்த்தினேன்.

2.4.1990 அன்று இரவு சென்னை பெரியார் திடலில் கவிஞர் செ.வை.ரா.சிகாமணி தலைமையில் நடைபெற்ற ‘அமைதிப்படையும் இந்திய, ஈழ அரசியலும்’ என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினேன்.

தமிழக முதலமைச்சர் அவர்கள் இந்திய ‘அமைதிப்படையை’ ஏன் வரவேற்கவில்லை? ஆ…கா….! எவ்வளவு பெரிய தேச விரோதம் என்று சட்டமன்றத்திலே தொடர்ந்து பிரச்சனையை எழுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். இதன் உண்மையைத் தோலுரித்துக் காட்டுவதுதான் இந்தக் கூட்டத்தின் நோக்கம்.

அண்மைக் காலத்திலே தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் செய்த சாதனைகளிலேயே மிகப்பெரிய மகுடம் வைத்த சாதனை ஒன்று உண்டு என்று சொன்னால், இந்தக் கொலைகார அமளிப் படையை வரவேற்கச் செல்ல மாட்டேன் என்று பிரகடனப்படுத்தினார்.

அதற்காக ஆயிரம் ஆயிரம் முறை கலைஞர் வாழ்க! வாழ்க!! வாழ்க!!! என்று வாழ்த்த, பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.

பொறுப்புணர்ச்சியோடு முதல்வர் அவர்கள் சட்டமன்றத்திலே அமைதிப்படை பற்றி கூறும் போது 1800 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 5000 தமிழர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இது தேவையா என்று கேட்டிருந்தார். இதையெல்லாம் சுட்டிக்காட்டி உரை நிகழ்த்தினேன். மேலும், வரதராஜப் பெருமாளும் _ பத்மநாபாவும், ‘அமைதிப்படை’ அதிகாரிகளுடன் குடித்துக் கும்மாளம் போட்டார்கள், இதற்கான 5 புகைப்பட ஆதாரங்களைக் காட்டி, எடுத்து விளக்கினேன்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் 8.4.1990 அன்று இரவு நடைபெற்ற தந்தை பெரியார் 111ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும், தம்பி பிரபாகரன் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டமும் சிவாஜி சர்க்கிளிலுள்ள சிக் பஜார் தெருவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்திற்கு கர்நாடக மாநில முன்னாள் தி.க. தலைவர் எம்.பெரியப்பா தலைமை வகித்துப் பேசினார்.

ஏராளமான தமிழர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் உரையாற்றும்போது, “தம்பி பிரபாகரனை நேரடியாகப் பிடிக்க லட்சம் இராணுவ வீரர்களை முன்பு பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி அனுப்பினார். ஆனால், இந்திய ராணுவ வீரர்களால் பிடிக்க முடிந்ததா?

புலிகளைப் பற்றி சாதாரணமான இரண்டாயிரம் பையன்கள் என்றுதான் போனீர்கள். உங்களால் பிடிக்க முடிந்ததா? தமிழன் தலை தாழக்கூடாது என்பதற்காக _ ஈழத்தில் புலிக்கொடி பறக்க விட்ட தம்பி பிரபாகரன் என்று புகழாரம் சூட்டி உரை நிகழ்த்தினேன்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களுடைய நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி 14.4.1990 அன்று கன்டிரவா ஸ்டேடியத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு அழைக்கப்பெற்று அதில் கலந்துகொண்டு உரையாற்றினேன். கர்நாடகத்தின் தலித் சங்கர்ஷ் சமிதி, அகில இந்திய கனரா வங்கியின் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் அமைப்பு மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த பல ஒடுக்கப்பட்ட அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தியது. இந்த அமைப்புகள் எல்லாம் அழைத்து இந்த விழாவில் கலந்துகொள்ள முடிந்த-து.

தலித் சங்கர்ஷ் சமிதியைச் சார்ந்த பேராசிரியர் பி.கிருஷ்ணப்பா, கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் தலைவர் டாக்டர் பீமப்பா, கல்வி நெறிக் காவலர் டாக்டர் மும்தா அகமத்கான், பவுத்த தர்மகுரு பிக்குலோகா போலோ, டாக்டர் சித்தலிங்கய்யா ஆகியோர் என்னுடன் கலந்துகொண்டார்கள்.

நான் உரையாற்றும்போது, பார்ப்பன ஆதிக்கத்தின் கொடுமையை விளக்கியும் டாக்டர் பாபாசாகேப் அவர்களின் பெருமையையும் எடுத்துக்கூறி பேசினேன்.

தஞ்சை மாவட்டம் வடுவூருக்கு அருகிலுள்ள எடமேலையூரில் தந்தை பெரியார் சிலை திறப்பு 21.4.1990 இரவு 9 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சிக்கு மேலத்தஞ்சை மாவட்ட தி.க. தலைவர் ஆர்.பி.சாரங்கன் தலைமை வசித்துப் பேசினார். விழாவில், எழுச்சிக் கோலமாய் எடமேலையூர், மக்கள் கடலில் இடையே நடைபெற்ற விழாவில், அய்யா உருவச் சிலையை பலத்த ஆரவாரத்திற்கிடையே திறந்து வைத்து உரை நிகழ்த்தினேன். அடுத்த நாள் 22.4.1990 அன்று இரவு தந்தை பெரியார் சிலையை கண்டியூரில் திறந்துவைத்து உரை நிகழ்த்தினேன்.

 

கழகத்தோழர் கொடுங்கையூர் ரா.தனலட்சுமி –

கோ.தங்கமணி வாழ்க்கை இணையேற்பு ஒளிப்படம்

29.4.1990 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கொடுங்கையூர் ரா.தனலட்சுமி _ கோ.தங்கமணி அவர்களின் வாழ்க்கை ஒப்பந்த விழாவுக்குக் தலைமையேற்று நடத்தி வைத்தேன். விழாவில் கவிஞர் கலி.பூங்குன்றன் வாழ்த்துரை வழங்கினார்.

 பெரியார் திடலில் ரா.தனலட்சுமி – கோ.தங்கமணி வாழ்க்கை ஒப்பந்த விழா ஆசிரியர் தலைமையில் நடைபெறும் காட்சி

27, 28, 29.4.1990 ஆகிய மூன்று நாள்கள்  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவின் முதல் நாள் நிகழ்வு 27.4.1990 அன்று தென்சென்னை திராவிடர் கழகத்தின் சார்பில் மயிலையில் நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வு 28.4.1990 அன்று வடசென்னை திராவிடர் கழகத்தின் சார்பில் புதுவண்ணாரப் பேட்டையில் சிறப்புற நடந்தது. நிறைவு விழா  சென்னை, கலைவாணர் அரங்கில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பெரியார் நூலக வாசகர் வட்டம் அமைப்புகள் சார்பில் எழுச்சியும் மகிழ்ச்சியும் குலுங்க நடைபெற்றது. கழகக் குடும்பங்கள், பொதுமக்கள், நிரம்பி வழியும் வண்ணம் தமிழர்கள் கூடியிருந்தனர்.

முதல்வர் கலைஞருக்கு “மகளிர் உரிமை ஆட்சி மாண்பாளர்” என்னும் பட்டம் மகளிரணியினரால் அளிக்கப்படுகிறது. உடன் ஆசிரியர் கி.வீரமணி 

 விழாவில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் கலந்துகொண்டார்கள். தமிழ்நாட்டுப் பெண்கள் முன்னேற்றத்திலும், தந்தை பெரியார் கண்ணோட்டத்திலும் மகளிர் உரிமைக்கான சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பிலும், மகளிரணி சார்பிலும் தமிழக பெண்குலத்தின் சார்பிலும், “மகளிர் உரிமை ஆட்சி மாண்பாளர்’’ என்னும் பட்டம் அளிக்கப்பட்டது. அரங்கம் அதிர்ந்தது கையொலிகளால்.

 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவில் மகளிரணி கலந்து கொண்டு சிறப்பித்த காட்சி

விழாவில், உரையாற்றும்போது, “தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் என்று நடைமுறையில் இருக்கும் ஆண்டு அமைப்பு மாற்றப்பட்டு, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று மாற்றம் செய்யப்பட்டு திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கை மேற்கொள்ளத் தமிழக முதல்வர் அவர்கள் ஆணை பிறப்பிக்க வேண்டும்“ என்று கோரிக்கை வைத்தேன். உடனே பதில் அளித்த முதல்வர் கலைஞர் அவர்கள், “தமிழ்ப் புத்தாண்டு தை மாதம் முதல் துவக்க வேண்டும் என்று இளவல் வீரமணி குறிப்பிட்டார். தளபதி வீரமணியின் சிந்தனையையும், சிந்தையில் தேக்கி, மற்றவர்களையும் கலந்து பேசி அறிவிக்கப்படும் என்றும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

25.5.1990 அன்று தஞ்சையில் நடைபெற்ற கழக மாநாட்டில் உரையாற்றும்போது, பார்ப்பனர்களே, உங்களுடைய உரிமைகளுக்காகப் போராடுவதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால், எங்களை நீங்கள் எவ்வளவு காலம்தான் ஆதிக்கம் செலுத்துவீர்கள்? எங்கள் மக்களை எல்லாம் நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டதைப் போல என்றைக்கும் இருப்பார்கள் என்கிற நினைப்புதானே உங்களுக்கு? அதன் காரணமாகத்தானே அந்த அகம்பாவமும் ஆணவமும் தலைதூக்கி நிற்கின்றன? எங்களின் தன்மானம் வீழ்ந்தாலும் பரவாயில்லை. நமது இனமானம் நிமிர வேண்டும் என்பதற்காகவே பார்ப்பனர்கள் இழிவுறுத்தலைச் சகித்தோம் என்று உணர்ச்சியுரை ஆற்றினேன். மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில், எனக்கு எடைக்கு எடை ரூபாய் நாணயம் வழங்கும் நிகழ்ச்சி மக்கள் கடலின் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, நீங்கள் என்னை தராசின் ஒருபுறத்திலே அமரவைத்து உங்களுடைய அன்பை மட்டும் கொட்டவில்லை. இந்த எளிய தொண்டனின் உழைப்பிலே அய்யா அவர்கள் கொள்கையிலே தந்தை பெரியாரின் தன்னலம் கருதாத இலட்சியப் பணியிலே நீங்கள் வைத்திருக்கின்ற ஆழ்ந்த நம்பிக்கையைத்தான் கொட்டியிருக்கின்றீர்கள். மறு தட்டிலே என்னை எடை போட்டுப் பார்க்க _ நாணயமாக இலட்சியங்கள் செயல்படுகின்றனவா என்று _ நாணயத்தை வைத்துப் பார்த்து, நீங்கள் செய்திருக்கின்ற இந்த நிலையை எண்ணிப் பார்த்தேன் என்று குறிப்பிட்டேன்.

தஞ்சை சமூகநீதி மாநாட்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில்சிங் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழும் ஆசிரியர் கி.வீரமணி

 26.5.1990 அன்று தஞ்சையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சமூகநீதி மாநாட்டில் தந்தை பெரியார் உருவப் படத்தைத் திறந்து வைத்து முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு கியானி ஜெயில்சிங் அவர்கள் உருதுமொழியில் உரையாற்றினார். அவரது உரையை பன்மொழிப் புலவர் அப்துல் லத்தீப் எம்.எல்ஏ., சிறப்பான முறையில் தமிழாக்கம் செய்தார். அப்போது, தந்தை பெரியார் பற்றி அவர் கூறும்போது, “இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சமுதாயப் புரட்சி வீரர் தந்தை பெரியார் அவர்களுடைய படத்தைத் திறந்து வைப்பதற்கான மகத்தான ஒரு கவுரவத்தை எனக்கு அளித்தமைக்காக நான் நன்றியுடையவனாக இருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டார்.

 தஞ்சை சமூகநீதி மாநாட்டில் கலந்து கொண்ட

புலவர் அப்துல் லத்தீப், முன்னாள் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில்சிங் உடன்

ஆசிரியர் கி.வீரமணி

 மாநாட்டில், அம்பேத்கர் உருவப் படத்தினை திறந்து வைத்து, நீதிபதி திரு.பி.வேணுகோபால் அவர்கள் எழுதிய  “Social Justice and Reservation” என்னும் நூலினை ஜஸ்டிஸ் திரு.ஓ.சின்னப்ப ரெட்டி வெளியிட்டு உரையாற்றினார். நீதிபதி அவர்களின் ஆங்கில உரையை பெரியார் பேருரையாளர் கு.வெ.கி.ஆசான்  மொழி பெயர்த்தார். அப்போது, நீதிபதி அவர்கள், “சமுதாய அந்தஸ்துதான் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது. மதத்தை எதிர்க்காமல் சமூகநீதி மலராது; இடஒதுக்கீடு யாரோ போடும் பிச்சையல்ல என்றும், தந்தை பெரியார் கருத்துகள் காலத்தை வெல்லக்கூடிய ஆற்றல் பெற்றவை” என்றும் ஜஸ்டிஸ் ஓ.சின்னப்ப ரெட்டி குறிப்பிட்டார்.

மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், மண்டல் குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும் இடஒதுக்கீடு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்குமாறும், எல்லா மட்டங்களிலும் இடஒதுக்கீடு கோரியும் மத்திய மாநில அரசிலும் மகளிர்க்கு 30 சதவிகித இடஒதுக்கீடு கேட்கும், பள்ளி, கல்லூரிகளில் சேருவதற்கான மனுக்களில் ஜாதி பற்றிய குறிப்பை ஒழிக்கக் கூடாதென்றும் சமூகநீதி வேண்டி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் நிறைவுரை ஆற்றினேன். தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

கழக ஏடான விடுதலைக்கு ஜப்பானிலிருந்து வாங்கப்பட்ட ‘அக்கியமா’ அச்சு இயந்திரத்தை முதன் முறையாக இயக்குவதை பார்வையிடும் முதல்வர் கலைஞரும், ஆசிரியர் கி.வீரமணி அவர்களும்

6.6.1990 அன்று 55 ஆண்டுகளைக் கடந்து 56ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்த ‘விடுதலை’ நான்கு வண்ண ‘ஆஃப்செட்’ அச்சு இயந்திரத்தில் அச்சடிக்கப்பட்டு வெளிவந்தது. ஜப்பானில் தயாரிக்கப்பட்டு 30 இலட்ச ரூபாய் மதிப்புள்ள ‘அக்கியமா’  (Akiyama) என்கிற அச்சு இயந்திரம் ‘விடுதலை’ பணிமனையில் அமைக்கப்பட்டு, அதனை முதலில் இயக்கும் விழா மாலையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வருகைதந்த தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை அன்புடன் வரவேற்றேன்.

தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள், அச்சு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினார்கள். தந்தை பெரியார் அவர்களின் நான்கு வண்ணப்படம் அச்சிடப்பட்டு வெளியில் வந்தது. கூடியிருந்த அனைவரும் மகிழ்ச்சிப் பெருக்கில் தந்தை பெரியார் வாழ்க! என்று முழக்கமிட்டு ஆரவாரத்தை ஏற்படுத்தினார்கள். 4.11.1969 அன்று தந்தை பெரியார் அவர்கள் முன்னிலையில் அன்றைய முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள், ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘விக்டோரியா 820’ ஆட்டோமேடிக் அச்சு இயந்திரத்தை இயக்குவித்தார்கள்.

21 ஆண்டுகளுக்குப் பிறகு, அதனின்றும் முன்னேற்றம் கண்டு நான்கு வண்ணம் ஆஃப்செட் இயந்திரம் ‘விடுதலை’ப் பணிமனையில் இயங்குவது கண்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், கழகத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

 அதனைத் தொடர்ந்து நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் உலக வங்கி உதவியுடன் நகர பெரியார் சுகாதார நிலைய மருத்துவமனைக் (PERIYAR URBAN HEALTH POST) கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி, பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். இலவசப் பயிற்சி முகாம் நிறைவு விழா, தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் பிறந்த நாள் என நான்கு விழாக்களும்  ஒருங்கிணைத்துக் கொண்டாடப்பட்டன.

இந்த விழா பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பிலும், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினேன். டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் லலிதா காமேசுவரன் விழாவிற்குத் தலைமை தாங்கினார். தமிழின உணர்வின் சின்னம், டாக்டர் நாவலர் சோமசுந்தரபாரதியார் அவர்களின் மகளான டாக்டர் லலிதா காமேசுவரன் அவர்கள் விழாவிற்கு தலைமை ஏற்றது பொருத்தமான ஒன்றாகும்.

நகர பெரியார் சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுதலைக் குறிக்கும் கல்வெட்டினைத் தமிழக முதல்வர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த இந்திய மக்கள் தொகை திட்ட இயக்குநர் டாக்டர் எம்.ஜி.முத்துக்குமாரசாமி எம்.எஸ். அவர்கள், தந்தை பெரியார் அவர்களின் சமுதாயக் கண்ணோட்டத்தையும், கல்வி நீரோடையில் இருக்கும் முதலைகள் பற்றியும் தெளிவாகப் பேசினார்.

முதல்வர் நிறைவுரை ஆற்றுவதற்கு முன்  நான்கு விழாக்களின் தன்மைகள் பற்றியும், இன்றைய தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகள் பற்றியும், திமுக ஆட்சி எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்தும், கடந்த 1969இல் ‘விக்டோரியா 820’ அச்சு இயந்திரத்தை ‘விடுதலை’யில் இயக்குவித்தபோது தந்தை பெரியார் இருந்து பூரித்த காட்சிகளை எல்லாம் மக்கள் மன்றத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தி நெகிழ்ச்சியுரை ஆற்றினேன்.

நிறைவுரையாகவும் ஏற்புரையாகவும் தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக எழுச்சி உரையாற்றினார். கழகத்தினர் கலந்துகொண்டு நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.

21.6.1990 அன்று பிரதமர் வி.பி.சிங் தலைமையில் நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டத்தில்  உரையாற்றினேன். இக்குழுவின் தலைவர் மாண்புமிகு பிரதமர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்திய அரசியல் சட்டத்தினை உருவாக்கிய அவரது படம்கூட. நாடாளுமன்றத்தின் மய்ய மண்டபத்தில் 42 ஆண்டுகள் கழித்துத்தான் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஒருவரது நூற்றாண்டு விழாவை சமூகநீதி ஆண்டாகக் கொண்டாட மத்திய அரசு முடிவு எடுத்து இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

ஜாதியற்ற சமுதாயம் காணுவது சுலபமா? நேரத்தின் நெருக்கடி காரணமாக நான் விளக்கமாகக் கூற முடியாது. தொட்டுக் காட்ட விரும்புகிறேன். தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள். அவர்கள் இருவரும் மதவாத சக்திகளுக்கும், தீண்டாமை ஒழிப்பு, தாழ்த்தப்பட்டவர்கள் கருவறையில் நுழைவு போன்ற நிகழ்ச்சிகளில் சமூகநீதி வேண்டிப் போராடியவர்கள். அதனால், அவர்களது விழாவை நல்ல பெரிய விளைவை உண்டாக்கும் வகையில் தொடர்ந்து பணியாற்ற, நல்ல சான்றோர்கள், அனுபவஸ்தர்கள், அறிவாளிகள் கொண்ட இந்தக் குழு துணை நிற்கும். பிரதமர் அவர்களின் நல்ல எண்ணம் கலந்த இந்த அரிய முயற்சிக்கு நாங்கள் அனைவரும் துணை நின்று அர்ப்பணித்துக் கொள்கிறோம் என்று எடுத்துரைத்தேன்.

(நினைவுகள் நீளும்…)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *