தன்மானப் பேரியக்க அஞ்சா நெஞ்சன்
தளபதியாய் அந்நாளில் களத்தில் நின்ற
மன்னுபுகழ்ப் பெரியாரின் தொண்டர், தோழர்!
மாண்பார்ந்த திராவிடத்தின் கொள்கைக் குன்றம்!
பன்னரிய இழிவெல்லாம் சுமக்கச் செய்து
பாழ்படுத்தி இன்புற்ற பகைவர் கூட்ட
வன்மத்தை கிழித்தெறிந்த பட்டுக்கோட்டை
வல்லரிமா அழகிரியை மறக்கப் போமோ!
பகுத்தறிவுப் போராளி! நாட்டின் மேனாள்
படைமறவர் இவராவர்! நமது முன்னோர்
வகுத்திட்ட நெறியாவும் நினைவு கூர்ந்தே
வன்கொடிய ஆரியத்தை வீழ்த்து தற்கே
மிகத்துணிவாய்ப் பழந்தமிழர் சால்பை யெல்லாம்
மேன்மையுறப் பதித்திட்டார்! மக்கள் நெஞ்சில்!
தகவுறவே பெரும்புரட்சி விடியல் தோன்றத்
தன்மான இனமான முரசம் ஆர்த்தார்!
தன்மதிப்புக் குரியவரின் பெயரைப் பெற்ற
தன்மகனாம் அழகிரிக்குச் சூட்ட லானர்
நன்மதிப்புக் குரியவராம் கலைஞர்! அந்நாள்
நஞ்சனைய இந்திமொழித் திணிப்பைச் சாடிச்
சென்னைவரை நடைப்பயணம் இவரும் சென்றார்!
சீற்றமுடன் இருநூறு கூட்டம் தன்னில்
பன்னரிய வீறுரையை முழங்கிக் கேட்ட
பற்பலரும் கொள்கையுரம் பெறவே செய்தார்!
சிங்கார வேலனாரை இயக்கத் துக்கே
சீர்மிகவே அழகிரியும் அழைத்து வந்தார்!
பொங்கியெழும் எரிமலையாய் மேடை தன்னில்
போர்க்குரலை நாள்தோறும் எழுப்பி வந்தார்!
தங்குதடை இல்லாத பணியால் தொண்டால்
தகவுறவே பிறர்போற்றும் புகழைப் பெற்றார்!
எங்குமிலா அறிவியக்கம் தன்னில் தம்மை
இணைத்திட்ட அழகிரியோ வரலா றானார்! ♦