அய்யாவின் அடிச்சுவட்டில்…இயக்க வரலாறான தன் வரலாறு (326)

2023 அய்யாவின் அடிச்சுவட்டில் நவம்பர் 1-15, 2023

கி.வீரமணி

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் 8.4.2004 அன்று மாலை 6 மணியளவில் டில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நாம் எழுதிய “வாழ்வியல் சிந்தனைகள்” நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

டில்லி தமிழ்ச் சங்க விழாவில் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூலினை ஜி.பாலச்சந்திரன் வெளியிட, நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் பெற்றுக் கொள்கிறார் (8.4.2004 – புதுடில்லி)

நிகழ்ச்சியின் துவக்கத்தில் எம்மையும் நீதியரசரையும் சங்கத்தின் தலைவர் ஜி.பாலச்சந்திரன், பொதுச் செயலாளர் எஸ். கிருட்டினமூர்த்தி ஆகிய இருவரும் மேடைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமிழ்ப் பெருமக்கள் தங்கள் கரவொலி மூலமாக மகிழ்ச்சியினை_ வரவேற்பினைத் தெரிவித்தனர். தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ். கிருட்டினமூர்த்தி தனது வரவேற்புரையை நிகழ்த்தினார்.

அதன்பின்னர் தமிழ்ச் சங்கத் தலைவர் “வாழ்வியல் சிந்தனைகள்’ நூலின் முதல் படியினை வெளியிட நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் அவர்கள்
பெற்றுக்கொண்டார். எஸ்.கிருட்டினமூர்த்தி, பாலமூர்த்தி ஆகியோருக்கும் மேடையில் நூல் வழங்கப்பட்டது.

நூலை வெளியிட்ட, தலைவர் ஜி.பாலச்சந்திரன் தனது தலைமை உரையில், நூலின் சிறப்பியல்புகளைப் பற்றியும், அதன் பல்வேறு தலைப்புகள் எப்படி இன்றைய கால கட்டத்திற்கு எல்லோரும் படித்துப் பயன்பெறும் வகையில் உள்ளது என்றும்,இந்திய நாடு இன்றைக்கு வளர்ச்சிப் பாதைக்குச் சென்று கொண்டிருப்பதற்குப் பெரிதும் காரணமானவர் தந்தை பெரியார் ஆவார் என்றும், அய்யாவின் அந்தப் பணி தொய்வின்றி இன்று உலகமெங்கும் எடுத்துச் செல்வதற்கு உழைப்பவர் நம்மோடு இருப்பவர், தன்னலம் துறந்து பொது நலமே தன்னலம் என ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற திராவிடர் கழகத் தலைவர் அய்யா கி. வீரமணி அவர்கள் ஆவார்கள் என்னும் எடுத்துரைத்தார்.

முதல் படியினைப் பெற்றுக்கொண்டு நீதியரசர் ஏ.ஆர்.லட்சமணன் அவர்கள் தமது உரையில், இந்நூலாசிரியர், எனது இனிய நண்பர் கி.வீரமணி அவர்கள் உலகம் சுற்றும் வாலிபர், தமிழறிஞர், பெருங் கல்வியாளர், நல்இதயம் கொண்ட நல்ல மனிதர். இவர் அரசியல்வாதியல்ல. போற்றுதலுக்குரிய தமிழினப் போராளி என்று தமது உரையில் பாராட்டிப் பேசியதோடு, அவரால் உருவாக்கப் பட்ட இந்நூல் சமூகப் பார்வையோடு, சாதாரண பள்ளி மாணவர் படித்தாலும் புரிந்துகொண்டு செயல்படும் வகையில் எழுதப்பட்ட சிறப்பான நூல் என்று தனது பாராட்டுரையில் தெரிவித்தார்.

டில்லி தமிழ்ச் சங்க விழாவில்
‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூல் வெளியீட்டு விழாவில் ஆசிரியர் அவர்களுடன் நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் – 8.4.2004

இங்குள்ள தமிழர்கள் அனைவரும் தங்கள் இல்லத்தில் இந்த நூலின் பிரதியை வைத்து படித்துப் பயனடைய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
நான் இங்கே இதை குறிப்பிடுவது உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவு என்று எண்ணாமல், ஒரு நல்ல புத்தகத்தினை ஆசிரியர் அவர்கள் எழுதியுள்ளார்கள்.

அதைமுழுமையாகப் படித்த பின்னரே, பேசுகிறேன். எனவே நீங்களும் மற்றவர்களும் இதைப் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தமிழில் டில்லியில் பேசவும், முதல் நூலினைப் பெறவும் வாய்ப்புத் தந்த டில்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் உறுப்பினர் பெரு மக்களுக்கும் தனது பாராட்டுகளையும், நன்றியினையும் தெரிவித்து மகிழ்ந்தார்.

எனது ஏற்புரைக்கு முன்னதாக டில்லி தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஜி.பாலச்சந்திரன், நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் ஆகிய இருவருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் சால்வையணிவித்துச் சிறப்பித்தோம்.

நிறைவாக ஏற்புரையில், டிசம்பர் மாதம் சிறப்பாக கொண்டாடிய பெரியார் பிறந்த நாள் விழாவிற்கும், வாழ்வியல் சிந்தனைகள் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்த தலைவர் உள்ளிட்ட அனைத்துப் பெரு மக்களுக்கும் எமது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொண்டோம்.

ஜாதி, மதம் என்ற பேதம் இல்லாமல் எல்லோரும் ஓர் நிலை என்கிற அளவுக்கு மனித நேயத்தை முன்னிலைப்படுத்தக்கூடிய ஓர் அற்புத அமைப்பாக டில்லித் தமிழ்ச்சங்கம் இயங்கிக்கொண்டிருக்கின்றது என்கிற காரணத்தினாலே, ஓர் அறக்கட்டளையை டில்லியிலே உருவாக்குவது சாலப் பொருத்தம்
என்ற காரணத்தால் திராவிடர் கழகத்தின் சார்பில் முப்பதாயிரம் ரூபாயை அறக்கட்டளைக்காக இப்பொழுது தமிழ்ச் சங்கத்தலைவர் அவர்களிடம் வழங்க இருக்கின்றோம்.

தேவையில்லாமல் ஒன்றரை மணி நேரத்தை இது நல்ல நேரமில்லை என்று ஒதுக்கி விடுகிறார்கள். அது மட்டுமல்ல; இருக்கின்ற நேரத்தை நாம் பயன்படுத்துகின்றோமா என்றால் கிடையாது. இந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்க வேண்டும் என்றும் இந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சி முடியும் என்றும் போடக்கூடிய அமைப்பு முறை நம்மிடத்திலே இல்லை. இவை எல்லாம் இல்லாததற்குக் காரணம் நேரத்தை, காலத்தை நாம் உணர்ந்து நடக்காததுதான்.
அமெரிக்காவிற்குச் சென்றீர்களேயானால் என்ன சொல்லுவார்கள்? Time is Money அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பணம்தான். ஆனால் பணத்தைவிட மேலானது நம்முடைய காலம். பணத்தைப் பெற்றுவிடலாம். ஆனால், காலத்தைப் பெற முடியாது.

அப்படிப்பட்ட காலத்தை நாம் வெகுவாக மதிக்கக் கூடியவர்களாக இருக்கவேண்டும். 24 மணி நேரத்தை நாம் எப்படிப் பயன்படுத்துவது என்பதை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். அப்படி வரும் பொழுதுதான் நம்முடைய முன்னேற்றம் சிறப்பானதாக இருக்கும். தொலைக்காட்சியின் முன்னாலே அன்றாடம் நாம் எவ்வளவு நேரத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றோம்!

நேரம் ஒன்றுதான் ஓவர் டிராஃப்ட் வாங்க முடியாத ஒன்று. ஆகவேதான் அதிலே அதிகப் பற்று வைக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு நெருக்கடி இருக்கின்றபொழுது, அந்தக் காலத்தை நாம் சிறப்பாகப் பயன்படுத்தியாக வேண்டும் என்ற எண்ணத்திலேதான் இருக்கின்ற வாழ்நாளில் நாம் யாருக்கு என்ன உதவி செய்தோம்? என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் அப்படிப்பட்ட எண்ணம் வந்தால் உதவ முற்படுவோம்.

வி.பி. மேனன் உயர் அதிகாரியாக இருந்தவர். அவரது மனிதாபிமானம் பற்றி அமெரிக்கர் ஒருவர் எழுதியுள்ளார். வி.பி.மேனன் கேரளாவில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர். அவரது பெற்றோருக்கு 12 குழந்தைகள். வறுமையான நிலை. எனவே இவர் இளமையில் கூலி வேலை செய்கிறார். கடைசியாக டில்லியில் குமாஸ்தா வேலை கிடைத்தது. அதில் சேர அங்கு ரயிலில் செல்கிறார். ரயில் பயணத்தில் தூங்கியவர் எழுந்து பார்த்தபோது அவர் கொண்டு சென்ற பொருள்கள் எல்லாம் திருட்டுப் போய்விட்டன. செலவுக்குக்கூட பணம் இல்லை. அருகில் சீக்கியர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் 15 ரூபாய் கடன் கேட்கிறார். விரைவில் திருப்பிக் கொடுத்துவிடுவதாக முகவரி கேட்கிறார். அச்சீக்கியர் 15 ரூபாய் தருகிறார். நீங்கள் இதைத் திருப்பித் தரவேண்டாம். யாராவது உங்களைப் போன்று தவிக்கும் போது இதை அவர்களுக்குக் கொடுங்கள் என்றார். நாட்கள் சென்றன.

வி.பி. மேனன் பெங்களூரில் அவருடைய மகள் இல்லத்தில் இருக்கின்றார். அப்பொழுது அங்கு ஒரு பிச்சைக்காரர் மேனன் அவர்களுடைய வீட்டிற்கு வந்து பிச்சை கேட்கின்றார். என்னால் நடக்க முடியவில்லை. கால் புண் வலியால் துடிக்கின்றேன். எனவே, ஒரு செருப்பு வாங்கப் பணம் கொடுத்து உதவுங்கள் என்று அந்தப் பிச்சைக்காரர் கெஞ்சுகிறார்.

அந்தப் பிச்சைக்காரர் கெஞ்சிக் கேட்பது வி.பி.மேனன் அவர்களுடைய காதிலே விழுகின்றது.
உடனே மேனன் தன்னுடைய மகளை அழைக்கின்றார். தன்னுடைய பர்சில் முன்பு போட்டு வைத்திருந்த அந்த 15 ரூபாயை எடுத்து வரச் சொல்லுகின்றார். அந்த 15 ரூபாயை அந்தப் பிச்சைக்காரரிடம் தரும்படி கூறுகின்றார்.

வி.பி.மேனன் அதன்பிறகு நினைவிழந்து உயிர் துறக்கிறார். வி.பி. மேனன் அவர்கள் செய்த கடைசிப் பணி அதுதான் என்று அமெரிக்க நாட்டு எழுத்தாளர் ராபர்ட் ஃபல்கம் எழுதி முடிக்கின்றார்.

நண்பர்களே, இதை யார் எழுதியிருப்பது? உங்களுக்கும், எனக்கும் அதிகம் அறிமுகம் இல்லாத அமெரிக்காவில் பிரபலமாக இருக்கக்கூடிய அமெரிக்க இலக்கிய வட்டத்திலே பிரபலமாக இருக்கக்கூடிய, ராபர்ட் ஃபல்கம் என்பவர் எழுதியிருக்கின்றார்.

யாருக்காவது இதுபோன்ற நெருக்கடி வந்தால் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. அதன் மூலம்தான் ராபர்ட்ஃபல்கம் இந்தச் செய்தியை எழுதியிருக்கின்றார் என்று வி.பி.மேனன் அவர்களிடத்திலே செயலாளராகப் பணியாற்றியவர் சொல்லியிருக்கின்றார்.
நண்பர்களே, மனித நேயத்திற்கு நாடோ, அல்லது ஜாதியோ, மதமோ கிடையாது.

ஆகவேதான் உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். மனித நேயத்தை நாம் ஒரு போதும் மறந்துவிடக் கூடாது. மற்றவர்களுடைய துன்பத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் இரவிலே நாம் படுத்து உறங்குவதற்கு முன்னாலே ஒரு சில மணித்துளிகளாவது நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இன்றைக்கு யாருக்கு நாம் உதவி செய்தோம் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

யாருக்கு நாம் உதவி செய்தோம் என்று நினைத்துப் பார்க்காவிட்டால் கூட, யாருக்கும் நாம் உபத்திரவம் செய்யாமல் இருந்தோம் என்பதை எண்ணிப் பார்த்தாலே, நாம் வெற்றி இலக்கை அடைந்துவிட்டோம் என்று என்று நினைக்கக்கூடிய மனிதர்களாக நாம் இருக்க வேண்டும்.

தந்தை பெரியார் அவர்களைப் பற்றி பல செய்திகள் மக்களுக்குத் தெரியாது. அவர் யாருக்குக் கொடுத்தாலும், நான் இன்னாருக்குக் கொடுத்தேன் என்பதை வெளியில் சொன்னதே கிடையாது. அருகிலே இருக்கின்ற எங்களைப் போன்ற தொண்டர்களுக்குக் கூடத் தெரியாது. அவர் யாருக்கு என்ன உதவி செய்தார் என்பதை தன்னுடைய துணைவியாரிடத்திலேகூட அவர்கள் சொன்னது கிடையாது. அவ்வளவு பெரிய பெருந்தன்மையை நாங்கள் பல நேரங்களிலே அவரிடம் பார்த்ததுண்டு.

உதவுதல் என்பது விளம்பரத்திற்காக இருக்கக்கூடாது என்பதை இங்கே வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.

இந்த நிகழ்ச்சியை சிறப்பான நிகழ்ச்சியாக நீங்கள் நடத்தியிருக்கின்றீர்கள். உங்களுக்கு இந்த நூல் ஆசிரியர் என்ற முறையிலே வேண்டுகோள் என்ன என்றால், மனிதநேயத்தை முன்னிலைப்படுத்துங்கள். யார்? எங்கே பிறந்தோம், என்பது முக்கியமல்ல. நாம் இறப்பதற்கு முன்னாலே, யாருக்கு எப்படி உதவி செய்தோம் என்பதை எண்ணிப் பாருங்கள்.

இருட்டைப்பற்றி நாம் குறை சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. அதைக் கண்டு நாம் பயப்படவும் தேவையில்லை. வெளிச்சம் வந்தே தீரும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். நாம் ஆளுக்கொரு மெழுகுவத்தியைக் கையிலே தூக்கி வைத்துக் கொண்டிருப்போமேயானால் இருட்டு இல்லாமல் போகும்!
நிறைவாக இந்த நிகழ்ச்சி காரணமான அனைவருக்கும் நன்றி செலுத்துகின்றேன். பாராட்டுரை வழங்கிய பெருமக்களுக்கு நான் எப்படி வார்த்தைகளால் நன்றி செலுத்துவது என்று தெரியவில்லை.

என்னை ஊக்கப்படுத்தியிருக்கின்றீர்கள். மேலும் எழுத வேண்டும் சமுதாயத்திற்காக எழுத வேண்டும் என்று ஊக்கப்படுத்தியிருக்கின்றீர்கள்.
இறுதியாக ஒன்று கூறி எனது உரையை நிறைவு செய்ய விரும்புகின்றேன். சாதாரண புல் தரையில் சூரியனின் கதிரொலி படுகின்றது. அந்த ஒளிபட்ட நேரத்தில் புல் மற்றும் செடி, கொடிகள், மரங்கள் சிறப்பாக வளரக்கூடிய வாய்ப்புகளைப் பெற்றிருக்கின்றன.

அதுபோல புல்தரையாக இருந்த எமது எழுத்துக்களுக்கு உங்களைடைய பாராட்டுகள் கதிரவன் ஒளி பாய்ச்சியதைப் போல அமைந்திருக்கின்றன. எத்தனை வசந்தங்கள் வந்தாலும் புல்தரை சூரிய ஒளிக்கு நன்றி செலுத்தித் திருப்பித் தந்துவிட முடியாது. இச்சமுதாயத்திற்கு உழைப்பதன் மூலம் இக்கடனை அடைப்பேன்” என்று கூறி உரையை நிறைவு செய்தேன்.

மறுநாள் 9ஆம் தேதி காலை 10.30 மணியளவில் கல்கத்தாவில் இதய சிகிச்சை செய்து கொண்டு ஓய்விலிருக்கும் சமூகநீதி மய்யத்தின் தேசியத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சந்திரஜித் (யாதவ்) அவர்களை அவர்களது டில்லி ‘மயூர்விகார்’ பகுதியில் உள்ள இல்லத்திற்குச் சென்று, நலம் விசாரித்து, சுமார் 7 மணிக்கு மேல் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் பற்றி உரையாடிவிட்டுத் திரும்பினோம். என்னுடன் வழக்குரைஞர் த. வீரசேகரன், பெரியார் மணியம்மை கல்லூரி முதல்வர் டாக்டர் நல். இராமச்சந்திரன் அவர்களும் வந்திருந்தனர்.

மாலையில் மத்திய திட்டக்குழு உறுப்பினர் திரு.கே. வெங்கட்சுப்ரமணியன் அவர்கள் இல்லத்திற்குச் சென்று அவருக்கு ‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூலைத் நேரில் தந்தோம்.

பிரதமர் வாஜ்பேயி எழுதிய கவிதைகளின் திராவிட மொழிகளில் தமிழாக்க நூல்களை கல்லூரி நூல் நிலையத்திற்கு அவர் அளித்தார்.
பிறகு மேனாள் மத்திய கல்வி அமைச்சராய் இருந்தவரும் டில்லி பெரியார் மய்யத்தின் முக்கிய முன்னோடிகளில் ஒருவருமான தோழர் டி.பி. யாதவ் அவர்கள் இல்லத்தில் அவர் அளித்த தேநீர் விருந்தில் கலந்துகொண்டோம். பின் அவர் சில முக்கிய நூல்களையும், அவர் அண்மையில் எழுதிய ஆங்கில நூலையும் அன்பளிப்பாகத் தந்து, கல்லூரி வளர்ச்சி, மய்யத்தின் வளர்ச்சிபற்றி உரையாடியபின் விடைபெற்றோம்.

அன்று பிற்பகல் 1 மணியளவில் நமது புதிய பெரியார் மய்யம் கட்டப்படவிருக்கும் இடத்தைச் சென்று நாங்கள் பார்வையிட்டோம். அதனருகில் ஒதுக்கப்பட்ட மனைகளில் கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெற்றதையும் ஆய்வு செய்தோம்.
டில்லி நகர வளர்ச்சிக் குழுமத்தின் டில்லி நகராட்சி மற்றும் பல்வேறு துறைக்கான அனுமதி, கட்டடம் கட்டுவதற்கு பிளான் அனுமதி முதலிய எல்லாம் இறுதி ஆக்கப்பட்டு நமக்கு ஆணைகளும் கிடைத்திருந்தன.

10.4.2004 அன்று காலை நாம் தங்கியிருந்த விருந்தினர் விடுதிக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியச் செயலாளர் தோழர் அம்பேத்ராஜன் அவர்கள் சில நண்பர்களுடன் வந்து சந்தித்து, உரையாடிச் சென்றார். வடநாட்டில் நிலவும் தேர்தல், அரசியல் நிலவரம் பற்றியெல்லாம் கூறியதோடு ‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூலையும் மகிழ்ச்சியோடு பெற்றுத் திரும்பினார்.

ஆசிரியர் கி.வீரமணி – வி.பி.சிங் சந்திப்பு – 10.4.2004

மாலை 3 மணிக்கு, சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களை அவரது இல்லத்திற்குச் சென்று நண்பர்களும் நானும் சந்தித்தோம். டில்லி தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்களான அவர்களை வி.பி.சிங் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து அவர்களும் மகிழ்ச்சியாக எங்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

சுமார் 20 நிமிடங்களுக்குமேல் நாங்கள் உரையாடினோம். அவர்கள் உடல்நலம் தேறி வருவது மனதிற்கு நிறைவளித்தது. அவர்களுக்கு ஒரு பிரதியை தந்து அது எப்படிப்பட்ட கட்டுரைத் தொகுப்பு என்று விளக்கியபோது, அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த வி.பி. சிங்
அவர்கள் இம்மாதிரி நூல்கள் பல்வேறு மொழிகளில் (ஆங்கிலம் இந்தி உள்பட) வெளிவருதல் அவசியம் என்று கேட்டுக்கொண்டார்.
டில்லித் தமிழ்ச் சங்கப் பொதுச்செயலாளர்கள் திரு. கிருஷ்ணமூர்த்தி, முகுந்தன் போன்றோர், தமிழும், இந்தியும் நன்கு அறிந்த மொழி பெயர்ப்பில் அனுபவம் பெற்ற ஒருவரை டில்லியிலே அதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறியதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தார் வி.பி. சிங் அவர்கள்.

எங்களோடு தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தோழர் குடந்தை ராசப்பா அவர்கள் பஞ்சாபில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் கலந்துகொண்டு டில்லி வழியாக திரும்பிய போது, நூல் வெளியீட்டு விழாச் செய்தி அறிந்து, எங்களுடன் வந்து சேர்ந்து மூன்று நாள்களும் இருந்தார்கள்.
இந்த மூன்று நாள்களிலும் பல்வேறு பயனுறு பணிகள் சந்திப்புகள் சிறப்பாக நடைபெற்றன என்று மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் சென்னை திரும்பினோம்.

(நினைவுகள் நீளும்…..)