– முனைவர் வா. நேரு
‘தாய்’ என்னும் நாவல் மூலமாக உலகம் முழுவதும் அறியப்பட்ட எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி ஆவார். அவரின் இயற்பெயர் அலெக்சி மாக்சிகோவிச் பெசுகோவ். இவர் மார்ச் 16,1868இல் பிறந்தவர். மார்ச் 16 மிக எளிதாக நம் நினைவில் நிற்கும் நாள். ஆம், அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாள் என்பதால் நம் நினைவில் நிற்கும் நாள்.அந்த நாள் மாக்சிம் கார்க்கியின் பிறந்த நாள். மாக்சிம் கார்க்கி அவர்களின் நினைவு நாள் ஜூன் 18, 1936 ஆகும்.
அநீதி கண்டு உள்ளத்தால் வெகுண்டு எழும் படைப்பாளன், தன் கோபத்தை, உணர்ச்சியை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு படைப்பாகக் கொடுக்கின்றான். இந்த நிலைமை மாறாதோ என நினைக்கும் மக்களுக்கு, இல்லை மாறும், இந்த நிலையை மாற்ற முடியும் என்னும் நம்பிக்கையை ஒரு படைப்பாளன் அளிக்கின்றான் தன் படைப்புகளின் மூலம். அப்படி ஜார் மன்னனின் கொடுங்கோன்மையால் துவண்டு, நம்பிக்கை அற்றுக்கிடந்த ரசிய மக்களின் மனதில் மிகப்பெரிய நம்பிக்கையை ஊட்டிய பேனாவுக்கு சொந்தக்காரர் மாக்சிம் கார்க்கி.
எளிய மனிதர்களின் வேதனையை, பசியை, பட்டினியை செயற்கையாக உணர்ந்து எழுதும் எழுத்துகளை விட எளிய மனிதர்களில் ஒருவனாக இருந்து அந்தப் பட்டினியை, பசியை, வேதனையை அனுபவித்து வாழும் ஒருவனால் எழுதப்படும் எழுத்துகள் என்பது வலிமை மிக்கது. வாசிப்பவனை தன் வசப்படுத்தும் வல்லமை மிக்கது.அப்படிப் படைப்புகளைக் கொடுத்தவர் மாக்சிம் கார்க்கி.
மாக்சிம் கார்க்கியின் சிறு வயதுக்காலம் மிகக் கொடுமையானது. படிப்பவர்களின் கண்களில் நீரை வரவைக்கும் அவர் சிறுவயதில் பட்ட துன்பங்கள். மாக்சிம் கார்க்கி பிறந்த சில வருடங்களிலேயே அவர் தந்தை இறந்து விடுகிறார்.தாய் இன்னொருவரைத் திருமணம் செய்து கொண்டு சென்று விட, முரடனான தனது தாத்தாவிடம் வளரும் மாக்சிம் கார்க்கி அடியும் உதையும் பட்டு அவலமான வாழ்க்கையை வாழ்கின்றார். வாழ்வதற்காக பல நூறு வேலைகளைச்செய்கின்றார் கார்க்கி. அவரின் சிறு வயதில் அவருக்கு இருந்த ஒரே ஆறுதல் கதை சொல்லும் அவரின் பாட்டி மட்டுமே… காட்டில் சென்று பறவைகளைப் பிடித்து அதைத் தன் பாட்டியிடம் கொடுக்க, பாட்டி அந்தப் பறவையை விற்று வரும் பணத்தில் பசியாறும் கார்க்கி, தெருத்தெருவாய் குப்பைகளைப் பொறுக்கி விற்கும் கார்க்கி, குப்பைகளைப் பொறுக்கி விற்றுவிட்டு அதற்குப் பின் குளித்துவிட்டு பள்ளிக்கூடம் போனாலும் சக மாணவர்களால் குப்பை நாற்றம் அடிக்கிறது என்று ஒதுக்கப்பட்ட கார்க்கி, படிக்கும் வாய்ப்பு மிகக் குறுகிய காலத்தில் பறி போக வீடு வீடாகப் போய் வீட்டு வேலை செய்த கார்க்கி,கப்பலில் வேலைக்குப் போய், பயணிகள் சாப்பிடும் தட்டுகளைக் கழுவி வைக்கும் கார்க்கி என எழுத்துலகத்திற்கு வரும் முன் எத்தனை, எத்தனை வேலைகள்,அவலங்கள்
மாக்சிம் கார்க்கியின் வாழ்க்கையில்…
‘மாக்சிம் கார்க்கி வாழ்க்கைக்கதை’ என்னும் புத்தகத்தை எழுதிய எம்.ஏ.பழனியப்பன் அவர்கள் தனது புத்தகத்தில், புத்தகத்திற்காகவும்,வாசிப்பிற்காகவும் மாக்சிம் கார்க்கி பட்ட பாட்டை விரிவாகத் தன் புத்தகத்தில் குறிப்பிடுகின்றார்.கப்பலில் வேலை செய்யும் போது இரண்டு திருடர்கள் பிடிபடுகிறார்கள்; ”உணர்விழக்கும் வரையில் திருடர்கள் அடிக்கப்பட்டு இருக்கின்றனர். அடுத்த துறைமுகத்தில் அவர்களைப் போலீசாரிடம் ஒப்படைத்தபோது, அவர்களால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை.
ஜனங்கள் உண்மையில் நல்லவர்களா? கெட்டவர்களா? பணிவானர்களா? அச்சுறுத்தக்கூடியவர்களா? என்று ஆச்சரியப்படத்தக்க வேதனை அளிக்கும் இத்தகைய பல நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. ஜனங்கள் ஏன் இப்படிக் கொடூரமாக நடந்து கொள்கிறார்கள்? என்று எனக்குள் நானே (மாக்சிம் கார்க்கி) கேட்டுக்கொண்டேன். இதைப் பற்றி நான் சமையல்காரனிடம் கேட்ட பொழுது அவன் என்ன கூறினான் தெரியுமா?
“அதைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? உனக்கென்ன மனிதாபிமானம் அளவு கடந்து இருக்கின்றதா? ஜனங்கள், ஜனங்கள் தான்! ஒருவன் சாமர்த்தியசாலி; மற்றவன் முட்டாள், மூளையைக் குழப்பிக் கொள்வதை நிறுத்திவிட்டு, புத்தகங்களைப் படி! உன் கேள்வி சரியானதாக இருந்தால், அதற்குப் பதில் புத்தகத்தில் இருக்கும் “ என்று கூறினான் அவன், அவன் கூறியது என் சிந்தனையைக் கிளறி விட்டது’’. மனிதர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள புத்தகங்களைப் படி என்று ஒருவன் சொன்னதால் புத்தகங்களைத் தேடிப்படிக்க ஆரம்பிக்கின்றார் கார்க்கி.
புத்தகங்களைத் தேடி அலைகின்றார். ஒரு வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்யும் வேலைக்காரனாய் (13 வயது) கார்க்கி இருக்கின்றார். ஒரு தையல்காரரின் மனைவி நல்ல புத்தகங்களை கார்க்கிக்கு கொடுத்துப் படிக்கச்சொல்கின்றார். ஆனால் அதனைப் படிக்க இவர் வேலைக்காரனாய் இருக்கும் வீட்டு எஜமானி அனுமதி மறுக்கிறாள். வீட்டு வேலைகளை எல்லாம் முடித்து விட்டு இரவில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கின்றார். மெழுகுவர்த்தி செலவு ஆகிறது என்று எஜமானியம்மாள் திட்டுகிறாள். படிக்கக்கூடாது என்பதற்காக மெழுகுவர்த்தியை குச்சியால் அளந்து வைக்கிறாள். அதனையும் தாண்டி புத்தகத்தைப் படிக்கின்றார்.
புத்தகம் படிப்பதற்காக கார்க்கி பட்ட இன்னல்களைப் பார்க்கிறபோது, அந்த மாபெரும் எழுத்தாளன் இளமையில் பட்ட துன்பங்களே பின்னாளில் அவரின் மனிதாபிமானம் மிக்க எழுத்துக்களாய் வந்தது என்பது புரிகின்றது. வேறு ஒரு சீமாட்டி நல்ல புத்தகங்களைக் கொடுக்கின்றாள். அதனை வாங்கிப் படிக்கின்றார். புத்தகத்திற்கும், சாப்பாட்டிற்காக உழைத்து விட்டு நேரம் கிடைக்குமா. கொஞ்சம் படிக்க என அவர் அலைந்த அலைச்சலையும் இன்றைய தலைமுறைக்கு கொஞ்சம் சொல்ல வேண்டும்.
வீடு முழுக்க புத்தகங்களால் நிறைத்திருக்கிறார் ஒரு நண்பர். அவரின் வாரிசுகள் அந்தப் புத்தகத்தின் பக்கமே செல்ல மறுக்கின்றன, நொந்து போகும் அவரைப் போன்றவர்களின் பிள்ளைகள் மாக்சிம் கார்க்கி புத்த்கம் படிப்பதற்காக பட்ட பாட்டை படிக்க வேண்டும். கையில் கிடைக்கும் அறிவுப் புதையல்களை அலட்சியப் படுத்துகிறோமே என்னும் உணர்வு வரும்.
கார்க்கி சொல்கின்றார். “ நான் தொடர்ந்து பல புத்தகங்களைப் படித்து வந்தேன். அவற்றின் மூலம் மனித வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை நான் அறிந்து கொண்டேன். பல தீமைகளிலிருந்து புத்தகங்கள் என்னைக் காத்தன என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்’’
“நான் புத்தகங்களைத் தேடி அலைந்தேன். கிடைத்த புத்தகங்களில் உள்ள விஷயத்தைத் தொழிலாளர்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டு அப்புத்தகங்களை அவர்களுக்குப் படித்துக்காட்டினேன். இப்படிப் படித்துக் காட்டிய மாலை நேரங்கள் என் வாழ்வில் மறக்க முடியாதவை. நான் வாசக சாலையில் அங்கத்தினராக இல்லையாதலால் புத்தகங்கள் சேகரிப்பது எனக்குச் சிரமமாக இருந்தது. பிச்சைக்காரனைப் போல் எல்லோரிடமும் கெஞ்சி நான் புத்தகங்களை வாங்கினேன். “ என்று மாக்சிம் கார்க்கி குறிப்பிடுவதை எல்லாம் இந்தப் புத்தகத்தில் பழனியப்பன் குறிப்பிட்டிருக்கின்றார்.
பணக்காரர் வீட்டில் பிறந்தவர் என்றாலும் கையில் காசில்லாமல் காசிக்கு சென்ற அனுபவம்தான் தந்தை பெரியாரின் வாழ்க்கையில் திருப்புமுனையானது என்பது நாம் அறிந்தது. பக்தியின் பேரால் நடக்கும் ஏமாற்றை,மோசடியை, பகல் கொள்ளைகளை நேரில் பார்த்த அனுபவம்தான் தந்தை பெரியாரின் பின்னாளைய உரைகளுக்கு எல்லாம் அடிப்படையாக அமைந்தது எனலாம்.அப்படி பசியை நேரடியாக அறிந்தவர், உணர்ந்தவர், அதன் வேதனையால் துடித்தவர் மாக்சிம் கார்க்கி. அதனால்தான் பசி இல்லாத உலகம் நோக்கிய சிந்தனைக்கு அடிப்படையாக அவர் எழுத்து அமைந்தது.
எழுத்தாளர்களை எல்லாம் கவர்ந்தவர் எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி. நூற்றாண்டு நாயகர் டாக்டர் கலைஞர் அவர்கள் தன் எழுத்துலகப் பயணம் பற்றிக் கூறுகிறபோது “என் 15ஆவது வயதில் ‘மாணவ நேசன்; என்னும் மாதம் இருமுறைக் கையெழுத்து ஏடு நடத்தினேன். பாரதிதாசன், பெரியார், சிங்காரவேலர், கைவல்யம், அண்ணா முதலியோரின் எழுத்துகள் என் எழுத்தாற்றலுக்கு உரமாயின. உலக எழுத்தாளர்களில் கார்க்கி என்னைக் கவர்ந்தார். இந்திய எழுத்தாளர்களில் காண்டேகர் என்னைக் கவர்ந்தார்…’’ என்று குறிப்பிடுகிறார்.
அதுமட்டுமல்ல, மாக்சிம் கார்க்கி அவர்களின் தாய் நாவலை தமிழில் கவிதை நடையில் மொழி பெயர்த்துக் கொடுத்துள்ளார் டாக்டர் கலைஞர் அவர்கள். எப்படித் திருக்குறளை, சங்க இலக்கியத்தை, தொல்காப்பியத்தை எளிய முறையில் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் உரைகளைக் கொடுத்தாரோ, அப்படி வேற்று மொழி ‘தாய்’ நாவலை படிக்கும் எவரும் புரிந்து கொள்ளும் வழியில் எளிய நடையில் அந்த நாவலின் உயர்வான கருத்தை டாக்டர் கலைஞர் அவர்கள் கொடுத்துள்ளார்.
பேரறிஞர் அண்ணா, திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி போன்றவர்கள் எல்லாம் காண்டேகர் நாவல்களின் மேல் பெருவிருப்பம் கொண்டவர்கள் என்பதை நாம் அறிவோம்.இந்திய அளவில் காண்டேகர், உலக எழுத்தாளர்களில் என்னைக் கவர்ந்தவர் கார்க்கி என்று கலைஞர் குறிப்பிடுகிறார். நம் தலைவர்களைக் கவர்ந்த எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களின் எழுத்துகள் பற்றியும் நிகழ்காலத் தலைமுறைகளுக்கு சொல்லி வைப்போம். ♦