இதற்கு முன்விமான நிலையங்களில் பார்த்திருக்கிறேன்
விமானத்தில் எடுத்துச் செல்லக்கூடாத
ஆபத்தான பொருள்களின் பட்டியலை
அதைவிட நீளமான பட்டியலைத்
தேர்வு மைய வாசலில் கண்டேன்
வளையல்கள்
தோடுகள்
தாலிகள் போன்ற
பேரபாயக் கருவிகள்
தடை செய்யப்பட்டிருந்தன
போர்முனைக்குச் செல்லும்
வீரர்கள் அணியவேண்டிய
ஆடைகள் பற்றிய
விதிமுறைகள் உண்டு
தேர்வெழுத வந்த
ஒரு பெண்ணின் சட்டையில்
அய்ந்து பட்டன்களுக்குப்பதில்
ஆறுபட்டன்கள் வந்துவிட்டன
அதில் நாட்டைக் காட்டிக்கொடுக்கும்
சதிச்செயல்கள் மறைந்திருக்கலாம்
அந்தப் பெண் தடுக்கப்படுகிறாள்
காவலர் ஒருவர்
அவளை அழைத்துக்கொண்டு
ஆடைகள் வாங்க விரைகிறார்
உயிருக்குப் போராடும் ஒருவரை
ஏற்றிக்கொண்டு விரைவும்
அவசர ஆம்புலன்ஸ்களைக் கண்டு
பதற்றமடைந்திருக்கிறேன்
தேர்வுக்கு அனுமதிக்க
இன்னும் ஒரு நிமிடமே இருக்கையில்
தன் இருதயத்தை கையில் பிடித்துக்கொண்டு
உள்ளே ஓடுகிறான்
இளைஞன் ஒருவன்
அவனுக்கு மூடப்பட்ட ‘கேட்’டை
திறந்துகொடுத்த காவலர்
எல்லையில் உயிரைக் காத்த
ராணுவ வீரர்போல
சோஷியல் மீடியாவில்
‘ட்ரெண்ட்’டாகிறார்
விடிய விடிய
படித்துக்கொண்டிருந்த
மாணவி ஒருத்தி
அய்ந்து நிமிடம் தூங்கலாம் என
படுக்கையில் விழுகிறாள்
திடீரென என்ன நினைத்தாளோ
தெரியவில்லை
தலைக்கு மேல் சுழன்றுக்கொண்டிருந்த
மின் விசிறியில்
தன் துப்பட்டாவை முடுச்சிடுகிறாள்
‘ நீட்’ என்பது
ஒரு தேர்வல்ல
ஒரு போர்க்களம்
ஒரு நெருக்கடி நிலை
ஒரு ராணுவ ஆட்சி
ஒரு போஸ்ட்மார்ட்டம் அறை
‘ நீட் ‘ என்பது தகுதித் தேர்வு
எனப்படுகிறது
உயிர் வாழ்வதற்கு
யாருக்கு தகுதி உண்டு என
நிர்ணயிக்கும் தேர்வு. m