நான் விஞ்ஞானியானதற்குப் பின்புலம் தந்தை பெரியாரின் சிந்தனைகளே!

2024 Uncategorized கட்டுரைகள் மற்றவர்கள் ஜனவரி 1-15, 2024

— விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை —

சென்ற இதழ் தொடர்ச்சி…

ஏனென்றால், இங்கே மேடையில் அந்தப் பெண் சொன்னாரே, ‘‘அப்பாதான் எனக்குப் பெரியாரை அறிமுகப்படுத்தினார்’’ என்று.
என்னுடைய அப்பாவும் அப்படித்தான் அறிமுகப்படுத்தினார். எனக்கு அண்ணாதுரை என்று பெயர் வைத்ததற்கான காரணமும் அதுதான்.
நான், என்னுடைய அப்பாவிடம் கேட்பேன். ‘‘எதற்காக எனக்கு அண்ணாதுரை என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்?’’ என்று.

அதைப் பற்றி பின்னால் பார்ப்போம். இப்போது, பந்தயக் குதிரைகளாக மாணவர்கள் இருக்கவேண்டும் என்ற பெரியாரின் கூற்றைப் பற்றி…
‘‘எதையும் அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது; கேள்வி கேட்டுப் பழகவேண்டும்” என்று பெரியார் சொல்வார் அல்லவா! நான் அப்பாவிடம் பெரியாரின் கூற்றுகளையே திருப்பிக் கேட்பேன், ‘‘பந்தயக் குதிரை போன்று ஒரு மாணவன், படித்துக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?’’ என்று.
‘‘இல்லை, இல்லை. எது எடுத்தாலும், நீ பந்தயக் குதிரையாக இருக்கவேண்டும்” என்று சொல்வார்.

ஒரு விளக்கம், பள்ளிக்கூடத்தில் உனக்குச் சொல்லிக் கொடுப்பதில், அது விளையாட்டாக இருக்கலாம்; பேச்சுப் போட்டியாக இருக்கலாம்; கட்டுரைப் போட்டியாக இருக்கலாம். எது எடுத்தாலும், முயற்சி இருக்கவேண்டும்; பயிற்சி இருக்கவேண்டும்; வேகம் இருக்கவேண்டும்; விவேகம் இருக்கவேண்டும்.
இப்படி நீ சென்றால், இருக்கக்கூடிய வாய்ப்புகளையெல்லாம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பார்.
அந்த வகையில்தான், நான் பார்க்கிறேன் இப்பொழுது.ஆகவேதான்,

‘‘உன்னை யோசிக்க வைப்பதுதான் நோக்கமே தவிர, என்னைப் பின்பற்று, உன்னை மாற்றிக்கொள் என்பது அல்ல; நீ, நீயாகவே இரு’’ என்றார் பெரியார்.
21 ஆண்டுகள் பள்ளி _ – கல்லூரிகளில் படித்தேன். நான் தேர்வு எழுதுகிறேன். பந்தயக் குதிரைகளுக்குப் பந்தயத் தளங்கள் எப்படி மாறுகிறதோ, அதுபோன்று 10 பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்குச் சென்றிருக்கிறேன். எல்லா இடங்களிலும் முதல் மாணவனாக வரக்கூடிய வாய்ப்பு இருந்தது. அப்படி நான் முதல் மாணவனாக வந்தாலும், 11 ஆண்டுகள் தமிழில்தான் நான் படித்தேன்.

ஆக, படிப்பு என்கிற, தளத்தில், தேர்வுகளில் மதிப்பெண் என்பதைத் தாண்டி, என்னுடைய ஓவியப் போட்டியாக இருக்கலாம், கட்டுரைப் போட்டியாக இருக்கலாம், பேச்சுப் போட்டியாக இருக்கலாம் _ – அந்த வகையில் முதல் மாணவனாக மதிப்பெண் பெறுவதைத் தாண்டி சிறந்த மாணவனாக பள்ளியிலிருந்து தேறி வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டேன்.

அதை நான் திரும்பிப் பார்க்கும்பொழுது, இந்தப் பந்தயக் குதிரை (நான்), செக்குமாடாக இல்லாமல், பந்தயக் குதிரையாக இருந்தது. இந்தப் பந்தயக் குதிரை அதே சமயம் உள்ளூரில் இருக்கும் புல்லையும், கொள்ளையும்தான் சாப்பிட்டது. ஆனால், இன்றைக்குப் பன்னாட்டளவில் ஒரு பந்தயக் குதிரையாக இருப்பதற்கான வாய்ப்பு எனக்கு வந்திருக்கிறது என்பதை நான் சொல்ல முயற்சி செய்கிறேன்.

இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால், என்னை முன்னிலைப்படுத்தியும், பெரியாரைப் பெருமைப்படுத்தியும் சொல்வதைவிட, பெரியாருடைய வார்த்தைகள், விதைகளாக விழுந்து, அந்த விதை எப்படி விருட்சமாக வளரும் என்பதை இன்றைய இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் சொல்லவேண்டும் என்பதற்காகத்தான் முன்னிலைப்படுத்தினேனே தவிர, என்னைப் பெருமைப்படுத்துவதற்காக அல்ல.
நானே சொல்கிறேன், இது ஒரு குதிரைக்காக அல்ல; இப்பொழுது முன்னால் ஓடிக்கொண்டிருக்கின்ற குதிரை_ இது உங்களுக்கெல்லாம் தெரியும் _ – வீரமுத்துவேல் என்கிற இந்தக் குதிரையும் எப்படி வந்தது என்று.

எதற்காக இதனை நான் சொல்கிறேன் என்றால், ஒருபுறம் நான் சிறந்த மாணவனாக ஒன்றாம் வகுப்பிலிருந்து இருந்தேன் என்று; அப்படியில்லாமல், இன்றைக்கு நினைத்தாலும், இந்த நிமிடத்தில் நினைத்தாலும், இந்த நொடியில் அந்த விதை விழுந்தாலும், அந்த விதை உங்கள் மனதில் விருட்சமாக வளரும் என்பதற்கு இன்னொரு உதாரணத்தை இந்தக் குதிரையை (வீரமுத்துவேல்) வைத்துச் சொல்ல முயற்சி செய்கிறேன்.

(வீரமுத்துவேல் காணொலியில் உரையாற்றினார். அந்தக் காணொலி உரையை அப்படியே இங்கே தருகிறோம்).

எல்லோருக்கும் வணக்கம்!

‘‘என் பெயர் வீரமுத்துவேல். இந்த வாய்ப்பைக் கொடுத்த டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை சாருக்கு நன்றி!
இப்பொழுது நான் Indian Space Research Organisation U R Rao Satellite Centre – இல் சயின்டிஸ்ட் இன்ஜினியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

என்னைப் பற்றிச் சொல்லவேண்டுமானால், நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் விழுப்புரத்தில். பள்ளிக்கூடம் படித்தது ஓர் அரசாங்கப் பள்ளிக்கூடத்தில் 10ஆம் வகுப்புவரை படித்தேன். பள்ளிக்கூடப் படிப்பில், நான் ஒரு சராசரி மாணவன்தான்.
அடுத்து என்ன படிக்கவேண்டும்? எங்கு படிக்கவேண்டும்? என்கிற எந்தவிதமான மிபீமீணீவும் இல்லை. பெற்றோர், குடும்பம் என்று எடுத்துக்கொண்டாலும், யாருக்கும் படிப்பு பற்றிய பின்னணியும் இல்லை. நண்பர்களுடன் சேர்ந்து டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தேன். படிக்கும்பொழுது, இன்ஜினியரிங் படிப்பின்மேல் ஓர் ஆர்வம் வந்தது. அதனால், நான் 90 சதவிகித மதிப்பெண் பெற்றேன். மெரிட்டில், சிறீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜில் பி.இ. பிரிவில் சேர்ந்தேன். எல்லா செமஸ்டரிலும் முதல் வகுப்பிலோ அல்லது இரண்டாம் வகுப்பிலோ தேர்வு பெற்றேன். அதற்காக நான் எல்லா நேரங்களிலும் படிக்கமாட்டேன். ஆனால், படிக்கும்பொழுது நூறு சதவிகிதம் புரிந்துகொண்டு படிக்கவேண்டும் என்று நினைப்பேன். அதுவே எனக்கு நல்ல பர்சென்டேஜ் மதிப்பெண்ணை வாங்கிக் கொடுத்தது.

அதனுடைய வெளிப்பாடாக, எம்.இ. படிப்பைத் திருச்சி ஆர்.இ.சி கல்லூரியில் சேர்ந்தேன். பி.இ. போன்றே, எம்.இ. படிப்பிலும் முதல், இரண்டாம் இடத்தைப் பெற்றேன்.

கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக கோயம்புத்தூரில் உள்ள லஷ்மி மிஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தில் சீனியர் இன்ஜினியராகச் சேர்ந்தேன். பணியாற்றிக்கொண்டே இருந்தாலும், ஏரோஸ்பேஸ் ரிசர்ச் மேல் எனக்கு மிகவும் ஆர்வம்.

அப்பொழுதுதான் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட், பெங்களூருவில், எலிகாப்டர் டிவிசன் என்று சொல்கின்ற ரோட்டரி விங் ரிசர்ச் அண்ட் டிசைன் சென்டரில், டிசைன் இன்ஜினியராகச் சேர்ந்தேன். சிறிது காலத்திற்குப் பிறகு, என்னுடைய கனவான இஸ்ரோ சாட்டிலைட் சென்டரில் பணியாற்றுகின்ற வாய்ப்பு கிடைத்தது.
அங்கே முதலில் ப்ராஜெக்ட் இன்ஜினியராகவும், பிறகு ப்ராஜெக்ட் மேனேஜராகவும் பணியாற்றினேன். நிறைய ரிமோட் சென்சிங் அண்ட் சயின்டிபிக் சாட்டிலைட்டில் பணியாற்றி இருக்கிறேன் _ – தி மார்ஸ் ஆர்பிட் மிசன் உள்பட. அதே சமயம் என்னுடைய ஆராய்ச்சியை நான் விடவில்லை.
அதனுடைய வெளிப்பாடாக, பிஎச்.டி., படிப்பை அய்.அய்.டி. மெட்ராசில் சேர்ந்தேன்.

ஒரு நோவல் ரிசர்ச் எனப்படும் வைப்ரேசன் செப்பரேசன் ஆஃப் எலக்ட்ரானிக் பேக்கேஜ் இன் சாட்டிலைட் ஆராய்ச்சி செய்திருக்கிறேன்.
என்னுடைய ஆராய்ச்சி அறிக்கையை, அய்லி ரெபியூடெட் இன்டர்நேஷனல் ரெவ்யூ ஜெர்னலில் பப்ளிஷ் செய்திருக்கிறேன். நிறைய இன்டர்நேஷனல் கான்பரன்சில் பிரசன்ட் செய்திருக்கிறேன்.

வெற்றிகரமாக பிஎச்.டி., படிப்பை முடித்தேன். இஸ்ரோவினுடைய முதல் நானோ சாட்டிலைட் டீமை வழி நடத்தக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது.
மூன்று நானோ சாட்டிலைட்டை லாஞ்ச் செய்திருக்கின்றோம். அடுத்ததாக அசோசியேட் ப்ராஜெக்ட் டைரக்டராக மிகப்பெரிய மிஷனான சந்திரயான்-_2அய் வெற்றிகரமாக நிறைவேற்றினோம்.
இப்பொழுது இஸ்ரோ அயர் மேனேஜ்மெண்ட் எனக்கு ப்ராஜெக்ட் டைரக்டராக சந்திரயான்-_3அய் எக்ஸ்கியூட் செய்வதற்கான வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது.
இஸ்ரோவுக்கு இது ஒரு மிகப்பெரிய மூன்லேண்டிங் மிசன். ஒரு பெரிய டீமை வழிநடத்திக் கொண்டிருக்கிறேன்.
நான் ஓர் எளிமையான மனிதன். என்னால் இந்த அளவிற்கு வர முடிகிறது என்றால், எல்லோராலும் முடியும். வாய்ப்புகள் எல்லோருக்கும் இருக்கிறது. அதை எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதுதான் நம்முடைய கைகளில் இருக்கிறது.
என்னைப் பொறுத்தவரையில்,
சுய ஒழுக்கம்,
நூறு சதவிகித ஈடுபாடு,
எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமை,
கடினமான உழைப்பு.
நமக்கு இருக்கின்ற தனித்துவம் நிச்சயமாக
வெற்றியைத் தரும்.
கடின உழைப்பு ஒருபோதும் நம்மைக்
கைவிடாது.
உங்களுக்கு நல்வாழ்த்துகள்!
நன்றி!
– _இவ்வாறு வீரமுத்துவேல் காணொலி மூலம் உரையாற்றினார்.
(தொடரும்)