Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் – தொகுப்பு ஒரு பார்வை

சம்பளக்கொள்ளை’ என்னுமொரு கட்டுரை உள்ளது. இதே தலைப்பில் மற்றொரு கட்டுரையும் உள்ளது. இக்கட்டுரைகளும் முக்கியச் செய்திகள் அடங்கியவை. இக்கட்டுரையில் தந்தை பெரியார், பசியிலும், பட்டினியிலும் வாடும் மக்களும், வேலையற்ற மக்களும் எண்ணற்றோர் விழிபிதுங்கி வாழும்போது, அரசு ஊழியர்கள் பல்லாயிரக்கணக்கில் சம்பளம் பெற்றுக் கொண்டிருப்பது மனிதத் தன்மையாகுமா? நியாயமாகுமா? என்று வருந்தி, அதிர்ந்து வினாக்களை எழுப்பியுள்ளார். அவை மிகவும் சிந்தனைக்குரியன. அக்கட்டுரையில் இங்கிலாந்து பிரதமருக்கு மாதத்திற்கு ரூ5500 = (1933ஆம் ஆண்டில்) கொடுக்கும்போது அங்குள்ள ஒரு குடிமகனுக்கு மாதம் ரூ72/- கொடுப்பது என்ன நியாயம் என்று கேட்கிறார்.

அப்படியே பிரான்சில் பிரதமருக்கு மாதத்திற்கு ரூ1500 கொடுக்கும்போது, குடிமகனுக்கு ரூ100 கொடுப்பதும், அமெரிக்காவில் கவர்னருக்கு மாதம் ரூ1000 கொடுப்பதும், குடிமகனுக்கு ரூ120 கொடுப்பதும் என்ன நீதியாகும் என்றும் கேட்கிறார். இவ்வாறே இந்தியாவில், பிரித்தானிய ஆட்சியின்போது வைசிராயிக்கு மாதம் ரூ.20,000மும், கவர்னருக்கு ரூ10,000மும் கொடுக்கிறார்கள். ஆனால், ஏழை விவசாயி மாதத்திற்கு ரூ.3 மட்டும் பெறும் இழிநிலை இருக்கும்போது ஆங்கிலத்துரைதனத்தார், பல்லாயிரக்கணக்கில் சம்பளத்தை எடுத்துக் கொள்வது என்ன மனித நீதி என்று கேட்கிறார்.

இந்தியாவின் இயற்கை வளங்களைச் சுரண்டி இவர்களின் நாட்டிற்கு எடுத்துச் செல்வதுடன் மட்டுமின்றி, இவர்கள் பல்லாயிரக்கணக்கில் சம்பளத்தை எடுத்துக் கொ
ள்வது, பகற்கொள்ளையே ஆகும் என்கிறார். மற்றும், அக்காலத்தில் அய்ந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒரு படி அரிசிதான் செலவாகும் என்றும், அக்காலத்தில் ரூ.ஒன்றுக்கு 6  “பட்டணம் படி” அரிசி கொடுப்பார்கள் என்றும், இந்நிலையில் மாதத்திற்கு 30 படி செலவாகும் என்றும், அந்த அரிசிக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.6 மட்டும் செலவாகுமென்றும் கூறுகிறார். மற்றும் வீட்டு வாடகைக்கும், மற்ற செலவுகளுக்கும் ஏறக்குறைய, ரூ.8/- செலவாகுமென்றும், மொத்தம் ரூ.14  மாதத்திற்குச் செலவாகும் என்றும், மற்றும் ரூ.20/- ஒரு மாதத்திற்குத் தேவைக்கு அதிகமான தொகையாக இருக்கும்போது, பிரித்தானிய அதிகாரிகள் பல ஆயிரங்களைச்சம்பளமாக எடுத்துக்கொள்வது கொள்ளையேயாகும் என்கிறார். இந்தியாவில் மெட்ரிக்குலேசன், பி.ஏ., படித்தவர்கள்வேலைக்குத் திண்டாடும்போது, ஆங்கில அதிகாரிகள் தம் சம்பளத்தைப் பல்லாயிரக்கணக்கில் எடுத்துக்கொள்வது மனித நீதியாகுமா? என வினவுகிறார்.

மேலும், அக்காலத்திய ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோரின் சம்பளத்தையும், வருவாயைப் பற்றியும் அலசுகிறார். விலைவாசி உயர்வும், வரி உயர்வும் ஏன் ஏற்பட்டிருக்கிறது? எனக் கேட்டால், நிருவாகச் செலவு அதிகமாகிறது என்கிறார்கள். ஆனால், உண்மையில் இந்த நிருவாகச் செலவுக்கு அடிப்படைக் காரணம், வெள்ளை அதிகாரிகள் பல்லாயிரங்களைச் சம்பளமாக எடுத்துக் கொள்வதே ஆகும் என்கிறார் தந்தை பெரியார். பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகுந்திருக்கும் காலனியாட்சியில், பெரும்பான்மையினரான மக்கள் பசியிலும், பட்டினியிலும் வாடும்போது, வேலை வாய்ப்பின்றிஅல்லலுறும்போது, பணியில் உள்ளோர் குறைந்த ஊதியத்தைப் பெற்றுக்கொண்டிருக்கும்போது, ஆங்கிலேய அதிகாரிகள் மட்டும் வரம்புக்கு மீறிய சம்பளத்தை எடுத்துக்கொள்வது, மற்றொரு வகையான நிருவாகத்
துறைச் சுரண்டலாகும். இந்தச் சுரண்டலைப் பெரும் பாலோர் கண்டு கொள்வதில்லை. காலனியாட்சியின் இந்த மறுபக்கத்தைப் பலர் சரியாக உணர்வதுமில்லை. தந்தை பெரியார் இதனை மிகச் சரியாக அடையாளம் கண்டுள்ளார்.

இக்கட்டுரைகளைப் போன்றே வித்தியாசமான பல கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன. குறிப்பாக, ‘பொது உடைமை’, ‘பணக்காரத்தன்மை
மூடநம்பிக்கையே’, ‘இந்தியப் பொருளாதாரம்’, ‘புரட்சி’ போன்ற கட்டுரைகள் வேறுபட்ட பார்வை கொண்டவை. சிந்தனை ஆழமிக்கவை. இந்தியப் பொதுவுடைமையினர் பெரும்பாலும் கருத்துச் செலுத்தாத பகுதிகளாகும் இவை. கட்டுரைகளினுள்ளே தந்தை பெரியாரின் தனித்துவமான பார்வையும், சிந்தனைக் கீற்றும், அனுபவத் தெளிவும், எளிய விளக்கமும் ஆங்காங்கே பளிச்சிடுவதைக் காணலாம். உலகம் தழுவிய பொதுவுடைமைச் சிந்தனையை, அவர், உலகச் சிந்தனையாளர் வழிநின்று விளக்காமல், தம் சுயசிந்தனையிலிருந்தே விளக்குகிறார். இதுதான் மிக முக்கியம். மார்க்ஸ் தம் இளம் வயதில் எழுதிய ஒரு கவிதை இங்கு ஒப்பிடத்தக்கது.

“Kant and Fiehte sour to heavens blue seeking for some distant land

I but seek to group profound and true

That which in the street I find”

(marx, Engeles collected works-Vol
I-page 577)

(“காண்ட்டும் ஃபிச்டேயும் தொலை தூரத்திலுள்ள உலகைத் தேடி வானில் மிதக்கிறார்கள்; நான் ஆழமான உண்மையைத் தேடுகிறேன். அவற்றைத் தெருவில் கண்டெடுக்கிறேன்.”)

மார்க்ஸ் தம் சிந்தனைகளைத் தெருவில் கண்டெடுத்தது போல தந்தை பெரியாரும், தம் சிந்தனையைத் தெருவில்தான் கண்டெடுத்தார். இங்குத் தெரு என்பது, தெருவில் நடமாடும் மக்களைக் குறிப்பதாகும். “ஜெர்மன் தாடியும், ஈரோட்டுத் தாடியும்” இங்கு ஒருங்கிணைவதை அறியலாம்.

தந்தை பெரியார் பொதுவுடைமைச் சிந்தனையையும், ருஷ்யப் புரட்சியையும் எத்துணைச் சரியாக உணர்ந்திருக்கிறார் என்பதும் அதன்மீது அவர் கொண்ட பற்றுறுதியும் எத்தகையது என்பதற்கும்  ஒரு சிறு கட்டுரை சான்றாக இருக்கிறது. ‘ருஷியாவைப் பற்றி சர் தாகூர் அபிப்பிராயம்’ என்னும் கட்டுரையில், தாகூரின் ஒரு கருத்தை அவர் மறுத்திருப்பது நம் சிந்தனைக்கு உரியது. தாகூர் சோவியத்து ஒன்றியத்தில் தங்கியிருந்தபோது, ஒரு செய்தித்தாளின் ஆசிரியருக்குப் பேட்டி அளிக்கும் நேரத்தில் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார். அந்நாட்டில் மக்களுக்குச் சரியான முறையில் கல்வியும், உடற்பயிற்சியும் சுகாதாரமும் மருத்துவமும் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், உழவர்களுக்கான திட்டங்களும் மிகச்சிறப்பாகத் தந்திருப்பதாகவும் கூறியுள்ளார். அடுத்து, மதம், செல்வம், சமூகவாழ்வு ஆகியவற்றைக் கல்விமூலம் திருத்தும் முறையை மேற்கொண்டால், நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். இப்படி அவர் கூறியிருப்பது சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது பற்றி விளக்க வேண்டுமாயின் அது பெரும் தத்துவ விளக்கமாக மாறிவிடும். அதற்கு இங்கு இடமில்லை. தந்தை பெரியார் தாகூரை மறுக்கும்போது, மதப் பித்தர்களையும், செல்வச் செருக்கர்களையும் நல்ல வார்த்தையாலோ, கல்வியாலோ, பிரச்சாரத்தாலோ திருத்தமுடியாது என்று நறுக்குத் தெரித்தாற்போல் மிகச் சரியாக மறுத்திருக்கிறார். தந்தை பெரியார் கூறியது எத்துணைச் சரியானது என்பதைப் பிற்காலத்தில் சோவியத்தின் ஆட்சிமுறை உறுதி செய்துள்ளது. இலக்கிய மேதையான தாகூரின் புரிதல் மிகத் தவறானது என்பதைச் சுட்டிக் காட்டிய பெரியாரின் அறிவஞ்சாமை போற்றத்தக்கது.

இக்கட்டுரையைப் போலவே, ‘சத்தியமூர்த்தியும் சமதர்மமும்’ ‘ஜவஹர்லாலும் சமதர்மமும்’, ‘காங்கிரசும் ஜவஹர்லாலும் பொதுவுடைமையும்’, ‘சமதர்மமும் முதலியாரும்’ போன்ற கட்டுரைகளும் முக்கியமானவை. இக்கட்டுரைகளும் அவரின் ஆழ்ந்த புரிதலைப் புலப்படுத்துவனவாகும். இவற்றில் முதலில் உள்ள கட்டுரையைப் பார்ப்போம். காங்கிரஸ் சமதர்மக் கொள்கை உடையது என்றும், ஜவஹர்லால் நேருவைக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆக்குவதன் மூலம் அக்கட்சி, சமதர்மத்தில் நோக்கம் கொண்டது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி வருவதும் பொய்யானது என்பதை உறுதிப்படுத்துவதற்குச் சத்தியமூர்த்தியின் பேச்சை எடுத்துக்காட்டி, கடுமையாக அவர் சாடுகிறார். சத்தியமூர்த்தி, தம்பேச்சில் காங்கிரஸ் சமதர்மத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், நேருவின் சமதர்மக் கொள்கை அவருடைய தனிப்பட்ட கொள்கையாகும் என்றும், காங்கிரஸ் பணக்காரர்களைக் காப்பாற்றும் கட்சி என்றும் கூறுவதைப் பெரியார் எடுத்துக்காட்டிக் கூறுகிறார்! எல்லாவற்றைவிட மிக முக்கியமானது, சத்தியமூர்த்தி
தம் பேச்சில், “சமதர்மம் வந்தால் சமூக வேறுபாடுகளை ஒழித்துவிடும்” என்றும், “ஏழைகளுக்கு எவரும் எஜமானர்களாக இருக்கமுடியாது” என்றும், சிறிதும் கூச்சமில்லாமல் கூறியிருக்கிறார். இதுதான் ஒரு தேசியக் கட்சித் தலைவரின் முற்போக்குக் கொள்கை! ஜாதி – வருண வேறுபாடு   இருக்க வேண்டும் என்பதிலும், ஏழைகள் ஏழைகளாகவே இருக்கவேண்டும் என்பதிலும்,சத்தியமூர்த்திக்கு அத்துணைப்பரம்பரை ஆசை; சத்தியமூர்த்தி இப்படிப் போட்டுடைத்திருப்பதைப் பெரியார்தான் அம்பலப்படுத்தி உள்ளார். சத்தியமூர்த்தியின் பேச்சைப் பற்றிய மறுப்பு ஒரு சரியான வரலாற்றுப் பதிவு. இதுபோன்ற பல பதிவுகள் இத்தொகுப்பில் உள்ளன.

‘சமதர்மமும் முதலியாரும்’ என்னும் கட்டுரை, திரு.வி.கவின் கட்டுரைக்கு மறுப்புரையாகும். திரு.வி.க. ‘நவசக்தி’யில், சர்.கே.வி.ரெட்டி சர்.முகமது உஸ்மான், குமாரராஜா முத்தையா செட்டியார் ஆகியோர் செட்டிநாட்டில் சமதர்மத்தைத் தாக்கிப் பேசியிருக்கிறார்கள் என்பதையும்,  இவர்களை வைத்துக் கொண்டுதாங்கள் மேலும் ஜஸ்டிஸ் கட்சியில் இருக்கப்போகிறீர்களா? என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்குத் தந்தை பெரியார், சத்தியமூர்த்தி தமிழ்நாட்டுக் காங்கிரசின் தலைவராக இருந்துகொண்டே சமதர்மத்தை இழிவுபடுத்தியிருக்கும்போதும், பட்டேல், ராஜேந்திர பிரசாத், ஆச்சாரியார், ஜார்ஜ் ஜோசப், ஜமால் முகமது, மசானி, மாளவியா போன்றோர் காங்கிரசில் இருக்கும்போதும், தாங்கள் காங்கிரசில் இருப்பது நியாயமா? என்று வினவுகிறார்.

மேலும், தான் எங்கிருந்தாலும் சமதர்மவாதியேஎன்றும், சமூகத்தின் எல்லாக் குறைகளுக்கும்,சமதர்மமே மருந்து என்பதை முடிந்த முடிவாகக்
கொண்டவன் என்றும் வெளிப்படையாகக் கூறியுள்ளார். சமதர்மத்திற்கு ஜஸ்டிஸ் கட்சியையோ,ஏனைய கட்சிகளையோ ராமசாமிநம்பியிருக்கவில்லை என்றும்,
அக்காலத்திலிருந்த தலைவர்கள்பலரைக் குறிப்பிட்டு, அவர்களால் சமதர்மத்திற்கு ஏதாவதுபலனுண்டா? என்று கேட்டும்,இவர்களை எல்லாம் தங்களால்
எப்படிச் சகித்துக்கொண்டு போக முடிகிறது என்றும் கேட்டுள்ளார். இக்கட்டுரையில் பெரியாரின் நுட்ப விளக்கமும், ஆவேசமும், கடுமையும் ஆங்காங்கே கொப்பளிக்கின்றன. மேலும், தான் யார் என்பதையும், மற்ற தலைவர்கள் எப்படிப்பட்டவர் கள் என்பதையும் மிக வெளிப் படையாக விளக்கியுள்ளார். இக்கட்டுரை, பல தலைவர்களின் உண்மை
முகங்களைக் காட்டுவதுடன், பெரியார் எவ்வளவு நேர்மையானவர் என்பதை மார்தட்டிக் கூறுகிறது. இக்கட்டுரையும் சிறந்த ஆவணப் பதிவாகும்.

‘காங்கிரசும் – ஜவஹர்லாலும் – பொது வுடைமையும்’ என்னும் கட்டுரை தலைப்புக் கேற்ப விளக்கப்பட்டுள்ளது. காங்கிரசில் ஒரு பகுதி
யினர் பூரண சுயராஜ்யமே கட்சியின் கொள்கை என்றும், இன்னொரு பகுதியினர் காங்கிரசு சமதர்மத்திற்கு எதிரானது என்றும், நேரு தரப்பினர் சமதர்மமே உகந்தது என்றும், கூறிவருவதை அம்பலப்படுத்திப் பெரியார்  நகையாடுகிறார். மற்றும் நேரு, தம் பக்கத்தில் சமதர்மத் திற்கு எதிரானவர்களை வைத்துக் கொண்டு
சமதர்மத்தைப் பேசுவது சரியாக இல்லையென்றும் கடிகிறார். காங்கிரசு இயக்கத்தில் அனைத்தும் குழப்பமாகவே இருந்து வருகின்றன என்கிறார்.

(தொடரும்)