ஆறு. கலைச்செல்வன்
தங்கள் மகன் இராசேந்திரன் திருமணத்தை சுயமரியாதைத் திருமணமாக, தாலி கட்டாமல் நடத்த வேண்டும் என முடிவு செய்தனர். நந்தகுமார் – சரோஜா இணையர்.
அந்த மிகச் சிறிய குக்கிராமத்தில் தாலி காட்டாமல் திருமணம் நடக்கப்போவதை அறிந்த மக்கள் மிக்க வியப்படைந்தனர். குறிப்பாக பெண்கள் கும்பல் கும்பலாகக் கூடி இதுபற்றியே பேச ஆரம்பித்தனர்.
ஏதோ நடக்கவே கூடாத செயல் நடக்கப்-போவதாக எண்ணிப் பதறினார்கள்.
“இது என்ன அநியாயம்! இது அடுக்குமா! இதெல்லாம் அழிஞ்சி போறதுக்கு அறிகுறியோ!’’
“தாங்கள் கெடுவதோடு ஊரையும் கெடுக்கிறார்களே… இதை யாரும் கேட்பாரில்லையா?’’
“இவர்களுக்கெல்லாம் குழந்தை பிறக்குமா? சாமி குத்தத்துக்கு உள்ளாகப் போறாங்களே!’’
இப்படியாகப் பலரும் பலவிதமாகப் பேசித் தீர்த்தார்கள்.
அந்தக் கிராமத்தைச் சேர்ந்த கபாலி என்பவன் மிகவும் வில்லங்கமாகச் சிந்திப்பவன். தன்னை ஒரு ஒரு பக்திமானாகக் காட்டிக்கொள்வான். பணத்துக்காக எதையும் செய்பவன். அவன் இந்தத் திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என முடிவு செய்தான். தன் நண்பர்களுடன் இதுபற்றி விவாதித்தான்.
“போலீசில் புகார் கொடுக்கலாம் என நினைக்கிறேன்’’ என்றான் தனது நண்பர்களிடம்.
இதைக் கேட்ட அவனது நண்பர்களில் ஒருவனான செல்வம் வாய்விட்டுச் சிரித்தான். அவன் நன்கு படித்தவன்.
“ஏன் சிரிக்கிறே?’’, என்று கோபத்துடன் கேட்டான் கபாலி.
“சிரிக்காம என்ன செய்ய! தாலி கட்டாமச் செய்ற திருமணத்தைத் தடுத்து நிறுத்த முடியாதுடா! அதுக்கு சட்ட அங்கீகாரம் இருக்கு. சுயமரியாதைத் திருமணம் என்று அதுக்குப் பேரு. புரோகிதப் பார்ப்பனர்களுக்கு அங்கு இடமில்லை. போலீசுக்குப் போய் புகார் கொடுத்தா அவங்க சிரிப்பாங்க’’
“கல்யாணம்’னா தாலி கட்டித்தானே ஆகணும்? எப்படி அது செல்லும்?’’
“இப்படித்தான் சில பேரு வகை தெரியாம உளறிக்கிட்டு இருக்காங்க கபாலி. நீ எனக்கு வேண்டியவன்தான். நண்பன்தான். ஆனாலும் நான் உனக்கு உண்மையான செயதியைத் தான் சொல்றேன். நீ கேக்கறதும் நல்லதுதான். தமிழ்நாடுன்னு எப்படி பெயர் வந்ததுன்னு இப்பத்தான் நெறைய இளைய சமுதாயத்தினருக்குத் தெரியவருது. அதுபோலவே சுயமரியாதைத் திருமணம் பத்தியும் இனிமே நிறைய பேர் தெரிஞ்சிப்பாங்க’’, என்றான் செல்வம்.
“செல்வம், நீ அவங்களுக்கு ஆதர
வாகவே பேசற. நீயும் தாலி கட்டாம நடத்தறகல்யாணத்தை ஆதரிக்கிறியா?, என்றுசற்று கோபத்துடன் கேட்டான் கபாலி.
“அப்படி இல்லப்பா, உண்மையைத்தான் சொல்றேன். ஜாதி, மதம் பார்க்காமலும், தாலி கட்டாமலும் முதன்முதலாக எப்போ கல்யாணம் நடந்தது தெரியுமா?’’
“தெரியாது. சொல்லேன்’’
“1928ஆம் ஆண்டு நடந்துச்சி. பெரியார் நடத்தி வைச்சார். அப்போ கலப்புத் திருமணம் செய்ஞ்சிக்கிட்டா தெய்வக் குத்தம்னு எல்லோரும் சத்தம் போட்டாங்க. அப்போ பெரியார் என்ன சொன்னார் தெரியுமா? நான் என்ன கழுதைக்கும் குதிரைக்குமா கல்யாணம் செய்ஞ்சி வைச்சேன்? அப்படிச் செய்ஞ்சாத்தான் அது கலப்புத் திருமணம். நான் மனித ஜாதியில் பிறந்த ஆணுக்கு பெண்ணுக்கும் தானே திருமணம் செய்ஞ்சு வைச்சேன்! அது எப்படி கலப்புத் திருமணமாகும்னு கேட்டார். ஆனால் அந்தத் திருமணத்துக்கெல்லாம் அப்போ சட்ட அங்கீகாரம் இல்லை. ஆனால், அண்ணா ஆட்சிக்கு வந்தப்புறம் 1967ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி சட்ட அங்கீகாரம் கெடைக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
“அது சரி செல்வம், சுயமரியாதைத் திருமணம்னு சொன்னாலும் தாலி கட்டித்தானே ஆகணும்?’’
“அதுதான் இல்லை கபாலி. அப்போது முதலமைச்சராக இருந்த அண்ணா அந்தச்
சட்ட மசோதாவைத் தயார் செய்தபோது சுயமரியாதைத் திருமணத்தில் மாலை மற்றும் தாலி அணிவித்தல் என்றுதான் இருந்தது. அதை அவர் பெரியாரிடம் காட்டி வரச்சொன்னபோது பெரியார் என்ன செய்தார் தெரியுமா?’’
செல்வம் பேச்சை நிறுத்தினான். அப்போது நிறைய பேர் அங்கு கூடிவிட்டார்கள். எல்லோருமே செல்வம் பேசுவதைக் கூர்ந்து கவனித்தார்கள்.
“பெரியார் என்ன செய்தாராம்?’’ என்று கேட்டான் கபாலி.
“மாலை மற்றும் தாலி அணிவித்தல்’’ என்ற சொற்றொடரை மாற்றி ”மாலை அல்லது தாலி அணிவித்தல்’’ எனத் திருத்தி அனுப்பினார். அண்ணாவுக்கே அப்போதுதான் அது புரிந்தது. பெரியாரின் திருத்தத்திற்குப் பிறகே சட்டமாயிற்று. இப்ப சொல்லு கபாலி. நீ போலீசில் புகார் கொடுக்க முடியுமா?’’
“முடியாதுதான்! இப்ப என்ன பண்றது? ஏதாவது செய்தாகணுமே. ஆ! எனக்கு ஒரு அய்டியா தோணுது. செல்வம்.’’
“என்ன அய்டியா கபாலி?’’
“நந்தகுமார் பையன் இராசேந்திரன் திருமணத்துக்கு அடுத்த வாரம் மாயவன் மகன் முத்துக்கண்ணுவுக்குக் கல்யாணம் இல்லையா?’’
“ஆமாம் கபாலி’’.
“அந்தக் கல்யாணத்தை இராசேந்திரன் கல்யாணத்தன்றே நடத்த ஏற்பாடு செய்வோம். இந்தக் கல்யாணத்தைப் பத்தியே ஊர் மக்கள் பேசும்படியா செய்வோம். இருக்கவே இருக்கு மதப்பிரச்சினை. கிளப்பிவிடுவோம். என்ன சொல்றே செல்வம்?’’
“நீ போடறது பெரிய திட்டம்தான். வேறு யாரோ உனக்குச் சொல்லிக் கொடுத்து உன்னை இயக்கறது போல் எனக்குத் தோணுது. ஒரே கிராமத்தில் பிரச்சினை வேண்டாமே கபாலி. அதோடு நீ சொல்றதை மாயவன் கேட்பானா கபாலி?’’
“கேட்க வைப்பேன். மதஉணர்ச்சியை அவனுக்கு ஊட்ட வேண்டியதுதான். நம்ம சாமிக்கு ஆபத்துன்னா அவன் ஓடிவருவான் செல்வம்.’’
“எப்படியோ! மதம் மனிதனை மடையனாக்கும் என்பதை நீயும் நிரூபிக்கப்போறே’’
“நீ அடிக்கடி இப்படித்தான் ஏட்டிக்குப் போட்டி பேசுவே செல்வம். நீ எனக்கு உதவி செய்வியா? மாட்டியா? சொல்லு செல்வம்.’’
“நீ எனக்கு பால்ய நண்பனாச்சே கபாலி. உதவி செய்ஞ்சுதானே ஆகணும். ஏற்பாடு செய்வோம்.’’
இத்தகைய திட்டத்தோடு அனைவரையும் கலைந்துபோகச் செய்தான் கபாலி.
அப்போதே மாயவன் வீட்டிற்குச் சென்று அவரு
டன் பேசினான். அவனோடு ஊருக்குச் சம்மந்தமில்லாத வேறு இரண்டு ஆள்களையும் அழைத்துச் சென்றான். மாயவன் திருமணத் தேதியை மாற்ற முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும் கபாலியும் அவனோடு வந்த இரண்டு
ஆள்களும் அவரை மூளைச்
சலவை செய்தனர். வேறு மதத்தில் இப்படியெல்லாம் நடக்குமா என்ற கோணத்தில் பேசி அவரைச் சம்மதிக்க வைத்தனர். மாயவனுக்கு முழுத் திருப்தி இல்லையென்றாலும், அரைமனதுடன் ஒப்புக்கொண்டார். தீவிரப் பக்தனாக இருந்தாலும் அவர் மகன் முத்துக்கண்ணுவும் அரை
மனத்துடனேயே அவர்களின் பேச்சுக்குத் தலையாட்டினான்.
இந்நிலையில் கபாலிக்கு சில மதவாத சக்திகளிடமிருந்து கணிசமான பணஉதவியும் கிடைத்தது.
அடுத்த சில நாள்களில் முத்துக்கண்ணு திருமணமும் இராசேந்திரன் திருமணத்தன்றே நடைபெறும் என அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறத் தொடங்கின.
நிறைய இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டன. நிறைய விளம்பரங்கள் செய்தான் கபாலி. பேனர்களில் சாமி படங்களையெல்லாம் போட்டு, புரோகிதரை வைத்து தாலி கட்டும் திருமணம் என அறிவிப்புச் செய்தான்
கபாலி. இராசேந்திரன் திருமண விளம்பரங்
களையெல்லாம் மறைத்து பேனர் கட்டினான். சுயமரியாதைத் திருமணத்தின சிறப்பைக் குறைக்கவே இவ்வாறு செய்தான்.
மாயவனை அழைத்துக் கொண்டு புரோகிதர் வீட்டிற்குச் சென்றான். திருமணத் தேதியை மாற்றிய விவரத்தை புரோகிதரிடம் கூறி, அன்று வந்துவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.புரோகிதன் சற்றுஇளையவனாகக் காணப்
பட்டான். முதலில் சற்று தயங்கினான் புரோகிதன் காரணம், அன்றைய தேதியில் அவன் ஏற்கெனவே இரண்டு திருமணத்திற்குச் செல்ல ஒப்புக்கொண்டிருந்தான். இருப்பினும் வருமானத்-திற்காக அந்தத் திருமணங்
களை நடத்தி முடித்தபின் வரலாமென நினைத்து ஒப்புக்கொண்டான்.
கபாலி அளவுக்கு அதிகமாகவே ஆட ஆரம்பித்
தான். சுயமரியாதைத் திருமணத்தைப் பற்றி யாரும் பேசக்கூடாது, கிராமம் முழுவதும் புரோகிதத் திருமணத்தைப் பற்றியே பேசி சுயமரியாதைத் திருமணத்தின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்பதே அவனுக்கு பணஉதவி செய்தும், மதஉணர்ச்சியை ஊட்டியும் வரும் தீயசக்திகளின் கட்டளை. கிராமத்தில் கலவரத்தை உண்டு பண்ணவேண்டும் என அந்த தீயசக்திகள் விரும்பின.
ஆனால் இராசேந்திரன் குடும்பத்தினர் அதை எதுவுமே கண்டுகொள்ளவில்லை. திருமண விழாவைச் சிறப்பாக நடத்தி முடிக்கவேண்டும் என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர்.
திருமண நாளும் வந்தது. இராசேந்திரன் திருமணத்தில் பலர் கருத்துரைகள் வழங்கினர். அவர்கள் பேச்சை மக்கள் விரும்பிக் கேட்டனர். புரோகிதர்கள் சொல்லும் மந்திரங்களின் பொருளைச் சொன்னவுடன் பலர் கோபத்தின் உச்சிக்கே சென்றனர். ஆரம்பத்தில் இந்தத் திருமணத்திற்கு, கூட்டம் குறைவாகவே இருந்தது. பிறகு கருத்துரைகளைக் கேட்க கேட்க ஊர் மக்கள் பலரும் திரண்டு வந்தனர்.
“கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை தாலி கட்டும் பழக்கம் இல்லை. ஆதிச்சநல்லூர், கீழடி அகழ்வாய்வுகள் மூலம் இதை அறியலாம். சிலப்பதிகாரத்திலும் தாலி கட்டும் வழக்கம் இல்லை. சங்க இலக்கியங்களில் பிள்ளைகளின் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டுவதை “அய்ம்படைத் தாலி’’ என்றனர். சங்க இலக்கியங்களில் குங்குமம், மஞ்சள் பற்றி கூட பேசப்படவில்லை.’’
இவ்வாறு மணவிழாவின் தலைவர் பேச மற்ற கருத்தாளர்களும் தொடர்ந்து பேசினர்.
“தாலி ஓர் அடிமைச்சின்னம். எருமை மாடுகளை விலைக்கு வாங்கி அதன் கழுத்தில் கயிற்றைக்கட்டி இழுத்து வருவது மாதிரிதான் பெண்களுக்கு ஆண்கள் தாலி கட்டுவது. பெண் கல்யாணமானவள் என்பதைக் குறிக்கவே தாலி கட்டுவது எனக் கூறப்படுகிறது.
அப்படியானால் ஆண்களுக்கு கல்யாண
மாயிற்றா என்பதை எப்படி அறிவது? ஆண்கள் கழுத்திலும் ஒரு தாலியினைக் கட்டவேண்டும் அல்லவா?’’
இவ்வாறு கருத்தாளர் ஒருவர் பேசியதை பெண்கள் கைதட்டி வரவேற்றனர்.
கருத்துரையாளர்களின் ஆக்கபூர்வமான உரைகளைக் கேட்க மக்கள் திரள ஆரம்பித்து
விட்டனர்.
அதே நேரத்தில் முத்துக்கண்ணுவின் திருமணம் களையிழந்து காணப்பட்டது. காரணம் புரோகிதன் சரியான நேரத்திற்கு வரவில்லை. ஏற்கெனவே அவன் வேறு இரண்டு திருமணங்களை நடத்திவிட்டு வரவேண்டுமல்லவா? நல்ல நேரம் போய்விடுமோ என பலரும் பயந்தனர். அதோடு மட்டுமல்லாமல் தேதியை மாற்றி அவசரகதியில் நடைபெறும் திருமணமாதலால் வாங்கி வைத்த தாலியை வைத்த இடம் தெரியாமல் வீடுமுழுக்க ஆளாளுக்கத் தேடினர். பல பொருள்களோடு அது கலந்துவிட்டது. நேரம் ஆக ஆக மாயவனுக்கு வியர்த்துக்கொட்டியது.
அப்போது இராசேந்திரன் திருமணம் மிக அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெறுவதை அங்கு வந்த சிலர் பேசியது மாயவன் காதில் விழுந்தது. கபாலிக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. மாயவனுக்கு கபாலிமீது எரிச்சலாக வந்தது. இதெல்லாம் கபாலியின் பேச்சைக் கேட்டு திருமணத் தேதியை மாற்றியதால் வந்த வினை என்று உணர்ந்தார் மாயவன். அவர் வீட்டில் சிறிது சிறிதாக கூட்டம் கலைய ஆரம்பித்தது. இராசேந்திரன் திருமணம் நடைபெறும் முறை பற்றி மேலும் பலர் நேரிடையாகவே மாயவனிடம் சொல்ல ஆரம்பித்தனர்.
அனைத்தையும் கேட்ட மாயவன் நிதானமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்துவிடு விடுவென இராசேந்திரன் திருமண வீட்டிற்குச் சென்றார்.
அத்திருமணத்தின் தலைவர் உரையாற்றிவிட்டு உட்கார்ந்திருந்தார். அவரிடம் போய் நின்றார் மாயவன்.
“என்ன?’’ என்பது போல அவரைப் பார்த்தார் தலைவர்.
“அய்யா! எனது மகனின் திருமணம் பக்கத்துத் தெருவில் நடக்க இருக்கு. நீங்கள் வந்து நடத்தித் தரவேண்டும்;’’ வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் கபாலியின் பேச்சைக் கேட்டு குழப்பமடைந்த விவரத்தையும் முழுமையாகத் தெரிவித்தார்.
“எங்கள் இல்லத் திருமணமும் சுயமரியாதைத் திருமணமாக இருக்கட்டும் அய்யா. மேலும் தாலி கட்டாத திருமணமாகவும் இருக்கும் அய்யா’’ என்றார் மாயவன்.
தலைவர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். ஆனால், இரு வீட்டுப் பெற்றோர்களும் ஊர்ப் பெரியவர்களும் எங்களை முறைப்படி அழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மாயவன் மிகவும் தெளிவடைந்து தலைவர் கூறியதை ஏற்றுக்கொண்டு மிடுக்குடன் கிளம்பினார்.