பெண்ணால் முடியும் – பேட்மிண்டனில் சாதனை புரியும் ஆராதயா

2023 பெண்ணால் முடியும் மார்ச் 16-31,2023

ஆறு வயது முதலே விளையாட்டில் சாதனை படைத்து வருகிறார் ஆராதயா. அய்ந்தாம் வகுப்பு படித்து வரும் இவர் சிறந்த வகையில் பேட்மிண்டன் விளையாடி வருகிறார். பள்ளி மாவட்ட மற்றும் மாநில அளவிலான பல போட்டிகளில் பங்கேற்று, 40 கோப்பைகளை வென்றுள்ளார். இந்தியாவிற்காக சர்வதேச அளவில் பல போட்டிகளில் பங்கேற்க வேண்டும்; ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும்; என்று கூறுகிறார் ஆராதயா.

“என் அப்பா மருத்துவர் அவினாஷ். பெரும்பாக்கத்தில் உள்ள எங்கள் குடியிருப்பில் அப்பா தினமும் பேட்மிண்டன் விளையாடப் போவார். நானும் அவருடன் சென்று, அப்பா விளையாடுவதைப் பார்த்த எனக்கும் அந்த விளையாட்டைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் வந்தது. அப்பாவுடனும் என் வயதையொத்த சிறுவர்களுடனும் விளையாடத் தொடங்கினேன்.

என் விளையாட்டு ஆர்வத்-தைப் பார்த்த பயிற்சியாளர் சகாயராஜ் மேலும்என்னை ஊக்கப்படுத்தி, எனக்கு பயிற்சியளிக்கத் தொடங்கினார். 9 வயதில் போட்டியில் கலந்துகொள்ளத் தொடங்கினேன். பின்னர், தொடர்ச்சியாக பல போட்டிகளில் கலந்து-கொண்டேன். 9 வயதுக்கு உட்பட்டோரின் பிரிவில் கலந்துகொள்ளத் தொடங்கினேன். சென்னை கேளம்பாக்கத்தில் 2020ஆம் ஆண்டு நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் முதன்முதலாகக் கலந்துகொண்டு இரண்டாம் இடம் வந்தேன். என் தந்தை எனக்கு ஊக்க-மளித்து, இது உன் விளையாட்டு; வாழ்க்கையின் ஆரம்பப் பயணம் என்று கூறினார்.

பேட்மிண்டன் விளையாட்டுக்கு மனவலிமை மிக முக்கியம். ‘நீ ஸ்ட்ரெஸ் உடன் விளையாடினா வெற்றியடைவது கடினம்’ என அப்பா சொல்வார். அதனால், நான் மனஉறுதியுடன், பயப்படாமல் விளையாடுகிறேன் என்று கூறுகிறார்.

மாவட்ட, மாநிலப் போட்டிகளில் 9 வயதிற்குட்பட்டோரின் பிரிவில் பங்கேற்று தனிநபர் பிரிவில் 20 கோப்பைகளை வென்றுள்ளார். 11 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் மாவட்ட மாநில அளவில் ஏராளமான போட்டிகளில் பங்கேற்று பரிசுக் கோப்பைகளை வென்றுள்ளார். தினமும் காலை 5:30 மணி முதல் 7:00 மணிவரை பயிற்சி மேற்கொள்கின்றார். போட்டியில் கலந்துகொள்கின்றார். வாரத்தில் ஒரு நாள் அப்பாவுடன் உடற்பயிற்சிக்கூடம் (Gim) சென்று பயிற்சி மேற்கொள்கின்றார்.

படிப்பு விளையாட்டு என இரண்டிலும் கவனம் செலுத்தும் இவர், பள்ளித் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் பெறுகிறார். இதுவரை 9 மற்றும் 11 வயதுக்கு உட்பட்டோரின் பிரிவுகளில் விளையாடி 40 கோப்பைகள் 20 பதக்கங்கள் வென்றுள்ளார். பி.வி. சிந்துதான் தன்னுடைய முன்மாதிரி (ரோல்மாடல்) என்ற அவர், சிந்துவைப் போல ஒலிம்பிக்கில் பங்கேற்று, தங்கம் வெல்ல வேண்டும் என்பதே தனது இலக்காக உள்ளது என்கிறார்.