திருச்சியில் வி.பி.சிங் அவர்களின் கவிதை நூல்
(தமிழ் பெயர்ப்பு ) வெளியீடு !
பேராசிரியர் மு.தமிழ்க்குடிமகன் அவர்கள் தமது 66ஆம் வயதில், 21.9.2004 அன்று மதுரையில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருத்தமுற்றோம். ஒரு காலத்தில் பகுத்தறிவாளர் கழகத்தில் ஈடுபட்டு தீவிர பிரச்சாரப் பணிகளைச் செய்தவர். பின் அரசியலுக்குச் சென்று, சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர் பதவிகளை வகித்தார். அவரது இணையருக்கு நமது இரங்கல் செய்தியை அனுப்பி ஆறுதல் கூறினோம்.
பழம்பெரும் பெரியார் பெருந்தொண்டர் கரூர் கே.ஆர். கண்ணையன் அவர்கள் 22.9.2004 அன்று மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம். சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்குபெற்று பல மாதங்கள் தண்டனை அடைந்து, ஜாதி ஒழிப்பு வீரராகத் திகழ்ந்தவர். தான் கொண்ட கொள்கை, இயக்கம், கொடி, தலைமை என்ற உறுதிப்பாட்டில், தந்தை பெரியாரின் தொடக்க காலம்முதல் உறுதியுடன் கருஞ்சட்டைக்காரராக, சுயமரியாதை வீரராக வாழ்ந்தவர் இலட்சியத் தோழர் மானமிகு கே.ஆர். கண்ணையன் அவர்கள்!
அவர் கரூரில் இருந்தாலும், சென்னையில் தங்கியிருந்தாலும், சிங்கப்பூரில் உள்ள தனது மகனின் இல்லத்தில் பல மாதங்கள் தங்கியிருந்தாலும், எங்கும் எப்போதும் கழக நிகழ்ச்சிகளில் தவறாது கலந்துகொள்ளும் கடமை வீரர்.
இதய நோயிலிருந்து இருமுறை பிழைத்தவர்! காரணம், உறுதி படைத்த நெஞ்சம். தெளிவோடு ‘விடுதலை’யில் வரும் அறிக்கைகளைத், தனது சக தோழர்களிடம் விளக்கிடும் ஆற்றல் படைத்த கொள்கையாளர்!
அவரது திருமணத்தை அய்யாவை அழைத்து நடத்தினார்; இந்த இளைஞன் இப்படி ஆர்வத்தோடு அப்போது முன்வந்த நிலை கண்டு அய்யா மகிழ்ந்து, வழிச் செலவைக்கூட அவரிடம் வாங்க மறுத்ததாக அவரே சில மாதங்களுக்கு முன் சிங்கப்பூரில் நான் தங்கியிருந்தபோது என்னிடம் கூறினார். மறைந்த பெரியார் பெருந்தொண்டர்களான தி.நாகரெத்தினம், சு.தெ. மூர்த்தி இவர்களிடம் எப்போதும் அங்கே உள்ள போது கொள்கை, இயக்கம் பற்றியே பேசுவார்! எனது மகள் வீட்டிற்கு வரும் ‘விடுதலை’, ‘உண்மை’ ஏடுகளை வாங்கிக்கொண்டு போய் படித்துவிட்டு, திரும்ப வந்து தரும் பழக்கம் உள்ளவர்.
அவரது இறுதி நிகழ்ச்சியில் கழகத்தின் சேலம் கோட்டப் பிரச்சார அமைப்புக் குழுத் தலைவர் மானமிகு பொத்தனூர் க. சண்முகம் அவர்கள் தலைமைக் கழகத்தின் சார்பில் பங்கேற்றார். அன்னாரின் குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டோம்.
தந்தை பெரியார் 126ஆம் ஆண்டு பிறந்த நாளும், நாராயணகுருவின் 150ஆம் ஆண்டு பிறந்தநாளும், ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகர் அய்தராபாத்தில் செப்டம்பர் 19இல் கொண்டாடப்பட்டது. அப்பொழுது, தனியார் துறையில் இடஒதுக்கீடு எனும் தலைப்பில் கருத்தரங்கும் இணைந்து நடத்தப்பட்டது. ஆந்திரப்பிரதேச உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி பி.எஸ்.ஏ. சாமி அவர்கள் தலைமை தாங்கினார். ஆந்திர உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பேராசிரியர் ரவிவர்மகுமார், திருமதி சுஜாதா பாய், சிவதாஸ் ஆகியோர் உரையாற்றினர்.
அந்நிகழ்வில் எமது உரையில், இடஒதுக்கீட்டின் தேவையையும், கடவுள், மதம் சார்ந்தவற்றில் தந்தை பெரியார், நாராயணகுரு ஆகியோரின் அணுகுமுறை பற்றியும், கல்வி, வேலை ஆகியவற்றில் மேல் ஜாதியினர் கீழ்ஜாதியாரை எப்படி ஒதுக்கினர் என்பதை எடுத்துக் கூறி அதை மாற்றுவதற்கு இடஒதுக்கீடு தேவை என்பதை வலியுறுத்தினோம்.
டில்லியிலிருந்து 26.9.2004 அன்று காலை விமானம் மூலம் புறப்பட்டு காலை 9:30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய, மேனாள் பிரதமர் வி.பி. சிங் மற்றும் அவரின் துணைவியார் சீதா அம்மையாருக்கும், வீ. அன்புராஜ், ப.சீதாராமன், சமூகநீதிக் கட்சித் தலைவர் கா. ஜெகவீரபாண்டியன், டாக்டர் மீனாம்பாள், ஆடிட்டர் ராமச்சந்திரன், வழக்குரைஞர் தெ.வீரமர்த்தினி ஆகியோர் மலர்க்கொத்துக் கொடுத்து வரவேற்றனர்.
கழகத் தோழர்கள் குடும்பத்தைச் சேர்ந்த பிஞ்சுகளுக்கு அவர்கள் மலர் கொடுத்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
சென்னையிலிருந்து விமானம்மூலம் புறப்பட்ட வி.பி. சிங் அவர்கள் 25.9.2004 முற்பகல் 11 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். வி.பி. சிங் அவர்களுக்கும் அவருடைய துணைவியார் சீதா அம்மையாருக்கும் பொன்னாடை அணிவித்து உற்சாகத்துடன் வரவேற்றோம்.
தந்தை பெரியார் 126ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, முன்னாள் பிரதமர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்களின்
நூல் வெளியீட்டு விழா.
வி.பி.சிங் அவர்களுடைய துணைவியார் சீதா அம்மையார் அவர்களுக்கு கழகத் துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
கழகத் துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் தாளாளர் சுந்தரராஜுலு ஆகியோரும் உடனிருந்து வரவேற்றனர்.
பின்னர் திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த வி.பி.சிங் அவர்கள் நீண்ட வரிசையில் நின்ற திராவிடர் கழகத் தோழர்கள், தோழியர்கள், பெரியார் கல்வி நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் ”Long live, Long live, V.P. Sing Long live. தந்தை பெரியார் வாழ்க, என்ற ஒலி முழக்கங்களை விண்ணதிர முழங்கி தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர்.
பின்னர் வி.பி. சிங் அவர்களும், அவரின் துணைவியார் சீதா அம்மையார் அவர்களும் நாமும், திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்திற்குச் சென்று சேர்ந்தோம்.
மேனாள் பிரதமரும், சமூகநீதிக் காவலருமான வி.பி. சிங் அவர்களின் இந்தி மொழிக் கவிதைகளை டாக்டர் த.சி.க. கண்ணன் தமிழாக்கம் செய்து, அதை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் ஒரு துளி பூமி, ஒரு துளி வானம் எனும் தலைப்பில் நூலாக்கியது. அதன் வெளியீட்டு விழா 25.9. 2004 அன்று சனிக்கிழமை திருச்சிராப்பள்ளி தேவர் மன்றத்தில் எமது தலைமையில் நடைபெற்றது. அப்பொழுது உரையாற்றிய வி.பி.சிங். அவர்கள் குறிப்பிட்டதாவது:-
“இன்றைக்குப் பெரியார் அவர்களின் 126ஆம் பிறந்த ஆண்டைக் கொண்டாடுகிறோம். இந்த நாளில் என்னுடைய கவிதைகளின் தமிழாக்கம் வெளியாவது எனக்கு ஒரு நற்பேறு. திரு. கண்ணன் அவர்கள் அதை நன்கு மொழி பெயர்த்துள்ளார். நூலை வெளியிடும் பொறுப்பை திரு.வீரமணி அவர்கள் ஏற்றுக்கொண்டார். இதைவிட, ஒரு சிறந்த நாள் இருக்க முடியாது. என்னுடைய அடுத்த பிறவியில் நான் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும் என அடிக்கடி கூறுவேன். ஆனால், அடுத்த பிறவி இருக்கிறதோ இல்லையே அறியேன். இருப்பினும் என்னுடைய நூலைத் தமிழ்மொழி பெயர்ப்பில் கொண்டு வந்ததன் மூலம் கண்ணன் அவர்களும் வீரமணி அவர்களும், இந்தப் பிறவியிலேயே நான் தமிழ்நாட்டில் பிறக்குமாறு செய்துவிட்டனர். இந்த மொழி பெயர்ப்பு நூலின் மூலம், நான் தமிழ்நாட்டில் மறுபிறவி எடுத்துள்ளதாக உணர்கிறேன்.
தமிழ் மக்கள் எனக்குக் காட்டும் அன்பின் காரணமாக நெகிழ்வு அடைகிறேன். அவர்களுக்கு நான் என்றும் நன்றியுடையேன். அவர்கள் காட்டும் அன்பிற்கு இந்நூலின் வழியே என் உள்ளத்தை- இதயத்தை அவர்களுக்கு அளிக்கிறேன்.
தந்தை பெரியாரின் சமனியம் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்ல, இந்தச் சமயத்தில் நாம் உறுதிகொள்வோம்.
என்னுடைய கவிதைகளுக்கு இங்கு சிறந்த விளக்கங்களைத் தந்துள்ளனர். வேறுபட்ட கோணங்களில் இருந்து அவற்றைப் பார்த்திருக்கிறார்கள். என்னுடைய பாக்களைப் பற்றி நானே தெளிவு பெறும்வகையில் பொருள் கூறியிருக்கிறார்கள்.
இந்நூல் உங்கள் உள்ளங்களை ஈர்க்கும் என்று எண்ணுகிறேன். இதில் உள்ள ஒரு கவிதையானது உங்களுக்குச் சிறப்பாகப்படும் எனில், ஏற்றுள்ள என் பணி வெற்றி பெற்றதாகக் கருதுவேன். ஒரு பாடலாவது உங்கள் உள்ளத்தில் படவேண்டும் என்பது என் விருப்பம். அது நிறைவேறினால் மகிழ்வேன். திரு. கண்ணன் அவர்களும் திரு. வீரமணி அவர்களும் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு நன்றி கூறுகிறோம். உங்கள் அனைவரின் வாழ்த்துகளை ஏற்று உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப பணியாற்றுவேன். நன்றி என்று குறிப்பிட்டார்.
அடுத்து நாம் உரையாற்றுகையில்,
“சமூகநீதிக் காவலருடைய தனித்தன்மை, அவருடைய பெருந்தன்மை, மனிதநேயம் அவருடைய நூலிலே உள்ளது. அவரது நூலை தமிழில் கொண்டுவர வேண்டும்; தமிழ்நாட்டு மக்களுக்கு அதை அளிக்க வேண்டும்; தமிழ்நாட்டு மக்களுடைய கரங்களில் அதைச் சேர்க்க வேண்டும் என்று எண்ணி, அவருடைய நூலை நாங்கள் வெளியிடுவோம் என்று அவரிடம் சொன்னபொழுது, அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள்-
“நீங்கள் இந்த நூலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுங்கள். அந்த நூல் விற்பனையின் வருவாயை முழுமையாகக் கொடுத்துவிடுகின்றேன். தனக்கு அதில் எந்தவிதமான உரிமையும் தேவையில்லை” என்று அவர்கள் தமது தாராள மனப்பான்மயை வெளிப்படுத்தினார்கள்.
இந்த விழா- தந்தை பெரியார் அவர்களின் 126ஆவது ஆண்டு பிறந்தநாள் விழாவுடன் சேர்ந்து நடக்கின்ற இந்த நேரத்திலே அய்யா அவர்களுடைய சிந்தனையை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
தந்தை பெரியார் அவர்கள் இந்த இயக்கத்தைத் தொடங்கிய காலத்திலே, 1932ஆம் ஆண்டுகளிலே, “நமது தேசத்தின் விடுதலைக்கும், சமத்துவத்திற்கும், பகுத்தறிவுக்கும் தன் மதிப்புமே பிரதானம் என்று கருதி சுயமரியாதை இயக்கம் என்று பெயரிட்டேன்’ என்று சொல்லியிருக்கின்றார்.
தந்தை பெரியார் அவர்களுடைய சிறப்பை இந்திய நாடாளுமன்றத்திலே முதல்முறையாக பதிவு செய்த ஒரு பிரதமர் இருக்கிறார் என்றால், அவர்தான் மாண்புமிகு நம்முடைய வி.பி.சிங் அவர்கள் ஆவார்கள். மண்டல் கமிஷன் அறிக்கையை அவர் அமல்படுத்துகின்ற நேரத்திலே நாடாளுமன்றத்திலே தந்தை பெரியார் அவர்களுடைய பெயரை, அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பெயரைப் பதிவு செய்தார்கள்.
வி.பி.சிங் அவர்கள் இந்தக் கவிதை நூலில் ‘காணிக்கை’ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கின்றார்-
“என் வாழ்வினில்“ நான் பெற்ற ‘வாழ்க’, ‘ஒழிக’ முழக்கங்கள் கேட்டு… துள்ளாமலும், துவளாமலும் துணை நின்ற அன்புத் துணைவி சீதாவிற்கு இக்கவிதை நூல் என் காணிக்கையாகும்” என்று எழுதியிருக்கின்றார். இதை ஒவ்வொருவரும் பின்பற்றினால் வீட்டில் அமைதியிருக்கும். நாட்டில் அமைதியிருக்கும். அதிகாரப் பங்களிப்பு என்பது வீட்டிலிருந்து தொடங்கவேண்டும் என்பதன் வழிகாட்டல் இது.
வி.பி.சிங் அவர்கள் வடநாட்டுப் பெரியாராக இருக்கின்றார்” என்று கூறிவிட்டு,
இந்த மண்டல் பரிந்துரை அமல்படுத்த, ஒருமுறை அல்ல; ஆயிரம் முறை நான் பிரதமர் பதவியை இழப்பதற்குத் தயாராக இருக்கின்றேன் என்று சொன்னவர் நீங்கள் (பலத்த கைதட்டல்).
தமிழ்நாட்டு மக்களை வெகுவாக நேசித்தவர் நீங்கள். பெரியார் காங்கிரசிலிருந்து வெளியே வரும் பொழுது 50 சதவிகித இட ஒதுக்கீட்டிற்காகத்தான் வெளியேறினார். ஆனால், உங்களுடைய காலத்தில்தான் இந்தியாவில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கினீர்கள்; 23 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு ஏற்கெனவே 27 சதவிகிதம் வழங்கப்படுகிறது. ஆக இட ஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக ஆக்கி சமூகநீதியை நிலை நிறுத்தியுள்ளீர்கள். இனிமேல் இடஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கு மேல்தான் போகவேண்டுமே தவிர அதற்குக் கீழே போக முடியாது என்பதை நிலைநாட்டியிருக்கின்றவர்கள் நீங்கள்.
எனவே, காலம் காலமாக பெரியார் மண் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கின்றது” என்று வி.பி.சிங் அவர்களைப் பார்த்துக் கூறி என் உரையை நிறைவு செய்தேன்.
செப்டம்பர் 25ஆம் நாள் திருச்சியில் நடந்த தந்தை பெரியார் 126ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா “ஒரு துளி பூமி, ஒரு துளி வானம்“ தமிழாக்கக் கவிதை நூல் வெளியீட்டு விழாக்களை முடித்து வி.பி.சிங் அவர்கள் 26.9.2004 அன்று தஞ்சை பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரி வளாகத்தில் ்இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களால் திறக்கப்பட்டு சிறப்பாகச் செயல்படும் பெரியார் கணினி மய்யம் மற்றும் நூலகக் கட்டத்திற்கு எம்முடன் வந்து நூலகத்தைச் சுற்றிப் பார்த்தார். பிறகு அதே வளாகத்தில் உள்ள வீடியோ கான்பரன்சிங் செமினார் ஹாலினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
வீடியோ கன்பரன்சிங் காட்சியினையும் அமர்ந்து சிறிது நேரம் கண்டு களித்தபின், செய்தியாளர்களின் பேட்டியிலும் கலந்துகொண்டுவிட்டு, புதிதாகக் கட்டப்பட்டுள்ள “முதுநிலை மாணவியர் விடுதி”யினையும் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள் திறந்து வைத்து அருகில் மரக்கன்று நட்டார்.
அடுத்து புதிதாகக் கட்டப்பட்டு வரும் திறந்தவெளி விளையாட்டு அரங்கில் அழகான தோற்றத்துடன் அமைக்கப்பட்ட மேடையில் “பிஜி – ஹாஸ்டல் கட்டடத்தையும் திறந்து வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவரும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான மருதூர் (தெற்கு) சிதம்பரம் (வயது 75) அவர்கள் 1.10.2004 அன்று மறைவுற்றார்.
ஆசிரியராகப் பணியாற்றிய போதே பகுத்தறிவாளர் பணிகளை ஆற்றிக்கொண்டு வந்தவர்.
பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் முழு நேரமாக இயக்கப்பணி ஆற்றிட முன் வந்தார். திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளராகவும், அதன்பின் நாகை மாவட்ட திராவிடர் கழகத் தலைவராகவும் சிறப்பாகப் பணியாற்றினார்.
மருதூரில் அவர் நடத்திய பெரியாரியல் பயிற்சி முகாம்- ஒரு முகாம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கான இலக்கணமாக அமைந்திருந்தது. அவ்வளவுச் சிறப்பான ஏற்பாடுகள்!
அவரது பிரிவு அவரின் குடும்பத்தாருக்கு மட்டுமல்ல; கழகத்திற்கும் பெரும் இழப்பாகும்.
குடும்பத் தலைவரை இழந்து பெரும் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் அவரின் துணைவியார் மானமிகு செண்பகலட்சுமி அம்மையார் அவர்களுக்கும், பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்க்கும், கழகத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டோம்.
இறுதி நிகழ்ச்சி 1.10.2004 அன்று மருதூரில் நடைபெற்றது. தலைமைக் கழகத்தின் சார்பில், கழகச் செயலவைத் தலைவர் மானமிகு ராஜகிரி கோ. தங்கராசு, தஞ்சைக் கோட்ட கழகப் பிரச்சார அமைப்புக் குழுத் தலைவர் மானமிகு எஸ்.எஸ். மணியம் ஆகியோர் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக மேனாள் பொருளாளர் நாகர்கோயில் – கோட்டாறு பெரியார் பெருந்தொண்டர் பகவதிப் பெருமாள் (வயது 82) அவர்கள் 3.10.2004 அன்று மறைவுற்றார்.
குமரி மாவட்டக் கழகத்தில் புகழ் பூத்த தீரர்களின் நீண்ட பட்டியல் உண்டு.
திரவியப் பணிக்கர், சிதம்பரம் பிள்ளை, வி.எஸ். கிருஷ்ணபிள்ளை, கிருஷ்ண பெருமாள், சொர்ணம், கணேசன், வடிவீசுரம் பழநி வடிவேலு, நல்ல பெருமாள் அண்ட் சன்ஸ் உரிமையாளர் லட்சுமணப் பெருமாள் (சந்திரன் அவர்களின் அண்ணன்) ஆ. சண்முகய்யா, பிரபாகரன், குளச்சல் அப்பாவு (நாடார்) இன்னும் பலர்.
இந்த நீண்ட பட்டியலில் சுயமரியாதைச் சுடரொளியாகிவிட்ட பகவதிப்பெருமாள் அவர்களுக்கு மிக முக்கிய இடம் உண்டு. குமரி மாவட்டக் கழகத்தின் மூத்த தலைமுறையினர் வரிசையில் கடைசித் தலைவராக தோழர் பகவதிப்பெருமாள் அவர்கள் திகழ்ந்தார்கள்.
நாகர்கோயிலில் தந்தை பெரியார் சிலையை நிறுவவும், அதற்குரிய இடத்தினை வாங்கவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் அவரின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
அவரின் பிரிவால் பெரும் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் அவரின் மகன் (கல்லூரிப் பேராசிரியர் எழிலன்) நான்கு மகள்கள் (ஒருவர் டாக்டர்) ஆகியோருக்கும் கழகத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தோம்.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் அமைப்புக் குழுத் தலைவருமான பொத்தனூர் க. சண்முகம் அவர்களின் துணைவியார்
திருமதி சுந்தராம்பாள் அம்மையார் (வயது 72) அவர்கள் 3.10.2004 அன்று மாலை மறைவுற்றார்.
தஞ்சை வல்லத்தில் நாம் இருந்ததால், தொலைபேசி மூலம் மானமிகு பொத்தனூர் க. சண்முகம் அவர்களுடன் தொடர்பு கொண்டு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக்கொண்டோம்.
இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு கழகத்தின் செயலவைத் தலைவர் ராஜகிரி கோ. தங்கராசு, பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் நல். இராமச்சந்திரன், பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பேராசிரியர் ப. சுப்பிரமணியம், நாகம்மையார் குழந்தைகள் இல்லக் காப்பாளர் தங்காத்தாள், தஞ்சை மாவட்டத் தலைவர் கு.வடுகநாதன் கரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சே. அன்பு, மாவட்டச் செயலாளர் த. கார்த்தியேகன் ஆகியோர் சென்று உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
திருச்சி, சோமரசன்பேட்டை கிளை திராவிடர் கழகம் சார்பில் நாடார் சத்திரம் பகுதியில் வாழ்ந்த சுயமரியாதைச் சுடரொளி, பெரியார் பெருந்தொண்டர் சுந்தரம் அவர்களின் நினைவுக் கல்வெட்டினை 3.10.2004 அன்று காலை 9.00 மணிக்கு திறந்து வைத்து கழகக் கொடியினையும் ஏற்றி வைத்தோம்.
அடுத்து அல்லித்துறை கடைத் தெரு, அண்ணா சிலை அருகில் பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் மு. சடையன் அவர்களின் நினைவுக் கல்வெட்டினையும் நாம் திறந்து வைத்து கழகக் கொடியினை ஏற்றி வைத்தோம்.
திருச்சி- மணிகண்டம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவராகச் செயலாற்றிய பெரியார் பெருந்தொண்டர் பழநியாண்டி, 12.9.2004 அன்று மறைவுற்றார். நாம் 3.10.2004ஆம் நாள் ஞாயிறன்று காலை சோமரசன் பேட்டையிலுள்ள பழநியாண்டியின் இலலத்திற்குச் சென்றோம். அங்கு அவரது உருவப்படத்திற்கு மரியாதை செய்து, அன்னாரின் மகன் இராவணன், கவுதமன், இளங்கோ, மதிவாணன் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தோம்.
தஞ்சாவூர் நகர பகுத்தறிவு இலக்கிய அணி தலைவர் சுந்தரசாம்பசிவம்- இணையர் யாழினி (எ) ஆட்சிக்கண்ணு ஆகியோரால் தஞ்சை நகர் கீழவண்டிக்காரத் தெருவில் புதியதாக கட்டப்பட்ட பெரியார் இல்லத்தை, அக்டோபர் 2ஆம் நாள் சனிக்கிழமை மாலை திறந்து வைத்தோம்.
புதிய இல்லம் கட்டப்பட்டு எவ்வாறு திகழவேண்டும் எனவும், அதில் மூடநம்பிக்கைகளைப் புகுத்தாமல், புரட்சிகரமான சிந்தனைகளை முன்வைத்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான திட்டங்களை வகுத்து தந்தை பெரியார் அவர்கள் கூறிய சிக்கனமான வழியைப் பின்பற்றி வெற்றி பெற முயற்சியில் ஈடுபட்டு வாழ்ந்து காட்ட வேண்டும் எனவும் விளக்கவுரையாற்றினோம்.
திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இளம் பொறியாளர் தொருவளூர் பா. மதிவாணன் – க. அண்ணா இரா.மகாலட்சுமி ஆகியோரால் புதிதாக கட்டப்பட்ட தந்தை பெரியார் இல்லத்தைத் திறந்து வைத்தோம். அறிவார்ந்த கருத்துகளைப் பின்பற்றியும், வாழ்வில் சிக்கனமாகச் செலவு செய்தும், அவர்கள் வருவாயில் 20 விழுக்காடு மிச்சப்படுத்தியும், மேலும் 2 விழுக்காடு தொகையினை பிறருக்கும், வசதியற்றவர்களுக்கும் கல்விக்காகச் செலவழித்து பொதுத்தொண்டுப் பணிகளைச் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி, தந்தை பெரியார் கொள்கைகளைக் கடைப்பிடித்து கழகத்தில் பணியாற்றும் எல்லாத் தொண்டர்களும் சீரோடும் சிறப்போடும் சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்பதற்கு அடையாளமாக வாழ்ந்து காட்டுவது பாராட்டுக்குரியது என்றும் பாராட்டி உரையாற்றினோம்.
தமிழக மூதறிஞர் குழுச் செயலாளரும், வல்லம் பெரியார் நூற்றாண்டு தொழில்நுட்பக் கல்லூரியின் தாளாளருமான பொறியாளர் டாக்டர் வி. சுந்தரராசுலு அவர்களின் அன்னையார் செயலட்சுமி அம்மையார் (வயது 82) அவர்கள் 6.10.2004 அன்று சென்னை அண்ணாநகரில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்தினோம்.
அம்மையாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து நாம் மரியாதை செலுத்தினோம். டாக்டர் சுந்தரராசுலு அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் ஆறுதலைக் கூறினோம்.
7.10.2004 அன்று காலை இறுதி நிகழ்ச்சிகள் நடந்தன. இறந்த அம்மையாரின் கண்கள் கொடையாக அளிக்கப்பட்டுன.
(நினைவுகள் நீளும்)