நூல்தொடுத்து சாதிவர்ண நோயளித்த நலிவினை
வேள்வியென்றும் வேதமென்றும் வேடமிட்ட மனுவினை
கேள்விமேலே கேள்விகேட்டு வேள்விசெய்த புத்தராய்
ஆள்வினைகுன் றாதறுத்த அயோத்திதாசப் பண்டிதர்!
வேதியத்தின் மேன்மைதன்னை ஏற்கமறுத் தவர்களைச்
சாதியிலே தாழ்த்திஊரைத் தாண்டிவாழ வைத்ததை
நீதியில்லை என்றெதிர்க்க நேயங்கொண்ட நெஞ்சினால்
ஆதிபுத்தர் போலவந்தார் அயோத்திதாசப் பண்டிதர்!
பூர்வபுத்தர் திராவிடரைப் போலிவேத வாதிகள்
பாவஞ்செய்த பஞ்சமராய்ப் பாழ்படுத்தித் தாழ்த்தியே
காவலரின் மடியமர்ந்தே கழுவிலேற்றிக் கொன்றதை
ஆவணமாய் ஆக்கிவைத்த அயோத்திதாசப் பண்டிதர்!
இந்துவெனப் பதிவுசெய்தே இழிவைத்தேடிக் கொள்வதோ?
வந்தேறி தந்தபட்டம் மண்ணின்மக்க ளேற்பதோ?
இந்தமண்ணின் பூர்வகுடி பூர்வபுத்தர் என்றபேர்
தந்துபதிவு செய்கவென்றார் தன்மானப் பண்டிதர்!
ஆங்கிலேயர் ஆட்சியினை அகற்றுவதால் விடுதலை
ஈங்கெவர்க்கும் கிட்டுமென்றே பாரதியார் கூவிடத்
தீங்கிழைக்கும் பார்ப்பனரின் சூதறுத்து விடுதலை
வாங்குவதே முன்னுரிமை என்றறைந்தார் பண்டிதர்!
சித்தமருத் துவம்பயின்ற சித்தரெங்கள் பண்டிதர்!
தத்துவக் கடலைநீந்திக் கரையடைந்த கலமவர்!
வித்தகராய்ப் பாலிமொழி சமற்கிருத மறிந்தவர்!
தித்திக்கும் செந்தமிழின் இலக்கணமும் கற்றவர்!
திராவிடர்க்கு மகாஜன சங்கமொன்று கண்டவர்!
திராவிடன் தமிழனென இதழ்நடத்திச் சென்றவர்!
திராவிடத்தீப் பந்தமேற்றி எமக்களித்த முன்னவர்!
திராவிடத்தை ஆரியத்தின் எதிராய்க்கட் டமைத்தவர்!
சாதியநோய் போக்குதற்குத் தம்மபுத்தப் பண்டுவம்
நாதியற்றுத் தாழ்ந்தவர்க்கு நல்கிடுமே சமத்துவம்!
வேதியத்தின் வேரறுக்கப் போதிபுத்த நெறியிலே
வாதமிழா வந்திணைவாய் என்றழைத்தார் பண்டிதர்!
தாழ்ந்திழிந்து பட்டுழன்றும் தன்மானம் அற்றதாய்
வாழ்ந்திருந்த தமிழினத்தை மீட்சிபெறச் செய்யவே
சூழ்ந்தபகை சுட்டெரித்தும் திண்ணமுடன் போரிலே
ஆழ்ந்திருந்த பண்டிதர்சீர் ஓங்கிவாழ்க வாழ்கவே!
நூறாண்டின் முன்பிறந்து நூலார்மனு நீதியின்
வேராய்ந்து வேதியப்பொய் வீழ்த்தவந்தார் வாழ்கவே!
வாராது வந்தமழை அயோத்திதாசப் பண்டிதர்!
சீரார்க்கும் மாக்கடலாய் வாழ்கவாழ்க! வாழ்கவே! w