சிறப்புக் கட்டுரை – செங்கோல் வாங்கலியோ செங்கோல்!

2023 கட்டுரைகள் மற்றவர்கள் ஜூன் 16-30,2023

சமா.இளவரசன்

“‘இறையாண்மை’ மிக்க, ‘சமயச் சார்பற்ற’, ‘சோசலிச’, ‘ஜனநாயக’க் ‘குடியரசு’ “நாட்டின் நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் இந்தத் தத்துவங்கள் அனைத்துக்கும் மாறாகவும், இந்திய நாட்டினைச் செலுத்தும் அரசியல் சட்டத்தைக் கொஞ்சமும் மதிக்காமலும் என்னென்ன ஆபாசக் கூத்துகள் அரங்கேற வேண்டுமோ, அனைத்தும் அரங்கேற்றி நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.

’யாருக்கும் வெட்கமில்லை’ என்று சொல்ல முடியாது. வெட்கப்பட்டோரெல்லாம் விலகி நிற்க, கோபம் கொண்டோரெல்லாம் குரல் எழுப்ப, இவற்றைக் கண்டுகொள்ளாமல் கூச்சநாச்சமின்றி நடந்த ஒரு விளம்பரக் காட்சியின் பெரும் பொருட்செலவிலான படப்பிடிப்பு அது. ஜனநாயக நாட்டின் பேரரசராகத் தன்னைக் கருதிக் கொண்டு இந்தியாவின் பிரதமர் நரேந்திர தாமோதர தாஸ் நடத்திக் கொண்ட பொம்மைப் பட்டாபிஷேகம். எத்தனை அதிகார வரம்பு மீறல்! எவ்வளவு ஆடம்பரம்! இவ்வளவு பெரிய நாட்டின் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு அல்லவா? அப்படித்தான் இருக்கும் என்றார்கள்.

ஆனால், இந்தியா என்ற குடியரசு நாட்டின் தலைவருக்கு, நாட்டின் முப்படைத் தலைவருக்கு, நாடாளுமன்றத்தின் முதல் அங்கத்துக்கு, அந்த நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பில்லை. காரணம் என்னவாக இருக்கும்? அவர் கணவரை இழந்த கைம்பெண் என்பதால் அமங்கலம் என்று கருதப்பட்டிருக்குமா? இந்துமத, ஆரிய, சனாதனத்தின் படி, கீழ்மக்களாகக் கருதப்படும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர் என்பது தான் காரணமா? குடியரசுத் தலைவர் பங்கேற்றால், தன்னுடைய பெயர் மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டுவிடும் என்ற விளம்பர மோகியின் கவலை காரணமாக இருக்குமா? எல்லாமுமாகவும் இருக்கலாம்.

குடியரசுத் தலைவராக ஒரு பார்ப்பனர் இருந்திருந்தால், இப்படி ஒரு நிலையை அனுமதித்திருக்குமா ஆர்.எஸ்.எஸ்? இதே நாடாளுமன்றக் கட்டடத்தின் அடிக்கல்நாட்டு விழாவிலும் அன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் புறக்கணிக்கப்பட்டார். அடிக்கல் நாட்டியவர், திறந்தவர், குடி போனவர் எல்லாம் ஒருவரே! அவர் நரேந்திரரே!

மக்களவையின் சபாநாயகர் மட்டும் அழைக்கப்பட்டிருந்தார். அவரும் பம்மிப் பதுங்கி, போட்டோவில் நாம் கூட நின்றால் மோடி கோபிப்பரே என்ற பயத்துடன் ஒதுங்கி ஒடுங்கி நின்றார். மாநிலங்களவையின் சபாநாயகரான குடியரசுத் துணைத் தலைவர் அழைக்கப்படவில்லை. ஏனெனில், குடியரசுத் துணைத் தலைவரை அழைத்திருந்தால், குடியரசுத் தலைவரையும் அழைக்க வேண்டியிருந்திருக்கும். அதனால் அவர்கள் இருவருக்கும் அழைப்பில்லை. இதை விட உச்சபட்ச அநாகரிகம், அதிகார, விளம்பர வெறி, அரசமைப்புச் சட்ட விரோதம் இருக்க முடியுமா?

நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறப்பதன் அடையாளமாக மூன்று மொழிகளில் கல்வெட்டு திறக்கப்பட்டதே!
எந்தெந்த மொழிகள்? இந்தி, ஆங்கிலம்.. அடுத்து சமஸ்கிருதம்!  எத்தனை மோசடி?

இந்தியும், ஆங்கிலமும் அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழிகள். ஆனால், சமஸ்கிருதம்? அரசியல் சட்டத்தின் எட்டாம் அட்டவணையில் உள்ள 22 மொழிகளுள் அதுவும் ஒன்று. அவ்வளவு தானே! அதற்கு மட்டும் என்ன ராஜமகுடம்! ஆரியர்களின் மொழி என்பதாலா? தேவபாஷை என்ற உருட்டல் புரட்டல் காரணமாகவா? ஆளுவது இந்துத்துவா என்ற நினைப்பா? இந்துராஷ்டிரம் என்று அறிவித்துவிட்டார்களா?

மறைமுகமாக, அதற்கான ஒத்திகை நடந்ந்துவிட்டதாக மகிழ்கிறார்களோ? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆளும் ஒரு ஜனநாயக நாட்டின் நாடாளுமன்றக் கட்டடத் திறப்புவிழாவை மன்னர் பதவியேற்பைப் போலவும், அதிகார மாற்றத்தைப் போலவும் தோற்றத்தை அரங்கேற்றியிருக்கும் விளம்பரப் பித்துக்குப் பின்னால், அண்மையில் இங்கிலாந்தில் நடந்த மன்னர் பதவியேற்பு விழாவைக் கண்டு ஆசை கொண்ட ஒருவரின் புகழ்போதை மட்டும் காரணமா?

இல்லை, மீண்டும் இம் மண்ணை ஜனநாயகத்தின் பாதையிலிருந்து திருப்பி, ஆரியத்தின் கைப்பொம்மையாக, ஆர்.எஸ்.எஸ்.சின் ஏவலாளியாக, மேலுக்குப் பேரரசராக தன்னை அறிவித்துக் கொள்ளும் நோக்கம் இருக்கிறதோ?
இதற்குத் துணை போயிருப்போர் அத்தனை பேரையும் பார்த்து வரலாறு கைகொட்டிச் சிரிக்காதா? நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் சவார்க்கரின் பிறந்தநாளாம்! ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக இருப்பதாக மன்னிப்பு கடிதங்களைத் தொடர்ந்து எழுதி விடுதலையான அந்த சவார்க்கரேதான்.

அதேநாளில் நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவின் போது, அந்த வளாகத்துக்கு வெளியே நடந்த மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம், ஆளும் பா.ஜ.க.வின் உண்மை முகத்திரையைக் கிழித்தெறிந்துவிட்டதே! மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவரும் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல நாட்களாக தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தைக் கண்டுகொள்ளாமல், அதற்காகப் போராடிய வீராங்கனைகள் குண்டுக் கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தியது; கைது செய்து வழக்குத் தொடுத்தது ஒன்றிய அரசு! அப்போதும் காவல்துறையினர் அநாகரிகமாக நடந்துகொண்டதைக் கண்ணீருடன் அந்த வீராங்கனைகள் தெரிவித்த போது, உலகம் இந்நாட்டை ஆள்வோரின் தகுதி என்ன என்பதை அறிந்து கொண்டது.

இவையெல்லாம் ஒரு புறம். இந்தக் கூத்துகளை மறைப்பதற்காக அவர்கள் கையில் ஏந்தியது தான் உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸின் ‘செங்கோல்’!

ஒரு பொய்யைத் திரும்பத் திரும்ப உரக்கச் சொல்லி மெய்யாக்கும் முயற்சியில் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதைக் கண்ணுக்கு முன்னால் உலகம் கண்டுகொண்டிருந்தது. எதிர்த்துக் கேள்வி கேட்போர், உண்மை நாடுவோர், வரலாறு தேடுவோரைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தங்களின் இலக்கு யாரெனத் தெரிந்த ஒரு சிறு கூட்டம், கோட்டைச் சுவரேறி நின்று கோணிப் பொய்யை அவிழ்த்துக் கொட்டியிருக்கிறது. வாட்சப் வழியாக மட்டுமே வரலாறு, அறிவியல், புவியியல் எல்லாம் அறிந்துகொள்ளும் கூட்டத்தையும், ஒரு போட்டோசாப் ஒளிப்படத்தை மட்டுமே நம்பி ஓட்டளிக்கும் மக்களையும் நம்பிக் கட்சி நடத்தி ஆட்சிக்கு வந்திருக்கும் பா.ஜ.க.வுக்கு உண்மை விரும்பிகளான ஓரிரு சதவிதத்தினரைப் பற்றி என்ன கவலை?

“செங்கோல் செங்கோல் சோழர் செங்கோல்” என்றொரு மகா புரளியைக் கூவிக் கூவிச் சொன்னார்களே! அது தொடர்பாக வந்து குவிந்திருக்கும் தகவல்கள் வருங்காலத்திற்கும் உதவ வேண்டாமா? அதற்காகவே இங்கே தொகுத்துத் தருகிறோம்.
சோழர் செங்கோலா?

சொல்லும்போதெல்லாம் சோழர் செங்கோல் சோழர் செங்கோல் என்றும், அவர்களுக்கு திருவாவடுதுறை ஆதீனம் தான் செங்கோலை மாற்றிக் கொடுப்பார் என்றும் சொல்லிக் கொண்டிருந்தன சில வாட்ஸ் அப் வதந்திகள். அவற்றைத் தான் இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் நடத்திய சிறப்பு செய்தியாளர் சந்திப்பிலும் ஆதாரமாக அடுக்கிக் காட்டினார். அந்த ஆதாரக் கொத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய வாட்சப் வரலாறு என்று கட்டுரையும் அடக்கம். அந்தக் கட்டுரை 2019-இல் எழுதப்பட்டது. அந்தக் கட்டுரையில் வாட்ஸ் அப்பில் வந்த செய்தியை நகையாடி எழுதியிருந்தார் ஜெயமோகன். அதையும் படிக்காமலே அச்செடுத்து செய்தியாளர்களுக்குக் கொடுத்த மகா அறிவாளிகள் தான் அன்றைய சந்திப்பை நடத்தியவர்கள்.

சோழர்களுக்கும், ஆதீனத்துக்கும், இந்தச் செங்கோலுக்கும் என்ன தொடர்பு? பேராசிரியர் கரு.ஆறுமுகத் தமிழன் ஃபேஸ்புக்கில் கேட்ட கேள்வி அதனை உடைத்துப் போட்டது.

“சைவ சித்தாந்த மரபின் திருக்கயிலாய பரம்பரை தோன்றுவது வெண்ணெய்நல்லூர் மேவிய சீர் மெய்கண்டாரோடு. அவர் சோழர் ஆட்சிக் காலத்தின் இறுவாய்க் காலமான பதின்மூன்றாம் நூற்றாண்டினர். அவரது மாணவக் கால்வழியினரால் தோன்றியவை ஆதீனங்கள். அவ்வகையில் முதலாவது ஆதீனம் திருவாவடுதுறை. சிறப்பு. ஆனால் அவ்வாதீனம் தோன்றிய காலையில் சோழர் ஆட்சி முற்றுப்பெற்றுவிட்டது என்பதல்லாது சோழர் வம்சமே முற்றுப்பெற்றுவிட்டது.

அப்படி இருக்க, ஒவ்வொரு சோழ மன்னர் ஆட்சிப் பொறுப்பேற்கும்போதும் ஆதீனத்தின் சார்பில் செங்கோல் கொடுத்ததாகக் கிளப்பிவிடுகிறார்களே, யார் அந்தச் சோழ மன்னர்கள்? “கேப்பையில நெய் வடியுதுன்னா, கேப்பாருக்கு எங்க போச்சு புத்தின்னானாம்.’’ சோழர் செங்கோல் என்பது புரட்டு என்று உறுதியாகிவிட்டது. இனி, அடுத்தவற்றைக் காண்போம்.

“பண்டித நேருவுக்குச் செங்கோல் தரப்பட்டது உண்மையா இல்லையா? அந்தப் புகைப்படத்தில் நேருவுக்குச் செங்கோல் கொடுத்தபடி திருவாவடுதுறை ஆதீனத்தின் பிரதிநிதி நிற்கிறாரே! அது பொய்யா?”

கேள்வி இப்படி அமைந்தால், யாரும் பொய்யென்று சொல்லப்போவதில்லை. ஒளிப்படம் இருக்கிறது. நேரு இருக்கிறார் செங்கோல் இருக்கிறது; ஆதீனம் இருக்கிறார். ஆனால், கேள்வி எப்படி அமைய வேண்டுமானால், “திருவாவடுதுறை ஆதீனம் தந்த செங்கோலைத்தான் ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக மெவுண்ட்பேட்டன் நேருவிடம் கொடுத்தாரா?. இது தானே சரியான கேள்வியாக இருக்க முடியும்.
நீல் ஆம்ஸ்ட்ராங்குக்கு ராக்கெட் மாடலைப் பரிசாக வழங்கி உடன் நின்று ஒருவர் புகைப்படம் எடுத்துவிட்டு, நான் வடித்துக் கொடுத்த ராக்கெட்டில் தான் ஆம்ஸ்ட்ராங் நிலாவுக்குச் சென்றார். அதன் அடையாளம் தான் இந்தப் புகைப்படம் என்றால் ஏற்க முடியுமா? அதற்கென்ன ஆதாரம்? செய்தி வந்திருக்குமே, அந்தச் செய்தித்தாள் எங்கே என்று கேட்க மாட்டோமா?

இந்தியா சுதந்திரம் பெறுவதாக அறிவிக்கப்பட்டு, அதன் இடைக்காலப் பிரதமராக பண்டித ஜவஹர்லால் நேரு பதவியேற்க இருக்கிறார் என்றதும், ஏராளமான பரிசுப் பொருள்கள் இந்தியாவெங்கும் இருந்து குவிந்தன. பலர் நேரில் வந்து வாழ்த்தினார்கள். அவற்றுள் ஒன்று இந்தச் செங்கோல் என்னும் தங்கக் கோல். அதைச் செய்தவர்கள் உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் நிறுவனத்தார். (அதை அவர்கள் விளம்பரமாகவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.) மேடைகளில் பல தலைவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்டு, செங்கோலும் தரப்படுவதுண்டு. அவர்களெல்லாம் மன்னர்களா? சூட்டிவிட்டவர்கள் ராஜ குருக்களா? நேருவின் மியூசியத்தில் அவரது வாக்கிங் ஸ்டிக் என்ற அடையாளத்துடன் கிடந்த ஒரு குச்சியைத் தூக்கிக் கொண்டுவந்து இந்திய நாடாளுமன்றத்தில் நாட்டியிருக்கிறார்கள்.

பொய்யைவிட மோசமானது பாதி உண்மை என்பார்கள். அப்படித்தான் இதுவும் . செங்கோல் மவுண்ட்பேட்டனிடம் வழங்கப்பட்டு, ஆட்சி மாற்றத்தின் அறிகுறியாக நேருவிடம் தரப்படவில்லை. மவுண்ட்பேட்டனுக்கும், செங்கோலுக்கும் தொடர்பேயில்லை. இடையில் ராஜாஜி கதையெல்லாம் சுத்த இடைச்செருகல்கள்.

(ஆதீனம் ஏன் அவ்வளவு அக்கறையுடன் அன்றைக்கு டெல்லிக்குப் பரிவாரங்களுடன் புறப்பட்டன என்பதை சுட்டிக்காட்டி “செங்கோல் – ஒரு வேண்டுகோள்” என்ற தலைப்பில் “திராவிட நாடு” 1947 ஆகஸ்ட் மாத ஏட்டில் அறிஞர் அண்ணா எழுதிய கட்டுரையை ‘விடுதலை’ நாளேடு 26.05.2023 அன்று மீள்பதிப்பு செய்திருந்தது. அது பழைய செய்திகளைப் பலருக்கும் புலப்படுத்தியது. ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு தி வயர், அய்டம் ஆகிய இணையதளங்கள் வெளியிட்டன. ஹிந்து ராம் அதைச் சுட்டிக்காட்டி செய்தியாளர்களிடம் பேசினார் என்பது கூடுதல் செய்தி.)

நேருவிடம் ஒப்படைப்பதற்காக செங்கோல் தனி விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்பட்டதா?

இல்லை. இது முற்றிலும் பொய்! 1947 ஆகஸ்ட் 11 அன்று டெல்லிக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புகைவண்டியில் கொண்டு சென்றதை 1947 ஆகஸ்ட் 29 ‘தி இந்து’ நாளேடு படத்துடன் பதிவு செய்துள்ளது. (புகைப்பட ஆதாரம் காண்க)
விமானத்தில், அதுவும் தனி விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது என்ற புரட்டை உண்மை போல மாற்றிக் காட்ட இந்திய ஒன்றிய அரசு புதிய தகிடுதித்தங்களைச் செய்தது. 2023-ஆம் ஆண்டு இந்த செங்கோல் கூத்து நடந்த போது, தமிழ்நாட்டிலிருந்து ஆதீனங்களையெல்லாம் டெல்லி அழைத்துச் சென்ற ஒன்றிய அரசு, திருவாவடுதுறை ஆதீனத்தை மட்டும் தனி விமானத்தில் அழைத்துச் சென்றது. ஏற்கெனவே அப்படி ஒன்று நடக்கவேயில்லை என்று உறுதியானாலும் கூட, பின்னாளில், ஆதீனம் தனி விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார் என்று சொல்லிக் குழப்பலாம் அல்லவா? அதற்கான முன்னேற்பாடு தான் அது.

சரி, இங்கிருந்து எல்லா ஆதீனங்களையும் அழைத்துச் சென்றார்கள். நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் அவர்களை வரிசையாக நிறுத்தி மோடி வணங்கினார். அவர்களுடன் கட்டடம் முழுக்க வலம் வந்தார். செங்கோலை நிறுத்தி அதனடியில் விழுந்து படம் எடுத்துக் கொண்டார். ஆனால், அடுத்து என்ன நடந்தது? யாகம் நடந்தது. அது யாகம் கூட இல்லையாம். ஹோமம் தானாம்! தம்பதி சமேதராகத் தான் யாகம் நடத்தமுடியுமாம். மனைவியைப் பிரிந்து வாழும் மோடியால் முடியாதே! எனவே வெறும் ஹோமம்.

“ஆதீனங்களுக்கு அவமரியாதை”:

அப்படி ஹோமம் நடத்தப்பட்டபோது நமது ஆதீனங்கள் என்ன செய்தார்கள்? பார்ப்பனர்கள் ஹோமம் நடத்த, அந்த மேடையில் கூட ஏறவிடாமல் தூரத்தில் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர். பார்ப்பனர்களுக்குத் தானே அந்த யாகம், ஹோமம் எல்லாம்! சூத்திர சந்நிதானங்களுக்கு அந்த உரிமை உண்டோ? நாடாளுமன்றத்தில் பார்ப்பன மேலாதிக்கம் பட்டாங்கமாகக் காட்டப்பட்டுவிட்டதே! பிறகு கண் துடைப்புக்கு எப்போதுபோல சர்வமதங்களின் சார்பாக வரிசையாக அமர்த்தப்பட்டோர் துதிபாடிக் கொண்டிருந்தனர். (அவர்கள் அரசு நிகழ்ச்சிகளின் செட் பிராப்பர்டி போல! மறைந்த தலைவர்களின் நினைவஞ்சலிகளெல்லாம் அவர்களைக் காண முடியும்.)
நாடாளுமன்ற வளாகத்துக்குள் முழுக்க மத அடையாளம். நிர்வாணச் சிலைகள், சாணக்கியன், புராண கதாபாத்திரக் காட்சிகள், ஜடா முடியர்கள் என்று இந்துத்துவ வடிவங்கள் எங்கெங்கும்!

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கு இரங்கல் குறிப்பு எழுதிய கையோடு, அதை மறைக்க செங்கோலை வைத்து ஒரு நாடகத்தை நடத்தியுள்ளார்கள். நாள்தோறும் புதிய புதிய தோற்றங்கள், படுதாக்கள், திரைச்சீலைகள், கதாபாத்திரங்கள், வசனங்கள், திரைக்கதைப் பிரதிகள்… நேற்று நடந்த நாடகத்தை இன்று நீங்கள் நினைவில் வைத்திருக்கக் கூடாது என்பதற்கேற்ப நாள்தோறும் விளம்பரங்கள் என்று நாட்டை நாடகக் கொட்டகை ஆக்கியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க ஆட்சி.

அத்தனை நாடகங்களையும் உரித்துக் காட்டி உண்மையைச் சொல்வது தானே பெரியார் தொண்டர்களின் பணி! அதை நாளும் செய்வோம்! நாளைய வரலாற்றாளர்களுக்கு நாம் விட்டுச் செல்வது புரட்டுகளுக்கு மறுப்பான இந்த உண்மைச் செய்திகளைத் தானே!

வாட்ஸ் அப்பில் வலம் வந்த புரளி இதுதான்!
இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட வரலாறு
– மறைக்கப்பட்ட வரலாறு –

“நாடாளுமன்றத்தில் செங்கோல்” நாடகத்தின் திரைக்கதை உருவாக்க உதவிய வாட்ஸ்அப் வதந்திச் செய்தி இதோ:

“1947 ஆகஸ்டு 15இல் நாம் எப்படி சுதந்திரம் பெற்றோம். மெவுண்ட் பேட்டன், நேருவை அழைத்து, உங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம்; அதை எப்படிக் கொடுப்பது என்று கேட்க நேருவுக்கு குழப்பமாக இருந்தது. எதை அடையாளமாக வைத்து சுதந்திரத்தைப் பெறுவது? (பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கியது என்பதற்கு எந்த சாசனமும் இல்லை).

உடனே நேரு மூதறிஞர் ராஜாஜியை அணுகி,”எனக்கு இந்த நடைமுறைகள் தெரியாது, அதனால் தாங்கள் தான் தீர்வு கூற வேண்டும்’ என்று கூற,உடனே ராஜாஜி “கவலை வேண்டாம், எங்கள் தமிழகத்தில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, ராஜகுருவாக இருப்பவர், செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து, ஆட்சி மாற்றம் செய்வர். நாமும் அன்னியன் கையால் சுதந்திரம் பெறுவதை விட, குரு மகானின் கையால் செங்கோலைப் பெற்று ஆட்சி மாற்றம் அடையலாம்”, என்றார்.

நேருவும் “நேரம் குறைவாக உள்ளது.. உடனே ஏற்பாட்டை செய்யுங்கள்”, என்று உத்தரவிட்டார். ராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்ல, அப்போது கடும் காய்ச்சலில் இருந்த ஆதீனம் அவர்கள், உடனே முறையாக செங்கோல் தயாரித்து, தங்க முலாம் பூசி, இளைய ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகளிடம் பொறுப்பை ஒப்படைத்து, கூடவே ஓதுவார் மூர்த்திகளையும் உடன் அனுப்பி வைத்தார். (தேவாரத்தில் இருந்து கோளறு பதிகம் பதினோரு பாடல்களை குறித்துக் கொடுத்தார். இந்த பாடல்களை அப்போது ஓதுவார் மூர்த்திகள் பாட வேண்டும்).

ராஜாஜி அனுப்பிய தனி விமானத்தில் அவர்கள் செங்கோலுடன் டில்லி போய் சேர்ந்தனர்.அப்போது ஆயிரம் ஆண்டு அடிமைத் தளையில் இருந்து, பாரதத்தின் விடுதலை பெறும் விழாவிற்காக எல்லோரும் காத்திருந்தனர். அந்த சுதந்திர வைபவ தினத்தில் மௌண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை குரு மகா சன்னிதானம் திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகள் பெற்று, செங்கோலுக்கு புனித நீர் தெளித்து, ஓதுவார் மூர்த்திகள், வேயிறு தோளிபங்கன் என்று துவங்குகிற தேவார திருப்பதிகத்தைப் பாட, பதினோராவது பாடலின் கடைசி வரி,

“அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே”

இந்த வரியைப் பாடி முடிக்கும் போது தான், சுவாமிகள் செங்கோலை நேருவிடத்தில் கொடுத்தார். அந்த நிகழ்வைத் தான் நாம் சுதந்திர தினமாகக் கொண்டாடுகிறோம்.

இந்த நிகழ்வு தமிழுக்கும் தமிழகத்திற்கும் எவ்வளவு பெருமை. இந்த வரலாற்று விஷயத்தை பாடப் புத்தகத்தில் வெளியிட்டு, நாடறிய செய்யாமல் சதி செய்யப்பட்டது.நண்பர்களே! இவ்வளவு பெருமை வாய்ந்த செய்தியை நாடறியச் செய்வோம்.
திருவாவடுதுறை ஆதீன மடத்தில், இந்த செங்கோல் வைபவம், கருப்பு வெள்ளை புகைப்படமாக உள்ளது. புகைப்படத்தில் 15.8.1947 என்று தேதியிட்டு இருப்பதையும், நேரு, கையில் செங்கோலுடன் இருப்பதையும், தம்பிரான் பண்டார ஸ்வாமிகள் அருகில் உள்ளதையும் காணுங்கள்.”
கடந்த நான்காண்டுகளாக வாட்ஸ் அப்பில் சுற்றி வந்த புரளி. இந்த வதந்தியை அடிப்படையாகக் கொண்டுதான் மிகப்பெரிய செங்கோல் நாடகத்தை அரங்கேற்றி அதை உண்மை என்று நிறுவ பார்க்கிறார்கள்.

இது வெறும் வாட்ஸ்அப் வரலாறு மட்டுமல்ல. அரங்கேறி இருக்கும் இந்த நாடகத்தின் பின்னணியில் சங்கராச்சாரி, குருமூர்த்தி, பத்மா சுப்ரமணியம் என்று ஒரு பார்ப்பன நெட்வொர்க் இருப்பதையும் அறியமுடிகிறது.

இதை சந்திரசேகரேந்திரர் என்கிற சங்கராச்சாரி 1978ஆம் ஆண்டு தன்னுடைய சீடர் ஒருவருக்கு சொன்னதாக ஒரு தகவலை 2021 ஆம் ஆண்டு துன்னுடைய சீடர் ஒருவருக்குச் சொன்னதாக உரு ஏட்டில் குருமூர்த்தி எழுதினார். அதை பத்மா சுப்ரமணியம் டெல்லி மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதை அடிப்படையாகக் கொண்டுதான் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் தலையிட்டு, செங்கோலை நாடாளுமன்றத்தில் வைக்கும் இந்த நாடகத்தின் பின்னணிக் காட்சிகளை எழுதியிருக்கிறார்கள் என்பதும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

ஆதீனம் தரும் ஆதாரங்கள்:

1962-ஆம் ஆண்டு திருவாவடுதுறை ஆதீனத்தால் வெளியிடப்பட்ட திருக்கயிலாபரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் இருபத்தொன்றாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீ-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக பரமாசாரியசுவாமிகள் ஜன்மநக் ஷத்திர விழாமலரான “அரசவனத்து அறநிலையம்” என்ற புத்தகம் தரும் செய்திகள் இதோ: (பக்கம் 147, 148, 149)

“குருமகாசந்நிதானம் அவர்கள் நல்ல காரியங்கள் தேசப்பணிக்கான பொதுக்காரியங்கள் எவையாயினும்ட அவற்றிற்கும் தக்க பேருதவிசெய்யும் பெருவிருப்பம் உடையவர்கள். உதாரணமாக, அரசாங்கப் பொறுப்பு கற்றுக்கொள்ளுவதற்கு முன்னர் கனம் இராஜேந்திரபிரசாத் அவர்கள் கஸ்தூரிபாய் நிதிக்காகத் தென்னாடு விஜயம் செய்தார்கள். அப்போது மகாசந்நிதானம் அவர்களைத் தரிசிக்க விரும்பினார். மடத்திற்கு அவர்களை அழைத்து நிதிக்காக 35,000 அளித்தார்கள்.

மற்றும் திருவாவடுதுறை ஆதீனத்தின் பெருமையையும் ஸ்ரீநமச்சிவாயமூர்த்திகளின் அருள் விளக்கத்தையும் அனைத்துலகும் அறிந்துய்ய ஒரு பெரியகாரியம் செய்வித்தார்கள்.

இந்தியா நெடுநாள் அடிமைத்தளையில் அகப்பட்டு அயல்நாட்டாரின் ஆதிக்கத்தில் அவதியுற்று வந்ததை நாம் அனைவரும் நன்கு அறிவோம். சாந்தமூர்த்தியாகிய காந்தியடிகள் மிக அமைதியான இயக்கத்தை நடத்தி நம் இந்திய நாட்டிற்கு விடுதலை வாங்கித் தந்தார்கள். இந்தியா 14.8.1947 இரவு 11.45 மணிக்கு விடுதலை பெற்றது; சுதந்திரம் பெற்றது. அப்போது நமது இந்திய முதன் மந்திரி கனம் ஜவஹர்லால் நேரு அவர்கள் அரசியல் பொறுப்பை ஏற்றார்கள். அப்போது கனம் இராஜேந்திர பிரசாத் முன்னிலையில் வைதீகச்சடங்குகள் நடந்தன. அப்போது குருமகாசந்நிதானம் அவர்கள் சைவச்சின்னமாகிய ரிஷப முத்திரையோடு கூடிய ஒரு தங்கச்செங்கோலை டில்லியில் ஆதீனத்துப் பெரிய தம்பிரான் சுவாமிகள், ஓதுவாமூர்த்திகள், பெரிய காரியஸ்தர்கள் முதலியவர்களை அனுப்பிக் கொடுக்கச் செய்தார்கள். அவர்களும் நல்ல சமயத்தில், நமச்சிவாயமூர்த்திகளின் விபூதிப் பிரசாதத்தையும், மாலைப் பிரசாதங்களையும் நமது இந்திய முதன்மந்திரிக்கு அளித்துத் தங்கச் செங்கோல் ‘தங்கள் செங்கோல்: தங்கள் செங்கோல் எங்கள் ஆட்சிச் சின்னம்’ என்று சொல்லி அளித்தார்கள். அப்போது ஆதீன ஒதுவாமூர்த்திகள் அவர்களால் “அரசாள்வர் ஆணை நமதே’’ என்ற திருஞானசம்பந்த சுவாமிகள் மடதேவாரம் ஓதப்பெற்றது.’’
இதில் எங்காவது மவுண்ட்பேட்டன், ராஜாஜி, தனி விமானக் கதைகள் உண்டா?

ஆட்சி மாற்றத்தின் அடையாளம் என்ற செய்தி உண்டு குழுப் படத்தில் இராஜாஜி இல்லை! மவுண்ட் பேட்டன் இல்லை! ஏனென்றால் ஆகஸ்ட் 14, 1947 அன்று மவுண்ட் பேட்டன் பிரபு பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் தங்கியிருந்தார்.

நாடாளுமன்றக் கட்டிடமா?
பாஜக அலுவலகமா?

“புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் பன்மைத் தன்மைக்கும் தலைமையகமாக இருக்க வேண்டிய ஓர் இடம். ஆனால், பாஜ கட்சி அலுவலகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அவையின் நுழைவாயிலில் கையில் தண்டம் ஏந்தி, விரல் நீட்டி ஆவேசமாகக் காட்சியளிக்கும் சாணக்கியனை பிரமாண்டமாக நிறுவியுள்ளதன் மூலம், இவர்கள் என்ன அரசியலை முன்னெடுக்க உள்ளனர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சாணக்கியனுக்கும், ஜனநாயக சிந்தனைக்கும் என்ன சம்பந்தம்?
கட்டிடம் எங்கும் சமஸ்கிருத எழுத்துக்களாலும் புராண காட்சிகளாலும் நிரம்பியுள்ளது. கட்டிடத்தின் நடுவில் 250 அடி நீளத்தில் மிகப்பிரமாண்ட விஷ்ணு புராணத்தில் உள்ள பாற்கடலைக் கடையும் காட்சி வார்ப்புக்கலை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் சட்டமியற்றும் ஒரு பேரவைக்கும் இதற்கும் என்ன தொடர்பு? சகோதரத்துவமும், சமத்துவமும் பேணும் அரசியல் அமைப்பிற்கு எதிரான வர்ணங்களை மேற்கோளாகக் கட்டுவதும், தற்கால அரசமைப்பு என்பது அதன் நீட்சி என்று கூறுவதும் அரசமைப்பின் மாண்பையும் அதன் உள்ளடக்கத்தையும் சிதைக்கும் முயற்சி” என்று தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார் மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன்.

சும்மா ஆடுமா?

சோழர், தமிழ் மந்திரங்கள், ஆதீனங்கள் என்றெல்லாம் கூப்பாடு போட காரணம் என்ன?
ஏற்கனவே இராஜேந்திர சோழன், திருவள்ளுவர் என்றெல்லாம் தமிழை துதித்து இங்கே களத்தை விரிவாக்க நினைத்த பழைய டெக்னிக் நீட்சி இது!
மேலும் E.W.S (உயர்ஜாதி ஏழைகளுக்கான) இட ஒதுக்கீடு என்ற பெயரில் பார்ப்பனரல்லாத உயர்ஜாதி மக்களின் ஓட்டைப் பெறலாம் என்ற ஜாதி ஓட்டுக் கணக்குதான் இதற்கெல்லாம் பின்னணியாம்!
என்ன செய்ய, பார்ப்பனர்களை மேடையேற்றி நம் ஆதீனங்களை வரிசையில் நிறுத்தி வேடிக்கைப் பார்க்க வைத்ததில் எல்லாம் புஸ்வானமாகிப் போய்விட்டது.

செங்கோல் – ஒரு வேண்டுகோள்!

செங்கோல் – ஒரு வேண்டுகோள்; காணிக்கை அல்ல! அன்பின் அறிகுறியல்ல! நாட்டுப் பற்றை விளக்கும் சின்னமல்ல! வேண்டுகோள்!
ஆளவந்தாரோ, மக்களைத்தாளில் விழச்செய்து, ஈடில்லாத புகழும் பொருளும் பெற்றுள்ள இந்த ஆதீனங்களைக் கலைத்து விடவேண்டுமென்று, ஏதேதோ கற்றோமென்று கூறிக்கொள்ளும் ஒரு கூட்டம் பேசிடும் காலம் இது, எமது ஆட்சிமுடியுங்காலம் என்று பேசுகின்றனர். நாங்கள், பரம சாதுக்கள்! உம்மிடம் அபாரமான ஆசை கொண்டவர்கள். சந்தேகமிருப்பின், செங்கோலை மற்றோர் முறை பாரும், அய்ந்தடி உயரம், அருமையான வேலைப்பாடு – எமது ஆதீனம், புதுமுறை வேண்டுபவரின் புன்மொழிக்கு ஆளாகாமல் இருக்கச் செய்யும். எமக்கு இறவாவரம் தாரும். எம்மானே, நேருபெம்மானே! இறவாவரம் தாரும், -இன்னுமோர் இருபதாண்டுகளுக்கேனும், இறவா வரம் தாரும், என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் சைவ மெய்யன்பர், இந்தக்கோல் கொடுத்ததன் மூலம். தமக்கும், புதிய சர்க்காருக்கும், சினேகம் இருப்பதாகக் காட்டிக் கொள்வதன் மூலம், மேலும் பாமரரை மயக்கவிரும்புகிறார். நேரு சர்க்காரின் நேயரான ஆதீனம் ஏற்கெனவே சிவநேசத்தையும் பெற்றிருக்கிறது, எனவே, அதன் ஆதிக்கம் குறையாது, குன்றாது, என்று பாமரர் நம்ப இடமேற்படுகிறது இதனால்!

– அறிஞர் அண்ணா
(‘திராவிடநாடு’ 24.08.1947)