ஆய்வுக் கட்டுரை: புத்தம் – பெரியாரியம் – இந்துத்துவம்

2023 கட்டுரைகள் ஜனவரி 16-31 ,2023

தஞ்சை பெ. மருதவாணன்
தாய்த்தமிழை இகழும்
‘தர்ப்பைக்’ கூட்டம்

“தமிழென்னில் எம்முயிர்ப் பொருளாம் – இன்பத்தமிழ் குன்றுமேல் தமிழ் நாடெங்கும் இருளாம்”
என்பது புரட்சிக்கவிஞரின் கவிதைக் கூற்று. பகை ஆரியத்துக்கோ பைந்தமிழ் என்றாலே ஓர் இழிவுப் பொருள். வழக்கிழந்த வடமொழியே இழக்க விரும்பாத ஓர் உயிர்ப்பொருள்! போலியாகத் தமிழைப் புகழ்வதெல்லாம் பிழைப்புக்காகவே! இதற்குச் சான்று பகரும் ஒரு சில எடுத்துக்காட்டுகள் இவை:
1. (அ) ஒரு மாலை நேர பூஜை வேளையில் கும்பகோணம் சங்கரமடத்தில் நடந்த நிகழ்ச்சி இது. நாட்டுக்கோட்டை செட்டி நாட்டிலிருந்து வந்திருந்த அருணாசலம் என்ற பக்தர் மகாபெரியவரான சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை நேரில் தரிசித்து அருளாசி பெற்றே தீருவது என்று காத்திருக்கிறார். மகாபெரியவருக்கோ அவரைச் சந்திக்க விருப்பமில்லை. அப்போது அங்கு மடத்தில் உடனிருந்த அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியை அழைத்து அந்த பக்தரைச் சந்திக்க இயலாததை இப்படித் தெரிவிக்கிறார்: “இதோ பாரும் தாத்தாச்சாரி! அவரைப் பார்க்கிறதுக்கு நேக்கு ஒண்ணுமில்லை… பார்த்தால் ஏதாவது கேட்பார். பதிலுக்கு நான் தமிழ் பேச வேண்டிவரும். நோக்குத்தான் தெரியுமே. தமிழ் பேசினால் எனக்குத் தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணனும். பூஜைக்கு நேரமாயிடுத்துல்லியோ… அதனால் நான் மௌனம் அனுஷ்
டிக்கிறேன்னு சொல்லி அனுப்ச்சிடுங்கோ’’ என்று என்னோடு சமஸ்கிருத சம்பாஷணை நிகழ்த்தினார் மகாபெரியவர். (அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய “இந்து மதம் எங்கே போகிறது? என்னும் நூல், பக்கங்கள் 99-100)
இங்கே மகாபெரியவர் எனும் தெய்வத்தின் குரல் தமிழைத் தீட்டுமொழி என்று மட்டும் ஒலிக்கவில்லை; ஏமாளிப் பக்தரை ஏமாற்ற மவுன விரதம் என்று பொய்யின் குரலாகவும் ஒலித்துள்ளது.

ஆ) மகாபெரியவர் மட்டுமல்ல; அவர் போற்றும் வேதமே தமிழை இழிவு செய்கிறது என்பதை அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் இப்படி உறுதிப்படுத்துகிறார். “வேதத்தில்தான் தமிழ் கெட்ட பாஷை; அதைப் பேசக்கூடாது என்றிருக்கிறது. உன் தாய் மொழியை_ உன் தாயை வேதம் கெட்டவள் என்கிறது.’’ (மேற்படி நூல் பக்கம் 255)
2. (அ) நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கு உரை எழுதிய பெரியவாச்சான்பிள்ளை எனும் பார்ப்பனர் தனது உரையில் அன்னைத் தமிழை எவ்வாறு பழித்துள்ளார் என்பதைப் பார்ப்போம். திருமங்கை ஆழ்வார் எழுதிய பெரிய திருமடலில் (கன்னி 38-_39) கீழ்க்கண்ட பாடல் வரிகள் உள்ளன.

“மானோக்கின் அன்னநடையார் அலரேச ஆடவர்மேல் மன்னும் மடலூரார்’
என்பதோர் வாசகமும் தென்னுரையில் கேட்டறிவதுண்டு.’’
இப்பாடலில் வரும் ‘’தென்னுரையில் கேட்டறிவதுண்டு’’ என்ற வரிக்கு பெரிய-வாச்சான் பிள்ளை மிலேச்ச ஜாதி பிதற்றும் தமிழின்கண் கேட்டறிவதுண்டு என்று உரை எழுதியுள்ளார். இவ்வுரையில் தமிழ்மொழி, தமிழ் பேசும் தமிழர் ஆகிய இரண்டினையும் இழிவுக்குள்ளாக்கியுள்ளார் உரையாசிரியர். மிலேச்சன் என்ற சொல்லுக்கு தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்ட தமிழ்_ தமிழ் _ அகர முதலியில் பின்வரும் எட்டுப் பொருள்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

1. நாகரிகமற்ற புறநாட்டான், 2. திருத்தமற்ற மொழியைப் பேசுவோன், 3. அனாரியன்,
4. அறிவீனன், 5. வணிகனுக்கும் பார்ப்பனப் பெண்ணுக்கும் பிறந்த மகன், 6. தாழ்ந்தவன்,
7. வேடன், 8. சூரியன். தமிழைப் பிதற்றுதற்குரிய மொழி என்று உரையாசிரியர் கூறியது அவரின் உள்மனத்தின் வெளிப்பாடு.
ஆ) இவர் மணிப்பிரவாள நடையில் எழுதிய இவ்வுரையில் பல இடங்களில் வேதம், கீதையிலிருந்து மேற்கோள் காட்டும் போது “இவ்வாறு விசேட தருமம்’’ கூறுகிறது எனவும் திருக்குறளில் மேற்கோள் காட்டும் போது “சாமானிய தருமம்’’ என்றும் கூறுகிறார். இவர் ஒரு வைணவப் பார்ப்பனர்(அய்யங்கார்) ‘பிள்ளை’ என்பது அவருக்குக் கொடுத்த பட்டம். (இரா. செழியன் எழுதிய கட்டுரை. ‘விடுதலை’ பெரியார் 127ஆம் பிறந்தநாள் மலர்)

3. அன்னைத்தமிழ் மீது, ஆரியம் வளர்த்துக் கொண்ட அடிமனத்தின் வெறுப்பை அப்படியே வெளிப்படுத்தும் நிகழ்ச்சி இது. சென்னை மியூசிக் அகாடமியில் 23.12.2018 அன்று பூணூல் காரர் ஒருவர் எழுதிய நூலின் வெளியீட்டு விழா நடந்தது. தமிழ்நாட்டின் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரசரஸ்வதி உட்பட பல முக்கிய பிரமுகர்களும் அவ்விழாவில் கலந்துகொண்டனர். விழாவின் தொடக்கத்தில் வழமை போல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது, ஆளுநர் உள்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர்_ காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதியைத் தவிர! அதேசமயம் நிகழ்ச்சியின் இறுதியில் நாட்டுப் பண்(ஜனகனமண) பாடப்பட்டபோது எழுந்து நின்றார். பின்னாளில், தமிழ்த்தாய் வாழ்த்தின்போது ஏன் எழவில்லை என்று விமர்சனம் எழுந்தபோது அப்போது நான் தியானத்தில் இருந்தேன் என்று சமாளித்தார். (விடுதலை 25.11.2021)தான் கலந்துகொள்ளும் பொது நிகழ்ச்சியில் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்து பாடும்போதுதான் ஒரு கடவுள் மறுப்பாளராக இருந்தும் நாகரிகம் கருதி எழுந்து நின்று மரியாதை செய்யும் தந்தை பெரியார் எங்கே? இந்த ஆரிய பீடத்தின் அநாகரிகச் செயல் எங்கே?

4. பார்ப்பனீயத்தின் போலித் தமிழ்ப் பற்றினைத் தோலுரித்துக் காட்டும் வகையில் அறிஞர் அண்ணாவின் பின்வரும் கூற்று அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் பிறந்தும் தமிழ்மொழி பயின்றும் தமிழரெனச் சொல்லிக்கொண்ட போதிலும் தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும் சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தன் தாய் மொழியாகக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின் மீதுதான். (திராவிட நாடு 2.11.1947 பக்கம் 18) (‘விடுதலை’ 9.6.2019)
ஆரிய இந்துத்துவாவின் பல்துறைக் கேடுகள் சமூகச் சீர்கேடுகளை விளைவிக்கும் இந்துத்துவ ஆரியத்தின் சனாதனக் கொள்கைகள் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி, பல்வேறு துறைகளையும் பாழ்படுத்தி வருகின்றன. அவையனைத்தையும் விரிக்கிற் பெருகும் தொகுப்பின் எஞ்சும் என்பதால் ஒரு சில எடுத்துக்காட்டுகளை மட்டும் இங்குச் சுருக்கமாகக் காண்போம்.

1. நமது தேசிய மொழிப் பிரச்சினைக்கு வழிகாணும் முறையில் சமஸ்கிருதம் அந்த இடத்தைப் பெறும் வரையில் சவுகரியத்தை ஒட்டி இந்தி மொழிக்கு அந்த இடத்தைத் தரவேண்டியிருக்கும் என்று தனது ஞான கங்கை எனும் நூலில்(பக்கம் 17) ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கோல்வால்கர் கூறியிருப்பது (விடுதலை 02.09.2019 பக்கம் 5) ஆரிய மொழிகளைத் திணித்து தேசிய இன மொழிகளை அழிக்கும் செயலன்றோ?

2. ஆரிய கலாச்சாரம்தான் இந்தியாவின் அடையாளத்திற்கும் இந்தியாவின் பாரம்பரி-யத்திற்கும் அடிப்படையாகும்.(The Aryan Culture was the basis of the Indian Tradition and Indian Identity ‘The Hindu’ 5.1.2015 Page 15) (அகமதாபாத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஒரு கூட்டத்தில் பேச்சு. (‘விடுதலை 6.1.2015 பக்கம் 1) திராவிட கலாச்சாரம் என்பது இவருக்கு ஒரு பொருட்டே இல்லை போலும்!

3. பாலகங்காதர திலகர் மறைந்தபோது இறுதி மரியாதை செலுத்தச்சென்ற காந்தியார் அந்தப் பாடையைத் தானும் தோள்கொடுத்துத் தூக்க முயன்றபோது, அங்கு இருந்த வருணாஸ்ரம வெறியர்கள் அவரைத் தடுத்துத் தள்ளிவிட்டனர். ஏனென்றால் மறைந்த திலகர் ஒரு பார்ப்பனர்; காந்தியாரோ பார்ப்பனரல்லாத ஒரு சூத்திரர் என்பதுதான் (விடுதலை 31.1.2016) இரக்கமென்றொரு பொருள் இலாத நெஞ்சினர் இந்த இந்துத்துவ ஆரியர் என்பது இங்கு வெளிப்படுகிறது அன்றோ?

4. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூகநீதிப் பிரிவுக்கு (15(4)) எதிராகச் சதி செய்து பொருளாதார அடிப்படையில் முன்னேறிய வகுப்பினர்களுக்கு என்கிற பெயரில் பார்ப்பனர்களுக்குப் பத்து சதவிகிதம் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அளிக்கும் வகையில் 103ஆவது அரசியல் சட்டத்திருத்தம் எனும் அவசரக் குழந்தையைப் பெற்றெடுத்ததன் நோக்கம் என்ன? இந்தச் சவலைப் பிள்ளைக்கு அற்ப ஆயுள் என்று தெரிந்தும் பலித்தவரை லாபம் எனும் ஆரிய இந்துத்துவாக்களின் நப்பாசை அன்றி வேறு என்ன?

5. உலகத்தில் உள்ள எந்த உயர்ந்த சோப்பைப் போட்டுக் குளிப்பாட்டினாலும் நவீன ஆடை அணிமணிகளால் அலங்கரித்தாலும் கூட பஞ்சமர்கள் என்று சொல்லப்படும் தாழ்த்தப்பட்டவர்கள்மீது படிந்த அந்தத் தீட்டு_ அழுக்கு _ பரம்பரை பரம்பரையாக ஆழமாக வேர்பிடித்து அவர்களின் பிறப்பிலேயே தொடர்ந்து வந்துள்ளதால் இதனை நீக்கவே முடியாது. (சிருங்கேரி சங்கராச்சாரியார் சிறீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் எழுதிய ‘இந்து அய்டியல்’ எனும் நூல் பக்கம் 23 (The Panchamas asked to be at a distance because of the inform impurity of his body. Any amount of washing of the body with the best available soaps and any clothing and decoration of it in the best upto date style cannot remove from it its inlaid fifth that has originated from the deep rooted contamination of filthy inheredity,)
தீண்டாமைக் குற்றத்தின் கீழ் சிறைப்பிடிக்-கப்பட வேண்டிய சிருங்கேரி சங்கராச்சாரியாரின் இக்கூற்றை அறியும்போது “எத்தனை முறை பெரியாரியச் சோப்பைப் போட்டுக் குளிப்பாட்டினாலும் இந்துத்துவவாதிகளின் உடம்பில் வீசும் பார்ப்பனிய நாற்றத்தைப் போக்கவே முடியாதோ? என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா?
(நிறைவு)