Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அம்பேத்கர் பார்வையில் தொழிலாளர் ஒற்றுமையும் அதன் எதிரிகளும்- த.மு.யாழ் திலீபன்

இந்தியாவில் புரட்சி என்பது அவ்வளவு எளிதானதன்று. அதை அம்பேத்கர் இப்படி சொல்கிறார்,  “இந்திய நாட்டில் சமூகச் சீர்திருத்தத்திற்கான வழி சொர்க்கத்திற்குச் செல்லும் வழியைப் போலவே கரடு முரடானது” என்கிறார். ஆம்! புரட்சி நிகழ முதலில் மக்களிடம் இருக்கும் அழுக்குகளைத் துடைத்தெறிய முற்பட வேண்டும். பிறகு பண்பாடு மாற்றம், ஒற்றுமை பிறகு இணைந்து அரசியல் களம் கண்டு அதிகாரத்தைக் கைப்பற்றுவது என மிகத் தெளிவாக அணுகுகிறார்.

புரட்சி என்றதும் ஆயுதம் ஏந்தி போராடுவது என்பதல்ல, ஆயுதம் ஏந்தாத அறிவுப் புரட்சி இது. இந்திய ஜாதிச் சமூகத்தில் ஆயுதம் ஏந்தி போராடுவதைவிட அணித்திரட்டுவது  அறிவுப் புரட்சியைச் சாதிப்பது என்பது  ஆகப் பெரிய வேலை. யாரும் செய்ய முன் வராத இப்பணியைத்தான் கரடு முரடானது என்கிறார் அம்பேத்கர். அம்பேத்கரின் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், என்பதற்கு முதன்மை முட்டுக்கட்டை ஜாதி தான். இந்த “ஜாதி அமைப்பு முறை தொழில்களை மட்டுமல்ல, தொழிலாளர்களையும் பிரிக்கிறது”  என்கிறார் அம்பேத்கர்.

“இந்து மதம் தொழிலையும் தொழிலாளர் களையும் பிரித்து ஒன்றுக்கொன்று ஒற்றுமையற்ற எதிர் துருவங்களாக நிலை நிறுத்தும்போது தொழிலாளர் ஒற்றுமை எவ்வாறு சாத்தியம்?” என்கின்ற கேள்வி எழுப்புகிறார். தொழிலாளர் ஒற்றுமையே சாத்தியமில்லாதபோது தொழிலாளர் புரட்சி எவ்வாறு சாத்தியம் என்கிறார்? இம்முறையில்தான் ஒற்றுமையற்ற சமுதாயம் நிலவ பார்ப்பனியம் இம்மண்ணில் வேத பண்பாடுகளையும், புராண நெறிமுறைகளையும், மதம் எனும் சட்ட திட்டத்தையும், ஜாதி என்னும் பரவலாக்களையும் கையாண்டு வெற்றி கொண்டது.  இந்தியாவில் தொழிலாளர் புரட்சி ஏற்பட வேண்டும் என்றால் தொழிலாளர்களின் ஒற்றுமை மிக முக்கியம்.  ஆனால் ஜாதியெனும் கோட்பாட்டால் தொழிலாளர்கள் ஒற்றுமையே சாத்தியமில்லாதபோது, தொழிலாளர்கள் ஒன்று திரள முடியாதபோது புரட்சிக்கு வாய்ப்பே இல்லை. இந்த ஒற்றுமையற்ற நிலையையே பார்ப்பனியம் இம்மக்களிடம் ஜாதிக் கட்டுப்பாடு, சம்பிரதாயம் எனும் பெயரில் பயிற்றுவித்துள்ளது. உரிமை பெற புரட்சி ஏற்பட வேண்டுமெனில், முதலில் ஒற்றுமையற்ற தன்மை ஒழிய வேண்டும். ஒற்றுமையற்ற தன்மை ஒழிய வேண்டுமானால்,
ஜாதியும், மதமும் (பார்ப்பனியமும்) ஒழிய வேண்டும். இந்தியாவில் பார்ப்பனியம் ஒழியாமல் எந்தப் புரட்சிக்கும் சாத்தியமில்லை என்பதே உண்மை.

நமது நேரடி எதிரிகள்:

“எனது கருத்துப்படி இந்நாட்டின் தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளை முறியடிக்க வேண்டியுள்ளது. ஒன்று பார்ப்பனியம் இரண்டாவது முதலாளித்துவம் என்ற இரண்டு எதிரிகள் தான் அவை” என்றுரைத்து தொழிலாளர் பிரிவினைக்கான மூலப் பிரச்சினை என்று  வெளிப்படுத்துகிறார். மேலும் பார்ப்பனியம் என்பதை தனக்கே உரித்தான ஆய்வுகளின் அடிப்படையில் இப்படி விளிக்கிறார்; “பார்ப்பனர்கள் பெற்றுள்ள அதிகாரம், சலுகைகள், சுயநலன்கள் போன்றவை மட்டுமல்ல பார்ப்பனியம். விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற உணர்வுகளை மறுப்பதே பார்ப்பனியம்” என்று மிகத் தெளிவாக அதன் அடிப்படைத் தன்மையை உணர்த்துகிறார் அம்பேத்கர். பார்ப்பனியம் ஒற்றுமை, விடுதலை, சமத்துவ கருத்துகளை எப்போதும் ஆதரிக்காது. ஆகவே, பார்ப்பனிய கருத்துகளில் இருந்தோஅல்லது பார்ப்பன பண்பாடுகளின் தாக்கங்களிலிருந்தோ இந்த
மண்ணில் தொழிலாளர் ஒற்றுமையை எதிர்பார்க்கவே முடியாது என்பதே உண்மை. பார்ப்பனியம் ஒழிதலே ஒற்றுமைக்கான ஒரே வழி என்கின்ற சிந்தனையை மிகத் தெளிவாகக் கொண்டிருக்கிறார் அம்பேத்கர். நாம் ஒற்றுமை பெற முடியாத சமூகமாக இருப்பதே பார்ப்பனியத்தின் வெற்றி. பார்ப்பனியம் ஒற்றுமைக்காக ஒரு வழியைக் கூட மக்களுக்குச் சொல்லித் தரவில்லை. மாறாக ஒற்றுமையற்ற தன்மைக்காக ஆயிரம் வழிமுறைகளைக் கற்பிப்பதும், கற்பித்து வருவதுதான் பார்ப்பனியமும், மனுதர்மமும். ஆகவே ஒற்றுமையற்ற வேத பொய்மைகளைக்  கட்டமைத்து அதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் பார்ப்பனியம் தான் மக்கள் சமத்துவத்திற்கு எதிரான முதல் எதிரி என்கிறார் அம்பேத்கர்.

தொழிலாளர்களின் இரண்டாம் எதிரி முதலாளித்துவம் என்பதில் பல்வேறு பொறுப்புணர்வுகளை வெளிப்படுத்துகிறார். “தொழிற்சங்கங்கள் மிகவும் தேவையான நாடு இந்தியாவாகத் தான் இருக்க முடியும். ஆனால் இன்று தொழிலாளர்களுக்கும், முதலாளிகளுக்கும் இருக்கும் பகைமையைக் காட்டிலும் தொழிற்சங்களுக்கிடையில் மிகத் தீவிரமான பகைமை இருக்கும் ஒரு வெட்கக்கேடான நிலையில் நாம் உள்ளோம்” என்கின்ற உண்மையை உரைக்கிறார். “தொழிற்சங்கங்களின் தலைமைப் பதவிக்கு வர வேண்டும் என்கின்ற போட்டி தான் சங்கத்திற்குள் உள்ளதே தவிர தொழிலாளர்களின் நலனில் அக்கறை இல்லாமல் போகிறது” என்றும் விவரிக்கிறார். இந்நிலைக்கான காரணம் ஒருவகை பார்ப்பனிய ஆதிக்கத்தன்மையே என்று உணரலாம்.

இம்மண்ணில்
வேத பண்பாடுகளையும், புராண நெறிமுறைகளையும், மதம் எனும்
சட்ட திட்டத்தையும்,
ஜாதி என்னும் பரவலாக்களையும் கையாண்டு
வெற்றி கொண்டது

தொழிற்சங்கங்கள் தங்கள் உரிமையைக் கேட்பதை தவிர்த்தாலும் தன் ஜாதிக்கு ஒரு தொழிற்சங்கம் நிறுவுவதைத் தவிர்த்ததே இல்லை. கட்சிக்கு ஒரு தொழிற்சங்கம் என்றிருப்பதை தவிர்ப்பதே இல்லை. இந்த இரண்டு வகை தொழிற்சங்கங்களும் அரசியல் நலனில் பயணிக்கக் கூடியவைகளே தவிர தொழிலாளர் நலனில் அல்ல. ஏனென்றால் முதலாளித்துவத்தை எதிர்ப்பதும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதும்தான் தொழிலாளர்களின் உரிமை மீட்கும் இடமாகும். மாறாக முதலாளித்துவத்தை வளர்க்கும் அரசியலும், உழைப்பு சுரண்டலையும், பிரிவினையை ஊக்குவிக்கும் ஜாதி அமைப்பு முறையும் ஒருபோதும் தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தாது. ஜாதி அமைப்பு முறையும் அரசியலும் ஒன்றுக்கொன்று இணக்கமானவை என்கின்ற நடைமுறை புரிதலிலிருந்து அணுக வேண்டும். தொழிலாளர் ஒற்றுமை ஏற்படாததற்கு அடிப்படை காரணம் பார்ப்பனிய இந்து மதத்தின் ஜாதி அமைப்பு முறைதான்.

கட்சிக்கு ஒரு தொழிற்சங்கம் இருக்க வேண்டாம் என்பதல்ல அம்பேத்கரின் நோக்கம். தொழிலாளர்களின் பிரச்சினையின்போது கூட அனைத்து தொழிலாளர்களும் ஒன்றுபடாமல் ஜாதி ரீதியாக, கட்சி ரீதியாகத் தனித்தனி தொழிலாளர்களாகப் பிரிந்து கிடப்பதே  அம்பேத்கரின் வருத்தம்.  ஜாதி, மதம், கட்சிகளை விட்டுவிட்டு  தொழிலாளர்களின் ஒற்றுமையை, தொழிலாளர் உரிமையை வென்றெடுக்க இவைகள் தடையாய் இருக்கும் என்றால் தடை இல்லாமல் போராட முன்வரவேண்டுமென்பதே அவரின் கருத்து.

வசியப்படுத்தும் பார்ப்பனியம்:

“மக்கள் மனதில் பதிந்திருக்கும் இந்த மதம் என்ற தவறான கருத்தை நீக்குங்கள். மதம் என்று தங்களுக்கு கூறப்பட்டது மதமே அல்ல. சட்ட விதிகளே என்ற உண்மையை அவர்கள் உணர்ந்து கொள்ளச் செய்யுங்கள். இப்பணியைச் செய்து முடிந்ததுமே மதம் எனக் கூறப்படும் இச்சட்ட விதிகளைச் சீர்திருத்தியாக வேண்டும் அல்லது அடியோடு அழித்து விட வேண்டும். இது போன்ற ஒரு மதத்தை அழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் பணிகள் மதத்திற்கு எதிரானவை அல்ல, சட்டத்திற்கு மதம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த முகத்திரையைக் கிழித்தெறியுங்கள்  இதுவே உங்கள் தலையாய கடமை” என்கிறார் அம்பேத்கர். தலையாய கடமை என்று சொல்லும் அளவிற்கு பார்ப்பனிய இந்து மதமும், வேத தத்துவ ஜாதி அமைப்பு முறையும் மக்களை ஒன்றுபட விடாமல் மூவாயிரம் ஆண்டுகாலமாக மடமையை நம்மீது சுமத்தியுள்ளது என்பதை நினைவில் வையுங்கள். மேலும் இந்தியாவில் பார்ப்பனியம் ஏன் பூண்டோடு அழிக்கப்பட வேண்டும் என்பதைத் தொழிலாளர் என்கின்ற நிலையிலிருந்து விளக்குகிறார்; “இந்தியாவில் ஆளும் வகுப்பினர் யார் என்பதை தெரிந்து கொள்வது நல்லது. முக்கியமாகப் பார்ப்பனர்களே இந்தியாவில் ஆளும் வகுப்பினர் ஆவார்கள். பார்ப்பனர்கள் ஒரு காலத்தில் தங்களை ‘பூவேதர்கள்’ (பூகோள கடவுள்கள்) என்று வர்ணித்துக் கொண்டனர். ஆனால் இக்கால பார்ப்பனர்கள் தங்கள் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுவதை மறுப்பது வேடிக்கையாக உள்ளது.

பார்ப்பனர்கள் எப்போதுமே பிற வகுப்பினரைத் தம் கூட்டாளிகளாக வைத்துக் கொள்வர். அவர்கள் இவர்களுக்கு அடங்கி ஒத்துழைக்க அணியமாய் இருந்தால் அவர்களுக்கு ஆளும் வகுப்பிலும் தகுதி நிலையைத் தரவும் தயாராக இருந்தனர் என்பதை வரலாறு காட்டுகிறது. புராதணக் காலத்திலும், மத்திய காலத்திலும் சத்திரியர்கள் எனப்படும் போர் வீரர் வகுப்புடன் அவர்கள் இப்படியொரு கூட்டணி கண்டனர். இருவரும் பெரும்பான்மை மக்களை அடக்கி ஆண்டனர் சொல்லப்போனால் அவர்களை நசுக்கி ஒடுக்கினர். பார்ப்பனர் எழுதுகோலைக் கொண்டும் சத்திரியர் வாளைக் கொண்டும் இதைச் செய்தனர். இப்போது பனியாக்கள் எனப்படும் வைசிய வகுப்புடன் பார்ப்பனியர் கூட்டணி வைத்துள்ளனர். இந்தக் கூட்டணி சத்திரியரிடமிருந்து பனியாவுக்கு மாறியிருப்பது இயல்பானது.

வணிகம் கோலோச்சுகிற  இந்தக் காலத்தில் வாளை  விடவும் பணமே முக்கியம் என்பது கூட்டணியில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு இது ஒரு காரணம். ஆகவே ஆளும் வகுப்பு என்கிற நிலையிலிருந்து பனியாவை விலக்கி வைக்கப் பார்ப்பனரால் முடியாது. பனியாவுடன் அவர்கள் நிறுவி உள்ள கூட்டணி வசதியானது மட்டுமல்ல, சுமுகமானது ஆகும். இதன் விளைவு என்னவென்றால் பார்ப்பன சத்திரிய கூட்டுக்குப் பதிலாக – பார்ப்பனிய பனியா கூட்டு இந்தியாவில் ஆளும் வகுப்பாக உள்ளது” என்று மிகத் தெளிவாக உணர்த்துகிறார். பார்ப்பனியமும் முதலாளித்துவமும் ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு வகையில் வளர்ச்சி பெற்றுவருவதும், தேவை என்றால் அவ்வளர்ச்
சிக்கு மற்றவரைப் பயன்படுத்துவது என்பதும் இயல்பாகி போகிறது. அப்படித்தான் தொழிலாளர்
ஒற்றுமைக்கும், மக்களினுடைய ஏற்றத்திற்கும் முதல் எதிரியாக இருப்பது பார்ப்பனியமும் அதனோடு எப்போதும் உறவில் இருப்பதற்காகப் படைக்கப்பட்ட முதலாளித்துவமும் தான் நம் முதல் எதிரி என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

தொடரும்..