எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (115)

2023 எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை பிப்ரவரி 1-15, 2023

– நேயன்

1921 இல், 612 பெண் குழந்தைகள் விதவைகள். அவர்களின் வயது ஒன்றுக்கும் கீழே. இந்தக் குழந்தைகள் அனைவருமே இந்துக்கள், 498 விதவைக் குழந்தைகளின் வயது ஒன்றிலிருந்து இரண்டு வரை. இரண்டிலிருந்து மூன்று வயதுக்குள்ளான விதவைக் குழந்தைகளின் எண்ணிக்கை -_ 1280. மூன்றிலிருந்து நான்கு 2863. நான்கிலிருந்து அய்ந்து 6758. அய்ந்திலிருந்து பத்து 12,016. இவை, மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்கள். உண்மைத் தொகை, இதற்குப் பல மடங்கு அதிகமாக இருந்திருக்கும் என்பதை மிக எளிதாக ஊகிக்கலாம்.
இப்படிக் குழந்தை விதவைகளை உருவாக்குதல், சொத்து அபகரிப்பு முதல் பெண்களைக் ‘கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது’ என்பது வரை பல நோக்கங்கள், சமுதாயத்தின் தேக்கநிலைச் சக்திகளுக்கு இருந்தன. இதற்கு, மத  ஆசார முலாமும் பூசப்பட்டது. இது எங்கள் மதம். மாட்சிமை தங்கிய பேரரசி, எங்கள் மத நம்பிக்கைகளில் அரசாங்கம் தலையிட முடியாது என 1857இல் சொல்லியிருக்கிறார்கள்.
குழந்தைத் திருமணங்களுடன் ஒப்பிடுகையில், மற்றொரு சமூகஅநீதியான ‘சதி’ அல்லதுஉடன்கட்டை ஏற்றப்படுவது மிக அரிதாக நிகழ்ந்த நிகழ்ச்சி. ஆனால், அதை உலகஅளவில் பெரிதாக்கி, பின்னர் அதைத் தடைசெய்ததில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஒரு குறிக்
கோள் இருந்தது. நாங்கள் இந்த இருண்ட தேசத்துக்குப் பண்பாட்டைக் கொண்டு வருகிறோம்.

ஆனால், குழந்தைகள் திருமணம் என்கிற அதைப்போன்று ஒரு முக்கியமான சமூகக் கொடுமையை அழிக்க, பிரிட்டிஷார் முன்வரவில்லை. காரணம் இருந்தது. உடல்நிலையும் மனநிலையும் சரியில்லாத அடிமைப் புத்தி கொண்ட ஒரு மக்கள் கூட்டம், ‘எங்களை இப்படியே வைத்திருப்பதுதான் எங்கள் மதம்’ எனத் தாங்களாகவே விண்ணப்பிக்கும்போது, அதை மாற்ற முயற்சி செய்யும் அளவுக்கு பிரிட்டிஷார் முட்டாள்கள் இல்லை. இன்னொரு விதத்திலும் இது பிரிட்டிஷுக்கு உதவியது. ‘நாங்கள் ஆட்சி நடத்தும்போதே இந்த விஷயங்களில் தலையிட எங்களுக்கு முடியவில்லை. இனி நாங்களும் வெளியே போய்விட்டால், இந்தக் காட்டுமிராண்டிகள் என்ன நிலைக்கு இந்த நாட்டைக் கொண்டுவந்துவிடுவார்களோ? எனவே, நாங்கள் இருப்பது அவசியம்.’ இந்தப் பிரச்சாரத்தையும் அவர்கள் செய்து வந்தார்கள்.
“குழந்தைத் திருமணம் நடக்காவிட்டால் மாதம் மும்மாரி பெய்யாது. ஏனென்றால், மழை பெய்வது கற்புக்கரசிகளுக்காகவே. ஒரு பெண் வயதுக்கு வரும் முன்னரே, அவளுக்கு ‘இதுதான் உன் கணவன்’ எனக் காட்டிவிட வேண்டும்.

இல்லாவிட்டால், அவள் மனம் மாசுபட்டுவிடும். அப்படி அலைபாயும் பெண், கற்புநிலை தவறிவிடுகிறாள். பெண்
கற்புநிலை தவறிவிட்டால், மழை பெய்யாது’. இப்படியெல்லாம் ‘ஆன்மிக விளக்கங்கள்’ அளிக்கப்பட்டன.
இத்தகைய இக்கட்டான சூழலில், ஆரிய சமாஜ தலைவர்கள் மூலமாக, வேத தர்மத்தின் குரல் ஒலித்தது. குழந்தைத் திருமணத்துக்கு வேத ஒப்புதல் கிடையாது என மூலை முடுக்கெல்லாம் ஆரிய சமாஜிகள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். பிரிட்டிஷார் உருவாக்கிய ஆசாரப் பூனைகள் அதிர்ந்தார்கள். வேதங்களில் இருந்து ஆரிய சமாஜிகள் மேற்கோள்களைக் காட்டினர். “பெண் விடுதலைக்கு அடிப்படை அஸ்திவாரத்தை நவீன இந்தியாவில் அழுத்தமாக அமைத்தது வேதப் புத்தெழுச்சியே!

குழந்தைத் திருமணத்திற்கு வேத ஒப்புதல் கிடையாது. வேத ஆதாரங்களைக் காட்டி ஆரிய சமாஜிகள் குழந்தைத் திருமணத்தை எதிர்த்தனர்.
இதோ வேத தொன்மம்: ‘சூரிய தேவனே தன் மகளை அவள் விருப்பப்படி தேர்ந்தெடுத்த கணவனுக்கு அளிக்கிறான்.’ (ரிக், 1.157.1.) பெண்கள், தங்கள் கணவனை அவர்களே தேர்ந்தெடுக்கும் உரிமையும் அறிவும் பெற வேண்டும். வயதுக்கு வந்த பிறகே அவர்கள் திருமணம் செய்ய வேண்டும். ஆசாரவாதிகள் வெகுண்டெழுந்தார்கள். ஆனால், அறிஞர்களும் மக்களும் சிந்திக்க ஆரம்பித்தார்கள்’’ என்கிறார் அரவிந்தன் நீலகண்டன்.இவர் ஆதாரமாகக் காட்டும் மேற்கண்ட ரிக்வேதப் பாடலை ரிக் வேதத்தில் பார்த்தால் இச்செய்தியே இல்லை. ரிக் வேதத்தில் உள்ள அப்பாடலையும் அதற்குரிய விளக்கத்தையும் கீழே தருகிறோம்

“அக்கினி புவியின் மீது எழுப்பப்படுகிறான். சூரியன் எழுகிறான். மகத்தான உஷை தன் காந்தியால் அனைவரையும் மகிழ்வித்து இருளை நீக்கினாள். தேவசவிதா எல்லா சீவர்களையும் அவரவர் செயல்களிலே செலுத்த, அசுவினிகளே! நீங்கள் வேள்விக்கு வர உங்கள் தேரை இணையுங்கள்.
“Agni is wakened: Surya riseth from the earth. Mighty, refulgent Dawn hath shone with all her light.
The Asvins have equipped their chariot for the course. God Savitar hath moved the folk in sundry ways.”
என்பதே அப்பாடல் சொல்லும் செய்தி. அப்படியிருக்க, சூரிய தேவனே தன் மகள் அவள் விருப்பப்படி தேர்ந்தெடுத்த கணவனை மணம் செய்ய சம்மதிக்கிறான் என்று இப்பாடல் கூறுவதாக இவர் கூறுவது மிகப்பெரிய மோசடி. இப்பாடலில் இல்லாத செய்தி.
இவர் மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ். ஆள்கள் எல்லோருமே இப்படிப்பட்ட மோசடி வேலையைத் தொடர்ந்து செய்கிறார்கள்.
காலஞ்சென்ற நாகசாமி திருக்குறளை இழிவுபடுத்த இதுபோன்ற வேலைகளை நிறைய செய்துள்ளார்.

தங்கள் கருத்தை நிலைநாட்ட இல்லாத பாடல்கள் எல்லாம் இருப்பதாகக் காட்டும் மோசடி வேலை இவர்களுக்கு வாடிக்கையானது.
இந்த நீலகண்டன் இவரது நூலில் 251ஆம் பக்கத்தில் ரிக்வேதம் 10.8.125 என்று ஒரு பாடலைக் காட்டுகிறார்.
ரிக் வேதத்தில் அப்பாடலைத் தேடினால் பாடலே இல்லை. அதுமட்டுமல்ல, ரிக்வேதத்தில் 10ஆவது மண்டலத்தில் எட்டாம் அத்தியாயத்தில் 125 பாடலே இல்லை. எட்டாம் அத்தியாயத்தில் மொத்தம் 9 பாடல்களே உள்ளன. இது எவ்வளவு பெரிய மோசடி பாருங்கள்!
ஆக, இவர்கள் கருத்தை நிலைநாட்ட வேதம் சொல்கிறது, சாஸ்திரம் சொல்கிறது என்று பொய்யான ஆதாரங்களைக் காட்டி, மக்களை ஏமாற்றுவது இவர்களின் வாடிக்கை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

(தொடரும்)