ஹெச்.அய்.வி. பெற்றோரின் குழந்தைகளுக்கு ஒளியேற்றும் நூரி! – வை.கலையரசன்

2023 மற்றவர்கள் மார்ச் 1-15,2023

மனிதம் மரத்துப்போய், திருநங்கைஎன்றாலே ஒருவித வெறுப்புணர்வுடன் சமூகத்தால் பார்க்கப்படும் நிலையில், மேலும் ஹெச்.அய்.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர் என்றால் இந்த சமூகப் புறக்கணிப்புகளை நினைக்கவும் வேண்டுமா?

அப்படியான ஒருவர்தான் நூரி சலீம்.

ஹெச்.அய்.வி தொற்றால் பாதிக்கப்பட்ட 60க்கும் மேற்பட்ட குழந்தைகளை தான் நடத்தி வரும் இல்லத்தில் தங்க வைத்துப் படிக்க வைத்து அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி இருக்கிறார்.
இந்தியாவில் முதன்முதலாக ஹெச்.அய்.வி தொற்றால் பாதிக்கப்பட்ட நபரை கண்டறிந்தவர் டாக்டர் சுனிதி சாலமன். இவர் கண்டறிந்த மூன்றாவது ஹெச்.அய்.வி தொற்று பாதித்த நபர்தான் திருநங்கை நூரி சலீம்.

நூரி சலீம் ராமநாதபுரத்தில் பிறந்தவர். 13 வயதிற்குள் தன்னுடைய பெற்றோரை இழந்தவர். பிறப்பில் ஆணாகப் பிறந்த நூரி, பருவ வயதில் தன் இயல்பில் மாற்றத்தை உணரத் தொடங்கினார். ஆனால், சமூகம் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. ஊரை விட்டுக் கிளம்பி சென்னை வந்து வீட்டு வேலைகளைச் செய்தார். தந்தையை இழந்த பிறகு அவருக்குத் திருமணம் செய்து வைக்க குடும்பம் முடிவு செய்த போது, தன்னால் ஒரு பெண் வாழ்வு கெட்டுவிடக்கூடாது என்று 2 செட் துணி கொஞ்சம் பணம் எடுத்துக் கொண்டு திருமணத்திற்கு முதல் நாள் மும்பை சென்றுவிட்டார். அங்கு 18 வயதில் பாலியல் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார் நூரி.

1987ஆம் வருடம் நூரி சலீமுக்கு ஹெச்.அய்.வி தொற்று இருப்பதாக மருத்துவர்களால் கண்டறியப்பட்டது. தனக்கு தொற்று ஏற்பட்டதும் வாழ்வின் விளிம்புக்கே சென்று விட்டார் நூரி. இனி எதற்காக உயிர் வாழ வேண்டும் என்று தூக்கமில்லா இரவுகளை கண்ணீரில் கரையவிட்டு, இனி வாழ்வே சூன்யம் தான் என்ற முடிவுக்கும் வந்துவிட்டிருந்தார். இவரைப் பரிசோதித்த மருத்துவர்களும் நூரி இனி 2 ஆண்டுகள் தான் உயிரோடு இருப்பார் என இவரின் உயிருக்குக் கெடு விதித்து விட்டார்கள். அது இன்னும் தாங்க முடியாத வலியை இவருக்குக் கொடுத்தது.
இந்தச் செய்தியைக் கேட்டவுடன் மனதிற்குள் ஒரு பிரளயமே ஏற்பட்டது. ஆனாலும், வாழ்வா சாவா என ஒரு கை பார்த்து விடுவோம் என்று முடிவுக்கு வந்தார்.

இவருக்கு ஹெச்.அய்.வி தொற்று இருக்கிறது என்று கேள்விப்பட்டதும் என் சக திருநங்கை தோழிகளே சபித்தார்கள், கேவலமாகத் திட்டினார்கள், விரட்டியடித்தார்கள். அனைத்தையும் தாங்கிக் கொண்டு, தன்னைப் புறக்கணிப்பவர்கள் நிச்சயம் தன் முன்னால் உதவிக்கு நிற்பார்கள். அந்த நாள் வரும் என்ற வைராக்கியத்தை ஏற்படுத்திக் கொண்டு, அதற்கு மேலும்வீட்டிற்குள் தன்னை அடைத்துக் கொள்ளாமல் பாலியல் தொழிலில் இருந்தும் முற்றிலுமாக விலகினார் நூரி.தன்னால் இந்த நோய் வேறு யாருக்கும் பரவி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

அரசு மருத்துவமனையில் ஹெச்.அய்.வி தொற்று பற்றிய கலந்தாய்வுக்குச் (கவுன்சிலிங்) சென்றிருந்த போது சந்தித்த டாக்டர் உஷா ராகவனின் அறிமுகம் அரிய வாய்ப்பாகவும் திருப்புமுனையாகவும் அவருக்கு அமைந்துவிட்டது. அவரின் வழிகாட்டுதலின்படி, பல்வேறு சமூகப் பணிகளைச் செய்யத் தொடங்கினார். பல தொண்டு நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டே ஹெச்.அய்.வி தொற்று குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் முன்னெடுத்தார் நூரி.

‘ஹெச்.அய்.வி தொற்று வந்தால் அஞ்சாமல், அது பற்றி மனம் திறந்து உங்கள் துணையுடன் பேசுங்கள். நல்ல மருத்துவரை அணுகுங்கள், இப்போது இருக்கும் சிறந்த மருத்துவத்தின் உதவியால், ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்’ எனும் தலைப்பில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

‘‘இதுவரை 24 நாடுகளுக்கு மேல் பயணம் செய்து இருக்கிறேன். 20க்கும் மேற்பட்ட எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்குகளில் பங்கேற்றுப் பேசி இருக்கிறேன். செல்லும் இடமெல்லாம் என்னை முன்னிறுத்தியே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்’’ என பெருமையுடன் கூறினார் நூரி.

அதேபோல், நூரி SIP என்ற தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்தத் தொண்டு நிறுவனத்தின் மூலம் ஹெச்.அய்.வி தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகள் மற்றும் தொற்றால் இறந்த பெற்றோர்களின் குழந்தைகள் என கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட குழந்தைகளைத் தத்தெடுத்து அவர்களுக்கு இலவசமாகத் தங்கும் இடம் கொடுத்து, உணவும் கொடுத்து, அவர்கள் கல்வி கற்க வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கிறார் நூரி.

இந்தத் தொண்டு நிறுவனத்திற்கு SIP என்ற பெயர் வைத்ததற்குப் பின்னால் உள்ள ஒரு சோக நிகழ்வையும் சுட்டிக்காட்டுகிறார் அவர்.
“முதன்முதலாக ஒரு பொது நல அமைப்பில் உறுப்பினராக என்னை இணைத்துக் கொண்டேன். அந்த அமைப்பின் மூலம் ஹெச்.அய்.வி தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு பொருள்களை வழங்குவதற்காக பல இடங்களுக்குப் பயணம் மேற்கொள்வேன். அப்போது செல்வி, இந்திரா, பழனி என என்னைப் போன்று ஹெச்.அய்.வி தொற்றால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளைச் சந்தித்தேன். அன்பின் ஆழம் எவ்வளவு இருக்கும் என்பதை, அவர்களின் நட்பு என்னை உணர வைத்தது. ஆனால் நான் நேசிக்கும் பலரும் என் வாழ்வில் அதிக தூரம் என்னோடு தொடர்ந்து வந்ததில்லை. ஹெச்.அய்.வி தாக்கம் அதிகரித்து செல்வி, இந்திரா, பழனி மூவரும் இறந்து போக, எங்கள் நட்பின் அடையாளமாய் நான் தொடங்கிய தொண்டு நிறுவனத்திற்கு என் நண்பர்களின் முதல் எழுத்தான ஷிமிறி என்பதை வைத்தேன்,’’ எனக் கூறினார் நூரி.

2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். ஒரு நாள் நள்ளிரவில் இவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. ஒரு மருத்துவமனை அருகில் பிறந்து 2 நாள் ஆன குழந்தையை தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அதற்குப் பக்கத்தில் ஒரு கடிதம் இருந்திருக்கிறது. அதில், ‘பெற்றவர்களை ஹெச்.அய்.விக்குப் பலி கொடுத்த குழந்தை’ என்று எழுதி இருக்கவே, அந்தக் குழந்தையைப் பரிசோதித்ததில் அந்தக் குழந்தைக்குஹெச்.அய்.வி தொற்று இருப்பது உறுதியானது.

சுற்றிலும் எறும்புகள், ஈக்கள் மொய்த்த நிலையில் இருந்த குழந்தையை தன் பொறுப்பில் வைத்து பராமரிக்கத் துவங்கினார் நூரி. இப்படித்தான் முதல் குழந்தை இங்கு வந்தது. இந்தத் தொண்டு நிறுவனத்தின் மூலம் இதுவரை 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் நர்சிங், பட்டப்படிப்பு படித்து முடித்திருக்கிறார்கள். பலருக்கும் திருமணம் நடந்து முடிந்து மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கையில் இருக்கிறார்கள். என்னுடைய வழிகாட்டுதலின் பேரில் மருத்துவச் சிகிச்சையை எடுத்துக் கொண்டதால் ஹெச்.அய்.வி தொற்று பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு ஹெச்.அய்.வி நெகடிவ் குழந்தை பிறந்து அவர்களும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று பூரிப்புடன் கூறினார் நூரி.
எனக்கு 64 வயதானாலும் இன்னும் குழந்தைகளைப் பராமரிக்க என் உடலிலும் தெம்பு இருக்கிறது; என் மனதிலும் தெம்பு இருக்கிறது. நான் அடைந்த இன்னல்களை என் குழந்தைகள் அடைய விடமாட்டேன் என்கிறார் நூரி.