மருத்துவம் – மரணம் (4)

2023 பிப்ரவரி 16-28, 2023 மருத்துவம்

மருத்துவர் இரா.கவுதமன்

“நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் உலகு’’
என்னும் வள்ளுவரின் குறளுக்கேற்பத்தான் மனிதரின் வாழ்க்கை அமைந்துவிடுகின்றது.. “நல்வழி’’யில் அவ்வையார் குறிப்பிட்டதைப் போல்,
“ஆற்றங் கரையின் மரமும் அரசரியவீற்றிருந்த வாழ்வும் விழுமன்றோ’’
என்பதுதான் வாழ்வியலின் உண்மை. உயிருள்ள அனைத்து உயிரிகளும் ஒருநாள் முடிவெய்தித்ததான் தீர வேண்டும் என்பதுதான் இயற்கை நியதி.
மனித அறிவு வளர்ச்சியடையும் காலத்திற்கு முன் மரணம் என்பதையே ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையே மனிதர்களிடம் இருந்தது அதனாலேயே ஆரம்ப காலங்களில் பிணத்தைப் புதைத்து வைக்காமல் பாதுகாக்கும் நிலை வளரத் துவங்கியது.

மனித உடலின் அழியும் தன்மையை உணர்ந்தபின் அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இறந்தபின் அந்தப் பிணம் மீண்டும் உயிர்பெறாது என்கிற எண்ணம் தோன்றும் வரை அந்தப் பிணத்திற்கு, உயிரோடு இருந்த காலத்தில் அவர்களுக்குப் பிடித்த உணவுகள், பழங்கள் போன்றவற்றை வைத்து வணங்கும் பழக்கம் ஏற்பட்டது (இன்றும் திதி கொடுப்பது, பிண்டம் வைப்பது. படையலிடுவது போன்ற செயல்பாடுகளின் முன்னோடியே இது).

பிணங்களின் மேல் மலர்கள், வாசனைப் பொருள்களை வைத்து வணங்குதல் போன்றவையே பின்னாள்களில் மரணச் சடங்குகளாயின. எகிப்தில் பழங்காலத்திலேயே இறப்பு என்பதில் நம்பிக்கை இல்லாமல், இறந்த உடலில் உயிர் மீண்டும் வரும் என்று நம்பினர். பிணம் அழுகுவதைக் கண்டதும், அதைப் பாதுகாக்க வேண்டி உடலைப் பதப்படுத்தும் முறைகளைக் கையாளத் துவங்கினர். முதல் கட்டத்தில் தைலங்கள், வாசனைப் பொருள்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி, உடல் தெரியாதவாறு ஒரு வகை ஆடையால் இறுக்கப் போர்த்திக் கட்டி அவற்றைப் பாதுகாக்கும் வண்ணம் பிரமிடுகளின் உள்ளே உடலை வைத்தனர். அந்த உடல் மீண்டும் உயிர் பெறும் என்கிற நம்பிக்கையில், அவர்கள் பயன்படுத்திய தங்க நகைகளால் உடலை அலங்கரித்து வைத்தனர். மற்றும் உடைகள், காசுகள், உணவு வகைகள் போன்றவையும் அந்தப் பிரமிடுகளில் வைக்கப்பட்டன. நாட்டின் அரசன் இறந்தால், அவன் மீண்டும் உயிர் பெற்றதும், அவனுக்குப் பணிவிடை செய்ய பணியாளர்களையும் உயிரோடு பிரமிடுகளில் அடைக்கும் வழக்கமும் இருந்தது.

திராவிட நாகரிகமான மொகஞ்சதாரோ,ஹரப்பா போன்ற பகுதிகளிலும், இந்தியாவின் தென் பகுதிகளிலும் பெரிய மண் பானைகளில் உடல்களை வைத்துப் புதைக்கும் வழக்கம் ஏற்பட்டது. இறந்தவர்களின் ‘ஆவி’ திரும்ப வந்து, உயிரோடிருப்பவர்களைத் துன்புறுத்துமோ என்ற பயத்தின் விளைவாகவே புதைக்கும் பழக்கம் தோன்றியது. ஆனால் மரணமடைந்த பெற்றோர்கள், நண்பர்கள் தீங்கு செய்யமாட்டார்கள் என்கிற நம்பிக்கையால் அவர்களைப் புதைத்த இடத்தை வணங்குவதும், அவர்களுக்கு பிடித்ததைப் படைத்தல் போன்ற வழக்கங்கள் வளர்ந்தன. இறந்த ஆவிகள் மீண்டும் எழுந்து வராமல் இருக்க புதைத்த இடத்தில் பெரும் பாறைகள் வைக்கப்பட்டன. நாளடைவில் அந்த ஆவிகளைத் திருப்திப்படுத்த உயிர் பலி கொடுக்கும் பலிபீடங்களாக அவை மாறிப்போயின.

ஆரம்ப காலகட்டங்களில் தங்கள் தங்குமிடங்களை ஒட்டியே பிணங்களை புதைக்கும் வழக்கம் இருந்தது. தங்கள் குலத்தின் மூத்தவர்கள், (மீண்டு வராத நிலையில்) அவர்கள் நல்வழி காட்டுவார்கள் என்ற நம்பிக்கையே அவர்கள் குலத்தின் தெய்வங்களாயினர். (இன்றும் கூட பூஜை அறையில் குடும்ப மூதாதையர்களின் படங்களை வைத்துக் கும்பிடும் பழக்கம் பல வீடுகளில் காணலாம். ஒரு குழுவின் தலைவன் அக்குழுவிற்கு வழிகாட்டும் நிலையிலிருந்ததால் அவன் இறந்தபின் அவனைப் புதைத்த இடத்தில் அடையாளத்திற்கு கற்களையும்,. கட்டைகளையும் நட்டு வைக்கும்வழக்கம் ஏற்பட்டது. இதையே ‘நடுகல்’ என்று அழைத்து வணங்கும் வழக்கம் ஏற்பட்டது. அதேபோல் நாட்டை ஆண்ட அரசன் இறந்தபின் அவனை அடக்கம் செய்த இடத்தில் மண்டபம் போன்ற நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டன.
அறிவும் கலைத்திறனும் வளர வளர மன்னனைப் போன்ற உருவங்கள், சிற்பமாக வடிக்கும் பழக்கம் ஏற்படத் துவங்கியது. ஆரம்பக் காலகட்டங்களில் இந்தத் தலைவன் அல்லது அரசனுடைய சிலைகளே தெய்வங்களாகவும், வணங்குவதற்குரிய பொருளாகவும் மாறின. அவர்களைப் புதைத்த இடங்களில் கட்டப்பட்ட கோயில்கள் தோன்றிய விதத்தையும், இறந்தவர்கள் கடவுள்களானதைப் பற்றியும், கோயில்கள் ஏற்பட்ட விதம் பற்றியும் பல அறிஞர்கள் பல பகுதிகளிலும் ஆய்வு செய்து அறிக்கைகள் கொடுத்துள்ளனர்.

திரு பி.ளி. பார்பஸ், திரு. து. வீசல்லு, திரு. ஃபிரேசர், திரு. ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் போன்ற சமூகவியல் ஆய்வாளர்கள் பல பகுதிகளில் வாழ்ந்த பல குழுக்களையும், அவர்களது பழக்க வழக்கங்களையும் ஆய்வு செய்து, உயிர்களின் மரணம் என்ற இயற்கை நிகழ்வுகளை ஒவ்வொரு இன மக்களும் அணுகிய முறைகளையும் ஆய்வு செய்து பல கட்டுரைகளைத் தந்துள்ளனர். மனிதன் குகைகளில் வசித்த காலம் முதல், நாகரிகமடைந்த காலம் வரை பலவற்றையும் ஆய்வு செய்தே அக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. குகைகளில் வாழ்ந்த மனிதன் இறந்த உடன் அவனைச் சுற்றி இருந்தவர்கள் அந்த உடலை அப்படியே விட்டுவிட்டு வேறு இடத்திற்குக் குடிபெயர்ந்தனர். இதுவே குகைக்கோயில்கள் தோன்றக் காரணமாயின.

ஆரம்பத்தில் அறிவு வளர்ச்சியற்ற காலத்தில், இறப்பு என்பதை உணராத காலத்தில் ஏற்பட்ட மூடநம்பிக்கைகள், அவர்கள் உருவமே இல்லாத நிலையிலும் வழிகாட்டுவார்கள் என்ற எண்ணமும், அவர்களுக்கு வேண்டிய உணவுகளை ‘படையல்’ என்கிற பெயரில் வைத்து வணங்குவதும், வணக்கத்திற்குரியவர்களாக அவர்களை நினைத்ததும், அவர்களைப் புதைத்த இடத்தில் நடுகல் போன்றவற்றை நட்டு வணங்குவதும், அந்த உடல்கள் இருந்த இடத்தை வணங்குதல் போன்ற பழக்கங்கள், அறிவு வளர்ச்சியடைந்த இந்தக் காலத்திலும் எல்லா மதங்களிலும் இன்றும் இருப்பதைக் காணலாம். பழங்காலப் பழக்க வழக்கங்கள் எல்லா மதங்களிலும் இன்றும் தொடர்ந்தாலும், “ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டவர் மீள மாட்டார்’’ என்னும் உண்மையை மட்டும் மனிதர்கள் இன்று உணர்ந்துள்ளனர் என்பதே ‘உண்மை.’ –

(தொடரும்)