தேர்தல் காட்சிகள் சொல்வதென்ன?

ஏப்ரல் 16-30

தேர்தல் ஆணையம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் பரபரப்புகள்(?) ஓய்ந்து வாக்களிக்கும் நேரம் இது. இந்த முறை தேர்தல் ஆணையம் தனது வீரத்தை நிலைநாட்டி மக்களைச் சோதித்தது. வழக்கமாக மார்ச், -ஏப்ரல் மாதங்களில் நடக்கும் வியாபாரம் இந்த தேர்தல் காலத்தில் இல்லை என்பது வணிகர்களின் குற்றச்சாட்டு. திருமணத்திற்கு நகை வாங்க கடைக்குச் சென்றாலே சோதனை. திருமண வீடுகளில் கறி சோறு போட்டால் அது குற்றம்; சில இடங்களில் கறி கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டு விருந்து சாப்பிட வந்தவர்களின் வயிர்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டது தேர்தல் ஆணையம். தமிழகத்தின்

ஊர்ப்புறங்களின் வணிகத் தெருக்களில் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. இவ்வளவு அமர்க்களங் களையும் தேர்தல் ஆணையம் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் செய்ய வில்லையே ஏன் என்ற கேள்வி  நியாயமாக எழவேண்டும். ஆனால், நடுநிலை(?) நாயகர் களான பத்திரிகைகள் அப்படிக் கேட்கவில்லை. அவர்களும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு லாலி பாடினார்கள். ஏன் தெரியுமா? இந்தக் கெடுபிடிகள் எல்லாம் தி.மு.க.வுக்கு எதிராக மறைமுகமாகச் செய்யப்பட்டவை. ஏனென்றால், எப்போதுமே தேர்தல் என்றால் அது எத்தகைய சூழல் என்றாலும் களத்தில் முனைப்போடு இருப்பவன் தி.மு.க.தொண்டன்தான். அவனை மனரீதியாக முடக்கும் செயலே இது. பிரச்சாரம் செய்ய தி.மு.க.ஆட்சியில்தான் சாதனைகள் ஏராளம் செய்யப்பட்டன. அதனை முழுமையாக மக்களிடம் எடுத்துச் சொல்லக்கூட கால அவகாசம் இல்லாமல் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளிடம் எந்தச் சரக்கும் இல்லை; கலைஞரின் குடும்பத்தை விமர்சிப்பதைத் தவிர. “தேர்தல் என்றாலே அது ஒரு திருவிழா போல நடக்கும்;அதனை இழவு வீடாக மாற்றிவிடாதீர்கள்”என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமே ஒரு கட்டத்தில் கூறினார். மாநில அரசைக் கலந்து ஆலோசிக் காமல் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. தி.மு.க. தரப்பில் தரப்பட்ட புகார்கள் சரிவர விசாரிக்கப்படவில்லை. தேர்தல் மேடைகளில் தனிப்பட்ட மனிதர்களைத் தாக்கிப் பேசக்கூடாது என்பது தேர்தல் விதிமுறை. ஆனால், கலைஞரைத் தனிப்பட்ட முறையில் மிக மோசமாக விமர்சித்து ஜெயலலிதாவும், விஜயகாந்தும், இன்னும் அந்த அணிக்காகப் பேசும் பலரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். இது குறித்த புகார் மீது மிகத் தாமதமாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது. அதற்குப் பின்னரும் அவர்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று ஜெயலலிதா பேசினார்; தன்னுடைய வேட்பாளரையே விஜயகாந்த் பொது இடத்தில் அடித்தார். தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை. விஜயகாந்த் மீது மனித உரிமை ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து அந்த ஆணையம் நோட்டீசு அளித்துள்ளது. சரி, இவ்வளவு நியாயம் பேசிய தேர்தல் ஆணையம் தன்னுடைய வேலையை ஒழுங்காகச் செய்ததா? பூத் சிலிப்புகளை தேர்தல் ஆணையமே கொடுக்கும், கட்சிகள் கொடுக்கக்கூடாது என்றார்கள். ஆனால், தேர்தல் பணியாளர் களால் சரிவர கொடுக்கமுடியவில்லை. பல இடங்களில் கீழே கொட்டப்பட்டிருந்தன. இதற்குப் பின்னர் கட்சிகள் புகார் அளித்தவுடன் கட்சிகளும் கொடுக்கலாம், ஆனால்,சின்னம் இருக்கக் கூடாது என்றார்கள். இதன் பின்னர் கட்சிகள் அவசர அவசரமாக பூத் சிலிப்புகளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஆணையத்தின் நிபந்தனையை மீறி இரட்டை இலை சின்னம் பொறித்த பூத் சிலிப்புகளை பல தொகுதிகளில் அ.தி.மு.க.வினர் அளித்து வருகின்றனர், அது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. திடீரெனெ ஒரு அறிவிப்பை தேர்தல் ஆணையம் ஏப்ரல் 8 அன்று வெளியிட்டது. அது என்ன தெரியுமா? கலைஞர் கொண்டுவந்த 108 உயிர் காக்கும் இலவச மருத்துவ ஊர்தியை தேர்தல் நாளன்று வாக்குச் சாவடிக்கு முன்பாக நிறுத்திவைக்கக் கூடாதாம். அந்தப் பக்கம் போகக் கூடாதாம். இதுதான் அந்த மனிதநேயத்தை வெளிப்படுத்தும் (?) உத்தரவு. 108 என்ற எண்ணைப் பார்த்தாலே மக்களுக்கு உடனே கலைஞரின் நினைவு வந்துவிடுகிறது. இதனைத் தடுக்கத்தான் இந்த நடவடிக்கை. யார் கண்டார்கள் தேர்தல் நாளன்று யாருக்கு அவசர மருத்துவ உதவி வேண்டுமென்றாலும் 108 க்கு தொலைபேசியே செய்யக்கூடாது என்று இன்னொரு திடீர் அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியமில்லை. பல இடங்களில் தேர்தல் ஆணையத்தின் சோதனைகள் நடக்கும் போது ஜெயா டி.வி.யை மட்டுமே தேர்தல் அலுவலர்கள் அழைத்துச் செல்கின்றனராம். தமிழகத் தேர்தல்களுடன் இணைந்து நடக்கும் கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் சுவர் விளம்பரங்களும் சுவரொட்டிகளும் தாராளமாகக் காணப்படுகின்றன; ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் அந்தப் பிரச்சாரமுறைக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.ஏன் இந்தப் பாரபட்சம் என்று எந்த நடுநிலை யோக்கியசிகாமணிகளும் கேள்வி எழுப்பவில்லை. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, வாக்காளர் பட்டியலில் வழக்கம் போல பெயர்க் குழப்பங்கள்; பாலினம் தவறாகக் குறிக்கப்பட்டிருந்தது. இப்படி அடிப்படைப் பணிகளில் கோட்டை விட்டுவிட்டு ஆர்ப்பாட்ட வேலைகளில் ஈடுபட்டது. பொதுவாக பெரிய அளவுக்கு தகராறுகள், அடிதடிகள், வன்முறைகள் இல்லாமல் நடக்கும் தமிழகத் தேர்தல் களத்தில் இந்த முறை கடந்த ஒரு மாதமாகவே வட நாட்டில் இருந்து துணை ராணுவத்தைக் கொண்டுவந்து இறக்கியுள்ளனர். மொழி தெரியாத அய்.பி.எஸ். அதிகாரிகளால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன. தேர்தல் ஆணையம் நியமித்த போலீஸ் டி.ஜி.பி. போலோநாத், பொறுப்பேற்ற நாளில் தமிழகத்தின் எல்லா வாக்குச் சாவடிகளும் பதற்றம் நிறைந்தவை என்றார். ஆனால்,அவரே சில நாட்கள் கழித்து எந்த ஒரு வாக்குச் சாவடியும் பதற்றமானவை அல்ல என்றார். எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், யாருடைய மேற்பார்வையும் இல்லாமல் அதிகார வர்க்கத்திற்குச் சுதந்திரம் கொடுத்தால் என்ன நடக்கும் என்பதற்கு இந்தத் தேர்தல் கெடுபிடிகளே நல்ல சாட்சியாக அமைந்துவிட்டது.

 

பத்திரிகைகள்

தேர்தல் ஆணையம் இப்படியென்றால், பத்திரிகைகளோ இதைவிட இன்னும் ஒரு படி மேலே போய் பகிரங்கமாகவே ஒரு சார்பு நிலை எடுத்தன. ஆனால், இவை தம்மை நடுநிலை என்று வெட்கமில்லாமல் கூறிக்கொள்பவை. கடந்த 5 ஆண்டுகளாக தி.மு.க.ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்களைப்பற்றித் துளியேனும் பாராட்டாத நல்ல மனம் கொண்டவை.தேர்தல் அறிக்கைகள் ஒரு தேர்தல் சம்பிரதாயமாகத்தான் இதுவரை இருந்து வந்தது. தேர்தல் நேர வாக்குறுதிகளை எந்த அரசியல்வாதியும் நிறைவேற்றியதில்லை என்ற விமர்சனம்தான் இதுவரை எல்லோராலும் பேசப்பட்டது; எழுதப்பட்டது. ஆனால், கடந்த 2006 தேர்தலில் தி.மு.க. அளித்த தேர்தல் அறிக்கை, வாக்குறுதிகள் அனைத்தையும் (கிட்டத்தட்ட 95 சதவிகிதம்) நிறைவேற்றிவிட்டது.

அந்தச் சாதனைகளைச் சொல்லி தி.மு.க.வாக்குக் கேட்கிறது. ஆனால், அ.தி.மு.க.அணியோ கலைஞரின் குடும்பத்தைக் குறைசொல்லி வாக்குக் கேட்கிறது. தினமணி, தினமலர், துக்ளக், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், கல்கி, குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய ஆரிய ஏடுகள் பகிரங்கமாக பார்ப்பன அம்மையாரை அரியணையில் அமர்த்தத் துடிக்கிறார்கள். மின்சார உற்பத்திக்கு ஜெயலலிதாவின் ஆட்சியில் ஒரு திட்டம் கூட  தீட்டப்படவில்லை. அதன் காரணமாகத்தான் தற்போதைய மின்வெட்டு. ஆனால், தி.மு.க. ஆட்சி அமைந்தபின்பு 4 மின் உற்பத்தித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அது நடைமுறைக்கு வர இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகலாம். இந்த உண்மை ஓரளவு படித்த அனைவருக்கும் புரியும். அறிவுஜீவிகள், பத்திரிகை ஜாம்பவான்களுக்கும் இது புரியாமல் இல்லை. ஆனால், என்ன எழுதுகிறார்கள்? தி.மு.க.ஆட்சியில் மின்வெட்டு என்று பொத்தாம் பொதுவாக எழுதி புழுதி வாரி இறைக்கிறார்கள்.தி.மு.க.ஆட்சிக்கு எதிராக எழுதவேண்டும் என்பதற்காகவே செய்திகளைத் தேடுகிறார்கள். கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் தமது ஆசையை வெளியிடுகிறார்கள்.

தம்மிடம் பேனா இருக்கிறது, வெளியிட்டு விற்க பத்திரிகை இருக்கிறது என்பதற்காக எதைவேண்டுமானாலும் எழுதுவது அவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. தம்மை யார் என்று காட்டிக் கொள்ளாமல் நடுநிலை என்ற முகமூடி அணிந்துகொண்டு எழுதுகிறார்கள். தலைவர் கலைஞரோடு ஒப்பிடத்தக்க அளவுக்கு எந்த ஒரு தகுதியும் இல்லாத ஜெயலலிதாவையும், விஜயகாந்தையும் தூக்கிப்பிடிக்கிறார்கள். பிரச்சாரத்தில் நாகரிகமில்லாமல் தனி மனிதத் தாக்குதல்களைக் கடைப்பிடிக்கும் ஜெயலலிதாவையோ, குடித்து விட்டு பண்பாடு இல்லாமல் பேசுவதோடு தனது கட்சிக்காரர்களையே அடிக்கும் விஜயகாந்தையோ பற்றி ஒப்புக்குக் கூட கண்டிக்காதவர்கள் இந்த நடுநிலை வேடதாரிகள் .  இவர்கள்தான் கருத்துக் கணிப்பு என்ற பெயரிலும் பொய்யையும் புரட்டையும் வாரி இறைக்கிறார்கள். இது ஒவ்வொரு தேர்தலிலும் நடக்கிறது. நாம்தான் மறந்துவிடு கிறோம். இதற்கு முன்பு நடந்த 2009 நாடாளு மன்றத் தேர்தலிலும் இப்படித்தான் ஒரு கருத்துக் கணிப்பு விளம்பரப்படுத்தப்பட்டது.40 தொகுதிகளின் நச் நிலவரம் என்று கலைஞரின் குடும்பத்தையே குறி வைத்துத் தாக்கிவரும்  ஒரு வாரமிருமுறை ஏடு தேர்தலுக்குச் சில நாட்கள் முன்பு  தனது கருத்துக் கணிப்பை வெளி யிட்டது. அதில் 26 தொகுதிகள் அ.தி.மு.க அணிக்கும், 14  தொகுதிகள் தி.மு.க அணிக்கும் கிடைக்கும் என்று தனது மதிநுட்பமான(?) புலனாய்வுப் புள்ளிவிவரத்தை வெளியிட்டது. ஆனால், நடந்தது என்ன? நாடே அறிந்ததுதான். அப்படியே தலைகீழாக இருந்தது. அதாவது, தி.மு.க. அணி 28 இடங்களையும், அ.தி.மு.க. அணி 12 இடங்களையும் பெற்றது. இது தமிழ்நாட்டுப் பத்திரிகைகள், ஊடகங்கள் எப்படி இருக்கின்றன என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இதேபோலத்தான் டெல்லியில் இருந்து ஒளிபரப்பாகும் டி.வி. களும் கருத்துக் கணிப்புகளை  வெளியிட்டன.

இந்தத் தேர்தலிலும் இப்படித்தான் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு மகிழ்ச்சிக் கூத்தாடுகிறார்கள். இந்தக் கணிப்புகள் சென்ற முறை மட்டுமல்ல பல முறைகள் பொய்யாகி  உள்ளன.

சரியில்லாதவற்றை ஏன் எழுதவேண்டும்,அது பத்திரிகை தர்மமா என்று சிந்திப்பதில்லை. மாறாக, இதன் மூலமாகவாவது நடுநிலை வாக்காளர்களையும், இன்னும் முடிவெடுக்காமல் உள்ள வாக்காளர்களையும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாகத் திருப்பிவிடலாம் என்ற நப்பாசைதான் காரணம். மேலும், களத்தில் நிற்கும் தி.மு.க. கூட்டணியினரை மன ரீதியாக பலவீனப்படுத்திவிடலாம் என்று கருதுகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக ம.தி.மு.க.வை நடத்திவரும் வை.கோ. வை அவமானப்படுத்தி அம்மையார் வெளியேற்றினார். தேர்தல் களமே காணமுடியாத நிலைக்கு வை.கோ. தள்ளப்பட்டார். ஆனால், அது குறித்து இந்தப் பத்திரிகைகள் ஒரு வார்த்தை ஜெயலலிதாவைக் கண்டித்து எழுதியதா? ஜெயலலிதாவின் நம்பிக்கைத் துரோகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியதா? இதைச் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. தினமலர் என்ன செய்தது தெரியுமா? ஏப்ரல் 1 ஆம் தேதி முட்டாள்கள் தினத்துக்கு வை.கோ. வைப் பயன்படுத்திக் கொண்டது. அவரைக் கேலிப் பொருள் ஆக்கியது. ஜெ. யுடன் வை.கோ சந்திப்பு! சிக்கல் தீர்ந்தது என்று வெட்கமில்லாமல் பொய்ச் செய்தியை வெளியிட்டு கடைசியாக சிறிய எழுத்துகளில் ஏப்ரல் 1 என்று எழுதியது. எப்படியாவது அவாளைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற ஆரிய வெறியைத்தவிர வேறு எது இப்படி செய்தி எழுதுவதற்குக் காரணமாக இருக்க முடியும்?

அரசியல் கட்சிகள்

இடதுசாரிகள் என்ற இரு கட்சிகள் இருக்கின்றன தமிழ்நாட்டில். அவர்களாவது வை.கோவுக்காக ஜெயலலிதாவிடம் பேசியிருக் கலாம். அவர்களும் அவரைக் கைவிட்டார்கள். இரண்டுஆண்டுகளாக வை.கோ.வைச் சேர்த்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் தமக்கு வேண்டியது கிடைத்தவுடன் வை.கோ பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை. விஜயகாந்த் என்று ஒருவர்.சினிமா வியாபாரம் போனியாகாமல் போகவே, அரசியல் வியாபாரத்துக்கு வந்தவர். நான்தான் முதலமைச்சர் என்றார்; தெய்வத்தோடும்(?) மக்களோடும்தான் கூட்டணி என்றார். ஆனால், ஜெ.யின் காலில் போய் விழுந்துவிட்டார். இந்தத் தேர்தலின் கதாநாயகனே.. இல்லை இல்லை காமடியனே இவர்தான். மது போதையில் பிரச்சாரம் செய்து வேட்பாளரையே அடித்து, தப்புத் தப்பாக உளறி, இதுவரை தமிழகத் தேர்தல் களம் காணாத காட்சிகளை அரங்கேற்றினார். இவரைச் சுற்றியும் சில இளைஞர்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பதுதான் தமிழ்நாட்டின் வேதனை. இனிமேலும் ஒரு சினிமாக்காரன் இந்த நாட்டு அரசியலுக்குத் தேவையில்லை என்பதற்கு இவரே நல்ல உதாரணமாகிப் போனார்.

இன உணர்வாளர்கள்–அறிவுஜீவிகள்

கடந்த தேர்தலில் இலவசங்கள் அளிப்பதாக கலைஞர் வாக்குறுதி அளித்தார். இரண்டு ரூபாய்க்கெல்லாம் அரிசி கொடுக்கமுடியாது என்று அறிவுஜீவிகள் கூறினார்கள்.ஆனால்,ஒரு ரூபாய்க்கே கலைஞர் அரிசியை வழங்கிக் காட்டினார். இலவச தொலைக்காட்சிப் பெட்டி, எரிவாயு அடுப்புகள் அளித்துவிட்டார். அவ்வளவுதான், இலவசங்களைக் கொடுத்து மக்களைக் கெடுக்கிறார் கலைஞர் என்று சோ உள்ளிட்ட அறிவுஜீவிகள் புலம்பினார்கள். இந்த முறை கிரைண்டர் அல்லது மிக்சி, மடிக்கணினி வழங்கப்படும் என்று கலைஞர் அறிவித்தார். அக்கிரகாரத் திருமேனிகளும், சில ஆழ்வார்களும் கேலி பேசினார்கள். ஆனால்,தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைக் காப்பியடித்து அம்மையார் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்கள். என்ன நடந்தது? கலைஞருக்கு எதிராக எழுதிய சோ வின் பேனா அம்மையாரை எதிர்க்குமா? அந்த அறிக்கை அக்கிரகாரத்தின் அறிக்கையா யிற்றே. ஜெயலலிதாவைப் பொறுத்தவரை செய்ய முடியாத காரியங்களைச் சொல்லிப் பழக்கமில்லை. (2001 தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா சொன்னவற்றை நிறைவேற்றியி ருக்கிறார் என்று சோ வால் பட்டியல் போடமுடியுமா?) ஜெ.அறிவித்திருக்கும் அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படக் கூடியவைதான் என்று வெட்கமில்லாமல் கூறுகிறார் சோ. 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுத்தபோது கலைஞரைப் பாராட்டிய இந்திய கம்யூனிஸ்டுகள் 1 ரூபாய்க்கு அரிசி கொடுத்தபோது எதிர்த்தார்கள் (என்ன கம்யூனிசமோ?). இந்தக் கட்சிகள் ஆளும் கேரளாவில் 2 ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்துவிட்டன.இதன் தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன், மக்கள் நலனை முன் வைத்து அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது, என்கிறார். காலகாலமாக கதர்ச் சட்டைக்குள் கரைந்து போய்விட்டு திடீர் இன உணர்வு ஏற்பட்டிருக்கும் தமிழருவி மணியன் கலைஞரைக் கொச்சைப்படுத்துவதையே தனது தொழிலாகக் கொண்டவர். இலவசத் திட்டங்கள் குறித்து அவர் எழுதாத எழுத்து இல்லை. அப்படியே காந்தியின் அடிப்பொடி. அவர் ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை சமூக நலன் சார்ந்ததாக இருக்கிறது என்ற புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார். இவர் மட்டுமல்ல, இன்னும் சில இன உணர்வு வியாபாரிகள் இருக்கிறார்கள். ஒருவர் தினமணியில் பக்கம் பக்கமாக கலைஞரை எதிர்த்து எழுதுபவர். இன்னொருவர் சில அப்பாவி இளைஞர்களிடம் நன்றாக நடித்துப் பேசுபவர். காங்கிரஸை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு கலைஞரை வசைபாடி வருகிறார்கள்.பொருத்தமில்லாமல் ஈழத்தமிழர் பிரச்சினையை தமிழகத் தேர்தலோடு போட்டுக் குழப்பி பார்ப்பனியத்திற்குத் துணை போய்க்கொண்டு இருக்கிறார்கள்.

*****

இந்தத் தேர்தலில் காணும் இவ்வளவு காட்சிகளும் என்ன சொல்கின்றன?

ஒற்றுமை இல்லாத தமிழினத்தின் தன் முனைப்பு அரசியல்….

ஒட்டு மொத்த இனத்தின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் ஒற்றை மனிதரையே குறி வைத்து அரசியல் நடத்தும் ஈன நிலை…

இதுவரை இல்லாத மக்கள் நலத் திட்டங் களைத் தந்து, பஞ்சம், பசி, பட்டினியைப் போக்கியதோடு, தொழில் திட்டங்கள், வேலை வாய்ப்புகள், மகளிர் முன்னேற்றம், சிறந்த சுகாதார வசதிகள்,மருத்துவ வசதிகள், உள் கட்டமைப்புகள், சமூகநீதிக் கண்ணோட் டத்தோடு கல்விப் பணி இத்தனையும் செய்து ஆளுமையைப் பெற்ற திராவிட இயக்க ஆட்சியை வீழ்த்த நினைக்கும் ஆரியம்…

அதற்குத் துணை போகும் துரோகம்…

இன்னும் எத்தனைக் காலத்திற்கு இந்த நிலை?

சுய நலன் தவிர்த்து பொது நலன் சார்ந்த அரசியல் எண்ணங்களை எப்போது பெறப்போகிறோம் என்ற கேள்வியே எஞ்சி நிற்கிறது.

– மணிமகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *