உ.பி. உள்ளாட்சித் தேர்தல் முடிவு உண்மையும் புரட்டும்!

டிசம்பர் 16-31

கெ.நா.சாமி

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியமைத்தது முதல் இன்றுவரை பல மக்கள் விரோதச் செயல்பாடுகளால் மக்களின் வெறுப்பைக் கொள்முதல் செய்துள்ளது என்பதுதான் உண்மை.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது, நி.ஷி.ஜி. வரிவிதிப்பின் கொடுமை அதனால் ஏற்பட்டுள்ள பல குழப்பங்கள் மாட்டிறைச்சித் தடை, ‘லவ் ஜிகாத்’ என்னும் பெயரில் நடைபெறுகின்ற கொலைகள், இந்துத்வத் தலைவர்கள் தங்கள் வாய்க்கு வந்தபடியெல்லாம் முறையின்றி மாற்றாரை விமர்சனம் செய்கின்ற அடாவடித்தனம் இவைகளால் மக்கள் ஆதரவு குறைந்துள்ள நிலையில் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் எப்படியேனும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்கிற நினைப்பில் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் தேதியை அறிவித்த பின்னரும் தேர்தல் தேதி அறிவிப்பதைத் தள்ளிப் போட்டு பிரதமரும் அமித்ஷாவும் பல சலுகைகள், திட்டங்களை அறிவித்த அராஜகம் ஆகியவை அரங்கேறியுள்ளன.

இதை அவர்களே உணர்ந்துள்ள காரணத்தால்தான் குஜராத்தில் வெற்றி கை நழுவிவிடுமோ என்கிற அச்சத்தில் பல குட்டிக்கரண வித்தைகளைச் செய்கின்றனர்.

இந்த நிலையில்தான் காவிச் சாமியாரின் அல்லது சிசுக் கொலை சாமியார் என்று கூடச் சொல்லலாம், ஆம்! ஆக்சிஜன் உருளைகள் இன்றி கணக்கற்ற சிசுக்களைச் சாகடித்து காட்டுதர்பார் நடத்தும் உத்தரப்பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதில் மாநகராட்சி மேயர் தேர்தல்களில் மட்டும் பா.ஜ.க. குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளது. அதாவது 16 மேயர்களில் 14 மேயர்கள் பா.ஜ.க.வினர்.

மற்றபடி மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்துள்ளது என்பதே உண்மை நிலை.

என்றாலும் பெரு முதலாளிய ஊடகங்கள் சுளையற்ற தோலினை மேலும் தோலுரிப்பது போன்று பா.ஜ.க மிகப் பெரிய வெற்றியை ஈட்டி  இருப்பதாக ஈனத்தனமான பிரச்சாரத்தை செய்து வருகின்றன. அவற்றின் உள்நோக்கம் இந்த வெற்றிப் பிரச்சாரத்தின் தாக்கம் குஜராத் மாநிலத் தேர்தலில் மக்களிடையே ஒரு சலசலப்பை உண்டாக்கும் என்றும், இதனால் பா.ஜ.க.வுக்கு சாதகமான நிலையை உண்டாக்கலாம் என்ற கள்ளத்தனத்தின் கபட வெளிப்பாடாகும். அவர்களின் பிரச்சாரம் எந்தளவுக்குப் போலியானது என்பதை கீழ்வரும் புள்ளி விவரங்கள் மூலம் அறியலாம்.

16 மாநகராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர்கள் (கவுன்சிலர்) எண்ணிக்கை: 1300
இவற்றில் பா.ஜ.க. வென்றவை வெரும் 596 மட்டுமே.

சமாஜ்வாடி கட்சி    202

பகுஜன் சமாஜ்    147

காங்கிரஸ்        110

மீதமுள்ளவைகளில் சுயேச்கைகள் வென்றுள்ளனர்.

நகராட்சிகள் 198

இவற்றில் பா.ஜ.க. வென்றவை 70 மட்டுமே.

அதாவது வெறும் 35% தான்.

நகராட்சி வார்டு உறுப்பினர்கள் எண்ணிக்கை 5261

இவற்றில் பா.ஜ.க. வென்றவை 922தான்.

இது வெறும் 18% மட்டுமே.

பேரூராட்சிகள் மொத்தம் 438.

இவற்றில் பா.ஜ.க வென்றவை 100தான்.

இது வெறும் 22% மட்டும்தான்.

பேரூராட்சி வார்டுகள் 5434

இவற்றில் பா.ஜ.க. வென்றவை 664

அந்தோ பரிதாபம் வெறும் 12% மட்டுமே.

மேயர் தேர்தலில் மட்டுமே பா-.ஜ.க. 41.4% வாக்குகளைப் பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் 58.6 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன. ஆக 10க்கு 6 பேர் பா.ஜ.க.வை நிராகரித்துள்ளனர் என்பதுதான் உண்மை.

நகராட்சி மற்றும் பேரூராட்சித் தேர்தல்களில் 28.6 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது. ஆக 71% வாக்காளர்கள் பா.ஜ.க.வை நிராகரித்துள்ளனர் என்பதே நிதர்சனம்.

ஆக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற 31% வாக்குகளைக்கூட தக்கவைத்துக் கொள்ளவில்லை என்பது வெளிப்படை.

என்றாலும் புரட்டிப் புரட்டி அடித்தாலும் என் புட்டம் வீங்கவில்லை என்பதுபோல் பெருமுதலாளிய ஊடகங்கள் மாநகர் மேயர் தேர்தல் வெற்றியை மட்டும் பெரிய அளவில் வெளிச்சமிட்டுக் காட்டி மற்ற தோல்விகளை இருட்டடிப்புச் செய்கின்ற குருட்டு மனத்தை எப்படிப் புரிந்து கொள்வது.

இந்த வெற்றிகூட EVM என்கிற எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின் உபயோகப்படுத்தப்பட்ட இடங்களில்தான் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. வாக்குச் சீட்டு முறை பயன்படுத்திய இடங்களில் தோல்வியைத் தழுவியுள்ளது. இதைக் கவனிக்கும்போது வாக்கு இயந்திரத்தின் மீது சந்தேகப்படாமல் இருந்தவர்களையும் சந்தேகப்பட வைத்துள்ளது.

இந்தச் சந்தேகம் தேர்தல் ஆணையத்துக்கே வந்துவிட்டதோ என எண்ணத்தக்க அளவிலே ஆணையம் தற்போது குஜராத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலேயும் ஒரு வாக்குச் சாவடியிலாவது  (V.V.PAT) Voter Verifiable paper audit trail நடத்தியாக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. (அதாவது இயந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளையும் அதற்கான பதிவுச் சீட்டுகளையும் சரிபார்த்தல்)

இதுவும் தவிர அனைத்துக் கட்சியினரும் கேள்வியெழுப்பியபோது ஆணையம் உ.பி. உள்ளாட்சித் தேர்தல்களில்  M1 type இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், குஜராத் தேர்தலுக்கு  M2 type   இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் தவறு நேர வாய்ப்பில்லை என்கிறது. அப்படியானால்  M1 type இல் தவறு நேருமா என்கிற அய்யம் ஏற்படுவது தவிர்க்க இயலவில்லையே!

பா.ஜ.க.வின் இத்தோல்விகள் சூரைக் காற்றின் சுழற்சியால் சுழன்று சுழன்று கோபுரத்தின் உச்சியில் ஒட்டிக்கொண்ட சருகுகளைப் போன்று தமிழகத்தின் ஆட்சி பீடத்தில் அமர்ந்து அனுதினமும் ஆறுகால ‘மோடி’ பூசை செய்கின்ற அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் அறிவுக்குச் செறிவூட்டுமா என்பதே நலம் விரும்பும் நம் போன்றோர் கேள்வியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *