‘டார்பிடோ’ ஏ.பி. ஜனார்த்தனம் – பேராசிரியர் பூ.சி.இளங்கோவன்

2024 ஏப்ரல் 1-15, 2024 கட்டுரைகள் மற்றவர்கள்

1940களில் திராவிடர் இயக்கம் வீறு கொண்டு எழுந்த காலகட்டத்தில், பல தளபதிகள் தோன்றினார்கள். அத்தளபதிகளில் ஒருவர்தான் அறிஞர் அண்ணாவோடு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்ற புரட்சிக்கனல்தான் ‘டார்பிடோ’ ஏ.பி.ஜே. ஆவார்கள். தந்தை பெரியாரிடத்தில் மிகுந்த பற்றுக் கொண்டவர் என்பதைவிட, ‘வெறி’ -அதாவது கொள்கை வெறி – கொண்டவர் என்றால், மிகையன்று.

திராவிடர் கழகத்தில் ‘திராவிடர் மாணவர் கழகம்’ என்ற அமைப்பை நீண்ட நாட்களாகப் பொறுப்பேற்று நடத்தியவர் ஆவார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தபொழுது, ‘டார்பிடோ’ அவர்கள் மாநில திராவிடர் மாணவர் கழகத் தலைவராகயிருந்தார். 26.11.1958 அன்று திராவிடர் கழக மாவட்ட. மாநாடு, ‘ரத்னா டாக்கீஸ்’ என்ற திரைப்படக் கொட்டகையில் நடைபெற்றது. அன்று மாலை சிதம்பரம் “டவுன் ஹாலில்” நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் தந்தை பெரியாருக்கு- வெள்ளி வீரவாள் அளிக்கப்பட்டது. அந்நிகழ்ச்சியில் மாணவர்கள் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர், புலவர் இமயவரம்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வுக்குப் பின்னணியில், மாநில திராவிட மாணவர் கழகத் தலைவரான டார்பிடோ ஏ.பி.ஜே. பின்புலமாகயிருந்தார். இந்த சிதம்பரம் மாநாட்டில் தந்தை பெரியாரையும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனையும் அலங்கரித்த வண்டியில் அமரவைத்து, மேலவீதி, தெற்குவீதி வழியாக- பொதுக்கூட்டம் நடைபெறும் ‘டவுன் ஹாலுக்கு’ ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்பொழுது புரட்சிக்கவிஞரால் உருவாக்கப்பட்டதுதான், ’தொண்டுசெய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும்’ -என்ற பாடலாகும்.

‘டார்பிடோ’ ஏ.பி.ஜே. அவர்கள் பின்னர், அறிஞர் அண்ணாவோடு கொண்ட நட்பின் காரணமாக, தி.மு.கவில் தன்னை இணைத்துக்கொண்டார். தி.மு.க. அன்றைய காலகட்டத்தில் இரட்டைக்குழல் துப்பாக்கியாக விளங்கியது. ‘டார்பிடோ’ அவர்கள் இயக்கம் மாறினாலும், தந்தை பெரியாரின் அனைத்துக் கொள்கைகளிலும் ‘இம்மி’ அளவும் மாறவில்லை; தன் பெயருக்கு ஏற்ப வெடிகுண்டாகவே வாழ்ந்தார்.

அறிஞர் அண்ணா ‘டார்பிடோ’ ஏ.பி.ஜே. அவர்களை, 1961இல் தமிழ்நாடு மேல் சபை உறுப்பினராக (எம்.எல்.சி.) நியமித்து அழகு பார்த்தார். பொதுவாகவே, ஏ.பி.ஜே. அவர்கள் தமிழில் பேசுவதை விட ஆங்கிலத்தில் பேசுவதையே பெரிதும் விரும்புவார். ஏனெனில், 1940களிலேயே ஆங்கிலம் எம்.ஏ., படித்தவர். அக்கால ஆங்கிலப் புலமை எவ்வாறிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. தமிழ்நாட்டு சட்ட மேலவையில் அக்காலத்தில் ஆங்கிலத்தில் பேசியவர்கள் இருவர். ஒருவர் நம் ஏ.பி.ஜே.; மற்றொருவர் 25 ஆண்டுகள் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பணியாற்றிய டாக்டர் ஏ.எல்.முதலியார் என்கிற டாக்டர் ஏ. லெட்சுமணசாமி முதலியார் ஆவார். தமிழ்நாடு மேல் சபையிலும் தந்தை பெரியாரின் கருத்துகளையே முழங்கினார்.

1969ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா மறைவுக்குப் பின், தி.மு.கவில் தனக்கு ஆதரவில்லை என்ற காரணத்தால், தி.மு.கவிலிருந்து விலகி, பிற்காலத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் தொடங்கிய அ.தி.மு.கவில் இணைந்தார். ‘டார்பிடோ’ அவர்கள் அரசியல் மாற்றங்களில் சிக்கினாரே தவிர, தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கை, கடவுள் மறுப்புக் கொள்கையிலிருந்து கடைசி வரை மாறவே இல்லை. 1970ஆம் ஆண்டு நான், ’டார்பிடோ அவர்களை அழைத்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடலும், மாலையில் அண்ணாமலைநகர் பொதுக்கூட்டமும் நடத்தினோம்.

1977ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழ்நாட்டு முதலமைச்சர் பொறுப்பை ஏற்றவுடன், நடைபெற்ற நாடாளுமன்ற மேலவைத் தேர்தலில் (ராஜ்யசபா- மாநிலங்களவை) மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டனர். முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அந்த மூன்று உறுப்பினர்களின் பெயரைத் தன் கைப்பட எழுதினார். அந்த மூன்று பெயர்களில் ‘டார்பிடோ’ பெயர்தான் முதல் பெயராக இருந்தது என்பது பெருமைக்குரியதாகும். இச்செய்தியை ‘டார்பிடோ’ அவர்களே என்னிடம் சொல்லியுள்ளார். டில்லியில் மாநிலங்களவையிலும் எப்போது பேசினாலும் தந்தை பெரியார் பெயரை உச்சரிக்காமல் பேசியது இல்லை. ‘டார்பிடோ’ நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபொழுது 1981இல் என்னை அழைத்துச் சென்றார். நான் முதன்முதலாக டில்லி சென்றது அப்போதுதான் என்பதை நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

இறுதியாக அய்யாவின் குடும்பத்தைப் பற்றி கூறியே ஆகவேண்டும். திராவிடர் கழகத்தில், பிரச்சார பீரங்கியாக இளம் வயதில் விளங்கிய மனோரஞ்சிதம் அம்மாவை, பெரியார் தலைமையில் துணைவராக ஏற்றுக்கொண்டார். இவர்களுக்கு இணையாக யாரையும் கூறமுடியாத அளவிற்கு இருவரும் சேர்ந்து இயக்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தந்தை பெரியார் கருத்துகளை இல்வாழ்வில் நூறு விழுக்காடு செயல்படுத்திய குடும்பமாகும். அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும் அய்யா கொள்கையைப் பின்பற்றுவதில் மாற்றமில்லாக்குடும்பம் அதுவாகும்.

இவர்களின் ஒரே மகள் டாக்டர் வெண்ணிலா காணாமல் போனதுதான், அம்மா மனோரஞ்சிதம் வாழ்வில் மிகப்பெரிய சோகமாகும். அம்மா மனோரஞ்சிதம் அவர்கள் தன் இறுதி நாளில் பெரியார் திடலில் வாழ்ந்து – தன் வாழ்நாளை முடித்துக்கொண்டார். தமிழர் தலைவர் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி அவரது உடலை மருத்துவமனைக்கு கொடையாக வழங்கினார்கள்.

வாழ்க! சுயமரியாதைச் சுடரொளி ஏ.பி.ஜே. புகழ்!