ஆறு. கலைச்செல்வன்
“கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் அய்ம்பது விழுக்காட்டுக்குக் கீழ் தேர்ச்சி பெற்ற பள்ளிக்கூடத்து தலைமை ஆசிரியர்கள் எல்லாம் எழுந்து நில்லுங்க’’ என்று சற்று கடுமையான குரலில் கேட்டுக்கொண்டார் மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் கனகரத்தினம்.
தேர்ச்சி விழுக்காடு குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நடைபெற்ற கூட்டம் அது. மேல் அலுவலர்களின் ஆணைப்படி இக்கூட்டத்தைக் கூட்டியிருந்தார் முதன்மைக் கல்வி அலுவலர்.
அக்கூட்டத்தில் முதலில் அய்ம்பது விழுக் காட்டிற்குக் கீழ் தேர்ச்சி சதவிகிதம் பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை எழச் செய்தார்.
ஒரு சில தலைமை ஆசிரியர்கள் எழுந்து நின்றனர். தலைமை ஆசிரியர் தேவகியும் எழுந்து நின்றார்.
“ஓகோ!’’ இத்தனை பேர் இருக்கீங்களா? என்ன பள்ளிக்கூடம் நடத்துறீங்க? என்ன நிருவாகம் பண்றீங்க? ஏன் ரிசல்ட் கம்மியாச்சு? ஒவ்வொருத்தரா காரணம் சொல்லுங்க” என்று கடுமையான குரலில் கேட்டார் முதன்மைக் கல்வி அலுவலர்.
தலைமை ஆசிரியர்கள் ஆளுக்கொரு காரணத்தைச் சொன்னார்கள். ஆனால் அலுவலர் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
தேவகி முறை வந்தது.
“எங்க பள்ளிக்கூடம் ஒரு சின்ன கிராமத்தில் இருக்கு அய்யா. எல்லாம் ஏழைப் பிள்ளைங்க. படிப்பு வரல’’, என்று தடுமாற்றத்துடன் கூறினார் தேவகி.
முதன்மைக் கல்வி அலுவலர் அவரை முறைத்துப் பார்த்தார்.
“அதுக்காக நீங்க என்ன முயற்சி எடுத்துகிட்டீங்க’’, எனக் கேட்டார்.
“சிறப்பு வகுப்புகள் நடத்தினேன் அய்யா’’, என்று பணிவுடன் கூறினார் தேவகி,
“நீங்க சிறப்பு வகுப்பு நடத்தின லட்சணம்தான் ரிசல்ட்டில் தெரியுதே! எல்லாம் சுத்த வேஸ்ட். இந்த வருஷம் நூறு சதவிகிதம் ரிசல்ட் வரணும். இல்லாட்டி டிரான்ஸ்பர் நிச்சயம். தூரமா இருக்கிற பள்ளிக்கூடத்திற்கு மாற்றிடுவோம். உட்காரலாம்’’, என்று முதன்மைக் கல்வி அலுவலர் கூறியவுடன் மிகுந்த சோர்வுடனும் கலக்கத்துடனும் உட்கார்ந்தார்
தேவகி.
தேவகி ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். தனது சொந்த நகருக்கு அருகிலேயே ஒரு மிகச் சிறிய கிராமத்தில் அந்தப் பள்ளி அமைந்திருந்தது. இதனால் தனது குடும்பத்தைக் கவனிக்கவும் போக்குவரத்துக்கும் அவருக்கு நல்வாய்ப்பாக அமைந்தது. தனது பிள்ளைகளை நகரத்தில் உள்ள தனியார் பள்ளிக்குக் கொண்டு விட்டுவிட்டு பள்ளிக்கு வருவார். மாலை பள்ளி விட்டவுடன் மீண்டும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்வார். காரில்தான் பள்ளிக்கு வந்து செல்வார்.
அந்தப் பள்ளியில் வேலை செய்யும் மற்ற ஆசிரியர்கள் அனைவரும் வெளியூர்க்காரர்கள். அந்தக் கிராமத்தில் அவர்களுக்கு தங்க இடம் கிடைக்காததால் அருகில் உள்ள நகரத்தில் தங்கி பள்ளிக்கு வந்து வேலை பார்த்தனர்.
கடந்த கல்வி ஆண்டு நடைபெற்ற பள்ளி இறுதித் தேர்வில் மாவட்டத்தில் தேர்ச்சி சதவிகிதம் மிகவும் குறைந்து விட்டது. அதற்கான காரணம் கேட்டுதான் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர்களின் கூட்டம் நடத்தினார். தேர்ச்சி சதவிகிதம் குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை ஒரு பிடி பிடித்தார்.
தேவகி மிகவும் பயந்துவிட்டார். இந்தக் கல்வி ஆண்டில் தேர்ச்சி சதவிகிதம் குறைந்தால் மாறுதல் நிச்சயம் என முதன்மைக் கல்வி அலுவலர் எச்சரித்தது அவருக்கு அடிக்கடி நினைவுக்கு வந்தது.
“நூறு சதவிகிதம் தேர்ச்சி வேண்டுமாம்! இதெல்லாம் நடக்கிற காரியமா?’’, என்று எண்ணினார்.
மறுநாள் பள்ளிக்கு வந்து அதுபற்றிச் சிந்தித்தார். திடீரென அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. உடன் அருகில் உள்ள ஊரில் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்த ஆனந்த சாமியாரைப் போய் பார்த்தார்.
“சுவாமிகளே! எங்கள் பள்ளிக்கு நூறு சதவிகிதம் ரிசல்ட் வேணும். அதுக்கு நீங்கதான் உதவி செய்யணும்’’, என்று கேட்டுக்கொண்டார்.
“நான் பள்ளிக்கூடத்தை வந்து பார்க்க வேண்டுமே’’, என்றார் சாமியார்.
“நாளைக்கே வாங்க சாமி’’, என்று அவரை அழைத்தார் தேவகி.
மறுநாள் காரில் சென்று அவரை பள்ளிக்கு அழைத்து வந்தார் தேவகி.
தலைமை ஆசிரியர் அறையில் வந்து உட்கார்ந்தார் சாமியார்.
தேவகி ஆசிரியர்கள் அனைவரையும் வரவழைத்து அவருக்கு வணக்கம் தெரிவிக்கும்படியும் ஆசீர்வாதம் வேண்டும்படியும் கேட்டுக்கொண்டார்.
ஒரு சிலர் அவ்வாறு செய்தனர். ஆனால் பலர் வேண்டா வெறுப்புடன் நின்று கொண்டிருந்தனர். ஓர் இளம்பெண் ஆசிரியை அந்தச் சாமியார் தன்னைப் பார்த்த பார்வையே சரியில்லை என்பதை உணர்ந்தார்.
பிறகு தேவகி அனைத்து ஆசிரியர்களையும் வகுப்புகளுக்குப் போகச் சொல்லிவிட்டு சாமியாரிடம் பேசினார்.
“சாமி, நீங்க சொன்னபடியே உங்களை பள்ளிக்கு அழைத்து வந்து விட்டேன். நீங்கதான் நூறு சதவிகித ரிசல்ட்டுக்கு அருள் செய்யணும்’’, என்று பணிவுடன் கேட்டார்.
ஆனந்த சாமியார் அந்த அறையைக் கூர்ந்து நோக்கினார். தலைமை ஆசிரியர் வடக்கு திசை நோக்கி உட்கார்ந்திருக்கும்படியாக நாற்காலி, மேசை போடப்பட்டிருந்தது.
“வாஸ்துபடி நீங்க வடக்கு திசையைப் பார்த்தபடி உட்காரக் கூடாது. கிழக்கு பார்த்து உட்கார வேண்டும். இதை உடனே செய்ய வேணும்’’, என்றார் சாமியார்.
தேவகி அலுவலக உதவியாளர்களை அழைத்தார். சாமியார் சொன்னபடி செய்ய ஆணையிட்டார்.
சற்று நேரத்தில் தலைமை ஆசிரியர் கிழக்கு நோக்கி உட்காருவதுபோல் சரிசெய்யப்பட்டது.
“வேறு என்ன செய்யணும் சாமி?’’, என்று கேட்டார் தேவகி.
“ஒரு யாகத்துக்கு ஏற்பாடு செய்யுங்க, அதில் எல்லா மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் கலந்து கொள்ள வேணும்’’, என்று சொன்ன சாமியார் தேவகியின் முகத்தைப் பார்த்தார்.
அவர் சொல்லப் போகும் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்தார் சாமியார்.
“கண்டிப்பாகச் செய்கிறேன் சாமி’’, என்று உறுதியளித்தார் தேவகி.
அடுத்த சில நாள்களில் யாகத்திற்கான ஏற்பாடுகளில் ஈடுபடலானார் தலைமை ஆசிரியர் தேவகி. அதை பள்ளி வளாகத்திலேயே செய்யவும் முற்பட்டார். ஆனால், அதற்கு ஊரில் உள்ள சிலரும் ஆசிரியர்களில் சிலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால் எரிச்சலடைந்த தேவகி யாகத்தை அந்த ஊரில் இருந்த கோயிலில் நடத்தினார். ஆனந்தசாமியார் முன்னின்று நடத்தினார். தேவகி கட்டாயப்படுத்தி மாணவ மாணவிகளை அதில் கலந்து கொள்ளச் செய்தார். பக்தியில் ஊறிப்போன ஊர்ப்பெரியவர்கள் சிலரை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தன் இஷ்டம் போல் செயல்படலானார்.
இந்தச் செயல்பாடுகள் எல்லாம் அந்தப் பள்ளியில் கணக்கு ஆசிரியராகப் பணியாற்றி வந்த செல்வநாயகத்திற்கு அறவே பிடிக்கவில்லை. ஒரு நாள் தேவகியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
“அதிகாரிங்க ரிசல்ட் எதிர்பார்க்கிறாங்க என்பது உண்மைதான். ஆனால், அதை அடைய நீங்க செய்ற வழி முறைகள் சரியில்லை’’ என்றார்
“நீங்க என்ன சொல்ல வர்ரீங்க, நான் தலைமை ஆசிரியர். நான் சொல்றதைக் கேளுங்க. அதிகாரிகிங்ககிட்ட தலை குனிஞ்சி நிக்கறது நான்தான். உங்களுக்கென்ன, ஜாலியா இருக்கீங்க’’’ என்று கோபத்துடன் கத்தினார் தேவகி.
செல்வநாயகம் விடவில்லை
“ரிசல்ட் என்பது நம் எல்லோருடைய கூட்டுப் பொறுப்பு. அதிகாரிங்க பாடவாரியாகவும் ரிசல்ட் குறைஞ்சவங்களைக் கூப்பிட்டு காரணம் கேட்கிறாங்க. எங்களையும்தான் டிரான்ஸ்பர் பண்ண நினைப்பாங்க. நாங்க யாரும் சும்மா இல்லை. கஷ்டப்பட்டு வேலை செய்ஞ்சிகிட்டுத்தான் இருக்கோம். கிராமப்பகுதி அதுவும் ஏழை மாணவர்கள் இருந்தாலும் எல்லோரையும் தேர்ச்சி பெற வைக்க வேண்டியது நமது கடமை தான்’’, என்றார்,
“அதுக்காகத்தான் யாகம் செய்தேன். இன்னும் பல திட்டங்களை வைச்சிருக்கேன்’’
“இதுபோன்ற மூடநம்பிக்கைத் திட்டங்களைக் கைவிடுங்க. வேணும்னா காலை, மாலை இரண்டு வேளை சிறப்பு வகுப்புகள் எடுக்கலாம். மாலையில் நடைபெறும் சிறப்பு வகுப்பை இன்னும் ஒரு மணி நேரம் நீடிக்கலாம். நாங்க எல்லோருமே ஒத்துழைக்கத் தயார்’’
“செய்யுங்க… ஆனால் நான் வீட்டுக்குப் போயிடுவேன். எனக்கு வீட்டு வேலை நிறைக்கு இருக்கு. நீங்க இருந்து செய்யுங்க. ஆனாலும் என் திட்டத்தை நான் செயல்படுத்தாமல் விடமாட்டேன்’’
இவ்வாறு சொல்லிவிட்டு மணியடித்ததும் நடையைக் கட்டினார் தேவகி.
மார்ச் மாதம் வந்தது. பொதுத் தேர்வும் நெருங்கி விட்டது. முன்பிருந்த முதன்மைக் கல்வி அலுவலர் மாறுதலில் சென்று விட்டார். அவருக்குப் பதிலாக இராஜா என்ற முதன்மைக் கல்வி அலுவலர் பணியில் சேர்ந்தார். அவரும் நூறு சதவிகிதம் தேர்ச்சி அளிக்க வேண்டுமென பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பினார்.
ஏப்ரலில் முதல் வாரத்தில் தேர்வுகள் தொடங்க இருந்த நிலையில் மார்ச் மாத இறுதியில் மாணவர்களுக்குத் தேர்வு எழுதுவதற்கான நுழைவுச் சீட்டுகள் பள்ளிகளின் இணையத்தில் வெளியிடப்பட்டன. அவற்றைப் பதிவிறக்கம் செய்து. படி எடுத்து தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவிகளுக்குக் கொடுக்க வேண்டும்.
ஒவ்வோர் ஆண்டும் பிள்ளைகளின் பெற்றோர்களையும் வர வழைத்து நுழைவுச் சீட்டை பிள்ளைகளுக்குக் கொடுப்பார்கள். அப்போது பாட ஆசிரியர்கள் அனைவரும் பிள்ளைகளுக்கு பயமில்லாமல் எவ்வாறு தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும் என அறிவுரை கூறுவார்கள். தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவிப்பார்கள்.
ஆனால், இந்த முறை தலைமை ஆசிரியை தேவகி அப்படி ஏதும் செய்யவில்லை. அந்த நிகழ்ச்சிக்காக காத்திருந்த ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.
தேவகி தனது திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தார். அதாவது அந்தக் கிராமத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கோயிலில் ஆனந்த சாமியார் யோசனைப்படி அனைத்து மாணவ மாணவிகளையும் நுழைவுச் சீட்டுடன் அழைத்துச் சென்று சாமிக்குப் பூஜை செய்துவிட்டு பிறகு நுழைவுச் சீட்டை வழங்க வேண்டும் என முடிவு செய்தார். அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார்.
“பசங்களா, நாளைக்கு நாம் கோயிலுக்குப் போறோம் நடந்தே போறோம். காலில் செருப்பு போடக் கூடாது. ஹால் டிக்கெட்டை அங்கே வைச்சி பூசை செய்து உங்க கிட்ட கொடுப்பேன். நீங்க எல்லோரும் பாஸ் ஆயிடுவீங்க’’ என்று பேசினார்.
மாணவ மாணவிகள் பலருக்கு இதில் விருப்பமில்லை என்றாலும் தலைமை ஆசிரியருக்குப் பயந்து கொண்டு ஏதும் பேசாமல் இருந்து விட்டனர். பெற்றோர்களும் பயந்தனர், ஆனாலும் தாங்களும் பிள்ளைகளோடு வருவோம் என்றனர்.
ஆசிரியர் செல்வநாயகம் இந்தச் செயலைக் கடுமையாக எதிர்த்தார். பெற்றோர்களிடம் எடுத்துச் சொன்னார். மற்ற ஆசிரியர்களையும் இந்தச் செயலுக்குத் துணைபோகக் கூடாது என வலியுறுத்தினார்.
ஆனால், எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத தேவகி, தேர்வு எழுதவுள்ள மாணவ மாணவிகளை காலில் செருப்புப் போடாமல் கோயிலுக்கு திடீரென ஒரு நாள் அழைத்துச் சென்றார்.
சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்ற பின் அவர்கள் எதிரே ஒரு ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து முதன்மைக் கல்வி அலுவலர் இராஜா கீழே இறங்கினார்.
“பள்ளிச் சீருடையில் இவர்களை எங்கே அழைச்சிக்கிட்டுப் போறீங்க’’ என்று தேவகியிடம் கடுமையான குரலில் கேட்டார் இராஜா.
“கோயிலுக்குப் போறோம். ஹால் டிக்கெட்டுகளை வைச்சி பூசை செய்ய’’, என்று தட்டுத் தடுமாறிப் பேசினார் தேவகி.
“யாரைக் கேட்டு இப்படிச் செய்யறீங்க. பள்ளி வேலை நாளில் இந்த வெயிலில் பிள்ளைகளை அழைத்துச் செல்ல யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தது?’’ என்று கோபத்துடன் கேட்ட இராஜா எல்லோரையும் பார்த்து மீண்டும் பள்ளிக்குப் போகச் சொன்னார்.
உடனே அனைவரும் விரைந்து சென்று பள்ளியை அடைந்தனர்.
அலுவலர் இராஜா தேவகியைப் பார்த்து,
“ஏன் இப்படி தேவையில்லாத வேலையெல்லாம் செய்யறீங்க’’? என்று கேட்டார்.
“நூறு சதவிகிதம் ரிசல்ட் வாங்கத்தான் அய்யா. இல்லாட்டி டிரான்ஸ்பர் வரும்னு சொன்னாங்க. அதனால்தான்’’, எனத் தயங்கியபடியே கூறினார் தேவகி.
“பள்ளிக் கல்வியில் இப்படிப்பட்ட மூடப்பழக்கவழக்கங்களுக்கெல்லாம் இடம் இல்லை’’’ என்று சொல்லிக்கொண்டே சுவரில் மாட்டப்பட்டிருந்த படங்களைப் பார்த்தார். அங்கு பெரியார் அம்பேத்கர் படங்கள் மட்டும் துணியால் மறைக்கப்பட்டிருந்தன.
அதைப் பார்த்த அலுவலர் இராஜா கடும் சினம் கொண்டார்.
“ஏன் அந்த இரண்டு படங்களையும் மறைச்சி வைச்சிருக்கீங்க? இது பற்றி ஏற்கெனவே எனக்குப் புகார் வந்திருக்கு’’ என்றார்.
“அதுவந்து. . . . . . . . . . . சுவருக்கு வெள்ளையடிக்கணும்; போட்டோவில் சுண்ணாம்பு படுமே என்பதால் தான் மறைச்சி வைச்சிருக்கேன் அய்யா’’, என்று குழறினார் தேவகி
ஆனால், உண்மையான காரணத்தை அலுவலர் அறிவார்.
“பொய்யெல்லாம் சொல்ல வேண்டாம். இந்த சமூக விஞ்ஞானிகளை மறைச்ச காரணத்திற்காகவே உங்கள் மீது நான் நடவடிக்கை எடுக்கலாம். நூறு சதவிகிதம் ரிசல்ட் மட்டும் முக்கியமில்லை. பிள்ளைகளிடத்தில் நல்ல பண்பாட்டை வளர்க்கணும். அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்’’.
கடவுளுக்கு வேண்டினால் தேர்ச்சி பெறலாம் என்றால் ஆசிரியர் எதற்கு? கடவுள் நம்பிக்கை தனிநபர் விருப்பம். அதைவிட்டோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். பள்ளி பொது இடம். இங்கு மதம், மத நம்பிக்கைகளுக்கு இடமில்லை.
இவ்வாறு அலுவலர் இராஜா கூறிக்கொண்டிருந்தபோது எல்லா ஆசிரியர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். இந்த அலுவலர் எங்கே தனக்கு மாறுதல் உத்தரவு வழங்கி விடுவாரோ எனத் தேவகி பயந்தார்.
“நூறு விழுக்காடு தேர்ச்சி பெற நான் ஒரு யோசனை சொல்றேன். செய்வீங்களா’’ என்று தேவகியிடமும் மற்ற ஆசிரியர்களிடமும் கேட்டார்.
“சொல்லுங்க அய்யா என்றனர் அனைவரும். .செல்வநாயகம் குரல் சற்று ஓங்கியே ஒலித்தது.’’
“நாள்தோறும் காலை மாலை சிறப்பு வகுப்புகள் நடத்துங்கள். படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனியே சிறப்பு வகுப்புகள் நடத்துங்கள். வாரா வாரம் தேர்வு நடத்துங்கள். மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுங்கள். மாணவர்களுக்கு ஊக்கம் தரும் கருத்துகளை எடுத்துச் சொல்லுங்கள். காலை பேரவைக் கூட்டத்தை அதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கே இறைவணக்கம் என எழுதி வைத்துள்ளீர்கள். இது பஜனை மடம் இல்லை, பள்ளிக்கூடம். காலை, பேரவைக் கூட்டம் என்று சொல்ல வேண்டும், வகுப்பறையிலும் ஊக்கம்தரும் கருத்துகளை எடுத்துக் கூறுங்கள். பிள்ளைகளுக்கு நல்ல பண்புகள் வளரும். நல்ல பண்புகள் வளர்ந்தால் படிப்பில் நாட்டம் செல்லும். மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்ற உண்மையைப் புரிய வையுங்கள். படித்தால்தான் மதிப்பெண் பெற முடியும், பூஜை, படையல், வேண்டுதலால் தேர்ச்சி பெறலாம் என்ற தப்பான நம்பிக்கையை மாணவர்களுக்கு ஊட்டக் கூடாது. பிறகு நூறு சதவிகித தேர்ச்சி நிச்சயம் கிடைக்கும்’’,
அலுவலர் இராஜாவின் மென்மையான அறிவுரைகளால் நிம்மதியடைந்தார் தேவகி. அவர் கூறியதைக் கேட்டு, தலையசைத்து தனது இசைவினைத் தெரிவித்தார்.
அதே நேரம் ஆசிரியர் செல்வநாயகம் மேசையின் மேல் ஏறி இரு தலைவர்களின் படங்களை மூடியிருந்த துணியை அகற்றினார். ♦