அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (319)

2023 Uncategorized அய்யாவின் அடிச்சுவட்டில் ஜூலை 16-31, 2023

முரசொலிமாறன் மறைவு!
– கி. வீரமணி

மத்திய அமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் தி.மு.க., தலைவர் கலைஞர் அவளால் தனது ‘மனசாட்சி’ என்று அழைக்கப்பட்டவருமான, சகோதரர் ‘முரசொலி’ மாறன் அவர்கள் 23.11.2003 மாலை இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வருந்தினோம்.
“அவரது மறைவு, தி.மு.க.விற்கும், அதன் தலைவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மாத்திரம் இழப்பு அல்ல; திராவிடர் இயக்கத்திற்கும் இது ஓர் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும்.

மாறன் அவர்கள் ஒரு பல்துறை ஆற்றலாளர். சீரிய சிந்தனையாளர், சிறப்பான எழுத்தாளர், பத்திரிகையாளர், அனுபவம் கனிந்த நாடாளு-மன்றவாதி, திறமைமிக்க தேர்ந்த நிருவாகி.

‘மிசா’ சட்டத்தின் கீழ் நாங்கள் சுமார் ஓராண்டு காலம் சென்னை சிறையில் இருந்தபோது, அவருடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு, எனக்கு ஏற்பட்டது. மனதில் பட்டதை பட்டென்று சொல்வதில் அவர் எப்போதும் தயக்கம் காட்டியதில்லை. அவரது மறைவு பொதுவாழ்க்கையில் எளிதில் நிரப்ப முடியாத ஒரு பள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரை இழந்து வாடும், அவரது குடும்பத்தினருக்கும், தி.மு.க. தலைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை, திராவிடர் கழகத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.’’ என்று இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தோம்.

மறைந்த மாறன் அவர்கள் உடல், இறுதி மரியாதைக்காக சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் அவர்களின் இல்லத்தில் பொதுமக்கள் மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது. 24.11.2003 காலை 8:20 மணியளவில் மறைந்த மாறன் அவர்களது உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினோம்.

தில்லி சங்கத்தின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்தநாள்
விழா மிகச் சிறப்பான முறையில், 14–.12.2003 ஞாயிறு மாலை 6:30 மணிக்குத் தொடங்கி நடந்தது!

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடந்த தந்தை பெரியார் அவர்களின்
125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா.

விழாவிற்கு உச்சநீதிமன்ற நீதிபதி டாக்டர் திரு. ஏ.ஆர். லட்சுமணன் அவர்களும், மத்திய அரசின் வர்த்தகத் துறையில் மூத்த அதிகாரியாக உள்ள பாலச்சந்திரன் அய்.ஏ.எஸ்., அவர்களும், பல தொழில் அதிபர்கள், பேராசிரியர்கள், வங்கி மேலாளர்கள், இளைஞர்கள் முதற்கொண்டு ஏராளமான மகளிர் உள்பட பலரும் குடும்பங்களாக கலந்துகொண்டனர்.

விழாவிற்கு வந்திருந்தவர்களை தில்லித் தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர் திரு.பி.நாகஜோதி அவர்கள் சிறப்பான வகையில் வரவேற்று உரையாற்றினார்.
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரு-மான திரு.எம்.என். கிருஷ்ணமணி அவர்கள் தலைமையேற்று, தந்தை பெரியார் பற்றி சிறப்புகளையும், அவர்களிடம் ஒரு பேட்டிக்காக கேள்வி கேட்ட அனுபவத்தையும் சிறப்பாக விளக்கினார்.
கார்ல் மார்க்சுக்கு ஒப்பானவர் பெரியார் என்றும் அவர் ஒப்பிட்டுக் கூறினார்.

முதலில் தந்தை பெரியார் பெருந்தொண்டினை விளக்கி, கோ. கருணாநிதி 20 நிமிடங்கள் சிறப்பான உரை நிகழ்த்தி அய்யாவின் தொலைநோக்கினை விளக்கினார்!

அடுத்து தமிழ்நாடு சமூகநீதிக் கட்சியின் தலைவர் கா. ஜெகவீரபாண்டியன் சுமார் 15 நிமிடங்கள், தந்தை பெரியார் விழா எப்படி ஆந்திரத் தலைநகரான அய்தராபாத், கேரளத் தலைநகர் திருவனந்தபுரம், கருநாடகத் தலைநகர் பெங்களூர் முதலிய பெருநகரங்களில் அந்தந்த மக்களால் கொண்டாடப்பட்டது பற்றியும் விவரித்தார்.

அதற்கடுத்துப் பேசிய இரா. செழியன் அவர்கள், மிகவும் நகைச்சுவை மிளிர தனது 35 நிமிட உரையை மக்கள் குலுங்கிக் குலுங்கி சிரிக்கும் வண்ணம் பெரியார் கருத்துகளை எடுத்துக் கூறினார்.

நிறைவாக 8.45 மணியளவில், நாம் சிறப்புரையாற்றினோம்.

எமது உரையில்,

பத்து லட்சம் தமிழர்களுடைய ஏகபிரதிநிதியாக இருக்கக்கூடிய தில்லித் தமிழ்ச்சங்கம் இன்றைக்கு விழா எடுத்-திருக்-கின்றது என்று சொல்லும்-பொழுது இதுதான் எடுத்த விழாக்களிலேயே சிகரத்தைத் தொட்டிருக்கின்ற விழா என்பதை மகிழ்ச்சியோடு, அடக்கத்தோடு, அன்போடு பதியவைக்கின்றேன்.
31.1.1960லேயே ஏறத்தாழ 43 ஆண்டுகளுக்கு முன்னாலே அய்யா அவர்கள் சொன்ன கருத்து.

சாதாரணமாக எல்லோருக்கும் புரியும்படியாக எதார்த்தமான வகையிலே, அந்தக் கருத்துகளைச் சொல்லியிருக்கின்றார். தன்னைப்பற்றி ஓர் அறிமுகத்தில் சொல்லுகின்றார்:

“நான் ஒரு அதிசய மனிதன், மகான், அப்படி, இப்படி என்றெல்லாம் கூறுபவன் அல்லன். ஆனால், துணிவு உடையவன்_ கண்டதை ஆராய்ந்து அறிந்ததை மக்கள்
எதிர்ப்புக்கு அசாது கூறுபவன் (மக்கள் எதிர்ப்பார்கள் என்ப
தைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. மக்கள் எதிர்த்தால் நான் அதைச் சந்திப்பேன் என்று சொல்லக்கூடிய துணிச்சல் தந்தை பெரியார் அவர்களுக்கு உடன் பிறந்த ஒரு பண்பு).

“மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறினால் வெறுப்புத்தான் கிடைக்கும். சுயநலம் கெட்டுப்போகும். உண்மையான சமுதாயத் தொண்டன் என்பவன் சமுதாய நலனுக்குச் செய்யும் காரியங்களில் மானக்கேடு ஏற்பட்டால் அதைத் துணிவுடன் ஏற்க முன்வரவேண்டும். குடிநலத் தொண்டர்கள் மானம் பார்க்கில் கெடும். என்ன கெடும்? இலட்சியம் கெடும்.’’ என்று அய்யா அவர்கள் சொல்லியிருக்கின்றார். எவ்வளவு அற்புதமாகச் சொல்லியிருக்கின்றார் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

பெரியாருடைய முழுத் தொண்டுக்கும் ஒரு மய்யப்புள்ளி எங்கேயிருந்து கிளம்பியது என்று நீங்கள் ஆய்வு செய்வீர்களேயானால், ஒரே சொல்லிலே அதை அடக்க வேண்டுமானால், “மனித நேயம்’’ என்பதுதான் மிக முக்கியமானது.

சுயமரியாதை மனிதனுக்கு மட்டும்தான் உண்டு. சுயமரியாதை அய்ந்தறிவு படைத்தவை-களுக்கு இருக்கமுடியாது. ஆறறிவு படைத்த மனிதனுக்கு சுயமரியாதை என்பது இருக்க வேண்டும்.
சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள் திராவிடர் கழக பொன்விழாவிற்கு வந்து பேசும்பொழுது, மிக அற்புதமாக சுயமரியாதைக்கு விளக்கம் சொன்னார். சுயமரியாதை இயக்கம் என்று தொலைநோக்குச் சிந்தனையோடு தந்தை பெரியார் வைத்ததற்குக் காரணம் என்ன என்பதற்கு, வி.பி.சிங் அவர்கள் விளக்கம் சொன்னார்.

“சூப்பர் கம்ப்யூட்டர்’’ இன்றைக்கு வந்துவிட்டது. மிகப்பெரிய அறிவியல் கருவி ஒரு நொடிப்பொழுதிலே தகவல்களைக் கொடுக்கக்கூடியது. இது சூப்பர் கம்ப்யூட்டர் யுகம்.

ஒரு மனிதன் முகத்தில் எச்சிலைத் துப்பினால்…

எதிரிலே உட்கார்ந்திருக்கின்ற ஒரு பலகீனமான மனிதனுடைய முகத்தில் ஒருவன் எச்சில் துப்பினால் அந்த மனிதன் என்ன செய்வான்? என்று பொது மக்களையே பார்த்து கேள்வி கேட்டார் வி.பி.சிங் அவர்கள், கூட்டத்தில் இருந்த ஒருவரைப் பார்த்துக் கேட்டார். “உங்கள்மீது ஒருவர் எச்சில் துப்பினால் என்ன செய்வீர்கள்?’’ என்று கேட்டார்.

உடனே உட்கார்ந்திருந்தவர் கொஞ்சம்கூட யோசிக்காமல் சொன்னார் “ஓங்கி அறைவேன்’’ என்று. இதுதான் சரியான சுயமரியாதைக்கு அடையாளம். இதற்குப் பெயர்தான் சுயமரியாதை. இது தனி வாழ்க்கையில் உண்டு. ஆனால், அதே எச்சிலை சூப்பர் கம்ப்யூட்டர் மீது நீங்கள் துப்பினால் அது எதிர்த்து புரட்சி செய்யுமா? அறிவு இருந்தால் மட்டும் போதுமா? மானம் வரவேண்டாமா? இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை என்று சொன்னதாக மிக அழகாக வி.பி. சிங் அவர்கள் விளக்கம் சொன்னார்.

அறிவும், மானமும் உள்ள மக்களைப்போல் என்னுடைய மக்களும் ஆகவேண்டும். அதுதான் என்னுடைய பணியின் முக்கியத்துவம் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்.

சமூகப்புரட்சி வரலாறு எப்படி எழுதவேண்டும்?
இந்த நாட்டிலே சமூகப்புரட்சி வரலாறு எழுதப்பட வேண்டுமானால், அதை எப்படி எழுதவேண்டுமென்றால், “பெரியாருக்கு முன் பெரியாருக்குப்பின்’’ என்று வரலாற்றை எழுதவேண்டும். எடுத்துக் காட்ட வேண்டும் என்று அழகாகச் சொன்னார்கள் (பலத்த கைதட்டல்).

தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகம் ஏற்கும். மண்டைச் சுரப்பு என்பது, தானே சுரந்து கொண்டிருக்கும். தந்தை பெரியாரின் சுயசிந்தனை, ஒப்பற்ற சிந்தனை.

இருப்பதை எடுத்தால் சில பேருக்குக் குறைந்துவிடும். ஆனால், அப்படி அல்ல. அது சுரப்பு. தந்தை பெரியார் சிந்தனைகள் சுரப்பிகளைப் போல சுரந்து வந்து கொண்டேயிருப்பதால் இன்றைக்கு உலகம் முழுவதும் தந்தை பெரியாருடைய கருத்துகள் பரவிக்கொண்டு வருகின்றன.

தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப்படுத்தினார். ஆண் எஜமானன் அல்ல. பெண் அடிமை அல்ல. இரண்டு பேருக்கும் சம வாய்ப்பு இரண்டு பேரும் நண்பர்களாக இருக்க வேண்டும். ஆணும், பெண்ணும் சம உரிமை உடையவர்களாக இருக்க வேண்டும் என்று சொன்ன பொழுது, 1929-லே தந்தை பெரியார் அவர்கள் சொல்லுகின்றார். செங்கற்பட்டிலே மாநாடு கூட்டி அறிவித்துச் சொல்லுகின்றார்.

நான் மறுபடியும் உங்களுக்கு நினைவூட்டுகின்றேன். “மனிதநேயம்’’ என்ற அடிப்படையிலேதான் அவருடைய கருத்துகள், செயல்பாடுகள் அமைந்திருந்தன. வேடிக்கையாக ஒன்றைச் சொல்ல வேண்டும். தந்தை பெரியார் அவர்கள் ஒரு கருத்தை பளிச்சென்று சொல்லுவார்.
நாங்கள் எல்லாம் சாதாரணமான இளைஞர்கள். அய்யா அவர்களிடம் விவாதம் பண்ணலாம், மாறுபட்ட கருத்துகளைச் சொல்லும்பொழுதுகூட அமைதியாகக் கேட்பார்கள்.

பல தலைவர்களுக்கு மாறுபட்ட கருத்தைக் கேட்டே பழக்கமில்லை, நம்முடைய நாட்டில். அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி. ஆனால், அதே நேரத்திலே அவர் மாறுபட்ட கருத்தைச் சொல்லும்பொழுது கூட கேட்பார். அய்யா அவர்களுடன் கூட வந்த நண்பர் ஒருவர் கேள்வி கேட்டார். நன்றாகக் கேளுங்கள் என்று அய்யா அவர்கள் சொன்னார்கள்.

அப்படிப்பட்ட பெரியார் ஒரு சூப்பர் மார்க்கெட். அவர் ஒரு பேரங்காடி. அதிலே எல்லா சரக்குகளும் உண்டு. நீங்கள் எதை வாங்க விரும்புகின்றீர்களோ அதை வாங்கலாம். பெரியார் என்ற சூப்பர் மார்க்கெட்டிற்கு வருகின்ற பொழுது நீங்கள் எல்லா சரக்குகளையும் கொள்முதல் செய்தால்தான் முக்கியம் என்று நாங்கள் கருத மாட்டோம். உங்களுக்கு எது தேவையோ அதைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

தஞ்சையையடுத்த வல்லத்தில் தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி தொடங்கப்பட்ட தொழில்நுட்பக் கல்லூரி (பாலிடெக்னிக்) அதற்குப்பின் 1988ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பெரியார் – மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரிகள் உலகம் தழுவிய ஒளியை வீசிக் கொண்டிருக்கின்றன. வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்கள் பல ஒப்பந்தங்களை இந்நிறுவனங்களுடன் செய்து கொண்டு கல்வித் திசையில் பல மைல் கற்களைப் பொறித்து வருகின்றன. வல்லம்  பொறியியல் “கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் நல். இராமச்சந்திரன் அவர்கள் இந்தியாவிலேயே மிகச் சிறந்த பொறியியல் கல்லூரி முதல்வர்கள் இருவருள் ஒருவர் என்பது நம் நிறுவனத்துக்கு எத்தகைய பெருமை!


20.12.2003 சனிக்கிழமை நாம் மறக்க முடியாத நாள். அந்நாளில் இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் வல்லம் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரிக்கு வருகை தந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று அரிய உரையமுதம் பொழிந்ததை மறக்கவே முடியாது. கருத்தும், காட்சியும் குலுங்கிய சிறப்புமிகு விழாவாக மிளிர்ந்தது.

பெரியார் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 6000மாணவிகள், மாணவர்களை ஒரே நேரத்தில் குடியரசுத் தலைவர் கண்டு பூரித்துப் போனார்.
தனி விமானம் மூலம் தஞ்சை வந்தடைந்த குடியரசுத் தலைவர் அவர்களை பெரியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் பெரியார் நூற்றாண்டு தொழில் நுட்பக் கல்லூரி (பாலிடெக்னிக்) முதல்வர் பேராசிரியர் டாக்டர். ச. இராசசேகரன், பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ப. சுப்பிரமணியம் ஆகியோர் வரவேற்று மாலை அணிவித்துச் சிறப்பித்தனர்.

பிற்பகல் 3:10 மணிக்கு வல்லம் கல்லூரி வளாகத்துக்கு வருகை தந்தார்.

பெரியார் அறிவு மய்யத்தின் அருகில் அமைக்கப்பட்டு இருந்த மூலிகைப் பண்ணையை குடியரசுத் தலைவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஒன்றரை ஏக்கர் நிலபரப்பில் 200 அரிய வகை மூலிகைகள் இங்கே பயிரிடப்படுகின்றன.

பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவற்கும் சொந்தக் காலில் பொருளாதார ரீதியாக நிற்பதற்கும், கிராமப் பகுதிகளில் சுய உதவிக்குழுக்களை நிறுவி பல பொருள்களை உற்பத்தி செய்வதற்கும், பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறை பாலியல் கொடுமைகளைத் தடுப்பதற்கும், எதிர்த்துப் போராடுவதற்கும் பவர் (Power) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (Periyar Organisation for women Empowerment and Renaissance) 1998இல் இது உருவாக்கப்பட்டு வெகு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

அதனையடுத்து பொறியியல் கல்லூரி சுற்று வட்டாரத்தில் உள்ள 65 கிராமங்களில் ஆற்றிவரும் அரும் பணிகளை 5 மணித்துளிகள் ஒளிப்பட உதவியுடன் விளக்கினார் கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் நல். இராமச்சந்திரன்.
மேதகு குடியரசுத் தலைவர் அண்மைக் காலமாக நாட்டு மக்களுக்கு எடுத்துக் கூறிவரும் கிராமப்புற பொருளாதாரக் கல்வி மற்றும் சமுதாய மேம்பாடு தொடர்பான பணிகளை (புரா) ‘PURA’ இக்கல்லூரி எந்தெந்த வகைகளில் எல்லாம் மேற்கொண்டு வருகிறது என்று அந்தக் குறுகிய நேரத்திலும் சிறப்பாக விளக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் மேடைக்கு வந்த-வுடன் ஆயிரக்கணக்கான மாணவிகளும், மாணவர்களும், பார்வையாளர் பெருமக்களும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி வரவேற்றனர். எல்லாத் திசைகளிலும் கையசைத்து அவர்களின் அன்பான வரவேற்பை ஏற்றுக் கொண்டார் குடியரசுத் தலைவர்.
நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவிகளின் நடனம் சிறப்பாக நடைபெற்றது. பாடலையும் நடனத்தையும் கைதட்டி ரசித்தார் குடியரசுத் தலைவர்.

பெரியார் கல்வி நிறுவனங்களின் தலைவர் என்ற முறையில் வரவேற்புரையை வழங்கினோம். அதில், மணாளர் என்றார் (பலத்த கரவொலி எழுந்தது), அப்துல்கலாம் அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டபோது, மண்ணையும் விண்ணையும் குழந்தைகளையும் முதியவர்களையும் ஈர்க்கும் தலைவர் என்றார்.
மேதகு குடியரசுத் தலைவர் அவர்கள் கூறிவரும் ‘புரா’ – கிராம வளர்ச்சிக்குத் தொடர்புடையது. இது குறித்து 1944ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் அவர்கள் ஈரோட்டில் கிராம அதிகாரிகள் மாநாட்டில் தெரிவித்த கருத்தினை ஒப்பிட்டு தந்தை பெரியாரின் தொலைநோக்கினை படம் பிடித்துக்காட்டினோம்.
குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு அரசு சார்பில் வருகை தந்த சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ஆர். வைத்தியலிங்கம் அவர்களுக்கும் பொன்னாடை போர்த்திச் சிறப்பு செய்தோம்.

மேதகு குடியரசுத் தலைவர் தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசினார்.

மாணவ – மாணவிகளிடம் நேரடியாகக் கலந்து உறவாடும் வண்ணம் இடை இடையே கேள்விகளை எழுப்பி பதில்களை வரவழைத்தார். தந்தை பெரியாரை முதன் முதலாகத் தாம் சந்தித்த அனுபவத்தை மிக்க மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். பெரியாரைத் தாம் காண நேரிட்டபோது ஒரு ஞானி போல் அவர் தோற்றமளித்தார் என்று குறிப்பிட்டார். பல திருக்குறள்கள் அவரின் உரையில் இடம் பெற்றிருந்தன.

மாணவ- மாணவிகள் மத்தியில் பத்து உறுதி மொழிகளை அறிவித்தார், குடியரசுத் தலைவர் ஒவ்வொரு உறுதிமொழியையும் கூறி அதனைத் திருப்பிச் சொல்லுமாறு மாணவ – மாணவிகளைக் கேட்டுக் கொண்டார். மாணவ – மாணவிகளும் உரத்த குரலில் திருப்பிக் கூறினர். ஒவ்வொரு முறையும் நன்று நன்று என்று பாராட்டினார்.
தம்மிடம் கேள்வி கேட்டு விடை பெற விரும்புபவர்கள் தமது இணைய தளத்தில் கேள்விகளை அனுப்பினால் இரண்டு நாள்களில் அதற்கான விடைகள் கிடைக்கும் என்றும் கூறினார். தனது இணைய தள விவரத்தையும் கூறினார்.

Dr. A.P.J. ABDUL KALAM www. president of india.nic.in

குடியரசுத் தலைவரின் சிறப்பான உரையைச் செவிமடுத்த பார்வையாளர் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி(Standing, Ovation) பாராட்டி மகிழ்ந்தனர்.

கல்லூரித் தாளாளரும் பிரபல நிதி வல்லுநருமான ச. ராஜரத்தினம் இறுதியாக நன்றி கூறினார்
இந்த நிகழ்ச்சிக்கு வந்து பார்வையிட்டுச் சென்ற டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், பின்னாட்களில் ‘புரா’ திட்டம் குறித்து தாம் எழுதிய ‘Target 3 Billion’ என்னும் ஆங்கில நூலில் எழுதியுள்ளார்.

(நினைவுகள் நீளும்)