ஸ்டெப்பிப் புல்வெளிகளில் மேய்ப்பாளர்களாகவும் போர்வீரர்களாகவும் இருந்தவர்கள். எப்படி முதலில் அய்ரோப்பாவையும் பின்னர் தெற்காசியாவையும் ஆக்கிரமித்தனர் என்பதையும், இந்தியாவின் மிகப் பெரிய மொழிக் குடும்பத்தையும், புதிய மதச் சடங்குகளையும், ஹரப்பா பாரம்பரியங்களும் ஸ்டெப்பி நடைமுறைகளும் விரவிக் கிடக்கும் கலாச்சாரக் கலவையையும் எப்படி இந்தியாவுக்கு அளித்தனர் என்பதையும் பற்றிய கதை இது.
இந்திய – அய்ரோப்பிய மொழிகளைப் பேசிய, தங்களை ஆரியர்கள் என்று கூறிக் கொண்டவர்கள் எப்போது, எப்படி இந்தியத் துணைக்கண்டத்தை அடைந்தனர் என்ற கேள்வியைவிட அதிகமான சூட்டையும் ஓசையையும் எழுப்பிய கேள்வி வேறு எதுவும் இந்திய வரலாற்றில் கிடையாது.
இது விநோதமானது. ஏனெனில், இதையொத்த தீவிரச் சர்ச்சையை, இந்தியாவில் முதன்முதலாகக் குடியேறியவர்கள் எப்போது இங்கு வந்தனர்? திராவிட மொழி பேசியவர்கள் எப்போது இந்தியா வந்து சேர்ந்தனர்? முண்டாரி, காசி, மணிப்புரி மொழி பேசியவர்கள் எப்போது இந்தியாவை வந்தடைந்தனர்?’ போன்ற வேறு எந்தக் கேள்வியும் தோற்றுவிக்கவில்லை. இந்தியாவில் முதலில் குடியேறியவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தனர் என்றோ, முதனிலைத் திராவிட மொழி ஈரானின் ஈல மொழியோடு தொடர்புடையது என்றோ, முண்டாரி, காசி, மணிப்புரி மொழிகளைப் பேசியவர்கள் கிழக்காசியாவிலிருந்து வந்தனர் என்றோ கூறினால் அது யாருடைய கோபத்தையும் தூண்டுவதில்லை இந்தப் பதில்களைக் கேட்பவர்கள் தங்களுடைய தோள்களைக் குலுக்கிவிட்டுத் தங்களுடைய வேலைகளைப் பார்க்கச் சென்றுவிடுவர். பல முறை வேறு இடங்களிலிருந்து பெரும் எண்ணிக்கையில் இடம் பெயர்ந்த மக்களால் நிரப்பப்படாத நாடு இன்று உலகில் எதுவும் கிடையாது என்பதுதான் அதற்குக் காரணம். அய்ரோப்பா குறைந்தபட்சம் இரண்டு முறை பெரும் இடப்பெயர்ச்சியால் புரட்டிப் போடப்பட்டிருக்கிறது. அமெரிக்கக் கண்டத்தில் அய்ரோப்பியர் கால் வைப்பதற்கு முன்பு மூன்று முறை, அது மூன்று பெரிய இடப்பெயர்ச்சிகளைச் சந்தித்துள்ளது. கிழக்காசியா குறைந்தபட்சம் மூன்று இடப்பெயர்ச்சிகளைச் சந்தித்துள்ளது. மத்திய ஆசியாவும் மேற்காசியாவும் சந்தித்துள்ள இடப்பெயர்ச்சிகளுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் கணக்கு வழக்கே கிடையாது.
இது போதாது என்பதுபோல, இந்தியர்களும் பெருமளவுக்கு இங்கிருந்து வெளியேறிப் பல இடங்களில் தங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக கி.பி. முதலாம் நூற்றாண்டில் அது நிறையவே நடந்துள்ளது. இன்றைய வியட்நாம், கம்போடியா, பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா என்று தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஒரு சமயம் இந்தியர்களின் கலாச்சார ஆளுமையின் கீழ் இருந்தது. சீனாகூட ஒரு சமயம் இந்தியாவின் ஆளுமையின் கீழ் இருந்துள்ளது. சமயங்களில் இது படையெடுப்பு மூலம் நிகழ்ந்திருக்கலாம் என்றாலும் பெரும்பாலும் புத்த மதத் துறவிகள் தங்களுடைய மதத்தைப் பரப்பத் தீவிரமாக முயன்றதுதான் அதற்குக் காரணம். அதோடு, வணிகர்கள் தங்களுடைய சொந்த நலனை விருத்தி செய்து கொள்ள மேற்கொண்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கும். இன்று உலகெங்கும் 48.8 கோடி மக்கள் புத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர் என்றாலும் அவர்களில் மிகச் சிறிய சதவிகிதத்தினரே இன்று இந்தியாவில் இருக்கின்றனர். இந்தியா எந்த அளவுக்குத் தன் இயற்கையான எல்லைகளைத் தாண்டித் தன் சிறகை விரித்துள்ளது என்பதையே இது காட்டுகிறது.
அப்படியானால், இந்திய – அய்ரோப்பிய மொழி பேசியவர்களின் வருகை குறித்த கேள்வி மட்டும் ஏன் உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழச் செய்கிறது? இதற்கு பதிலளிப்பது எளிது: இந்தியக் கலாச்சாரம் என்பது ஆரிய, சமஸ்கிருத, அல்லது வேதக் கலாச்சாரத்தை ஒத்தது அல்லது அவற்றை ஒத்தப் பொருள் கொண்டது என்ற, வெளிப்படையாகச் சொல்லப்படாத, ஆனால் அடிநாதமாக இருக்கின்ற அனுமானம்தான் அது. அதனால் இந்திய -அய்ரோப்பிய மொழி பேசியவர்கள் எப்போது இந்தியாவுக்கு வந்தனர் என்று கேட்பது, எப்போது நாம் நம்முடைய கலாச்சாரத்தை இறக்குமதி செய்தோம் என்று கேட்பதற்குச் சமானமானது.
இது இரண்டு விதங்களில் அபத்தமானது முதலாவது, இந்தியக் கலாச்சாரம் என்பது ஆரிய, சமஸ்கிருத அல்லது வேதக் கலாச்சாரத்தை ஒத்ததோ அல்லது அவற்றை ஒத்த பொருள் கொண்டதோ அல்ல. இந்தியக் கலாச்சாரம் என்று இன்று நாம் அறிந்து வைத்துள்ள தனித்துவமான கலாச்சாரத்திற்கு ஆரியக் கலாச்சார நீரோடை முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளது என்றாலும், ஒருக்காலும் அது ஒன்று மட்டுமே அதற்குக் காரணமல்ல. இந்தியக் கலாச்சாரத்தின் உருவாக்கத்தில் வேறு பல நிரோட்டங்களுக்கும் பங்கிருக்கிறது. இரண்டாவது, இந்திய – அய்ரோப்பிய மொழிகள் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் இந்தியாவுக்குள் வந்தன என்று சொல்வதும், ஆரிய, சமஸ்கிருத அல்லது வேதக் கலாச்சாரம் முழுமையாக வளர்ச்சியடைந்த நிலையில் வெளியிடங்களிலிருந்து இங்கு இறக்குமதி செய்யப்பட்டன என்று சொல்வதும் ஒன்றல்ல. இந்திய_ அய்ரோப்பிய மொழிகளை இந்தியாவுக்கு கொண்டு வந்தவர்களும், இப்பகுதிகளில் ஏற்கனவே வெகுகாலமாகக் குடியேறியிருந்தவர்களும் ஒருவரோடு ஒருவர் கலந்துறவாடி, பரஸ்பரம் விட்டுக்கொடுத்து. விஷயங்களை ஒருவரிடமிருந்து மற்றொருவர் சுவீகரித்துக் கொண்டதன் மூலமாக ஆரியக் கலாச்சாரம் உருவாகியிருந்திருப்பதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம்.
நாம் மீண்டும் அக்கேள்விக்கே வரலாம். இந்திய-அய்ரோப்பிய மொழிகளைப் பேசிய, தங்களை ஆரியர்கள் என்று கூறிக் கொண்டவர்கள் வேறு எங்கிருந்தாவது இங்கு வந்தார்களா? அப்படியெனில், அவர்கள் எப்போது இங்கு வந்தனர்?
இந்தியாவிலிருந்து வெளியே இடப்பெயர்ச்சி அண்மைக் காலம்வரைகூட, இந்திய, அய்ரோப்பிய மொழிகளைப் பேசியவர்கள் சமஸ்கிருதத்தின் தொடக்ககால வடிவத்தோடு இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து வந்து அதை இங்கே பரப்பியிருந்ததற்கு பதிலாக, சமஸ்கிருதத்தின் தொடக்ககால வடிவத்தைப் பேசியவர்கள் இந்தியாவிலிருந்து வெளியே இடம் பெயர்ந்து ஏன் இந்திய _ அய்ரோப்பிய மொழிகளை உலகெங்கும் பரப்பியிருக்கக்கூடாது என்ற விவாதத்திற்குச் சிறிதளவேனும் இடமிருந்தது. ஆனால் மரபியல் ஆய்வுகள், குறிப்பாகப் பண்டைய மனிதர்களின் டிஎன்ஏ சோதனைகளின் அடிப்படையில் அமைந்த மரபியல் ஆய்வுகள், அந்த விவாதத்திற்குத் துளிகூட இடமில்லாமல் செய்துவிட்டன. அது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
தற்போதைய இந்திய மக்களில் முக்கால்வாசிப் பேர் ஹிந்தி, குஜராத்தி, பஞ்சாபி, மராத்தி போன்ற இந்திய-அய்ரோப்பிய மொழிகளைப் பேசுகின்றனர். அதேபோல, உலக மக்களில் நாற்பது சதவிகிதத்தினர் ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, போர்ச்சுகீஸ், ஈரானி, ரஷ்யன், ஜெர்மன் போன்ற இந்திய – அய்ரோப்பிய மொழிகளைப் பேசுகின்றனர். இந்தியத் துணைக்கண்டம்தான் இந்திய _ அய்ரோப்பிய மொழிக் குடும்பத்தின் கிழக்கு எல்லையாக இருக்கிறது. இந்தியாவுக்குக் கிழக்கே பெரிய அளவில் இந்திய அய்ரோப்பிய மொழிகளைப் பேசுபவர்கள் எவரும் இல்லை. அப்படியானால் இந்த மொழிக் குடும்பம் எப்படி இந்தியாவின் ஆதிக்க மொழியாக மாறியது என்ற கேள்வி எழுவது இயல்புதான். இதற்கு இரண்டே இரண்டு விடைகள்தான் இருக்க முடியும். ஒன்று, கடந்தகாலத்தில் எப்போதோ அது இந்தியாவுக்குள் வந்திருக்க வேண்டும்; அல்லது அது இந்தியாவிலிருந்து அதன் மேற்குப் புறம் இருக்கும் உலகெங்கும் பரவியிருக்க வேண்டும்.
நாம் இரண்டாவது சாத்தியக்கூறை முதலில் எடுத்துக் கொள்ளலாம். ஏதோ ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருதம் அல்லது முதனிலை சமஸ்கிருத மொழி பேசிய இந்தியர்கள் பெரும் எண்ணிக்கையில் மேற்கிற்கு இடம் பெயர்ந்திருக்க வேண்டும்; அவர்களின் வம்சாவளியினர், ஈரான், மத்திய ஆசியா, மேற்கு ஆசியா, கிழக்கு அய்ரோப்பா, மேற்கு அய்ரோப்பா ஆகிய இடங்களை உள்ளடக்கிய பெரும் பகுதியில் பரவி, இந்திய_-அய்ரோப்பிய மொழிகளை அங்கெல்லாம் பரப்பியிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், இப்பகுதிகளில் பதிவாகியிருக்கும் மரபியல் பதிவுகளில் எவையெல்லாம் உங்கள் கண்களில்படும்? ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி இந்தியாவில் குடியேறியிருந்த முதல் இந்தியர்களின் மரபியல் பதிவுகள் இப்பகுதிகளில் பரவலாகத் தூவப்பட்டிருக்க வேண்டும், இல்லையா? ஆனால் முதன்முதலாக அங்கு இடம் பெயர்ந்தவர்கள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவி, ஹரப்பா நாகரிகத்தைக் கட்டியெழுப்பிய மக்களின் ஒரு பகுதியாக ஆகியிருந்தனர் அப்படியானால், ஹரப்பா நாகரிகம் தோன்றுவதற்கு முன்பு பெரும் எண்ணிக்கையில் மக்கள் இந்தியாவிலிருந்து வெளியேறி, இந்திய அய்ரோப்பிய மொழிகளின் பரவலுக்குக் காரணமாக இருந்திருந்தால், மத்திய ஆசியாவிலிருந்து மேற்கு அய்ரோப்பாவரை அவர்களுடைய மரபியல் கால்தடங்கள் நம் பார்வையில் தென்பட்டிருக்க வேண்டும். அப்பிராந்தியங்களில் அப்படிப்பட்டப் பதிவுகள் பெரிய அளவில் கிடைத்துள்ளனவா? இல்லை, கிடைக்கவில்லை அதற்கு நேர்மாறானதே நடந்துள்ளது. முதல் இந்தியர்களின் வம்சாவளிகளுக்கு நெருங்கிய உறவினர்கள் எவரும் உலகில் வேறு எங்கும் இல்லை என்பதை நாம் முதலாம் அத்தியாயத்தில் பார்த்தோம். அதனால் இந்தியாவிலிருந்து வெளியேறியவர்கள் உலகெங்கும் இந்திய_-அய்ரோப்பிய மொழிகளைப் பரப்பினர் என்பது போகாத ஊருக்கு வழி.
ஆனால் இதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு மட்டும் உள்ளது. அது ஒரு சிறிய நாடோடிக் குழு. முன்பு ஜிப்சிகள் என்று அழைக்கப்பட்ட ரோமா மக்கள்தான் அவர்கள். அவர்கள் பெரும்பாலும் அய்ரோப்பாவிலும் அமெரிக்காவிலும்தான் இருக்கின்றனர். அவர்கள் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பாக, பஞ்சாப், சிந்து, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வடமேற்கு இந்தியப் பகுதியிலிருந்து வெளியேறிய ஒரே இனக் குழுவின் வம்சாவளிகள் என்பதை மரபியல் ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. அதற்கு முன்பே, இந்திய_ அய்ரோப்பிய மொழிகள் அய்ரோப்பாவிலும் பிற பகுதிகளிலும் நன்றாக வேரூன்றியிருந்தன. அவர்கள் மேற்குப் புறமாக நகர்ந்தபோது அவர்கள் முதல் இந்தியர்களின் மரபியல் சுவடுகளைத் தங்களுடன் சுமந்து கொண்டிருந்தனரா? ஆமாம். சுமந்து கொண்டிருந்தனர்.
2011Þ™ Reconstructing the Indian origin and Dispersal of the European Roma: A Maternal Genetic perspective’ ரோமா மக்கள் இரண்டு தனித்துவமான பரம்பரை மூலங்களைக் கொண்டிருக்கின்றனர். 65 சதவிகிதத்திலிருந்து 94 சதவிகிதம் வரையிலான ரோமா மக்களிடத்தில் அய்ரோப்பிய மத்தியக் கிழக்கு ஹாப்லோ குரூப் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு இவ்வாறு கூறுகிறது.
பரம்பரை இருக்கிறது. மீதமுள்ளவர்கள் M ஹாப்லோ குரூப்பைச் சேர்ந்தவர்கள் இந்த M ஹாப்லோ குரூப் கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் மிகச் சாதாரணமாகக் காணப்பட்டாலும், அய்ரோப்பாவில் அரிதாகவே காணப்படுகிறது. M ஹாப்லோ குரூப்புக்குள் இருக்கும். அனைத்து வம்சாவளியினரும் ஆசியாவைச் சேர்ந்தவர்கள். அதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு மட்டும் இருந்தது. இரண்டு போர்ச்சுகீசிய ரோமா மக்களிடமிருந்த கிழக்கு ஆப்பிரிக்க M1a1 ஹாப்லோகுரூப்தான் அது கிடைத்துள்ள முக்கிய ஆசியக் கிளை ஹாப்லோகுரூப்புகள் M5M, M18 மற்றும் M35b ஆகும். இவை அனைத்தும் இந்தியப் பரம்பரையைக் கொண்டிருந்தன.
அதாவது இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து மேற்கு நோக்கி அய்ரோப்பாவரை மக்கள் குழு ஒன்று இடம் பெயர்ந்துள்ளது. அவர்கள் அங்கு தங்களுடைய மரபியல் சுவடுகளை விட்டுச் சென்றிருக்கின்றனர். தெற்காசியாவில் முதலில் குடியேறிய வம்சாவளிகளின் மரபியல் சுவடான M ஹாப்லோ குரூப்தான் அது. அது அய்ரோப்பாவில் அபூர்வமாகவே காணப்பட்டது. ரோமா மக்கள் இந்திய_ அய்ரோப்பிய மொழிகளை அய்ரோப்பாவில் பரப்பியிருக்க முடியாது என்பதாலும், வேறு எந்தத் தெற்காசியப் பரம்பரையின் சுவடுகளும் குறிப்பிடத்தக்க அளவில் அய்ரோப்பாவிலோ அல்லது மத்திய ஆசியாவிலோ இல்லை என்பதாலும், இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் இந்திய- _ அய்ரோப்பிய மொழிகளை அய்ரோப்பாவில் பரப்பியிருப்பார்கள் என்ற வாதம் முற்றிலுமாக நிராகரிக்கப்படுகிறது.
அதனால் இது நம்மை அடுத்த கேள்விக்கு எடுத்துச் செல்கிறது. இந்திய அய்ரோப்பிய மொழிகள், இந்தியத் துணைக்கண்டத்தில் வெளியிலிருந்து இந்தியாவுக்குள் இடம் பெயர்ந்தவர்களால் பரப்பப்பட்டன என்றால், அது எப்போது நிகழ்ந்தது, அவர்கள் எங்கிருந்து வந்தனர்?
ஆரியர்களின் மரபியல் சுவடுகள்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அறிஞர்களையும் இதைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தவர்களையும் சோர்வடையச் செய்து கொண்டிருந்த அக்கேள்விக்கு ஒருவழியாக மரபியல் விடை கண்டுள்ளது, மக்கள் எவ்வாறு இடம் பெயர்ந்தனர், காலப்போக்கில் ஓரிடத்தின் மக்களமைப்பு எப்படி மாறியது போன்றவற்றைத் தீர்மானிக்க உதவும் பண்டைய மனிதர்களின் “டிஎன்ஏ”வை அலசி ஆராயும் புதிய மரபியல் உத்திதான் அதைச் சாத்தியமாக்கியுள்ளது. ஒரே இடத்தில் பல காலகட்டங்களைச் சேர்ந்த “டிஎன்ஏ”வை ஆராய்வதன் மூலமாகவோ, பல இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த “டிஎன்ஏ”வை அலசுவதன் மூலமாகவோ, எது எப்போது மாறியது என்பதை மரபியலாளர்களால் கண்டுபிடிக்க முடியும்.
இந்திய _அய்ரோப்பிய மொழி பேசியவர்கள் இந்தியாவுக்குள் இடம் பெயர்ந்தது பற்றி மேலும் அலசுவதற்கு முன்பாக, இந்தியாவிலிருந்து வெளியேறியவர்கள் தொடர்பாக நாம் விவாதித்துக் கொண்டிருந்தபோது நம்முன் தோன்றிய ஒரு கேள்விக்கு இப்போது விடை காண முயற்சிக்கலாம், இந்திய _ அய்ரோப்பிய மொழிகள் மிகப் பெரிய யுரேசியப் பகுதியில் பரவியுள்ளன என்றால், இந்த நிலப்பரப்பில் அவற்றின் மரபியல் சுவடுகள் நம் பார்வையில் பட்டுள்ளனவா என்பதே அக்கேள்வி. ஆம் என்பதே அதற்கான பதில். R1a என்ற Y குரோமோசோம். ஹாப்லோகுரூப், குறிப்பாக அதன் கிளை ஹாப்லோகுரூப்பான R1a -417 தான் அது. R1a-M 417 இன் பரவல் வரைபடத்தை நீங்கள் உற்று நோக்கினால், அந்த ஹாப்லோகுரூப், ஸ்கேன்டினேவியாவிலிருந்து தெற்காசியாவரை, அதாவது இந்திய_ -அய்ரோப்பிய மொழி பேசுகின்றவர்கள் இருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் பரவியிருந்ததை அது காட்டும்.
R1a-M417 உலகெங்கும் எவ்வாறு பரவியுள்ளது. என்பதை இப்போது பார்க்கலாம். R1a-M417 கி.மு. 3800ஆம். ஆண்டுவாக்கில், R1a-Z282,, சுடய-ஷ்93 ஆகிய இரண்டு கிளைக் குழுக்களாகப் பிரிந்தது. R1a-Z282 அய்ரோப்பாவில் மட்டுமே உள்ளது. R1a-M93 மத்திய ஆசியாவிலும் தெற்காசியாவிலும் காணப்படுகிறது. அதோடு, இந்தியாவிலுள்ள சுடயஷ் பரம்பரையின் கிட்டத்தட்ட மொத்தமும் இதன் கீழ்தான் வருகிறது. இவற்றுக்கு இடையேயான இடைவெளி மிகவும் பெரியது. இது குறித்து 2014ஆம் ஆண்டு “The phylogenetic and Geographic structure of Y-chromosome Haplogroup RIa’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதை முன்னின்று நடத்தியவர் Y குரோமோசோம் குறித்த ஆய்வுகளில் தலைசிறந்து விளங்கும். டாக்டர் பீட்டர் ஏ.அன்டர்ஹில் ஆவார். அவர் அதில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
“நமக்குக் கிடைத்துள்ள 1693 அய்ரோப்பிய R1a-M417 மாதிரிகளில், 96 சதவிகிதத்திற்கும் அதிகமானவை R1a-Z828அய்ச் சேர்ந்தவை. அதேபோல நமக்குக் கிடைத்துள்ள 490 மத்திய மற்றும் தெற்காசிய சுடயஷ் மாதிரிகளில், 98.4 சதவிகிதம். R1a-2 93 அய்ச் சேர்ந்தவை இது முன்பு கூறப்பட்டிருந்த போக்கை ஒட்டியே அமைந்துள்ளது’’.R1a-M417 மற்றும் அதன் கிளையான R1a-Z93 தொடர்பாக நமக்குக் கிடைத்துள்ள சான்றுகளில் பழமையான சான்று உக்ரைனில் கிடைத்துள்ளது. 2017இல் வெளியானThe Genomic History of Southeastern Europe என்ற அறிக்கையின்படி, அது கி.மு. 5000க்கும் கி.மு. 3500க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது. ரஷ்யாவின் சமாரா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அது கி.மு. 2800ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அய்ரோப்பாவின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது கி.மு. 2500ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பரவலாகக் காணப்படும் R1a-Z93, மத்திய ஆசிய ஸ்டெப்பிப் பகுதிகளில் நிறைய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது கி.மு. 2500ஆம் ஆண்டைச் சேர்ந்தது. என்று கணிக்கப்பட்டுள்ளது. மத்திய வெண்கலயுகத்திலிருந்து பிந்தைய வெண்கல யுகம்வரையிலான காலகட்டத்தில் (கி.மு.2000க்கும் கி.மு. 1400க்கும் இடைப்பட்ட காலம்) மத்திய ஆசிய ஸ்டெப்பிப் பகுதிகளில் சுடய-ஷ்93 அறுபத்தெட்டு சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்ததாக ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தியாவின் R1a-Z93 மக்கள் மத்திய ஆசியாவின் ஸ்டெப்பிப் பகுதிகளிலிருந்து வந்திருக்க வேண்டும் எனும் தீர்க்கமான முடிவைத்தான் இவையனைத்தும் தெரிவிக்கின்றன.
ஆனால் R1a-Zவும் அதன் கிளைக் குழுக்களும் இந்தியாவிலிருக்கும் இந்திய – அய்ரோப்பிய மொழி பேசும் மக்களுடன் தொடர்புடையவை என்பது நமக்கு எப்படித் தெரியும்? இதைச் சோதிப்பதற்கு ஓர் எளிய வழி உள்ளது. பொதுவாக இந்திய மக்களிடையே R1a எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, சமஸ்கிருத மொழியின் பாரம்பரியப் பாதுகாவலர்களாக விளங்கும் உயர்ஜாதியினரோடு, குறிப்பாக பிராமணர்களோடு, அதற்குத் தொடர்பு இருக்கிறதா என்பதைப் பார்த்தாலே எல்லாம் தெளிவாகிவிடும். தாழ்ந்த ஜாதியினரைக் காட்டிலும் உயர்ஜாதியினரிடத்தில் R1a மிக அதிக அளவில் இருப்பதைப் பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. பட்டியல் ஜாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரிடம் இருப்பதைப்போல பிராமணர்களிடம் R1a இரண்டு மடங்கு இருக்கிறது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அந்த மரபியல் பதிவுகள் இந்திய – அய்ரோப்பிய மொழிகளைப் பேசும் மக்கள் வசிக்கும் நாடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன. அதோடு, இந்தியாவிலுள்ள இந்திய-அய்ரோப்பிய மொழிகளில் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றான சமஸ்கிருத மொழியின் பாரம்பரியக் காவலர்களிடத்தில் R1a கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது.
ஸ்டெப்பிப் புல்வெளிகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இடப்பெயர்ச்சி
இந்திய – அய்ரோப்பிய மொழிகளைப் பேசியவர்கள் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தது தொடர்பான கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆய்வு 2018 மார்ச் 31 அன்றுதான் வெளியானது. “The Genomic Formation of South and Central Asia” என்பதுதான் அந்த ஆய்வறிக்கையின் தலைப்பு. புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சிய இந்த அறிக்கை, முதன்முறையாகத் தெற்காசியா, கஜகிஸ்தான், கிழக்கு ஈரான் போன்ற பகுதிகளில் கிடைத்த பண்டைய மனிதர்களின் டிஎன்ஏ சோதனை முடிவுகளைப் பயன்படுத்திக் கொண்டது.
கி.மு. 2100க்குப் பிறகு கஜகிஸ்தானின் ஸ்டெப்பிப் பகுதிகளிலிருந்து தெற்கு, நோக்கி ஓர் இடப்பெயர்ச்சி நடைபெற்றது உண்மைதான் என்று அந்த அறிக்கை கூறுகிறது. அவர்கள் முதலில் இன்றைய துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய தென்மத்திய ஆசியப் பகுதிகளுக்குச் சென்றனர்; பின்னர் அவர்கள் கி.மு.2000க்கும் கி.மு.1000க்கும் இடைப்பட்ட ஆயிரம் ஆண்டுகளில் தெற்காசியாவை நோக்கி நகர்ந்தனர்: போகிற வழியில், கி.மு. 2300க்கும். கி.மு.1700க்கும் இடைப்பட்ட காலத்தில், இன்றைய வடக்கு ஆப்கானிஸ்தான், தெற்கு உஸ்பெகிஸ்தான் மற்றும் வடக்கு தஜிகிஸ்தான் பகுதிகளில் பரவியிருந்த ஆக்சஸ் நாகரிகத்தின்மீது அதிகத் தாக்கம் எதையும் விளைவிக்காமல் அதைக் கடந்து மேலும் தெற்கு நோக்கிச் சென்று தெற்காசியாவை அடைந்தனர். அங்கு ஏற்கனவே இருந்த ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த மக்களுடன் இனக்கலப்பில் ஈடுபட்டனர். அதன் விளைவாக, இந்தியாவில் இன்று இருக்கும் இரண்டு முக்கியப் பரம்பரைகளில் ஒன்றை அவர்கள் உருவாக்கினர். அதுதான் வட இந்திய மூதாதையர். மற்றொரு பிரிவினரான தென்னிந்திய மூதாதையர், அதே காலகட்டத்தில், ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் தென்னிந்தியாவிலிருந்த முதல் இந்தியர்களுடன் மேற்கொண்ட இனக்கலப்பால் உருவானவர்கள்.
பண்டைய “டிஎன்ஏ”வில் இடப்பெயர்ச்சி குறித்து இருந்த அறிகுறிகளை வைத்து இந்த அறிக்கை இப்படிப்பட்ட முடிவுகளுக்கு வந்திருந்தது. அதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “கி.மு. 2100க்கு முன்பு ஆக்சஸ் நாகரிகத்தைச் சுற்றியிருந்த பகுதிகளில் இருந்த மக்களிடம் ஸ்டெப்பி மேய்ப்பாளர்களின் பரம்பரைப் பதிவுகள் எதுவும் காணப்படவில்லை. என்று எங்களுடைய ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் கி.மு 2100க்கும் கி.மு 1700க்கும் இடைப்பட்ட காலத்தில், ஆக்சஸ் நாகரிகத்தைச் சுற்றியிருந்த பகுதிகளில் இருந்த மக்களிடம் ஸ்டெப்பி மேய்ப்பாளர்களின் பரம்பரைப் பதிவுகள் காணப்பட்டன.” கி.மு. 2100அய் ஒட்டி ஸ்டெப்பிப் பகுதி மக்கள் ஆக்சஸ் நாகரிகப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.
ஆக்சஸ் நாகரிகப் பகுதிகளிலிருந்தும், கிழக்கு ஈரானைச் சேர்ந்த ஷாகர் – ஏ- ஷுக்தக் பகுதியிலும் கிடைத்த பண்டைய “டிஎன்ஏ”விலிருந்து அந்த ஆய்வு பல வியப்பான முடிவுகளைப் பெற்றுள்ளது. இங்கு கிடைத்த மூன்று பண்டைய டிஎன்ஏ சான்றுகள் கி.மு. 3100க்கும் கி.மு. 2200க்கும் இடைப்பட்டக் காலத்தைச் சேர்ந்தவை என்று கணிக்கப்பட்டுள்ளது. அவற்றின் பரம்பரை தனித்துவமானது. அதே இடத்தில் கிடைத்தப் பிற டிஎன்ஏ மாதிரிகள்போல அல்லாது இவற்றில் ஜாக்ரோஸ் வேளாண்குடியினரின் பரம்பரையைத் தவிர்த்து, 14 முதல் 42 சதவிகிதம் வரை முதல் இந்தியர்களின் பரம்பரை இருந்தது. ஹரப்பா நாகரிகம், ஆக்சஸ் நாகரிகத்துடனும் ஷாகர்_ஏ-_ஷுக்தக் பகுதியுடனும் தொடர்பு வைத்திருந்தது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனால், அந்த மூன்று மனிதர்களும் சமீபத்தில் அங்கு வந்திருந்தவர்கள் என்று அந்த ஆய்வு முடிவு கட்டியது.
அவர்களிடம் துளிகூட ஸ்டெப்பிப் பரம்பரை இருக்கவில்லை. ஸ்டெப்பிப் பகுதியிலிருந்தவர்கள் கி.மு.2100ஆம் ஆண்டுவாக்கில்தான். தெற்கு நோக்கி இடம் பெயரத் தொடங்கினர் என்ற கண்ணோட்டத்தோடு இது ஒத்துப் போறது.
ஆனால், இதைவிட அதிக சுவாரசியமான ஒரு விஷயம் இனிதான் வருகிறது. பாகிஸ்தானிலுள்ள சுவாட் பள்ளத்தாக்கில் கிடைத்த பண்டைய டிஎன்ஏ. தகவல்களும் ஆய்வாளர்களுக்குக் இடைத்தன. அது கி.மு.1200க்கும் கி.பி.1ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, அது ஆக்சஸ் நாகரிகப் பகுதிகளிலிருந்தும், கிழக்கு ஈரானைச் சேர்ந்த ஷாகர்-ஏ-ஷுக்தக் பகுதியிலும் கிடைத்த சான்றுகளுக்கு ஆயிரம் ஆண்டுகள் பிந்தையது. ஆனால் சுவாட் பள்ளத்தாக்கில் கிடைத்த டிஎன்ஏ சான்றுகள், ஆக்சஸ் நாகரிகப் பகுதிகளிலிருந்தும், கிழக்கு ஈரானைச் சேர்ந்த ஷாகர்-ஏ-ஷுக்தக் பகுதியிலும் கிடைத்த அந்த மூன்று “டிஎன்ஏ”வுடன் மரபியல் ரீதியாக ஒத்திருந்தன. அதாவது, இவற்றிலும் முதல் இந்தியர்களின் பரம்பரையும் ஜாக்ரோஸ் மேய்ப்பாளர்களின் பரம்பரையும் இருந்தன. ஆனால் இரண்டுக்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு இருந்தது. இவர்களிடம் அந்த இரண்டையும் தவிர, 22 சதவிகித ஸ்டெப்பிப் பரம்பரையும் இருந்தது. அந்த அறிக்கை இவ்வாறு கூறுகிறது; “தெற்காசிய மக்களிடம் கி.மு. 2000ஆம் ஆண்டுவாக்கில் ஸ்டெப்பிப் பரம்பரையும் சேர்ந்து கொண்டதற்கான நேரடியான சான்றை இது அளிக்கிறது. அக்காலகட்டத்தில், ஸ்டெப்பி மக்கள், தூரன் பகுதி வழியாகத் தெற்கு நோக்கிச் சென்றனர் என்பதற்கான சான்றுகளோடு இது ஒத்துப் போகிறது.”
இன்று அய்ரோப்பாவிலும் ஆசியாவிலும் இந்திய_ அய்ரோப்பிய மொழிகளைப் பேசும் மக்களில் பெரும்பகுதியினர், யம்னயா என்று அழைக்கப்படும் ஸ்டெப்பி மேய்ப்பாளர்களின் பரம்பரையையும் தங்களிடம் கொண்டுள்ளனர் என்று, அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது. யம்னயா மக்கள் முதனிலை இந்திய-_ அய்ரோப்பிய மொழியைப் பேசினர் என்றும், இந்திய_- அய்ரோப்பிய மொழிகளை அவர்கள் அய்ரோப்பாவிலும் ஆசியாவிலும் பரப்பினர் என்றும் நீண்டகாலமாகக் கருதப்பட்டு வந்த யோசனையோடு இது ஒத்துப் போகிறது. கி.மு. 3000ஆம் ஆண்டுவாக்கில் யம்னயா மக்கள் மேற்குப் புறமாக அய்ரோப்பாவுக்கு இடம்பெயரத் தொடங்கியிருந்ததை முந்தைய மரபியல் ஆய்வுகள் பதிவு செய்திருந்தன. ஆனால் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்படும்வரை, ஸ்டெப்பிப் பரம்பரை தெற்காசியா வரை பரவியிருந்ததற்கான பண்டைய டிஎன்ஏ சான்றுகள் எதுவும் கிடைத்திருக்கவில்லை. கி.மு. 2100ஆம் ஆண்டுவாக்கில் பெரிய எண்ணிக்கையில் ஸ்டெப்பி மக்கள் தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தது தொடர்பாகத் தாங்கள் தொகுத்திருந்த ஆவணங்கள், இது தொடர்பாக இதுவரை கைநழுவிப் போயிருந்த சான்றுகள் கிடைக்கக் காரணமாக அமைந்தன என்று இந்த ஆய்வை நடத்தியவர்கள் கூறினர்.
விஷயம் இதோடு முடியவில்லை. இன்றைய இந்திய மக்கட்குழு, வட இந்திய மூதாதையருக்கும் (ஹரப்பர்கள் (முதல் இந்தியர்கள் + ஜாக்ரோஸ் வேளாண்குடியினர்)+ ஸ்டெப்பி மேய்ப்பாளர்கள்), தென்னிந்திய மூதாதையருக்கும் (ஹரப்பர்கள் + முதல் இந்தியர்கள்) இடையே ஏற்பட்ட இனக்கலப்பால் உருவானவர்கள். வட இந்திய மூதாதையரும் தென்னிந்திய மூதாதையரும் இணைந்ததால் உருவானவர்கள், இன்று தெற்காசியாவிலிருக்கும் 140 இனக்குழுக்களுக்குப் பொருந்துகிறதா என்று மரபியலாளர்கள் சோதித்தபோது பத்துக் குழுக்கள் அதில் சரியாகப் பொருந்தவில்லை. ஏனெனில், அவர்களிடத்தில் எதிர்பார்த்திருந்ததைவிட அதிக விகிதத்தில் ஸ்டெப்பிப் பரம்பரை இருந்ததுதான் அதற்குக் காரணம், அவற்றில் இரண்டு குழுக்களிடம்தான் அந்த விகிதம் மிகவும் அதிகமாக இருந்தது. அவர்கள் பாரம்பரியமாகப் பூசாரிகளாக இருந்ததோடு, சமஸ்கிருத மொழிப் படைப்புகளின் காவலர்களாகவும் விளங்கி வந்தனர் இது எதை விளக்குகிறது? ஸ்டெப்பிப் பகுதிகளிலிருந்து தெற்காசியாவுக்கு மேற்கொள்ளப்பட்ட இடப்பெயர்ச்சி, வெவ்வேறு ஸ்டெப்பிப் பரம்பரை விகிதங்களைக் கொண்ட வெவ்வேறு குழுக்களை உருவாக்கியிருப்பதற்கு வாய்ப்பிருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதிக ஸ்டெப்பிப் பரம்பரை விகிதாச்சாரம் கொண்டிருந்தவர்கள், தொடக்ககால வேதக் கலாச்சாரத்தைப் பேணுவதிலும் அதைப் பரப்புவதிலும் முக்கியப் பங்கு வகித்ததாகத் தெரிகிறது. ஒருசில குழுக்கள், தங்களுடைய சமூகத்திற்குள்ளாக மட்டுமே திருமணம் செய்து கொள்ளும் பழக்கத்தைத் தீவிரமாகக் கடைபிடித்து வருவதால்தான், ஸ்டெப்பிப் பரம்பரை விகிதாச்சாரம் அதிகமாக இருக்கும் குழுக்கள் இன்றுகூடத் தொடர்ந்து இருந்து வருகின்றன. ♦