நாஸ்திகம்

2023 சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் டிசம்பர் 1-15, 2023

நூல் குறிப்பு :
நூல் பெயர்: ‘கடவுள் கற்பனையே’
ஆசிரியர்: ஏ.எஸ்.கே
வெளியீடு: எதிர் வெளியீடு
பக்கங்கள்: 138
விலை: ரூ.90/-

கம்யூனிஸ்ட்கள் நாஸ்திகர்களா? ஆம்! கம்யூனிஸ்ட்கள் நாஸ்திகர்-கள்தாம்! ஆனால், நாஸ்திகம் என்பது ‘அ’ னா ‘ஆ’ வன்னாதான். கம்யூனிஸ்ட்கள் மேலும் பல படிகள் சென்று தர்க்க இயல் பொருள் முதல்வாதிகள் (Dialectical Materialists)ஆவார்கள்.

‘பொருள் முதல் வாதம்’ என்றால் என்ன என்பதை முதலில் பார்த்துவிட்டு பிறகு ‘தர்க்க இயல் பொருள் முதல்வாதம்’ என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.
ஆரம்ப நாளிலிருந்து தத்துவ ஞானிகள் இரு முகமாகப் பிரிந்து நின்றனர். ஒரு சாரார் எண்ணம் முதல் வாதிகள் (Idealist) என்றும் மற்றொரு சாரார் பொருள் முதல்வாதிகள் என்றும் இரு முகாம்களாக இருந்தனர்.

எண்ணம் முதல்வாதிகள் கூறுவதாவது:

ஆத்மார்த்த, அதாவது பொருள் அல்லாத எண்ணந்தான் ஆதி முதல் என்றும், பொருள் என்பது இரண்டாம் பட்சமென்றும், எனவே பல மதங்கள் நம்புவது போல் இவ்வுலகத்தையும், பிரபஞ்சத்தையும் கடவுள் சிருஷ்டித்தார் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள். உண்மையில் இந்த வாதம் எண்ணத்தைப் பொருளிலிருந்து பிரித்து, அதை மேன்மைப் படுத்துவதேயாகும். சுருங்கக் கூறின், புராணக் கதைகளையும், மதத்தையும் இது மெருகுபடுத்துவதே ஆகும். எதார்த்த பிரத்தியட்ச உலகத்தைப் பார்க்க மறுப்பதும், எனவே, சமுதாயத்தில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியையும், உற்பத்தி உறவுகளையும் பார்க்க மறுப்பதுடன் சமுதாயத்தில் உள்ள சுரண்டலை ஒழிக்க வழி தேடுவதற்குப் பதிலாக, மனிதன் மனிதனைச் சுரண்டும் அநீதியை நியாயப்படுத்துவதும், மண்ணுலகில் மனிதன் படும் கஷ்டங்களுக்கும் துன்ப துயரங்களுக்கும் விடுதலை விண்ணுலகில் உண்டு என்று கூறுவதுமேயாகும். இதைத்தான் எல்லா மதங்களும் கூறி வருகின்றன. ஊசியின் காதில் ஒட்டகம் நுழைந்தாலும் நுழையலாம். ஆனால், பணக்காரன் சுவர்க்க லோகத்தில் நுழையவே முடியாது என்பது இவ்வுலகில் ஏழை ஏழையாகவே இருக்கவேண்டும் என்று நியாயப்படுத்த ஒரு கருவியாக உள்ளது.

வேதாந்தமும், கன்பூசியானிசமும் (சீன தத்துவ ஞானம்) கிழக்கிலும், பிளாட்டோ, காண்ட் முதலிய தத்துவ ஞானம் மேற்கத்திய நாடுகளிலும், சமுதாய அமைப்பை அப்படியே பேணிக் காக்க பேருதவி அளித்தன. நாம் காணும் உலகம் உண்மையல்ல, அது பொய், அது ஒரு மாயை என்றுதான் எண்ணம் முதல்வாதிகள் அன்று முதல் இன்றுவரை கூறி வந்துள்ளனர். ஆகவே, உண்மையை அறிய வேண்டுமென்றால், அழியாப் பொருளாகிய கடவுளை அடைய வேண்டும்_ இதுதான் எண்ணம் முதல்வாதிகளின் பிரதான கருத்தாகும்.

நாஸ்திகம் இவை அனைத்தையும் மறுக்கிறது. இயற்கைக்கு அப்பாற்பட்ட பூதங்களுமில்லை, பேய் பிசாசும் இல்லை. கடவுளும் இல்லை. இறந்த பிறகு வேறு உலகமும் இல்லை; வாழ்வும் இல்லை என்று நாஸ்திகம் ஆணித்தரமாகக் கூறுகிறது.

மதம் எவ்வாறு எச்சூழ்நிலையில் தோன்றுகிறது என்றும், ஏன் தோன்றியது என்றும் கூறுவதுடன், விஞ்ஞான ரீதியாக பிரபஞ்சத்தைப் படித்து, அந்நிலையிலிருந்து மதக் கோட்பாடுகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் ஈவிரக்கமின்றி நாஸ்திகம் அம்பலப்படுத்துகிறது. மதம் சமுதாயத்தில் ஆற்றும் பணியை அறவே வெறுத்து, மதத் தீமைகளையும், மதத்தையும் ஒழிக்க நாஸ்திகம் அயராது பாடுபடுகிறது.

விஞ்ஞானம் வளர வளர, நாஸ்திகம் தோன்றி, பரிணாம வளர்ச்சி பெற்றுத் தழைத்தோங்கி வளர்கிறது.
மனித சரித்திரத்தின் ஒவ்வொரு கால கட்டத்திலும் எந்த அளவு மனிதன் அறிவு வளர்ந்துள்ளது என்பதை நாஸ்திக வளர்ச்சியே எடுத்துக் காண்பிக்கிறது. இத்துடன், அவ்வப்போது எந்தெந்த வர்க்கங்கள் தங்களுடைய நலன்களுக்காக நாஸ்திகத்தை ஒரு தத்துவார்த்த ஆயுதமாக உபயோகப்படுத்தி வந்தது என்பதையும் எடுத்துக் காண்பிக்கிறது.

நாஸ்திகத்தின் உண்மையான உள்ளடக்-கமும் அதன் ஒவ்வொரு வடிவத்தின் குறைபாடுகளும் எதார்த்த சமுதாய பொருளாதார நிலைகளாலும், விஞ்ஞான வளர்ச்சி மட்டத்தாலும் பொருள் முதல்வாத தத்துவத்தாலும் நிர்ணயிக்கப்படுகிறது.
மதத்தை எதிர்த்து நாஸ்திகம் போராடுவது வர்க்கப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது.
அடிமைச் சமுதாயத்திலேயே நாஸ்திகம் தத்துவார்த்தக் கொள்கையாகத் தோன்றியது. ஹராக்கிளிடஸ், டெமாக்கிரடஸ், எபிகுரஸ், செனோபேன்ஸ் போன்றவர்களுடைய நூல்களில் பல நாஸ்திகக் கருத்துகளைக் காணலாம்.
உலகில் ஏற்படும் பல நிகழ்ச்சிகளும் இயற்கைக் காரணங்களால் ஏற்படுகின்றன என்று கூறி மத நம்பிக்கையை இவர்கள் எதிர்த்த போதிலுங்கூட, கடவுள் நம்பிக்கையைப் பூரணமாகக் கொண்டவர்களே இவர்கள்.

மத்திய காலத்தில் தேவாலயமும் மதமும் (Church and Religion) மிகப் பெரிய சக்தியாக இருந்தபோது நாஸ்திகம் பெரிய அளவு மதத்தின் செல்வாக்கை உடைத்தெறிந்தது. நிலப்பிரபுத்துவ சமுதாயத்தைத் தகர்த்தெறிந்தது, பிரெஞ்சுப் புரட்சி வெற்றி பெற நாஸ்திகமும் பகுத்தறிவும் பெருந்துணையாக இருந்தன. ரஷ்ய புரட்சிக்காரர்களின் நாஸ்திகம் மிக சக்தி வாய்ந்ததாகவும் முன்னுக்குப் பின் முரணற்றதாகவும் இருந்தது. நாஸ்திகம், மார்க்சிசம் -_ லெனினிசத்தில் தான் பூரண வடிவத்துடன் உள்ளது.

மார்க்சிஸ்ட் நாஸ்திகத்தின் தத்துவார்த்த அடிப்படைதான் தர்க்க இயல் பொருள் முதல்வாதமும், சரித்திர இயல்பொருள் முதல் வாதமும் ஆகும்.
மார்க்சிஸ்ட் நாஸ்திகம், தீவிரமானது _ புரட்சிகரமானது. சரித்திரத்திலேயே முதல் தடவையாக எல்லாக் கோணங்களிலிருந்தும் மதத்தைத் தாக்குவதுடன் அதனை அடியோடு ஒழிப்பதற்கான வழி வகைகளை மார்க்சிஸ்ட் நாஸ்திகம் வகுத்துக் கொடுக்கிறது.

மதத்தை அடியோடு பிடுங்கி எறிய, அதன் சமுதாய வேர்களை வெட்டி எறிய கம்யூனிஸ்ட் சமுதாயத்தைக் கட்டி வளர்க்கும் தறுவாயில் முடியும்.
பொருள் முதல்வாதம், எண்ணம் முதல்வாதத்திற்கு நேர்முரணானது. சாதாரண மனிதர் தெளிவாகப் பார்க்கக் கூடிய விஷயத்தை அடிப்படையாகக் கொண்டது பொருள் முதல்வாதம். இவ்வுலகம் எண்ணத்தால் ஏற்பட்டதல்ல. உண்மையில் உலகம் உண்டு. அது புற நிலைப்பட்டது. தத்துவார்த்த உலகக் கண்ணோட்டம் இந்தத் தன்னிச்சைப் பொருள் முதல்வாதத்தை விஞ்ஞான ரீதியாகக் காரணம் கூறிப் பலப்படுத்துகிறது.
தத்துவார்த்தப் பொருள் முதல்வாதம் பொருள் ஆதி முதல் என்றும், எண்ணம் – கருத்து இரண்டாம் பட்சமென்றும் கூறுகிறது. இதன் அர்த்தமென்ன? உலகம் சாசுவதமானது, அது கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டதல்ல. அது காலத்திலும், வெட்ட வெளியிலும் எல்லையற்றது, முடிவற்றது என்பதே.

உணர்வும், எண்ணமும் பொருளின் இன்றியமையாத குணமாகும்; எனவே, எதார்த்த உலகத்தின் பிரதி பிம்பமாகும். ஆகவே, உலகத்தை உணர முடியும்.
தத்துவ ஞானத்தின் சரித்திரத்தில் பொருள் முதல்வாதம், சமுதாயத்தில் உள்ள முற்போக்கு வர்க்கங்களின் உலகைச் சரியாகப் புரிந்துகொண்டு இயற்கையை மேலும் மேலும் மனித சக்திக்குள் கொண்டு வர வேண்டும் என்ற அவாதான். விஞ்ஞான வளர்ச்சியை மதிப்பீடு செய்வதன் மூலம் பொருள் முதல்வாதமும், விஞ்ஞான அறிவை மேலும் வளர்த்தது; விஞ்ஞான முறைகளைப் பலப்படுத்தியது. இவை அனைத்தும் மனிதனுடைய நல உரிமைகளை மேலும் வளர்த்தது. உற்பத்தி சக்திகளை மேலும் அபிவிருத்தி செய்ய உதவியது. பொருள் முதல்வாதத்திற்கும்,விஞ்ஞானத்திற்கும் இடையே உள்ள உறவு இவ்விரண்டின் வளர்ச்சிக்கும் சாதகமாக இருந்தது. இந்தியா, சீனா, கிரீஸ் போன்ற நாடுகளில் அடிமைச் சமுதாயத்திலேயே வான சாஸ்திரம், கணித சாஸ்திரம் போன்ற பல துறைகளில் மெய்ஞ்ஞான அறிவு வளர அங்கு பொருள் முதல்வாதக் கருத்துகள் தோன்றத் தொடங்கின.

புராதனப் பொருள் முதல்வாதத்தின் பொதுவான தன்மை கபடமற்றதேயாகும். இதை சார்வாகர் தத்துவ ஞானத்திலும், ஹெராகுடஸ், எபிகுரஸ் தத்துவ நூல்களிலும் பார்க்கலாம். உலகம் மனித எண்ணத்தால் ஏற்பட்டதல்ல; அது மனிதன் தோன்றுவதற்கு முன்னரே இருந்தது என்று மேற்கூறிய தத்துவ ஞானிகள் கூறி உள்ளனர். இயற்கைத் தோற்றம் பலதிறப்பட்டதில் பொதுவான தொன்று இருக்க வேண்டும் என்றனர் புராதனப் பொருள் முதல்வாதிகள். அந்தக் காலத்திலேயே ஓர் உண்மையைக் கூறிய பெருமை அவர்களைச் சாரும் _ அதாவது ஒரு பொருளின் மிகச்
சிறு துகளை அணு என்று கூறினர். புராதனப் பொருள் முதல்வாதிகள் பலர் அவர்கள் அறியாமலேயே தர்க்க இயல்வாதிகளாக இருந்து வந்தனர். ஆனால், பொருள் முதல்வாத வளர்ச்சியில், தர்க்க இயல் அடிப்படைகளிலும் புராதனப் பொருள் முதல்வாதிகள் இயற்கையே கடவுளென்று சரளமாக உபயோகப்படுத்தி இருப்பதைக் காணலாம்.

அய்ரோப்பாவில் 17_18ஆம் நூற்றாண்டுகளில் பொருள் முதல்வாதம் தழைத்தோங்கி வளரத் தொடங்கியது. பேக்கன், கலிலியோ, ஹாப்ஸ், பினோசா லாக் முதலியோர் பிரசித்தி பெற்ற பொருள் முதல்வாதிகளாக விளங்கினர். அப்போதுதான் இளம்பருவத்தில் இருந்த முதலாளித்துவத்தின் அஸ்திவாரத்தின் மீது பொருள் முதல்வாதம் வளரத் தொடங்கியது. உற்பத்தி, இயந்திர வளர்ச்சி வளரத் தொடங்கியது. உற்பத்தி, இயந்திர வளர்ச்சி விஞ்ஞானத்தின் மீது பொருள் முதல்வாதம் ஆதாரப்பட்டு நின்றது. வளர்ந்துவரும் முற்போக்கு பூர்ஷ்வா  வர்க்கத்தின் நல உரிமைகளைப் பேணிக்காக்கும் முறையில், பொருள் முதல்வாதம் பழைய மூடப்பழக்க வழக்கங்களையும், மடாதிபதிகளின் அதிகாரத்தையும் எதிர்த்துப் போராடியது.
மிக விரைவாக வளர்ந்துவரும் பொறி நுட்பவியலுடன் (Mechanism) கணித சாஸ்திரத்துடனும் சேர்ந்து வளர்ந்த 17_18ஆம் நூற்றாண்டின் பொருள் முதல்வாதம் இயல்பாகவே யாந்திரீகமாக இருந்தது.

அது இயற்கையைப் பல்வேறு பாகங்களாக்கிப் பிரிவு ஆராய்ச்சி செய்ததே தவிர, இவற்றை இவ்வாராய்ச்சிக்குப் பின் ஒன்று சேர்ந்து ஒட்டுமொத்தமான நிகழ்ச்சியாகப் பார்க்கவில்லை. 18ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு பொருள் முதல்வாதிகளான ஹால்பாக், ஹெல்வீடியஸ் ஆகியோர் பொருளின் இன்றியமையாத குணம் அசைவு என்றனர். இவ்வாறு கூறியதன் மூலம் 17ஆம் நூற்றாண்டின் பொருள் முதல்வாதிகளின் பல முரண்பாடுகளையும் தகர்த்தெறிந்தனர். எல்லாவித பொருள்முதல் வாதத்திற்கும், நாஸ்திகத்திற்கும் உள்ள ஜீவ(உயிர்ப்) பிணைப்பை 18ஆம் நூற்றாண்டின் பொருள் முதல்வாதிகளிடம் காணலாம்.
புவர்பாக் (Feurebach) பொருள் முதல்வாதியாக இருந்தும் தியான சிந்தனையில் மூழ்கிப் பிரிந்து கிடந்தார்.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ரஷ்ய நாட்டுப் பொருள்முதல்வாதிகள் புரட்சிகர ஜனநாயகவாதிகளாகக் காட்சி அளிக்கின்றனர் _ பெலின்ஸ்கி, ஹெர்சான், செர்னிசாவஸ்கி முதலியோர். இவ்வாறிருந்த பொருள்முதல்வாதம் பரிணாம வளர்ச்சியில் தர்க்க இயல் பொருள்முதல்வாதமாகக் காட்சியளிக்கிறது.
எனவே, நாஸ்திகம் பொருள்முதல்வாதத்திற்கு இன்றியமையாததாகும்.

இன்று முதலாளித்துவ சமுதாயத்தைக் கடுமையாக எதிர்த்து நிற்கும் தத்துவம் தர்க்க இயல் பொருள் முதல்வாதமாகும். இதைக் கண்டு பூர்ஷ்வா அடிவருடிகள் (முதலாளி தாசர்கள்) பொருள்முதல் வாதத்தையும், நாஸ்திகத்தையும் அவதூறு செய்ய முன் வந்துள்ளனர். தர்க்க இயல் பொருள்முதல்வாதிகள் அறுசுவையோடு அன்னம் உண்டு, மடவாரோடு மந்தனம் கொள்வதுதான் அவர்கள் குறிக்கோள் என்று தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இது உண்மைக்கு முற்றிலும் மாறுபட்டதாகும். தர்க்க இயல் பொருள் முதல்வாதிகள் அனைவரும் லட்சியவாதிகள். சுரண்டலற்ற, வர்க்க பேதமற்ற, எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் உணவு, எல்லோருக்கும் உடை, எல்லோருக்கும் எல்லாம் என்றிருப்பதான உன்னத சமுதாயத்தைப் படைக்க வேண்டு-மென்பதே அவர்கள் லட்சியம். தர்க்க இயல் பொருள் முதல்வாதிகள் மனிதப் பண்பாட்டில், மனிதாபிமானத்தில் மிகச் சிறந்தவர்கள். அறத்திலும், ஒழுக்கத்திலும், இன்றுள்ள பூர்ஷ்வா_ சமுதாயத்தில் உள்ள ஆஸ்திகர்களுக்குத் தர்க்க இயல் பொருள் முதல்வாதிகள் இளைத்தவர்களல்ல, சளைத்தவர்களல்ல.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை (குறள்-37)