பரவட்டும் பாவாணர் புகழ்!

2023 கவிதைகள் பிப்ரவரி 16-28, 2023

முனைவர் க. தமிழமல்லன்

நம்தமிழர் பெயர் பார்த்தால் வெட்கம்! எல்லாம்
நம்பகைவர் மொழியாலே நாறும்! மானம்
நம்முடைமை தானென்றால் அவற்றை யெல்லாம்
நம்தமிழாய் ஆக்கிடுதல் முதல்முன் வேலை!
தம்பெயரைத் தனித்தமிழில் மாற்றிக் கொள்ளார்
தனித்தமிழில் அறிஞரெனப் பீற்றிக் கொள்வார்
தம்போக்கைப் பாவாணர் கொள்கை எள்ளும்
தவறாமல் அவர்தம்மைக் காலந் தள்ளும்!

முக்கொள்கை பாவாணர் மூச்சுக் கொள்கை
முதற்கொள்கை தனித்தமிழாம்! குமரிக் கண்டம்
அக்கால முதல்மாந்தன் பிறந்த கண்டம்!
அடியுண்மை நாட்டுதற்காய் முரச றைந்தார்!
சிக்கல்கள் எல்லாமும் சிதையும் வண்ணம்
சிறப்பாகத் தந்ததொரு கொள்கை உண்டு!
அக்கொள்கை ஆரியத்தின் மூலம் நம்மின்
அருந்தமிழே எனுங்கொள்கை போற்று வீரே!

கொள்கைக்காய் வாழ்ந்திருந்தார்! உயிரைப் போன்ற
கொள்கைக்காய் வாழ்விழந்தார்; வாய்ப்பி ழந்தார்!
உள்ளத்துள் அதைநீக்கி உதட்டால் மட்டும்
உறவாடும் பலரைப்போல் வாழ்ந்தார் அல்லர்!
புள்விலங்கு செடி கொடிகள் கொள்கை மாறா
புதிதாக்கும் பாவாணர் எல்லாம் மீறி
எள்ளல்கள் ஏசல்கள் எல்லாம் மீறி
இயக்கத்தால் கொள்கைக்காய் உழைத்த நல்லோர்!