முனைவர். கடவூர் மணிமாறன்
முத்தமிழைக் கற்றுணர்ந்த அறிஞர்; பொன்றா
முத்துவேலர் அஞ்சுகத்தாய் ஈன்ற செல்வர்!
ஒத்துணர்வால் ஒப்புரவால் உலகம் போற்றும்
உயரியநம் தமிழினத்தின் தலைவர் ஆனார்!
கத்துகடல் சூழுலகில் எங்கும் வாழும்
கவின்தமிழர் நெஞ்சமெலாம் நிறைந்து வாழ்வில்
முத்திரையைப் பதித்தவரோ மொய்ம்பு சோன்ற
முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஆனார்!
நூற்றாண்டு விழாவைக்கொண் டாடு கின்றோம்!
நுவலரிய அருவினைகள் பலவும் நாளும்
ஆற்றியவர்; அண்ணாவின் தலைமை ஏற்ற
அடுக்குமொழிப் பேச்சாளர்; பெரியார் தம்மைப்
போற்றியவர்; அவர்நினைத்த யாவும் ஆட்சிப்
பொறுப்பாலே நிறைவேற்றிப் புகழைச் சேர்த்தார்!
ஏற்றமுடன் மாநிலத்தின் உரிமைக் காக
இனமானப் போர்முழக்கம் என்றும் செய்தார்!
வள்ளுவர்க்கு வானுயரப் படிமம் வைத்தார்!
வளர்புகழ்சால் தலைநகரில் கோட்டம் கண்டார்;
உள்ளத்தில் பகுத்தறிவே ஆட்சி செய்ய
உதவாத சாதிமதப் புரட்டை வீழ்த்திக்
கொள்கையிலே மனஉறுதி கொண்டார்! பாயும்
குள்ளநரிக் கூட்டத்தின் கொட்டம் வீழ்த்தி
விள்ளரிய பயன்சேர்த்தார்; வெற்றி மங்கை
விருப்புடனே மடியமர்ந்தாள்; தமிழாய் வாழ்ந்தார்!
நல்லதமிழ் நடனமிடும் இவரின் நாவில்;
நலத்திட்டம் ஊற்றெடுக்கும் இவரின் நெஞ்சில்!
பொல்லாரை இவராற்றல் பொசுக்கி வீழ்த்தும்!
புலவரிவர் தமிழறிவு வாகை சூடும்!
“எல்லார்க்கும் எல்லாமும்” என்றே எண்ணி
எண்ணற்ற சாதனைகள் புரிந்தார்; போற்றும்
நல்லோரின் உள்ளமெலாம் நிறைந்தார்; வாழ்வில்
நலம் சேர்த்த உயர் தலைவா!