முகப்புக் கட்டுரை : நீட், தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராய் நீண்ட பரப்புரைப் பயணம் ஏற்படுத்திய எழுச்சி!

மே 1-15,2022

மஞ்சை வசந்தன்

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில், ஏப்ரல் 3ஆம் நாள் நாகர்கோவிலில் தொடங்கியது நீண்ட பரப்புரைப் பயணம்.

25.4.2022 அன்று சென்னையில் நிறைவு விழா கண்ட இப்பரப்புரைப் பயணம்,

21 நாள்கள் என்ற நீண்ட பெரும்பயணம். 4,700 கி.மீ. பயண தூரம்; 40 இடங்களில் பொதுக்-கூட்டங்கள்; இலட்சக்கணக்கான பொதுமக்கள் சந்திப்பு என்று சரித்திர சாதனை கொண்டது இப்பயணம்.

ஒன்றுக்கும் அசையாத ஒன்றிய அரசை ஆட்டி, அசைத்து, அடிபணியச் செய்யும் வல்லமை மக்கள் எழுச்சிக்கும், போராட்டத்திற்கும் உண்டு என்ற வரலாற்று உண்மையின் அடிப்படையில் ஒன்றிய அரசின் பிடிவாதத்தைத் தகர்த்து, சமூக நீதியை நிலைநாட்ட சரியான நேரத்தில், சரியான தலைமையில், சரியான திட்டமிடலுடன் நடத்தப்பட்ட பயணம் இதுவாகும்.

எதற்காக இந்தப் பிரச்சாரப் பயணம்?

1. ‘நீட்’ எனும் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு

2. புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு

3. மாநில உரிமைகள் மீட்பு

என்ற மூன்று நோக்கங்களைக் கொண்டது இப்பயணம்.

நீட் தேர்வு எதிர்ப்பு:

‘நீட்’டை மட்டுமல்ல _ எந்த நுழைவுத் தேர்வையும் எதிர்க்கிறோம். பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் தேர்வு பின்பற்றப்-பட்ட தமிழ்நாடுதான் மருத்துவக் கட்டமைப்பில் இந்தியத் துணைக் கண்டத்துக்கே தலைமை தாங்குகிறது. அது மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் தமிழ்நாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவர்கள்தாம் சாதனை புரிந்து வருகின்றனர்.

பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்த _ கிராமப்புறத்தைச் சேர்ந்த டாக்டர் ரெலா தான் உலகின் தலைசிறந்த கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர்களுள் ஒருவராக ஓங்கி உயர்ந்து நிற்கிறார்.

பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் அடித்தட்டு மாணவர்களும் டாக்டர் ஆவதா? இந்த வயிற்றெரிச்சலின் விளைவுதான் ‘நீட்’ தேர்வு.

இந்தியாவில் ஒரே வகையான கல்வித் திட்டம் உண்டா? இல்லை! அப்படி இருக்கும்போது எப்படி ஒரே மாதிரியான ‘நீட்’ தேர்வு? நாடு முழுக்கச் சரியாகுமா?

இந்த ‘நீட்’ சி.பி.எஸ்.இ. என்னும் கல்வித் திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்த சி.பி.எஸ்.இ.யில் படிப்போர் யார்? மேல்தட்டு மாணவர்கள்.

எனவே, அவர்களுக்குத்தான் நீட் சாதகமாக இருக்கிறது. அடித்தட்டு, கிராமப்புற மாணவர்களை அது பெரிதும் பாதிக்கிறது.

பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி தேர்வு நடந்தபோது சி.பி.எஸ்.இ. மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் பெற்ற இடம் 1 %.

பிளஸ் டூ தேர்வு மதிப்பெண் முறையை ஒதுக்கித் தள்ளி, அந்த இடத்தில் ‘நீட்’டைக் கொண்டு வந்த நிலையில், சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்குக் கிடைத்த இடம் 39%.

இதிலிருந்து தெரிவது என்ன? சிபிஎஸ்சியில் படிக்கும் உயர்தட்டு மாணவர்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கச் செய்து அரசுப் பள்ளியில் படிக்கும் அடித்தட்டு மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு கிடைக்காமல் செய்யும் சூழ்ச்சியே இந்த நீட் தேர்வு என்பதுதானே!

மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்குச் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற  நிபந்தனை வைத்த சுயநலக் கூட்டமல்லவா? அதே சுயநல இலக்குடன்தான் ‘நீட்’ தேர்வும் கொண்டுவரப்பட்டு, நடத்தப்படுகிறது.

புதிய தேசியக் கல்விக் கொள்கை:

“இந்தியாவே ஒரே தேசம் இல்லை; அது ஓர் ஒன்றியம்’’ என்கிறபோது இங்கு தேசியக் கல்வி என்பது எப்படிச் சாத்தியமாகும்?

இந்தப் புதிய தேசியக் கல்வி திட்டப்படி, 3, 5, 8 ஆம் வகுப்புகளிலும் தேர்வாம். 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வாம்!

மகிழ்வோடு கற்க வேண்டிய கல்வியை மன அழுத்தத்திற்கு உட்படுத்தும் கொடுஞ்செயல் இது அல்லவா?

5ஆம் வகுப்பில் தேர்ச்சி அடையாவிட்டால் தொழில் கல்விக்குச் செல்லவேண்டுமாம். கிராமத்தில் எந்தத் தொழிற் சாலையில் பயிற்சி பெறுவார்கள்? அப்பன் தொழிலுக்குத்தானே செல்ல வேண்டிவரும்?

அன்று 1952_1954 களில் ஆச்சாரியார் (இராஜாஜி) கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தின் புது வடிவம் இது. இந்தக் கல்வித் திட்டம் கல்வியாளர்களாலும் தயாரிக்கப் பட்டது அல்ல! மாறாக, கார்ப்பரேட் முதலாளிகள் வடிவமைத்தது.

மாநில உரிமை பறிப்புக்கு எதிர்ப்பு

மாநிலங்கள் ஒருங்கிணைந்த இந்தியாவில்  பெரும்பகுதி அதிகாரம் ஒன்றிய அரசிடம். மாநிலங்களிடம் இருந்த அதிகாரங்களும், உரிமைகளும் ஒவ்வொன்றாய் ஒன்றிய அரசு பறித்து வருகிறது. எல்லாவற்றிற்கும் ஒன்றிய அரசின் தயவை எதிர்நோக்கும் அவலம்! மறைந்த முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள்,

“சென்னை தலைமைச் செயலகக் கோட்டை வளாகத்தில் மண்டும் புல்லினை வெட்டு-வதற்குக்கூட ஒன்றிய அரசின் அனுமதியைப் பெறவேண்டிய நிலை’’ என்று இடித்துக் காட்டியது போன்ற அவல நிலை!

குஜராத் முதலமைச்சராக இருந்தபோது ‘நீட்’டையும், ஜி.எஸ்.டி.யையும், ஆதார் கார்டையும் எதிர்த்து நெடு முழக்கமிட்ட அதே நரேந்திர மோடி, பிரதமரான பிறகு அவற்றை ஆதரித்து அமல்படுத்துகிறார். அகில இந்திய கல்வித் துறை (மிணிஷி) வரப் போகிறதாம்!

சமூக நீதிக்கும், மாநில உரிமைக்கும் எதிரான இந்த மூன்று திட்டங்களையும் தகர்க்க வேண்டியது சமுகநீதியாளர்களின் கட்டாயக் கடமை.

திராவிட இயக்கப் போராட்டங்கள் எல்லாம் வெற்றி பெற்றதற்குக் காரணம், அது மக்களிடம் சென்று விளக்கிப் பரப்புரை செய்யத்தான்!

இப்பொழுதும் அதே அணுகுமுறையைக் கையில் எடுத்துக்கொண்டுதான் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி புறப்பட்டார். மக்களிடையே பரப்புரை செய்தார். இளைஞர்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் அணிவகுத்து, போருக்குத் தயாராகி நிற்கின்றனர்.

தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வுக்கு முன்பிருந்த நிலை

1. மொத்த மருத்துவக் கல்லூரி விண்ணப்பம்

               2015இல் _ 32,525.

               2014இல் _27,539.

               2013இல்_ 29,569.

2.            தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை  2015இல்_30,249, 2014இல்_26,629, 2013இல்_28,311

3.            மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த தமிழ்நாடு மாணவர்களின் எண்ணிக்கை:

               அரசுக் கல்லூரி: 2015இல்_2327, 2014இல்_2245, 2013இல்_2267

               தனியார் கல்லூரி: 2015இல்_669, 2014இல்_895, 2013இல்_984

4.            ஒன்றிய அரசு கல்வித் திட்டத்தின் கீழ் (சிபிஎஸ்இ) விண்ணப்பித்தவர்கள்: 2015இல்_ 1276, 2014இல்_789, 2013இல்_1642

5.            தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் தேர்வானவர்கள்: (சிபிஎஸ்இ) 2015இல்-0, 2014இல்-0, 2013இல்-0.

6.            தனியார் கல்லூரிகளில் தேர்வானவர்கள் (சிபிஎஸ்.இ)           2015இல்_2, 2014இல்_2, 2013இல்_2.

‘நீட்’டால் ஏற்படும் –  ஏற்பட்ட இழப்புகள் யாவை?

2016_2017இல் +2 தேர்வு அடிப்படையில் நீட் தேர்வின்றி தேர்வு பெற்ற மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள் 3546.

2017_2018இல் ‘நீட்’ தேர்வு _ மாநிலப் பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்கள் பெற்ற இடங்கள் 2314; கடந்த ஆண்டைவிட இழப்பு 1232 இடங்கள்.

2016_2017இல் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் +2 அடிப்படையில் படித்தவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 62 (நீட் இல்லாதபோது)

2017_2018இல் ‘நீட்’ தேர்வு காரணமாக சி.பி.எஸ்.இ.யில் படித்தவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 1220. “நீட்’டில் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கூடுதலாகப் பெற்ற இடங்கள் 1158.

2016_2017ஆம் ஆண்டு பிற்படுத்தப் பட்டோருக்கு (+2 அடிப்படையில்) கிடைத்த இடங்கள் 1781)

2017_2018ஆம் ஆண்டு ‘நீட்’ தேர்வின் காரணமாக பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்த இடங்கள் 1501 இழப்பு 280,

2017_2018இல் இடம் கிடைக்கப் பெற்றவர்களில் 1004 பேர் முந்தைய ஆண்டுகளில் +2 தேர்வில் வெற்றி பெற்று பல லட்சம் ரூபாய் செலவு செய்து தனிப்பயிற்சி (Coaching Centres) பெற்றவர்கள் _ இதில் 250 பேர் உயர்ஜாதியினர்,

மிகவும் பிற்படுத்தப்பட்டோர்

2016 _ 2017 இல் (+2 அடிப்படையில்) _ 854

2017_2018 (‘நீட்’ காரணமாக) _ 621

தாழ்த்தப்பட்டோர்

2016_2017 இல் (+2 அடிப்படையில்) _ 572

2017_2018இல் (‘நீட்’ காரணமாக) _ 557

அரசு மேனிலைப் பள்ளியில்

2016_2017இல் (+2 தேர்வு அடிப்படையில்) _ 30

2017_2018இல் (‘நீட்’ தேர்வு அடிப்படையில்) _ 5

ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படியே அனைத்தும்

18.1.2018 அன்று ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஒரு தகவலைத் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களை மனதிற் கொண்டு மாநிலப் பாடத் திட்டத்திலிருந்து ‘நீட்’ தேர்வு கேள்வித்தாள்களை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஆனால், இந்த அறிவிப்பிற்கு முற்றிலும் மாறாக 21.1.2018 அன்று ஓர் அறிவிப்பு வெளிவந்தது.

“மருத்துவப் படிப்பில் சேர நாடு முழுவதும் நடத்தப்படும் ‘நீட்’ தேர்வில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின்படியே கேள்வித்தாள் தயாரிக்கப்-படும்’’ என்று அதே மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார். இடையில் மூன்று நாள்களில் என்ன நடந்தது? ஆர்.எஸ்.எஸ்.ஸின் அழுத்தமே அதற்குக் காரணம் என்பதுதானே!

‘நீட்’ தேர்விலும் மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறான தேர்வுத் தாள்கள் தயாரிக்கப்பட்டு சமப் போட்டி என்ற இலக்கணமும் தகர்க்கப்பட்டது. வெளிநாட்டுக்காரர்களும் மருத்துவக் கல்லூரிகளில் சேர வழி செய்தனர். (Global Entrance) பிற மாநிலத்தவர்கள் இரட்டை இருப்பிடச் சான்று பெற்று தமிழ்நாட்டில் இடம் பிடித்தனர்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 25  அரசு மருத்துவக் கல்லூரிகளும், 24 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன.

‘நீட்’ எனும் அகில இந்திய நுழைவுத் தேர்வின் காரணமாக அனைத்து மாநிலங்களின் வேட்டைக்காடாகத் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகள் மாற்றப்பட்டு விட்டது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இருந்துவந்த வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்பட்டு விட்டன.

2017_2018இல் தமிழ்நாட்டில் இடம் கிடைக்கப் பெற்றவர்களும் 45 சதவிகிதத்தினர் ஓராண்டுக்கு மேலாக தனிப்பயிற்சி நிறுவனங்களில் பல லட்சம் ரூபாய் செலவிட்டு பயிற்சி பெற்றவர்கள் ஆவார்கள். இந்த வாய்ப்பு ஏழை எளிய, கிராமப்புற மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை.

தற்போது நடைமுறையில் உள்ள இந்திய மெடிக்கல் கவுன்சிலைக் கலைத்துவிட்டு அதற்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகள் மருத்துவப் படிப்பிற்குப் பிறகுLicentile Exam – Exit என்று தனியே தேர்வு நடத்தி அதில் வெற்றி பெற்றால்தான் மருத்துவராகப் பதிவு செய்ய முடியும் என்பது தேவையில்லாத பெரும் சுமையாகும்.

நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஒப்புதல் அளிக்கப்படாமல் முடக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்ட நிலையில், மாண்புமிகு மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்களின் குழுவின் பரிந்துரை அடிப்படையில் நீட் விலக்கு வேண்டி மீண்டும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அவர் நீண்ட காலம் கழித்து திருப்பி அனுப்ப, மீண்டும் சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்-பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, இன்றுவரை ஆளுநரால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படாமல், கிடப்பில் உள்ளது.

இந்நிலையில்தான் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், தனது 21 நாள்கள் நீண்ட பரப்புரைப் பயணத்தைத் தொடங்கி, 40 கூட்டங்களில் பரப்புரை செய்து மக்களை விழிப்பும் எழுச்சியும் கொள்ளச் செய்தார்.

பரப்புரைப் பயணத்தில் தமிழர் தலைவர் வலியுறுத்திய கருத்துகள்:

*              மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கி மருத்துவப் படிப்பை தங்களுக்கு மட்டுமே முற்றுரிமை ஆக்கிய ஆதிக்கப் பேர்வழிகள் ஆரிய பார்ப்பனர்கள். அதை மாற்றி நம் மக்களும் மருத்துவம் படிக்க வழி திறந்தவை நீதிக் கட்சியும், திராவிட இயக்கங்களும்.

*             நுழைவுத் தேர்வே கூடாது என்று அதை முற்றாக ஒழித்தவர் கலைஞர்.

*             உச்சநீதிமன்றத்தால் நீக்கப்பட்ட நீட் தேர்வை, மீண்டும் மறு ஆய்வு மனு மூலம் உயிரூட்டியது _ ஆர்.எஸ்.எஸ். கட்டளைப்படி செயல்படும் பாஜக அரசு.

*              நீட் தேர்வின்போது, சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்கள் எப்படி தேர்வு எழுதி வெற்றி பெற முடியும்?

*              பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1200க்கு 1180 மதிப்பெண்ணுக்கும் மேல் பெற்றவர்கள் நீட் தேர்வில் தோல்வியடைகிறார்கள் என்றால் அதில் உள்ள சதியைப் புரிந்துகொள்ள வேண்டும்.

*             அனிதாவைப் போன்ற அடித்தட்டு மாணவர் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும், மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைக்காமல் போனது நீட் என்னும் சதியால்தான்.

*             12 ஆண்டுகள் படித்த படிப்பை ஒதுக்கித் தள்ளிவிட்டு கோச்சிங் சென்டரில் படித்ததை மட்டும் எடுத்துக்கொண்டு, மருத்துவப் படிப்பிற்கு இடம் அளிப்பது மனித நீதிக்கு எதிர் அல்லவா?

*             அப்படியென்றால் பள்ளிகளை மூடிவிட்டு கோச்சிங் சென்டர்கள் மட்டுமே நடத்திக் கொள்ளலாமே!

*              உயர்ஜாதி பணக்கார மாணவர்கள் மட்டும் மருத்துவம் படிக்கவும், கார்ப்பரேட் கோச்சிங் சென்டர்கள் கொள்ளை இலாபம் அடிக்கவும் கொண்டுவரப்பட்டதே நீட் தேர்வு.

*             நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதை ஆளுநரே முடக்கி வைப்பது மக்களாட்சித் தத்துவத்தைத் தகர்த்து, பாசிச ஆட்சி நடத்தும் முயற்சியல்லவா?

*              ஆளுநரே இல்லாத நிலை வேண்டும். கல்வி மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் வரவேண்டும். நுழைவுத் தேர்வு என்பதே அறவே கூடாது.

நிறைவு சிறப்புப் பொதுக்கூட்டம்:

பரப்புரைப் பயணத்தின் நிறைவு சிறப்புப் பொதுக்கூட்டம் 25.4.2022 அன்று சென்னை பெரியார் திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள சிறப்பாக, எழுச்சியோடு நடைபெற்றது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உரை:

பெரியார் தன்னுடைய பயணத்தை முடித்துக் கொண்டார் _ இனி நாம் தொடர்வோம் என்று ஆருயிர் அண்ணன் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் கூறினார்கள் _ அந்தப் பயணத்தினுடைய  தொடர்ச்சியாகத்தான் இன்றைக்கு 4,700 கிலோ மீட்டர் பயணம் செய்து விட்டு, இன்னும் நான் பயணம் செய்யத் தயாராக இருக்கிறேன் _ இன்னும் எத்தனை ஆண்டு-களானாலும் என்று சொன்னார் அல்லவா நம்முடைய அண்ணன் வீரமணி அவர்கள்.

பள்ளி மாணவராகப் பேசி, பின்னர் கல்லூரி மாணவராகப் பேசி, அண்ணாமலை பல்கலைக் கழக மாணவராக முழங்கி, சட்டக்கல்லூரி மாணவராக முழக்கமிட்டு, இளம் பேச்சாளராக திராவிட இயக்கத்திலே உலவி, பின்னர் திராவிடர் கழகத்தினுடைய பொதுச்-செயலாளராகப் பேசி, திராவிடர் கழகத்தினுடைய தலைவராக உரையாற்றி, இன்றைக்குத் தமிழர் தலைவராக உலாவரக்-கூடிய அண்ணன் அவர்கள் பல்லாண்டு வாழவேண்டும் என்பதோடு, அவருடைய உரையைக் கேட்பதற்காக இங்கே அனைவரும் திரண்டு வந்திருக்கின்றீர்கள்.

அவருடைய உரையில், சாரம் இருக்கும்; கருத்து இருக்கும்; உலக நாடுகளுடைய வரலாற்றுச் செய்திகள் இருக்கும். அப்படிப்பட்ட அண்ணன் வீரமணி அவர்கள், நீட் எதிர்ப்பிற்காக _ அவர் செய்த பிரச்சாரத்தின் விளைவாக, ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கின்றது என்பதைப்பற்றி இங்கே குறிப்பிட்டார்கள்.

அப்படிப்பட்ட அண்ணன் வீரமணி அவர்களைப் பாராட்டுவதற்காக நம்முடைய முதலமைச்சர் மானமிகு சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி ஸ்டாலின் அவர்கள் வந்திருக்கிறார்கள்.

தேசியக் கல்விக் கொள்கையின் மூலமாக,, இனி அனைத்துப் பாடங்களும் இந்தி மொழியில்தான். சமஸ்கிருதம்தான் பண்பாட்டை ஒருமைப் படுத்துகின்ற பண்பாட்டு மொழி என்று அவர்கள் அறிவித்துவிட்டு, இந்தி மொழியில் தான் இனி, எல்லாமே!

பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு முதல் _ பி.காம்., பி.எஸ்சி., பி.ஏ., டிப்ளமோ, மருத்துவக் கல்வி, சட்டக் கல்வி _ அனைத்துக் கல்விகளுக்கும் இனிமேல் நுழைவுத் தேர்வுகளை எழுதித்தான் தீரவேண்டும் என்று சொல்கிறார்கள்.

அனைவரையும் ஒன்று திரட்டி, சமூகநீதிக் கான ஓர் அடித்தளத்தை அமைத்து, ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சியிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய முயற்சிகள் வெற்றி பெறவேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.

இந்த நேரத்தில், பெரியார் வாழ்த்துகிறார்; அண்ணா வாழ்த்துகிறார்; டாக்டர் கலைஞர் வாழ்த்துகிறார்.

உன்னுடைய கொற்றம் வாழ்க!

உன்னுடைய புகழ் வாழ்க!

உன்னுடைய முயற்சிகள் வெல்க! என்று.

அவருக்குப் பக்கத்திலே அண்ணன் வீரமணி அவர்கள் இருப்பதினால், நிச்சயமாக அவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையோடு, நானும் உங்களோடு சேர்ந்து வாழ்த்தி, உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறட்டும் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.

தமிழர் தலைவர் உரை:

இன்றைக்கு ஏற்பட்டு இருக்கிற எதேச்சாதிகாரத்தை எதிர்த்து நிற்கவேண்டும்; பாசிசத்தை எதிர்த்து நிற்க வேண்டும்; மதவெறியைப் போக்கவேண்டும்; ஜாதி வெறியை அகற்றவேண்டும் என்று சொல்லக்-கூடிய அளவிற்கு இந்திய அளவில் வந்திருக்கிறது என்றால், அதற்குத் தமிழ்நாடு-தான் முன்னோடியாக நிற்கிறது.

‘திராவிட மாடல்’ என்றால் என்ன என்று பல்கலைக்கழகங்கள் ஆய்வு செய்கின்றன.

இந்தியாவினுடைய தலைமை நீதிபதி ரமணா அவர்கள் உரையாற்றியபொழுது,  நம்முடைய முதலமைச்சர் சிறப்பான முதலமைச்சராக இருக்கிறார் என்று சொன்னார்.

இதைவிட திராவிட இயக்கத்திற்கு என்ன வேண்டும்?

புதிய தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்தைப் பற்றி மக்களிடம் விளக்கிச் சொல்லுகின்றபொழுது, அதை உணர்ந்து அவர்கள் வருந்தினார்கள்.

குலக்கல்வித் திட்டம் நீடித்திருக்கு மேயானால், பெரியார் போராடியிருக்கா விட்டால் என்னாவாகியிருக்கும்?

இந்தி இங்கே வந்து அமர்ந்திருக்கு மேயானால் நம்முடைய நிலை என்னவாகி யிருக்கும்?

இதை எதிர்க்கக்கூடிய தெம்பும், திராணியும், உறுதியும் திராவிடர் இயக்கத்திற்கு உண்டு.

நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி அனுப்பிய மசோதா ஆளுநருக்கு அனுப்பப்-பட்ட மசோதா அல்ல. ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட வேண்டிய மசோதாவாகும்.

இடையில் உள்ள தபால்காரருக்குப் பிரித்துப் பார்ப்பதற்கு உரிமையே யில்லை!

எனவே, அனுப்பவேண்டியவர்களுக்கு அதை அனுப்புங்கள்; இடையில் உள்ள தபால்-காரருக்குப் பிரித்துப் பார்ப்பதற்கு உரிமையே-யில்லை. அப்படி பிரித்துப் பார்த்தால், அவர் அந்தப் பணியை சரியாகச் செய்யவில்லை என்றுதான் பொருள்.

முதல்வர் உரை:

கொள்கையின் வழிகாட்டியாக, கலங்கரை விளக்கமாகப் பார்க்கிறேன்!

நம்முடைய ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டதைப் போல, பெரியார் திடலுக்கு நான் வந்திருப்பது புதிதல்ல, என் தாய் வீட்டுக்கு வந்திருக்கிறேன். அதிலும் நம்முடைய பாசமிகு ஆசிரியர் அவர்களைப் பாராட்ட வந்திருக்கிறேன். அவரைப் பாராட்டுவது என்பது ஓர் இயக்கத்தின் தலைவரை, ஒரு கருத்தியலின் தலைவரைப் பாராட்டுவதாகும்! திராவிடக் கொள்கையின் வழிகாட்டியாக, கலங்கரை விளக்கமாகவே அவரை நான் பார்க்கிறேன். திராவிடக் கருத்தியலின் உயிர் வடிவமாகத்தான் பார்க்கிறேன். நினைத்துப் பார்க்கிறேன்.

நம்முடைய மானமிகு ஆசிரியர் அவர்களை, இந்த 89 வயதிலும் அவர் ஏற்றுக் கொண்ட கொள்கையும், தந்தை பெரியாரும்தான் உள்ளே இருந்து இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள். நாகர்கோவில் முதல் சென்னை வரைக்கும் 21 நாள்கள் மாபெரும் பரப்புரைப் பயணத்தை ஆசிரியர் அவர்கள் நடத்தி இருக்கிறார்.

நாட்டில் மக்களாட்சி நடக்கிறது என்று சொல்ல முடியுமா?

நாம் கேட்பது, இந்த சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வையுங்கள், ஆசிரியர் சொன்னதுபோல, “போஸ்ட்மேன் வேலை செய்ய வேண்டும்’’ என்பதுதான். முன்வடிவை அனுப்பி வைக்கும் அஞ்சல் துறைப் பணியைக்கூட ஆளுநர் செய்ய மறுப்பது என்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

எட்டுக்கோடி மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் சேர்ந்து தமிழ்நாடு சட்ட-மன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை, ஒரு நியமன ஆளுநர் என்ற ஒற்றை மனிதர் திருப்பி அனுப்புகிறார். நாம் மீண்டும் அனுப்பியதையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப தொடர்ந்து மறுக்கிறார் என்றால், இந்த நாட்டில் மக்களாட்சி நடக்கிறது என்று சொல்ல முடியுமா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் மக்களுக்கு நன்மை செய்யும் திட்டங்களைத் தீட்டினால் _ நியமனப் பதவியில் இருப்பவர்கள் அதைத் தடுப்பதா? மக்களை விட ஆளுநர்கள் அதிகாரம் பொருந்தியவர்கள் என்று நினைக்கிறார்களா? அப்படி ஒரு எண்ணம் அவர்கள் மனதில் இருந்தால் அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

மாநிலங்கள் இணைந்த ஒன்றியம்தான் இந்தியா!

எதேச்சாதிகாரத்தால் சாம்ராஜ்யங்களைக் கட்டி யெழுப்பலாம் என யாரும் நினைக்க வேண்டாம்! ‘வரலாறு என்பதே சாம்ராஜ்யங்கள் சரிந்த கதைதான்’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டி ருக்கிறார்கள். இது மக்களாட்சி நடைபெறும் நாடு என்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர வேண்டும்! மாநிலங்கள் இணைந்த ஒன்றியம்தான் இந்தியா என்பதை ஒன்றிய அரசில் இருப்பவர்களும், அவர்களின் ஏஜெண்டுகளாகச் செயல்படும் ஆளுநர்களும் உணர வேண்டும்!

‘நவீன அறிவுத் தீண்டாமை’

நீட் தேர்வு என்பது மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்கும் தேர்வு மட்டுமல்ல, அது மருத்துவக் கல்வி என்பதை உயர் வர்க்கத்தின் கல்வியாக மாற்ற நினைக்கிற தேர்வு. அதனால்தான் இது ‘நவீன அறிவுத் தீண்டாமை’ என்று தமிழ்நாடு சட்ட-மன்றத்தில் நான் குறிப்பிட்டேன்.

புதிய கல்விக் கொள்கை என்பது பெரும்பான்மை மக்களைப் பள்ளிகளுக்குள் அனுமதிக்க மறுக்கும் கல்வி நிலையாகத்தான் மாறப் போகிறது.  ஆனால் அது நிச்சயமாக நடக்காது! இன்னார் படிக்கலாம், இன்னார் படிக்கக்கூடாது என்பதெல்லாம் கட்டுக்-கதைகளை நம்பி வாழ்ந்த பழைமைவாத காலம்!

ஆனால், இது இந்த மண்ணிலும் _ ரத்தமும் சதையுமாக வாழும் மக்களின் உள்ளங்களிலும், சுயமரி யாதையும், பகுத்தறிவும் வேரூன்றியுள்ள திராவிட இயக்கத்தின் காலம், இங்கு அந்த கட்டுக்கதைகளுக்கெல்லாம் இடமில்லை!

தந்தை பெரியார் சொன்னார்!

‘எனது இலட்சியங்கள் வெற்றி பெறுவதற்குக் காலதாமதம் ஆகலாம். ஆனால், இறுதி வெற்றி எனக்குத்தான்’ என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள். இத்தனை ஆண்டுகாலமாக அந்தப் பழைமைவாதத்தை எதிர்த்து நாம் பல வெற்றிகளைப் பெற்றுள்ளோம்! அவர்களது சூழ்ச்சிகளை மக்கள் துணையோடு முறியடித்துள்ளோம்!

திராவிடக் கொள்கை தீபத்தின் வெளிச்சத்தில் நமது ஆட்சிப் பயணம் செல்லும் – இந்தப் பயணம் வெல்லும்!

கொள்கைத் தீபத்தை ஏந்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை நீங்கள் தொடருங்கள். ஆட்சிப் பொறுப்பில் இருந்து, திராவிடக் கொள்கைகளை செயலாக்கும் பணியை நாங்கள் செய்கிறோம்!

திராவிடக் கொள்கை தீபத்தின் வெளிச்சத்தில் நமது ஆட்சிப் பயணம் செல்லும் _ செல்லும்! _ இந்தப் பயணம் வெல்லும்! வெல்லும்!

நிறைவு விழாவிற்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமை ஏற்றார். பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் வரவேற்புரை ஆற்றினார். பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் நன்றியுரை ஆற்றினார். அனைத்துக் கட்சித் தலைவர்களும், தோழர்களும் அரங்கினுள்ளும் வெளியிலும் ஆயிரக்கணக்கில் திரண்டு, உரைகேட்டு எழுச்சி பெற்றனர். இந்த எழுச்சி, அடுத்தகட்ட போராட்டத்திற்கான தொடக்கம்! இலக்குகளை எட்டுவோம் என்பதற்கான அடையாளம்! கட்டாயம் வெல்வோம்! சமூகநீதியையும் மாநில உரிமையையும் காப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *