மீண்டும் தமிழ் இயக்கம் வேண்டும்!

2024 தலையங்கம் ஜனவரி 16-31, 2024

கலைஞர் அரும்பாடுபட்டு, தமிழ் மொழியை செம்மொழி என்று அதிகாரப்பூர்வமாக ஆக்கினார்கள். அதுதான், மற்ற வடமொழிக்கேகூட வழிகாட்டியது.
ஒன்றிய அரசினுடைய, அதற்குரிய ஆணை வந்த பிறகுதான், சமஸ்கிருதத்திற்கு செம்மொழித் தகுதி வேண்டும் என்று சொன்னார்கள். அதற்குப் பிறகுதான் அந்த உணர்வே அவர்களுக்கு வந்தது. அதற்குப் பிறகு வேறு சிலர், எங்கள் மொழிக்கும் செம்மொழித் தகுதி வேண்டும் என்று கேட்டார்கள்.

உண்மை அப்படியிருக்க தொன்மையும், சிறப்பும் வாய்ந்த தமிழுக்கு நடப்பில் உரிய இடம் இருக்கிறதா?
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்பது இன்றைக்கு இருக்கிறதா? என்றால், இல்லை. இங்கும் தமிழ் இருக்கிறதா? என்று கேள்வி கேட்கவேண்டிய நிலையில் இருக்கிறோம்.
நாம் ‘‘ எம்மொழி செம்மொழி” என்று சொன்னால் மட்டும் போதுமா? உண்மையில் நடைமுறையில் தமிழ் பல இடங்களில் இல்லை. நீதிமன்றங்களில் முழுமையாக தமிழ் இல்லை.

கோயில்களில் இன்னும் சமஸ்கிருத ஆதிக்கம் 

கோவில்களில் உள்ளே பேசும் மொழியில் என்ன பேசுகிறார்கள் என்று நமக்குத் தெரியாது. அதே போன்று நீதிமன்றங்களில் தமிழ் இருக்கவேண்டும் என்று நாம் வாதாடுகிறோம். அப்படி வாதாடுவது என்பது நியாயமானதாகும். ஏனென்றால், நீதிமன்றத்தில் பேசப்படுவது என்ன என்பது கட்சிக்காரருக்கே தெரியாது.

இன்றைக்கு தமிழர் வீடுகளில் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் இல்லை!

என்னிடத்திலே கையொப்பம் வாங்குவதற்கும் ஒளிப்படம் எடுத்துக் கொள்வதற்கும் பல அன்பர்கள், உறவுக்காரர்களைப்போல, கொள்கை உறவுகள், தமிழுறவுகள் வருகிறார்கள்; பிள்ளைகள் மிகவும் அன்போடு வருகிறார்கள். -அப்பிள்ளைகளிடம் உங்கள் பெயர் என்ன? என்ன படிக்கிறீர்கள்? என்று கேட்போம்.
அப்பொழுது அவர்கள் பெயரைச் சொல்லும்பொழுது ‘ஷ்’, ‘புஷ்’ என்ற ஓசையுள்ள பெயர்களைச் சொல்வார்கள். ஆண், பெண் இருபால் குழந்தைகளுக்கும் தமிழ்ப் பெயர் இல்லை.
ஒரு காலத்தில், ‘உண்மை’ இதழில், குடியேற்றம் கு.மு.அண்ணல் தங்கோ அவர்கள் கட்டுரைகள் நிறைய எழுதியிருக்கிறார். அவர், பழைய பெயர்களையெல்லாம் தமிழ்ப் பெயர்களாக மாற்றினார். அவருடைய கருத்தினால்தான், சாரங்கபாணியாக இருந்த நான் வீரமணியாகக் காட்சியளிக்கக் கூடியவனாக இருக்கிறேன். அன்றைக்குத் தந்தை பெரியார் அவர்களுக்கு ஏற்பட்ட உணர்வை, அவர் செயல்படுத்தினார். நம்முடைய வேர்களை மறந்துவிட்டால், நம்முடைய அடையாளத்தைத் துறந்துவிட்டால், அல்லது அலட்சியப்படுத்தி விட்டால், அதைவிட நமக்கு இழப்பு வேறு இருக்க முடியாது.

அந்த உணர்வோடு பார்த்தால், இன்றைக்குத் தமிழ்க் குழந்தைகளின் பெயர்கள் வாயில் நுழையவில்லை. பெரும்பாலும் சமஸ்கிருதப் பெயர்கள். எனவே, தமிழர் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் கட்டாயம் இடும் நிலை உருவாக்கப்படவேண்டும்.

எனவே 90 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஓர் இயக்கம் இப்பொழுது மீண்டும், தேவைப்படுகிறது. அன்றைக்குத் தமிழுக்குப் பாடுபட்டவர்களை இன்றைக்கு ஏன் நாம் பாராட்டுகிறோம் என்றால், அவர்கள் செய்த பணிக்காக.

அவர்களைப் பாராட்டுவதோடு நில்லாமல், நாமும் தமிழ் அனைத்திலும் இடம்பெறப் பாடுபடவேண்டும், அதற்கான செயல்திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த வேண்டும். அதை நாம் உடனே செய்யவேண்டும். அறிஞர் பெருமக்கள், தமிழ்ச் சான்றோர்கள் தமிழ் உணர்வுள்ள இயக்கங்கள், அரசியல் கட்சிகள் ஒன்றுகூடி தமிழ் வளர்ச்சிக்கான, பயன்பாட்டுக்கான திட்டம் வகுக்க வேண்டும்.

நம்முடைய மக்கள், குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர் வைக்கக்கூடிய ஒரு பெரிய இயக்கத்தை மீண்டும் நாம் கட்சி வேறுபாடில்லாமல், அரசியல் மாறு பாடில்லாமல் தொடங்கவேண்டும்.
இதைச் சொல்வதற்கு வெட்கக்கேடாக இருக்கிறது தமிழ்நாட்டில், குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வையுங்கள் என்று ஓரியக்கம் நடத்தவேண்டும் என்று சொன்னாலே, நாம் வாழ்வது தமிழ்நாடா? அல்லது வேறா? என்று நினைக்கக்கூடிய அளவில் இருக்கிறது.

வாயில் நுழையாத பெயர்கள்; வடமொழிப் பெயர்கள், தமிழ்ப்பிள்ளைகளுக்கு ஏன் சூட்ட வேண்டும்? தமிழர்கள் சிந்திக்க வேண்டாமா?
அதுமட்டுமல்ல, ‘‘தமிழ் எனக்குத் தெரியாதுங்க” என்று சொல்வதை ஒரு பெரிய தகுதி போன்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ‘‘தமிழில் என்னால் பேச முடியவில்லை” என்று சொல்கிறார்கள்.

இளைஞர்களிடம் தமிழில் இருப்பதைக் கொடுத்து இதைப் படியுங்கள், மிகவும் முக்கியமானது என்று சொன்னால், ‘‘ஏங்க, இது ஆங்கிலத்தில் இருக்கா?” என்று கேட்கின்ற நிலையில், கல்லூரி மாணவர்கள் இருக்கிறார்கள்.
வெளிநாட்டுக்காரர்கள் அல்ல; நம்முடைய பிள்ளைகளுக்கே அந்தச் சூழல் இருக்கிறது என்றால், அதைத் தொடர நாம் அனுமதிக்கலாமா? சிந்தித்துச் செயல்படவேண்டியது இன்றைக்குக் கட்டாயமாகும்.

– கி. வீரமணி
ஆசிரியர்