Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

குடிநீர் கேன்-உணவு பாதுகாப்புத் துறை முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டில் கோடை வெயில் வறுத்தெடுக்கும் நிலையில் தலைநகர் சென்னை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் பிளாஸ்டிக் கேன்களில் அடைத்து வைத்து விற்கப்படும் குடிநீரின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இவ்வாறு பிளாஸ்டிக் கேன்களில் நிரப்பி விற்பனை செய்யப்படும் குடிநீரின் தரத்தைச் சில நிறுவனங்கள் முறையாக பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் குடிநீரின் தரத்தை முறையாக பின்பற்றுமாறு உணவு பாதுகாப்புத்துறை அடுக்கடுக்கான அதிரடி உத்தரவுகளை வழிகாட்டுதல்களாக வழங்கியுள்ளது. அதில், முறையான அனுமதி பெறுதல், குடிநீர் கேன்களில் உற்பத்தி மற்றும் காலாவதியாகும் தேதியை வெளிப்படையாக அச்சிடுதல் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு முறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எலும்பு தேய்மானம்

உணவு பாதுகாப்புத்துறை விதிகளின்படி, சூரிய ஒளிபடும்படி குடிநீரைத் தேக்கி வைக்கக்கூடாது. மாதந்தோறும் குடிநீரின் தரத்தை ஆய்வகத்திற்கு அனுப்பி கண்காணித்து அறிக்கையைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். குடிநீரில் கால்சியம், மெக்னீசியம் அளவைப் பரிந்துரைக்கப்பட்ட அளவில் கடைப்பிடிக்கவேண்டும். இதே போல குடிநீரில் உள்ள உப்பு, தாதுக்கள் உள்ளிட்ட திடப்பொருட்களின் அளவும் உட்கொள்வதற்கு பரிந்துரைக்
கப்பட்டப்படியே இருக்க வேண்டும்

இதில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான அனைத்து தரப்பினருக்கும் எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.எனவே குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், குடிநீர் சுத்திகரிப்பில் முறையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, குடிநீர்கேன்களை 30 முறை மட்டுமே மறு சுழற்சி மூலம் குடிநீர் நிரப்பி பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறும்பட்சத்தில் மீண்டும் மீண்டும் குடிநீரை நிரப்பி விற்பனைசெய்வதை தவிர்க்கவேண்டும். இதுபோன்ற விதிகளை மீறுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விரிவாக ஆய்வு நடத்தி குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், குடிநீர் விற்பனை செய்யும் கடைகளில் நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. m