குருமூர்த்திகள் கருத்துகளை குப்பையில் போடுங்கள்!
1. கே : கொடுத்த வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றிவிட்டோம் என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகச் சரியான கருத்தைக் கூறிய நிலையில், “துக்ளக்‘ இதழின் அட்டைக் கருத்துப் படம் வன்மத்தின், வயிற்றெரிச்சலின், அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடு என்று கொள்ளலாமா?
– சாந்தி, திருமுல்லைவாயல்.
ப : குருமூர்த்திகளுக்கு’ எப்போது அரசியல் நேர்மையும் அறிவு நாணயமும் இருந்தது? அதைப் பொருட்டாக எடுத்துக்கொண்டு கேள்வி கேட்டு நேரத்தை நீங்களும் நானும் பாழடிக்கலாமா? குப்பை கூளங்களை கொட்ட வேண்டிய இடத்தில் கொட்டுங்கள்!
2. கே : சனாதனத்தை அறிவியல் என்றும், சனாதன சாஸ்திரங்கள் அறிவியல் சிந்தனைகளை முன்னமே கூறியுள்ளன என்றும் நோபல் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் என்று கூறப்படுவது பற்றி, தங்கள் கருத்து என்ன?
– ராம்குமார், திருச்சி.
ப : அப்படி ஒரு தலைசிறந்த ‘புருடாவா?’ அறிவியலையும் அவர்கள் அறியவில்லை; சனாதனத்தையும் அதன் உண்மை சொரூபத்தையும் ஏன் இன்னும் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதே நம் கேள்வி.
முதலில் சனாதனப்படி (அறிவியலாக அது இருந்தால்) நிலவைப் பற்றிய புராணக் கருத்துகளைக் அவர்கள் கூறுவார்களா? அபத்தத்தின் உச்சம்!
“இந்தப் புளுகு கந்தபுராணத்திலும் இல்லை’’ என்ற சொலவடைதான் நம் நினைவுக்கு வருகிறது?
3. கே : ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைந்தால், உடனடியாக மகளிர்க்கான 33% இடஒதுக்கீட்டை சட்டத் திருத்தத்தின் மூலம் அமல்படுத்த வாய்ப்பு உண்டா?
– செந்தில்நாதன், திருத்தணி.
ப : இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் இப்போதே உறுதி அளித்துள்ளார்களே! மோடி அரசின் வித்தைப்படி இந்த மகளிர் 33 சதவிகித இடஒதுக்கீடு சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு_ 2031ஆம் ஆண்டுக்குப் பிறகே அமலுக்கு வர வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ள நிலையில், இந்தியா கூட்டணியின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதற்காகவே மகளிர் விழிப்புணர்வு பெற்று பா.ஜ.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியாக வேண்டும்.
4. கே : தண்ணீர்த் தொட்டிகளில் மலம் கலத்தல் போன்ற ஜாதி வன்மத்தைத் தூண்டும் செயல்கள் மூலம் தமிழ்நாட்டில் கலவரத்தைத் தூண்டி அரசியல் ஆதாயம் பெற முயலுவது ஜாதி மத வெறிக் கூட்டத்தின் செயலாக இருக்க வாய்ப்புண்டு என்ற யூகம் பற்றித் தங்கள் கருத்து என்ன?
– மேகலா, அம்பத்தூர்.
ப : இது ஒரு திட்டமிட்ட சதிச்செயல், கண்காணிப்பு கேமிராக்கள் மூலமோ அல்லது எவ்வகையிலோ குற்றவாளிகளை உடனடியாக உளவுத்துறையும் சட்டம்_ ஒழுங்கு, குற்றத்துறையும் கண்டறிந்து குற்றம் இழைத்தோரையும், அதனைத் தூண்டிய காரணஸ்தர்களையும் மிகக் கடுமையாகக் கண்டிக்கவேண்டும்.
குடி தண்ணீர் தொட்டிகளை நன்கு கண்காணிக்க வேண்டிய ஏற்பாடுகளை மாவட்ட நிருவாகம் செய்ய வேண்டும். ஜாதி வெறியர்களையும் கண்டறிந்து, அவர்களுக்குத் தக்க தண்டனை தரவேண்டும்.
5. கே : ‘நீட்’ முதுகலைக் கல்விக்கான தகுதி மதிப்பெண் ‘ஜீரோ’ என்ற அறிவிப்பு, ‘நீட்’ தேர்வு தகுதியை நிலைநாட்டவில்லை; தகுதியை உருவாக்குவதில் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்பதை உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கூறி, நீட்டை ரத்து செய்ய முடியாதா?
– வத்சலா, திருத்துறைப்பூண்டி.
ப : இனி ஆறு மாதங்களுக்குள் வரவிருக்கும் பொதுத்தேர்தலில் இந்த ஆட்சியைத் தோற்கடித்தால் நிரந்தரத் தீர்வு, தானே ஏற்படும். அதற்கு உங்களைப் போன்றோர் பங்கு பற்றி யோசியுங்கள்.
6. கே : சனாதனம் மாறாதது என்று கூறும் ஆரியப் பார்ப்பனர்கள் கடல் தாண்டக்கூடாது என்ற சனாதனத்தைக் கைவிட்டு அயல்நாடுகளுக்குச் செல்வதன் மூலம் சனாதனம் நிலையானது என்பதை அவர்களே மறுக்கிறார்கள் என்றுதானே பொருள்? இது மோசடி, பித்தாலாட்டம் அல்லவா?
– சுப்பிரமணி, வேளச்சேரி.
ப : இதெல்லாம் கேட்டு ரொம்ப நாள்கள் ஆயிற்று; கேளாதவர்களைப்போல பாசாங்கு செய்து வேஷம் போடு
கிறார்கள். ஒப்பனை ரொம்ப நாளைக்குக் கலையாமல் இருக்க முடியாது.
7. கே : “வரும்… ஆனால் வராது’’ என்று என்னத்தெ கண்ணையா நகைச்சுவையாகச் சொன்னது போல், மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது ஏமாற்று வேலைதானே-? இதைக் காட்டி ஓட்டுப் பெறவேண்டும். ஆனால் மகளிர்க்கு ஒதுக்கீடும் கொடுக்கக்கூடாது என்ற சூழ்ச்சியல்லவா?
– பத்மா, கோயம்புத்தூர்.
ப : ஆம்! ஆம்! அதிலென்ன சந்தேகம்!
8. கே : நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. எம்.பி. ஒருவர் பி.எஸ்.பி உறுப்பினரான இஸ்லாமியரைக் கேவலமாகப் பேசியதை மோடி கண்டிக்கவில்லை. சனாதன ஒழிப்புப் பேச்சுக்கு காட்டிய உடனடி எதிர்வினையை மற்ற எதிலும் காட்டாத மோடி, மக்கள் விரோதப் போக்கின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் என்றுதானே பொருள்?
– மஞ்சு, செங்கோட்டை
ப : கைப்புண்ணுக்குக் கண்ணாடியா தேவை?