பெண்ணால் முடியும் – வன உயிரின புகைப்படக் கலைஞர்

2023 பெண்ணால் முடியும் ஜூன் 16-30,2023

திவ்ய பாரதி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள மலையபாளையத்தை சேர்ந்தவர் “வன உயிரின போட்டோகிராபர்’’ திவ்ய பாரதி. இவரின் அப்பா ஒரு தொழிலதிபர், அம்மா இல்ல நிருவாகியாவார். அண்மையில்தான் இவருக்குத் திருமணமாகியுள்ளது. கணவர் தொழில்(முனைவர்) அதிபர், ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர்.

சிறு வயது முதலே ஒளிப்படங்கள் (Photos) எடுப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இவர் குடும்பத்தோடு அடிக்கடி சுற்றுலா செல்வது வழக்கம். அருகில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதிகளுக்குள் பலமுறை போகும் வாய்ப்பு கிடைத்தது. இவர் ஊருக்கு அருகிலேயே சத்தியமங்கலம் வனப்பகுதி இருந்ததால் பல முறை அங்கு சென்றுள்ளார். சிறு வயதிலிருந்தே வனவிலங்குகளைப் பார்க்கும் வாய்ப்பு அதிகமாகக் கிடைத்தது. ‘நாம் பார்க்கும் அரிய காட்சிகளெல்லாம் நாளடைவில் நம் நினைவிலிருந்து அகன்றுவிடுமே, இவற்றை அப்படியே ஆவணமாக்கினால் என்ன?’ என்ற எண்ணம் அடிக்கடி இவருக்குத் தோன்றியுள்ளது. இவர் பி.ஏ. முதலாமாண்டு படித்தபோது அந்த ஆர்வம் மேலும் அதிகமாகியுள்ளது. இவர் பறவைகளைக் கூர்ந்து கவனிப்பார், இவரது வீட்டின் அருகே இருக்கும் பறவைகளுக்கும், காட்டில் இருக்கும் பறவைகளுக்குமிடையே நிறைய வேறுபாடுகள் இருப்பதைக் கவனித்துள்ளார். இவற்றையெல்லாம் பதிவு செய்ய வேண்டும் என்ற உந்துதல் அதிகரித்தது ‘ஃபீல்ட் கைட்’ மூலம் நிறைய செய்திகளைச் சேகரித்துள்ளார்.

ஆரம்பத்தில் சிறிய வகை கேமராவைத்தான் பயன்படுத்தியுள்ளார். தூரத்தில் இருப்பவற்றைத் துல்லியமாக அக்கேமராவில் படம் பிடிக்க முடியாது. மேலும், அருகிலுள்ளவையும் தெளிவான படமாகத் தெரியாது. இவரின் அப்பா இவர் விரும்பிய விலை உயர்ந்த கேமராவை (vsmpm drbrm F Mark 11) வாங்கிக்கொடுத்துள்ளார். தற்போது அதைத் தரம் உயர்த்தி, வன உயிரின போட்டோகிராபிக்காக EOS 5D Mark 111 பயன்படுத்துகின்றார்.

திவ்யபாரதியும் அவரின் அப்பாவும் திம்பம் வனப்பகுதியில் பயணம் செய்தபோது, ஒரு பறவை வித்தியாசமான தோற்றத்தோடு இருந்தது. அது ‘Red-whis bulbul’ஆக இருக்கும் என நினைத்து அந்த ஒளிப்படத்தை இணையத்தில் பகிர்ந்தார். இவர் நினைத்தது சரிதான் என நண்பர்கள் உறுதி செய்தனர். அதுதான் இந்தியாவிலேயே அப்பறவை பற்றிய முதல் ஒளிப்படமாக இருக்கும் எனச் சொன்னார்கள்.

வனப்பகுதிக்குள் பெரிய கேமரா, ஸ்டாண்ட், லென்ஸ் உள்ளிட்டவற்றைச் சுமந்து செல்வதில் பெண் என்ற முறையில் சிக்கல்கள் இவருக்கு இருப்பது உண்மைதான். வனவிலங்குகளிடமிருந்து பலமுறை தப்பித்துள்ளார். பந்திப்பூரில் ‘பிரின்ஸ்’ என்ற புலியை ஒளிப்படம் எடுக்க 3 ஆண்டுகள் முயன்று அப்புலியை ஒளிப்படம் எடுத்துள்ளார்.

2017- 2018 ஆண்டில் ஈரோட்டில் தனியார் நகைக்கடை நிறுவத்தினர் இவருக்கு 2020இல் வெள்ளாளர் கல்லூரியில் விருது கொடுத்து சிறப்பித்துள்ளார்கள். வன உயிரினங்கள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இவரின் குறிக்கோளாக உள்ளது. வெல்க அவர்தம் குறிக்கோள்! ♦