எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (114)

2023 எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ஜனவரி 1-15, 2023

தமிழர் வழிபாட்டை ஆரிய மயமாக்கிய சதி!
நேயன்

வேத காலத்தில் ஆரியர்களிடையே கடவுள் வழிபாடு இல்லை. அவர்கள் இயற்கை சக்திகளையே கடவுளராக உருவகப்படுத்தி வழிபட்டனர். அக்னி, வாயு, வருணன், மேகம்(இந்திரன்), ருத்திரன் போன்றவற்றை வழிபட்டனர்.
வேதத்தில் வரும் ருத்திரன் சிவன் என்று இட்டுக்கட்டிக் கூறுவது தப்பு. சிவன் வழிபாடு ஆண், பெண் உறுப்பு வழிபாட்டின் பரிணாமம். ருத்திரன் என்பது உருவ வழிபாடு இல்லாத காலத்தில் ஆரியர்கள் வணங்கியது.
தமிழரின் உறுப்பு வழிபாடு ஆரியர் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்பே இருந்த வழிபாடு. தமிழர்கள் உலகின் எப்பகுதிகளில் எல்லாம் வாழ்ந்தார்களோ அங்கெல்லாம் இந்த ஆண், பெண் உறுப்பு வழிபாடு பற்றிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
ஆரியர்கள் உருவ வழிபாட்டிற்கு மிகவும் பின்னாளில்தான் வருகிறார்கள். அதுவும் தமிழர் வணங்கிய நன்றியின் பாற்பட்ட வழிபாடுகளை கடவுளாக இவர்கள் மாற்றிய பின் நிகழ்ந்தது.

முருகன் வழிபாடு தமிழர்களின் நிலத் தலைவர் வழிபாட்டின் கூறு ஆகும். ‘முருகு’ என்றால் அழகு, ‘அன்’ என்பது ஆண்பால் விகுதி. இது தூய தமிழ்ச்சொல். ஆனால் இவ்வழிபாட்டைத் திரித்து புராணக் கதைகள் புனைந்து ‘ஸ்கந்தன்’ என்று மாற்றினர்.
சிவபெருமானின் நெற்றியிலிருந்து வெளிப்பட்ட ஆறு நெருப்புப் பொறிகள் ஆறு குழந்தைகளாக சரவண பொய்கையில் மாறின. அவற்றை கார்த்திகைப் பெண்கள் அறுவர் வளர்த்தனர். சிவனின் அம்சமான அக்குழந்தைகளை பார்வதி ஆசையோடு சேர்த்து அணைத்தபோது ஆறும் ஒட்டிக் கொண்டன. அதுவே ஷண்முகம் என்று கதை உருவாக்கினர். ‘ஷண்’முகம் என்றால் ஆறுமுகம் என்று பொருள். தலைகள் மட்டும் ஆறு; உடல் ஒன்று. ஒட்டிக்கொண்டாலும் ஆறு உடல்கள் இருக்க வேண்டுமல்லவா? இல்லை. உடல் ஒன்றாக ஒட்டிக்கொண்டது என்றால், தலையும் ஒன்றாகியிருக்க வேண்டும் அல்லவா? ஆரியர்களின் மோசடிகள் அனைத்தும் இப்படித்தான்.
நிலத்தலைவர் வழிபாடு என்பது தமிழர்-களின் தொன்மை வழிபாடு. குறிஞ்சி நிலத்தலைவன் முருகன். அவன் மனைவி குறவள்ளி. தெய்வயானை என்பது ஆரியர்கள் உருவாக்கிய புராணம் மூலம் வந்த புனைவு.

குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலை சார்ந்த பகுதியுமாகும். அதனால்தான் முருகன் மலைக்கடவுள் எனப்பட்டார். திருப்பதியில் இருந்தது கூட முருகன் சிலைதான். அதன் முகம் பெரிய நாமத்தால் மறைக்கப்பட்டு பெருமாளாக்கப்பட்டுவிட்டது என்று ஆய்வாளர்கள் கூறுவர்.
தமிழர்களின் நிலத் தலைவரான முருகனை வேதத்தில் வரும் தேவசேனாதிபதி யென்று தொடர்பு படுத்துவது பித்தலாட்ட முயற்சி. புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு முருக வழிபாட்டை ஆய்வு செய்வது தப்பான அணுகுமுறை. புராணங்கள் கற்பனையானவை. அவை வரலாற்று ஆவணங்கள் அல்ல.
பயன்படுவனவற்றை நன்றியுடன் வணங்கும் மரபு தமிழரிடம் இருந்தது. உடல் இன்பத்திற்கும் இனப்பெருக்கத்திற்கும் முதன்மையான ஆண் பெண் உறுப்புகளை இணைத்து வழிபட்டனர்.

இவ்வழிபாட்டை சிவன் வழிபாடாக மாற்ற ஒரு புராணக் கதையைப் புனைந்தனர் ஆரியர்கள். தாருகாவனத்திற்கு சென்ற சிவன் அங்குள்ள ரிஷி பத்தினிகளைக் கண்டு மோகித்து அவர்களை வலுக்கட்டாயமாகப் புணர, அதைக் கண்ட ரிஷிகள் கோபங்கொண்டு, “சிவனின் ஆணுறுப்பு அறுந்து விழக்கடவது’’ என்று சாபம்விட, சிவனின் ஆணுறுப்பு அறுந்து விழ, பதறிய தேவர்கள் பார்வதியின் உதவியை நாட, பார்வதி உடனே ஓடிவந்து தன் பெண் உறுப்பால் அதைத் தாங்கினாள். அதுவே சிவலிங்கம் என்று அக்கதையை உருவாக்கினர். இப்படித்தான் தமிழரின் ஆண் பெண் உறுப்பு வழிபாடு சிவலிங்க வழிபாடாக மாற்றப்பட்டது.
எனவே, வேதத்தில் வரும் ருத்திரனையும், தமிழர் வணங்கிய ஆண்_பெண் உறுப்பு வழிபாட்டையும் தொடர்புபடுத்திக் காட்டுவது மோசடியான முயற்சியாகும்.

வேதத்தில் வரும் ருத்திரன் சைவக் கடவுள் சிவன் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அதுமட்டுமல்ல; சிவனை முதன்மையாகக் கொண்ட சைவமும், திருமாலை முதன்மையாகக் கொண்ட வைணவமும் உருவாக்கப்படுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் கூறப்பட்டது வேதம். வேதகாலத்தில் ஆரியர்களிடையே எந்தவொரு கடவுள் வழிபாடும், உருவ வழிபாடும் இல்லை. இயற்கை சக்திகளையே வழிபட்டனர் என்பது உறுதியான உண்மை.
அப்படியிருக்க, ருத்திரன் என்பதை சிவனோடு முடிச்சுப் போட்டுத் தொடர்புபடுத்துவதும், தேவசேனாதிபதி என்பதை முருகன் என்று திரிப்பதும் மோசடி முயற்சியாகும். காரணம், வேதத்தில் குறிப்பிடப்படும் ருத்திரன் படைத்தலைவனாகவே குறிக்கப்பட்டுள்ளான்.
எனவே, வேதகாலத்தில் இனம் சார்ந்த போராட்டங்கள், ஆதிக்க முனைப்புகள், ஆக்கிரமிப்புகள் ஆரியர்களால் செய்யப்-பட்டபோது, தங்களுக்கு இயற்கை சக்திகள் துணை நிற்க வேண்டும், எதிரிகளை(இந்த மண்ணின் மக்களை) அடக்கி, ஒடுக்கி, அழிக்கவேண்டும் என்று பிரார்த்திக்கும் பாடல்ககளைக் கொண்டவையே வேதங்கள்.

உண்மைகள் இப்படியிருக்க, வேத கால வேண்டுதல்களை, இயற்கை சக்திகளை பிற்காலத்தில் வந்த சிவ, விஷ்ணு கடவுளோடு தொடர்புபடுத்துவது அறியாமை அல்லது வேண்டுமென்றே செய்யும் திரிபு மோசடியாகும்.
அதேபோல, தமிழர்களின் (திராவிடர்களின்) தொன்மையான அடையாளங்களை ஆரிய வாழ்வியலோடு ஒப்பிட்டு, இரட்டைக் கலாச்சாரம் என்று கூறுவது ஒரு மோசமான வரலாற்று மோசடியாகும். தமிழர்கள் தொன்மை வேறு; வந்தேறிகளான ஆரியர்களின் வாழ்வியல் வேறு.
சிந்துவெளி இலச்சினை ஒன்றை எடுத்துக்-கொண்டு அதை கார்த்திகைப் பெண்கள் அறுவர் என்று கதையளக்கிறார்கள். தலையில் கொம்புடைய உருவம் ஒன்று அமர்ந்திருக்க, அதைச் சுற்றிலும் கைகோத்து நிற்கும் ஏழு பெண்கள் சப்தரிஷி நட்சத்திரங்களைக் குறிக்கிறது என்றும், கார்த்திகைப் பெண்கள் ஆறு பேருடன், அருந்ததியைத் தொடர்புபடுத்துவதும் அசல் பித்தலாட்டம்.
அந்த நட்சத்திரங்களை ஏழு ரிஷிகள் என்றுதான் நெடுங்காலமாகக் கூறி வருகிறார்கள். அந்த ஏழு நட்சத்திரத் தொகுப்பிற்கு (ஏறு போன்ற வடிவம்) சப்தரிஷி மண்டலம் என்றுதான் கூறுவர்.

ஆனால் அதை கார்த்திகைப் பெண்களோடு தொடர்புபடுத்துவது கடைந்தெடுத்த மோசடி. ஏழு நட்சத்திரங்களை ஆறு பெண்களோடு தொடர்பு
படுத்துவதே முதலில் தப்பு. ஒரு நட்சத்திரம் கூடுதலாய் இருப்பதைச் சரிகட்ட அருந்ததியை இணைக்கிறார்கள். சப்தரிஷி மண்டலத்தில் அருந்ததியைக் கொண்டு சேர்ப்பது மோசடியிலும் மகாமோசடி.
மேலும் சப்தரிஷிகளின் மனைவியரான கார்த்திகைப் பெண்கள் ஏழு பேர் என்று கூறுவது மிகப்பெரிய பித்தலாட்டம். கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர் மட்டுமே!சிந்துவெளி நாகரிக தொன்மங்கள் அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. ஆனால், கார்த்திகைப் பெண்கள் கட்டுக்-கதைகளெல்லாம் மிகமிகப் பிற்காலத்தில் புனையப்பட்டவை. உண்மை நிலை இப்படி
யிருக்க, இவர்களின் புராணப் பாத்திரங்-களையெல்லாம், சிந்துவெளியில் கிடைத்த தொன்மங்களோடு ஒப்பிடுவது கண்டிக்கத்தக்கது. எனவே, வேதத்தில் தமிழ்க்கடவுள் என்பது மிகப்பெரிய வரலாற்று மோசடி!