மாசுபடும் இந்தியா!

டிசம்பர் 16-31

அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி, ஓராண்டு காலம் விண்வெளியில் இருந்து பூமியை ஆராய்ந்தார். அப்போது இந்தியா, சீனா மீதான மேகங்களில் ஏற்படும் மாற்றம், காற்று மாசுபாடு ஆகியவை அவரை அதிர வைத்தன.

அதிலும் கடும் அதிர்ச்சி தந்த இரண்டு நாட்கள்: இந்தியாவின் தீபாவளி, சீனாவின் தேசிய தினம் ஆகியவை.
‘நான் விண்வெளியில் இருந்தபடி கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி சீனாவின் 200 நகரங்களையும் தெளிவாகப் பார்த்தேன். அன்றைய தினம் சீனாவின் தேசிய நாள். பொது விடுமுறை. சுற்றுச்சூழல் மாசுபாடு குறைந்திருந்தது.

அதே அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் இந்தியா கரும்புகை வளையத்தில்தான் இருந்தது. காரணம்… அன்றைக்கு தீபாவளி.

பொதுவாக விண்வெளியில் இருந்தபடி இந்தியாவின் பெரும்பாலான நகரங்களைத் தெளிவாகப் பார்க்க முடியாது. ஏனென்றால், சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகம்.

இந்தியாவில் புதுடெல்லி மட்டுமல்ல… பல்வேறு முக்கிய நகரங்களிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான். பட்டாசு தயாரித்து இந்திய சந்தையில் விற்றுப் பெரும் லாபம் பார்க்கும் சீனா, தங்கள் நாட்டில் பட்டாசுகளை கையாளுவதில் கவனமாக உள்ளது.

அங்கு புத்தாண்டில் பட்டாசுகளை வெடிப்பது பாரம்பரிய வழக்கம். சென்ற ஆண்டு முதல் பழமையான கட்டிடங்கள் இருக்கும் 700 நகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதித்துள்ளது.

தொழிற்சாலை மற்றும் இன்னபிற நிறுவனங்களில் இருந்து வெளியாகும் புகைப் போக்கிகளில், மாசுபாடற்ற வெளியேற்றம் உறுதிபடுத்தப்படுகிறது. தடையை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்தியாவில் கட்டுப்பாடற்ற போக்கால், மாசற்ற காற்று அரிதாகிறது. சீனாவைப் போல இந்தியாவும் முயற்சிகள் எடுத்தால் மட்டுமே சுற்றுச்சூழலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்’’ என்கிறார் கெல்லி.

‘இந்தியாவின் அதிகப்படியான மாசு காரணமாக, ஆண்டுதோறும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழுவதாக சுற்றுப்புறச் சூழல் ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

உலகில் மிகவும் மாசுபட்ட தலைநகரங்களில் டெல்லிக்கு முக்கிய இடம் உண்டு. அங்கு நுரையீரல் தொற்று, மாரடைப்பு, புற்றுநோய் ஆகியவை அதிகரித்து வருகின்றன. 5இல் இரண்டு பள்ளிக் குழந்தைகளுக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

ஒபாமா டெல்லி வந்தபோது, சுற்றுச்சூழல் மாசை கருத்தில் கொண்டு அவர் போகும் இடம் எல்லாம் ‘ஏர் ஃபியூரிபையர்’ வைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *