“பெண்களுக்கு ஏற்படும் இயற்கை நிகழ்வான மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களின் ரசாயனங்களால் உடல்நிலைக் கோளாறுகள், சிக்கல்கள் ஏற்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் இயற்கையான மூலிகையைக் கொண்டு, மூலிகை நாப்கின்களைத் தயார் செய்து சாதித்து வருகிறார் தோழர் சர்மிளா பேகம்.
“மூன்று ஆண்டுகளுக்கு முன் அவர் உடல் நலமின்றி இருந்தார். அதுக்குக் காரணம் அவர் பயன்படுத்திய, ரசாயனங்களால் ஆன நாப்கின்கள் தான் என்று தெரிந்தது. அதற்கு மாற்றாக பருத்தி மற்றும் மூலிகை நாப்கின்கள் பயன்படுத்திய பிறகு பிரச்சினை சரியானது. அதிலிருந்துதான் மூலிகை நாப்கின் விற்பனைத் தொழிலைத் தொடங்குவதற்கான சிந்தனை தோன்றியது, என சுயதொழில் முனைவதற்கான முனைப்
புடனும், தைரியத்துடனும் செயல்படுகின்றார் இராமநாதபுரத்தைச் சேர்ந்தத்தோழர் சர்மிளா பேகம் அவர்கள். ஒன்பது வகையான மூலிகைகளைக் கொண்டு நாப்கின்களைத் தயாரிக்கின்றனர்.
சர்மிளா பேகம் தனது இல்லத்தின் இரண்டாம் மாடியில், அய்ந்து பெண்கள் வட்டமாக அமர்ந்து நாப்கின்களைத் தயாரிக்கின்றனர். தன் இல்லத்தையே தொழிற்சாலையாக நடத்திவருகிறார். இதுபற்றி அவர் கூறுகையில்:
‘ரசாயன வகை நாப்கின்களில் உறிஞ்சும் தன்மைக்காகச் சேர்க்கப்படுகின்ற ரசாயனங்கள், நறுமணங்கள் எல்லாம் பெண்ணுறுப்பிலும், கர்ப்பப்பையிலும் பல பிரச்சினைகள் ஏற்படக்கூடியது. பயன்படுத்த வசதியா இருக்கும்னு இந்தக் காலப் பெண்கள் அதையே விரும்புகின்றனர். உடம்பைக் கெடுத்துக்கிறாங்க’னு மருத்துவர் சொன்னார்.
இதற்கு என்னதான் மாற்றுவழி என்று மருத்துவரை நான் கேட்டேன். பருத்தியாலான நாப்கின்களைப் பயன்படுத்தலாம். பிறப்புறுப்பில் நாப்கின்களால் பிரச்சினைகளைச் சந்திக்கிறவங்க மூலிகை நாப்கின் பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் சொல்கிறார்கள். மருத்துவர்கள் சொல்லியது போல் நானே மூலிகைகளை அரைத்து பருத்தித் துணியில் வைத்துப் பயன்படுத்தினேன். பிரச்சினை நீங்கியது, ஆரோக்கியம் மேம்பட்டது என்றார்.
‘மூலிகை நாப்கின்களைத் தயாரிப்பது பத்தி கற்றுக்கொண்டு, தன் கையாலேயே தயாரிச்சு, மருத்துவ கவுன்சில் பரிசோதனைக்கு அனுப்பி, அனுமதி வாங்கினார். ஆரம்பத்தில் அவருக்குத் தெரிந்த பெண்களிடம் ரசாயன நாப்கின்களில் உள்ள ஆபத்துகளையும், மூலிகை நாப்கின்களின் நன்மைகளையும் எடுத்துச் சொல்லி, வீடு வீடாக விற்பனை செய்துள்ளார். அதைப் பயன்படுத்தினவர்கள் எல்லாரும் நல்ல வித்தியாசத்தை உணர்ந்தார்கள். அதனால் அவங்க தங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கும் பரிந்துரை செய்ய, வியாபாரம் கொஞ்சம், கொஞ்சமாக விரிவடைந்தது. ஒரு சில கடைகளில் இதைப் பற்றி அறிந்து, அவர்களே வந்து ஆர்டர் கொடுத்தார்கள்’’ என்றார்.
திருவாரூரில் நாப்கின் தயாரிக்கும் இயந்திரங்கள் நான்கு வாங்கினார். இன்றைக்கு ஒரு நாளைக்கு 1,000 நாப்கின்கள் தயாரிக்கிற அளவுக்குத் தொழில் முன்னேறியுள்ளது.
அவர் உள்ளதெருவில் இருக்கும் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். வேப்பிலை, துளசி, சோற்றுக் கற்றாழை கழற்சிக்காய் பொடி உள்ளிட்ட ஒன்பது வகையான மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கிறார். இவர் தயாரிக்கும் இயற்கை மூலிகை நாப்கின்கள் தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். பெண்களின் நலம், மகிழ்ச்சியுமே சார்மிளாபேகம் அவர்களின் விருப்பமாக உள்ளது. பாராட்டுகள்!