அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (312) – கி.வீரமணி

2023 அய்யாவின் அடிச்சுவட்டில் மார்ச் 16-31,2023

திருச்சி – மாநில திராவிடர் மாணவர் எழுச்சி மாநாடு

சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகக் களப்பணி பயிற்சி முகாம் 4.2.2003 செவ்வாய் முற்பகல் 11:00 மணிக்குத் தொடங்கியது. ஒன்றிய நகரத் தலைவர், செயலாளர்கள், கோட்ட அமைப்பாளர்கள் அதில் பங்கேற்றனர். எமது தலைமையில் நடைபெற்ற முகாமில் கோட்ட அமைப்புச் செயலாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் அறிமுக உரையாற்றினார். இறுதியாக நான் உரையாற்றினேன்.

சேலத்தில் 5.2.2003 புதன் காலை 9:00 மணிக்கு சென்னை அய்.ஏ.எஸ். அதிகாரி ஏ.எம். இராமன் – பானு ஆகியோரின் மகன் டாக்டர் எம்.ஆர். அருணுக்கும் கள்ளக்குறிச்சி அரிமா ஏ.மணி – கொடியரசு ஆகியோரின் செல்வி பொறியாளர் எம். உமாவுக்கும் சேலம் ரத்னவேல்(கவுண்டர்) திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக மணவிழா நடைபெற்றது. இம்மணவிழாவிற்குத் தலைமை வகித்து நடத்தி வைத்து சிறப்புரையாற்றினோம்.

சேலத்தில் 5.2.2003 அன்று காலை 10:00மணிக்கு சேலம் ஓமலூர் சாலையில் இரும்பாலை பிரிவு சாலையில் உள்ள வேலாயுதம் திருமண மண்டபத்தில் சேலம் மோளையானூர் நாகை நடராசன் (சமூக நீதிக்கட்சி தலைமைப் பொதுச்செயலாளர்) மணியம்மை ஆகியோரின் மகள் தாரகேசுவரிக்கும் சேலம் பெரியூர் துரைசாமி லட்சுமி ஆகியோரின் மகன் சிவகுமாருக்கும் இணையேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்குத் தலைமை ஏற்று, ஒப்பந்தம் ஏற்கச் செய்து, சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கி உரையாற்றினோம்.

ஆண்டிமடத்தில் 6.2.2003 அன்று காலை 9:00 மணிக்கு சவுபாக்கியா திருமண மண்டபத்தில் பெரியார் நகர் க. கலியமூர்த்தி -தனலெட்சுமி ஆகியோரின் மகன் க. சிந்தனைச்செல்வன் என்கிற வேல்முருகன்(மாவட்ட இளைஞரணி செயலாளர்), விருத்தாச்சலம் வி.என்.ஆர்.நகர் க.சுப்பிரமணியன்- மலர்க்கொடி ஆகியோரின் மகள் சு. ஜானகி ஆகிய இருவரின் இணையேற்பு ஒப்பந்த விழாவிற்குத் தலைமையேற்று, நடத்தி வைத்து, சுயமரியாதைத் திருமணத் தத்துவங்களை விளக்கியும், பெண்களின் சமத்துவத்தை வலியுறுத்தியும் பேசினேன்.

தோழர் க. சிந்தனைச்செல்வன் – ஜானகி மணவிழா

அன்று மாலை 5:00 மணிக்கு, அரியலூர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழக மாநாடும், மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும், எழுச்சிமிகு கருஞ்சட்டைப் படை இராணுவ அணிவகுப்பும் ஜெயங்கொண்டம் சன்னதித் தெருவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டு மேடையில் பெரம்பலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் வீராக்கண் மறைந்த பெரியசாமி – தையல்நாயகி ஆகியோரின் மகன் மாவட்ட இளைஞரணித் தலைவர் செந்திலுக்கும், பிச்சைப்பிள்ளை-தேன்மொழி ஆகியோரின் மகள் அம்பிகாவுக்கும் இணையேற்பு உறுதிமொழியைக் கூறச்செய்து மணவிழாவை நடத்தி வைத்தோம். மாநாட்டில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன நிறைவாக பகுத்தறிவுக் கருத்துகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினோம்.

கருநாடக மாநில சமூகநீதிக்கான வழக்கறிஞர்கள் மாநாடு பெங்களூரில் கருநாடக உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்க மண்டபத்தில் 8.2.2003 ஆம் நாள் காலை 10:00 மணிக்கு தொடங்கியது. இருநாள்கள் நடைபெற்ற இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில், கருநாடக மாநிலத்தின் முன்னாள் சட்ட அமைச்சரும் மூத்த வழக்கறிஞரும் சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவையின் நிருவாகிகளில் ஒருவருமான எல்.ஜி. ஹாவனூர் அவர்கள் தொடக்க விழா நிகழ்ச்சிகளுக்குத் தலைமையேற்று உரையாற்றினார்.

மாநாட்டைத் தொடங்கிவைத்து நாம் உரையாற்றுகையில், நீதித்துறையுடன் தந்தை பெரியார் நடத்திய போராட்டங்களையும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிக்கு நீதிமன்றம் இழைத்த அநீதியைத் தட்டிக்கேட்டு, அதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்தித்ததையும், இந்தியாவிலேயே முதன்முதலாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக தமிழ்நாட்டில் நியமிக்கப்பட்டு பிறகு அவர் உச்சநீதிமன்றத்திலும் முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதியாக இடம்பெற்ற செய்தியையும்,அதற்காக தந்தை பெரியார் மேற்கொண்ட முயற்சிகளையும், நீதிமன்றங் கள் சட்டத்திற்குரியவையாக (CourtofLaw)இருக்கின்றன என்பதையும், அவை நீதிக்குரியவையாக (Court of Justice) மாறவேண்டும் என்பதற்காக அய்யா அவர்கள் தொடங்கிய பணிகளை திராவிடர் கழகம் எப்படி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது என்பதையும் விரிவாக எடுத்துரைத்தோம்.

திராவிடர் மாணவர் கழக கலந்துரையாடல்.

திராவிடர் கழக மாநில மாணவரணி கலந்துரையாடல் கூட்டம் 9.2.2003 ஞாயிறு மாலை 6:00 மணிக்கு தஞ்சை சங்கீத மகாலில் எமது தலைமையில் தொடங்கியது. மாநிலமெங்கிலிருந்தும் முந்நூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் திரண்டிருந்தனர். திருச்சியில் பார்ப்பனர்கள் நடத்திய விஸ்வ ஹிந்து பரிஷத்(VHP)மாநாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திருச்சியில் மார்ச் 2 ஆம் தேதி திராவிடர் கழக மாணவர் அணி மாநாடு நடைபெறும் என்று அறிவித்தோம்.

செம்போடைதேவி திருமண மண்டபத்தில் 10.2.2003 திங்கள் காலை 10:00 மணிக்கு தஞ்சை வல்லம் பெரியார் பெருந்தொண்டர் எஸ். மணியன்–எம். லட்சுமி ஆகியோரின் மகன் ரவி (எ) ம. சிவசாமி (கேம்ப் சிங்கப்பூர்)க்கும் நாகை மாவட்டம் வேட்டைக்காரனிருப்பு எஸ்.ஏ. விஸ்வநாதன்- அம்பிகா ஆகியோரின் மகள் வி. மங்கையர்க்கரசிக்கும் இணையேற்பு ஒப்பந்த விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்விற்குத் தலைமையேற்று, ஒப்பந்த உறுதிமொழி கூறச் செய்து, சிறப்புரையாற்றினோம்.

உஸ்மானியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின ஆசிரியர்கள் கூட்டமைப்பு அய்தராபாத் தலித் பிரகடனம் என்னும் தலைப்பில் பிரகடன வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அய்தராபாத் (தலித்) பிரகடனத்தை 12.2.2003 அன்று நாம் வெளியிட, முதற்படியை ஆந்திரா உயர்நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.ஏ. சுவாமி பெற்றுக்கொண்டார். மத்தியப் பிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ள போபால் பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த அய்தராபாத் தலித் பிரகடனம் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சென்று ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரைத் தட்டியெழுப்பி விழிப்புணர்வு பெறச் செய்யவேண்டிய அளவுக்கு அவசரமானதாகவும், அவசியமானதாகவும் உள்ளது என்று எனது உரையில் குறிப்பிட்டேன்.

அய்தராபாத் பிரகடனம் வெளியீட்டு விழா

தஞ்சை மாவட்டம் சாலிய மங்கலத்தில் 14.2.2003 வெள்ளியன்று காலை 9:30 மணிக்கு வி.ஆர். மகால் திருமண அரங்கத்தில் வெ. கோவிந்தராசன்-டாக்டர் தமிழ்மணி ஆகியோரின் மகன் கோ. ராஜசேகரன் மற்றும் ஜி.முனிரத்தினம்-எம். வேதம் ஆகியோரின் மகள் டாக்டர் மு. ரேவதி ஆகியோரின் இணையேற்பு விழாவில் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்கச் செய்து சிறப்புரையாற்றினோம். இம்மணவிழாவிற்கு வருகை தந்த அனைவரையும் திராவிடர் கழகத்தின் சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் த. வீரசேகரன் வரவேற்று உரையாற்றினார்.

திருச்சி பெரியார் மகளிர் மருந்தியல் கல்லூரி அரங்கத்தில் 16.2.2003 அன்று காலை 9.00 மணிக்கு திருச்சி பூங்குடி எஸ். நாராயணசாமி, என். உஷா ஆகியோரின் மகன் நா. இராவணனுக்கும் தென்காசி மேலைப்புலியூர் ஆர்.முருகேசன்,எம். சீதாலட்சுமி ஆகியோரின் மகள் மு. ராதிகாவுக்கும் நடைபெற்ற இணையேற்பு நிகழ்விற்குத் தலைமையேற்று ஒப்பந்த உறுதிமொழி கூறச்செய்து, சிறப்புரையாற்றினேன்.

கடலூரில் மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்களுடைய துணைவியார் சுயமரியாதைச் சுடரொளி இரஞ்சிதம் அம்மையார் படத்திறப்பு நிகழ்ச்சி 18.2.2003 செவ்வாய் அன்று மாலை 5:00 மணிக்கு கடலூர் துறைமுகம் விஜயமகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இரஞ்சிதம் அம்மையார் படத்தைத் திறந்து வைத்து இரங்கலுரையாற்றினோம். இப்படத்திறப்பு விழாவுக்குகழகப் பொருளாளர் கோ. சாமிதுரை தலைமை வகித்து உரையாற்றினார்.

இஞ்சிதம் அம்மையார்

2.3.2003 கள்ளக்குறிச்சியில் 2.3.2003 காலை 8:30 மணிக்கு மாநில பகுத்தறிவாளர் கழகக் செயலாளர் வடக்கநந்தல் அ.கூத்தன்மாணிக்கம் ஆகியோரின் மகன் செல்வன் கூ. தமிழரசன் (கொரட்னர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்) கஞ்சமலைப்பட்டி வெ. கோவிந்தசாமி- இளஞ்சியம் ஆகியோரின் மகள் செல்வி கோ. சுமதி இருவரின் மணவிழா மகாலட்சுமி திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மணவிழாவை தலைமையேற்று நடத்தி வைத்து சிறப்புரையாற்றினேன்.

2-.3.2003 திருச்சியில் இன்று மாநில திராவிடர் மாணவர் எழுச்சி மாநாட்டையொட்டி திராவிடர்கழக பாடி வீட்டை நோக்கி தமிழ்நாடு முழுவதிலுமிருந்து திராவிடர் மாணவர்கள் எழுச்சியுடன் திரண்டனர். இன்று (2.3.2002) காலை கள்ளக்குறிச்சி திருமண நிகழ்ச்சியை முடிந்துவிட்டு பகல் 12:15 மணியளவில் திருச்சி எல்லையில் என்னை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

தந்தை பெரியார் தம் பொது வாழ்வுக்கும், இயக்கப் பணிக்கும் தலைமையிடமாகக் கொண்ட திருச்சி மாநகரிலே_அந்தத் திராவிடர் பாடி வீட்டிலே திராவிடர் மாணவர் மாநில எழுச்சி மாநாடு 2.3.2003 ஞாயிறன்று போர்க்குணத்தோடு எழுச்சிக் காவியம் படைப்பதாய் நடைபெற்றது.
பிற்பகல்தான் பேரணியோடு கூடிய மாநாடு என்றாலும், விடியற்பொழுதிலேயே எத்திசை நோக்கினும் தமிழினத்தின் விடுதலை இயக்கமான திராவிடர் கழகக் கருஞ்சாட்டைத் தொண்டர்களின் படைநடப்பினைப் பார்க்க முடிந்தது. வரும் பேருந்துகளில் எல்லாம் கருஞ்சட்டைத் தொண்டர்கள்; வரும் ரயில்களிலெல்லாம் திராவிடர் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக வந்து இறங்கிக்கொண்டிருந்தனர்.
தனிப்பேருந்துகள் மூலமாகவும், வேன்கள் வாயிலாகவும் தோழர்கள் வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர். புத்தூர் பெரியார் மாளிகை வளாகம் அதனையடுத்த சாலையெங்கும் பேருந்துகளும், வேன்களுமாய்க் காட்சி அளித்தன.

மாநகரில் எந்தச் சுவரைப் பார்த்தாலும் மாநாட்டைப் பறையடித்துத் தெரிவிக்கும் விளம்பர வாசகங்கள்!கழகக் கொடித் தோரணங்கள் எங்கு பார்த்தாலும் அசைந்தாடி தோழர்களை வரவேற்றன.தலைவர்களின் சிலைகள் எல்லாம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.
காலை 10:00 மணியளவில் தலைவர்களின் சிலைகளுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டன. மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.

கடலை அறியாத திருச்சி மாநகரம் கருஞ்சட்டைக் கடலின் அலைவீச்சை பேரணி என்ற பெயரால் அன்று கண்டது.
இதே திருச்சியிலே பிப்ரவரி 8, 9 ஆகிய நாள்களிலே விஸ்வ ஹிந்துபரிஷத் சார்பாக இந்து எழுச்சி மாநாடு என்று நடத்தி, திராவிடர் இனத்தையும், திராவிடர் இயக்கத் தலைவர்களையும் (ஏன் தந்தை பெரியாரையும்கூட அவன் இவன் என்று இழித்துப்பேசும் அளவுக்கு) கொச்சைப்படுத்தியும், திரிசூலம் வழங்கி வன்முறையைத் தூண்டியும், நாலாந்தர பேர்வழிகளைப் பேசவிட்டு சங்கராச்சாரியார், ஜீயர், அசோக்சிங்கால், தொகாடியா போன்ற-வகள் நாக்கைத் தொங்கப்போட்டு ரசித்த செய்திகளும், தகவல்களும் தமிழர்கள் மத்தியிலே பரவி, இந்தக் காவிமய பார்ப்பனமயக் கூட்டத்துக்கு பெரியார் பிறந்த மண் சரியான சவுக்கடி கொடுக்கவேண்டும் என்ற எண்ணம்தான் எழுச்சிமயமாகி பேரணியும், மாநாடும் இவ்வளவு உணர்ச்சிமயமாகவும், மக்கள் கடலாகவும் நடைபெற்றதற்குக் காரணமாகும். பேரணி பிற்பகல் 5:30 மணிக்குப் புறப்பட்டது.

திராவிட மாணவர் எழுச்சி மாநாட்டில் நினைவுப் பரிசு

பேரணிக்காக “தமிழர் தலைவர் இசைக்குழுவினரின்’’ கிளாரினட் பாண்டு வாதிமாணவரணித் தோழர்களும், தோழியர்களும் மாவட்ட வாரியாக உரிய பதாகைகளைத் தாங்கி அணிவகுத்துச் சென்றனர்.
10 ஆட்டோக்களில் அதற்கென்று நியமிக்கப்பட்ட தோழர்கள் முழக்கங்களை எடுத்துச் சொல்ல ஊர்வலத்தினர் அதனைத் தொடுத்துச் சொன்னது கழகத்தின் கொள்கைகளை பொதுமக்கள் புரிந்துகொள்வதற்குப் பெரிதும் உதவியாக இருந்தன.
கன்னியாகுமரி முதல் திருத்தணி வரை உள்ள அத்தனை மாவட்டங்களிலிருந்தும் கழகத் தோழர்கள், இளைஞரணியினர் மாணவரணியினர் பெருந்திரளாக அணிவகுத்தனர்.

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள், தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவர்கள். பூண்டி புஷ்பம் கல்லூரி மாணவர்கள் குடந்தை அரசு கல்லூரி மாணவர்கள், வல்லம் பெரியார் மணியம்மை பொறியியற் கல்லூரி மாணவிகள், வல்லம் பெரியார் நூற்றாண்டு தொழில்நுட்பக் கல்லூரி மாணவ – மாணவிகள், திருச்சி பெரியார் ஆசிரியர்ப் பயிற்சி மாணவர்கள், பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி மாணவிகள், நாகம்மை ஆசிரியை பயிற்சி மாணவிகள் தனித்தனியே பதாகைகளுடன் எழுச்சி முழக்கமிட்டு வந்த காட்சி தமிழக மாணவர்கள் மத்தியிலே இலட்சியப் பிடிப்பு மேலோங்கி நிற்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு.பேரணி கோகினூர் திரையரங்கு அருகே தொடங்கி சாஸ்திரி சாலை, சிப்பி திரையரங்கம், அண்ணா நகர் வழியாக உழவர் சந்தைத் திடலை நோக்கிச் சங்கமானது.
சிப்பி திரையரங்கு அருகில் அமைக்கப்பட்ட தனிமேடையில் நின்று பேரணியைப் பார்வையிட்டோம்.
“திராவிடர் பாடி வீட்டில் மாநாடு’’ என்று குறிப்பிடப்பட்டதற்கேற்ப மாநாட்டு மேடை பாடி வீடு போன்ற எடுப்பான தோற்றத்தில் உருவாக்கப்பட்டு இருந்தது. மேடையைப் பார்க்கும்போதே ஒரு கம்பீரம்-_ வீரஉணர்ச்சி பெறும் அளவுக்கு அது செம்மாந்து காணப்பட்டது.

கலை நிகழ்ச்சிகள்

திருச்சி பெரியார் நினைவு மெட்ரிக்குலேஷன், மேனிலைப்பள்ளி மாணவியர்) திருச்சி நாகம்மை ஆசிரியை பயிற்சிப் பள்ளி மாணவியர்களின் எழுச்சியூட்டும் நடன நிகழ்ச்சி வெகுசிறப்பாக அமைந்திருந்தது.
மாணவரணி தலைவர் இரா. இராவணகோபால் பி.இ., தலைமை தலைமை உரையில்,
மற்ற கட்சிகளுக்குச் சென்றால் பதவிகள் கிடைக்கும். திராவிடர் கழகத்தில் சேர்ந்தால் பகுத்தறிவும், தன்மானமும், நல்லொழுக்கமும் கிடைக்கும் கழகத்தின் தீர்மானங்களே, எதிர்காலத்தின் சட்டங்கள் என்றும் குறிப்பிட்டார்.
மாநாட்டுத் தொடக்கவுரையை தஞ்சை இரா. பெரியார்செல்வன் நிகழ்த்தினார். கோடை இடிபோல் இருந்தது அவரின் உரை மாணவர்களின் நாடி நரம்புகளை முறுக்கேற்றியது.

மாநில மாணவரணி துணைச்செயலாளர் தா.கண்மணி பி.ஏ., வரவேற்புரையாற்றினார்.
மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கடலூர் சு. அறிவுக்கரசு அவர்கள் “உன்னை விற்காதே’’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் மாநிலத் தலைவர் பெரியார் பேருரையாளர் இறையன் அவர்கள் “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்’’ என்ற தலைப்பில் உரையாற்றுகையில்.
“தோட்டத்துப் புடலங்காய் தமிழர் நாடு’’ எனும் தலைப்பில் உரையாற்றிய திராவிடர் கழக உதவிப்பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் தனது உரையில், தந்தை பெரியார் கருத்தை எடுத்துக் காட்டினார். 1948இல் கருப்புச் சட்டைப் படை தடை செய்யப்பட்டபோது, ‘என்னையோ இயக்கத்தையோ அழிக்க நினைத்தால், அது பார்ப்பன அழிவில் போய்தான் முடியும்’’ என்று தந்தை பெரியார் கூறியதை அவர் நினைவூட்டினார்.

தமிழ்நாட்டில் பார்ப்பன சக்திகளுக்கும், இந்துத்துவாவுக்கும் முக்கியக் கருவியாக இருந்து செயல்படும் ‘தினமலர்’ ஏட்டை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தை கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை அவர்கள் வலியுறுத்தினார்.
கழகத் துணைப் பொதுச்செயலாளர் துரை. சக்ரவர்த்தி அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.
எமது நிறைவுரையில்,திராவிடர் இனவுணர்வு செத்துப் போய்விட்டது என்று கருதுபவர்களுக்கு கழகத்தின் பேரணியும், மாநாடும் தக்க பதிலடி கொடுத்துள்ளது. இங்கு வாலாட்டலாம் என்று நினைத்தால் அது நறுக்கப்படும் என்று எச்சரித்தோம்.
சங் பரிவார்க் கூட்டம் திரிசூலம் எடுத்துக்கொண்டு ஊர்வலம் வரும்போது, மதச் சார்பற்ற சக்திகள் ஊர்வலம் செல்லும்போது குறைந்தபட்சம் கைத்தடியையாவது எடுத்துச் செல்ல வேண்டும்.

உங்கள் ஊர்வலத்தில் அதனைக் கடைப்பிடியுங்கள் என்று முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் தெரிவித்த கருத்தினை எடுத்துக் கூறினோம்.
மண்டல மாணவரணிச் செயலாளர் மா. திராவிடச்செல்வன் எம்.காம். நன்றிகூறிட மாநாடு இரவு 11:30 மணிக்கு நிறைவுற்றது.
இயக்க வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்று குறிப்பிடும் மாநாடாக அமைந்தது. மாநாட்டுக்கு வந்து திரும்பிய ஒவ்வொருவரும் புத்தெழுச்சி பெற்றுச் சென்றனர்.

(நினைவுகள் நீளும்…)