மேனாள் பிரதமர் வி.பி.சிங் ஆற்றிய உரை…
– கி.வீரமணி
“இந்த அரங்கத்திற்கு, மிகச் சிறந்த கலைஞரான எம்.ஆர்.ராதாவின் பெயர் வைக்கப்
பட்டுள்ளது. தன் வாழ்நாள் முழுவதும் சமூக சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பவதையே கடமையாகக் கொண்டிருந்த அவருடைய பெயர் இந்த அரங்கத்திற்கு வைக்கப்பட்டிருப்பது பொருத்தமானதே ஆகும்.
தந்தை பெரியார் தமது வாழ்நாளெல்லாம் சமூக நீதிக்காகப் பாடுபட்டவர். சமூகச் சீர்திருத்-தங்களுக்காகவும் சமூக நீதிக்காகவும் எடுத்துக் கொண்ட முயற்சிகளால் அவர் துன்பங்களுக்கும் அவமானங்களுக்கும் உள்ளாக்கப்பட்டார். அவர் அனுபவித்த துன்பங்களாலும் அவர் செய்த தியாகங்களாலும் இன்று சமூக நீதித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக, ஒரு சிறந்த முன்மாதிரி மாநிலமாக விளங்குகிறது. நம்முடைய சமுதாயம் பலவகையான பிரிவுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் உடையதாகும்.
இந்த உன்னதமான சமுதாயத்தில் சிலர்
மதிக்கப்படுகின்றனர். சிலர் வெறுக்கப்படு-கின்றனர்.
எங்கெல்லாம் ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் அரசியல், பொருளாதாரம், சமுதாயம் உள்பட எல்லா நிலைகளிலும் மக்களாட்சித் தத்துவம் சிதைந்து போகிறது. தந்தை பெரியார் சமுதாயத்தில் ஏகபோக நிலைக்கு எதிராகப் போராடினார். இன்று நம் தோழரான திரு.வீரமணி இந்தப் போராட்டத்தை தொடருவது மட்டுமல்லாமல், ஒத்த கொள்கையுடையவர்களின் துணையுடன் அந்தப் போராட்டத்தின் எல்லையை விரிவுபடுத்தியும் இருக்கிறார். மக்கள் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்ட நிலையில் உள்ளனர். இதன் காரணம் என்ன? அவர்கள் சங்கிலிகளால் கட்டப்பட்டுள்ளனர். இந்தச் சங்கிலிகள் அவர்களுடைய கைகளிலோ, கால்களிலோ கட்டப்படவில்லை; அவர்களுடைய மூளையில், மனதில் கட்டப்பட்டுள்ளது. வாழ்க்கையிலுள்ள துன்பங்களுக்கு முற்பிறப்பில் ஒருவர் செய்த பாவச் செயல்களே காரணம் என்னும் மூடநம்பிக்கை உள்பட கருமம், முற்பிறப்பு, அடுத்த பிறவி போன்ற பல மூடநம்பிக்கைகளாலான சங்கிலிகளால் அவர்களுடைய மூளை கட்டப்பட்டுள்ளது. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் இப்படிப்பட்ட பாரபட்சங்களும் சுரண்டல்களும் இயற்கையானவை அல்ல. அவை மனிதனால் ஏற்படுத்தப்பட்டவைகளே.
தன்னுடைய துன்பங்கள் அனைத்திற்கும் முற்பிறப்பில் தான் செய்த செயல்களே காரணம் என்றும், வேறு யாரும் அதற்குப் பொறுப்பல்ல என்றும் மனிதன் எண்ணுகின்றான். இந்த நாட்டில் மக்கள் அந்த அளவிற்கு மூளைச் சலவை செய்யப்பட்டு விட்டனர். இந்த மனோவியல் ரீதியிலான அடிமைத்தனச் சங்கிலிகளை நாம் அணிந்திருக்கும் நகைகள்
என்பது போன்றே நாம் எண்ணத் துவங்கி-விட்டோம்.
இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபட ஒரு புரட்சி வந்தாக வேண்டும். அந்தப் புரட்சி கூட நமக்குள் இருந்துதான் வர வேண்டும். அது மக்களால் மட்டுமே, நம்மால் மட்டுமே செய்யப்படக் கூடியது. தந்தை பெரியாரின் முக்கியப் பங்களிப்பு என்னவென்றால், அவர் தமது சுயமரியாதை இயக்கத்தின் மூலமாக இந்தப் புரட்சியை மக்களின் மனங்களில் உருவாக்கிவிட்டார். மனிதனுக்குச் சுயமரியாதை இல்லாமற்போனால் அவன் மனிதனாகவே இருக்க முடியாது. ஓர் இயந்திரமாகத்தான் இருக்க முடியும். அதனுடைய முகத்தில் துப்பினாலும் கூட அது எந்த அவமானத்தையும் உணராது. அதைப்போலவே, பல நூற்றாண்டுகளாக எந்த ஒரு சுயமரியாதையும் இல்லாமல் மக்கள் இயந்திரங்களைப் போல் வாழ்ந்து வந்தார்கள்.
தந்தை பெரியாரின் சமூக நீதி இலக்கை நாம் அடைந்தால் மட்டும்தான் நாம் அரசியலிலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றமடைய முடியும். சுயமரியாதையின் அடிப்படையில்தான் இந்தச் சமூக மாற்றம் நடைபெற முடியும். அதைத்தான் தந்தை பெரியார் செய்தார்; அதைத்தான் திரு.வீரமணியும் அவரது தொண்டர்களும் இப்போது செய்துகொண்டு இருக்கிறார்கள்.
மண்டல் ஆணையப் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதன் காரணமாக நாம் வளர்ச்சியடையவும் ஏற்றம் பெறவும் பல வழிகள் திறந்துள்ளன.
நாம் பின்தங்கியவர்கள் ஆக்கப்பட்டதினால் நம் வாய்ப்புகள் நம்மிடமிருந்து பறிக்கப்-படலாமா என்ற கேள்வியை நாம் எழுப்பினோம். இப்போது நாம் ஒரு எரிமலையின் உச்சியில் அமர்ந்துள்ளோம். நம் நாட்டின் மக்களில் கிட்டதட்ட 80 விழுக்காடு பேர் தம் உரிமைகளுக்காகப் போராடுகின்றனர். எரிமலையின் வாய் பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருந்தாலும், அது எந்த நேரமும் வெடித்துச் சிதறும் நிலையில் தான் உள்ளது.
தந்தை பெரியார் மற்றும்
அண்ணல் அம்பேத்கரின் கருத்துரு
நான் அவர்களுடைய விருப்பங்களை நிறை
வேற்றியுள்ளேன். ஆயிரக்கணக்கான ஆண்டு
களாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இருந்த லட்சியங்களையும் கனவுகளையும் என் உத்தரவுகளின் மூலம் நனவாக்கியுள்ளேன். எனவே, இனி அவற்றை யாராலும் அகற்றிவிட முடியாது.
இப்போதெல்லாம் அனைத்துக் கட்சிகளும் மண்டல் ஆணைய உத்தரவுகளைக் குறித்துப் பேசுகின்றன. நீங்கள் ஏன் இப்போது என்னிடம் மண்டல் ஆணையம் குறித்துக் கேட்க வேண்டும்? இனி புதிதாக ஆட்சிக்கு வருபவர்களைக் கொண்டு நீங்களே அதைச் செய்துகொள்ள முடியும் என்று நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.
இனி அதிகாரத்திற்கு வருபவர்கள் தேவையானதைச் செய்வார்கள். மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை நாங்கள் நடைமுறைப்படுத்தி விட்டோம். இந்தப் பணியை நாங்கள் வெற்றிகரமாகச் செய்திருக்கிறோம். அது ஒரு போர்க்களமாக இருந்தது. நாம் அதில் வெற்றிபெற்றுள்ளோம். அதைக்குறித்து மேற்கொண்டு நாம் எதுவும் எண்ண வேண்டியது இல்லை; அடுத்த அடியைத்தான் நாம் எடுத்து வைக்க வேண்டும். அடுத்த கட்டம், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான், சரியான முறையில் மக்களுக்கு அறிவூட்டுவது அவசியமாகும்.
ஆகவே, சராசரி மனிதர்கள் இந்த வகையான கல்வியைப் பெற இயலாத நிலையில் உள்ளனர். கல்வியின் வணிக மயமாக்கல், பண வசதி உடையவர்களுக்கு மட்டுமே இந்த வகைக் கல்வியைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் இந்த வகைக் கல்வியைப் பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
நான் மண்டல் ஆணையப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியபோது என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. தனித்திறமை பெற்ற மக்களின் தலைவிதி இனி என்னவாகும்? என்பதே அது. தனித்திறமை பெற்ற ஏழை மக்கள் இப்படிப்பட்ட கல்வியைப் பெற முடியாது என்று என்னிடம் வாதிட்டனர். ஆனால் இன்றும் கூட அப்படிப்பட்ட கல்விக்கான கட்டணம் மிகவும் அதிகமாக ஆகிவிட்டதால் தனித்திறமை பெற்ற ஏழை மக்கள் இப்படிப்பட்ட கல்வியைப் பெற முடியாத நிலை உள்ளது. ஆகவே, நாம் கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்வது மிகவும், அவசியமாகும். கல்வி மிகவும் விலையுயர்ந்த ஒன்றாக இருக்க வேண்டியதில்லை. கல்வியானது குறைந்த செலவில் கிடைக்கக் கூடியதாகும்போது தான், விரும்பும் கல்வியைப் பெற அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும்; அத்துடன் சமுதாயத்தில் சமத்துவமும் நிலவும்.
குறிக்கோளுள்ள வாழ்வை நடத்த கல்வி
பயனுள்ளதாக அமையவேண்டும், இப்போதுள்ள
கல்வி முறை அதற்கேற்றதாக இல்லை.
எனவே,இப்போது நாம் பெறுகின்ற கல்வி உண்மையான கல்விதானா என்று நாம் சந்தேகப்பட வேண்டியதாகிறது.
கல்வி மற்றும் மக்கட்பணியின் அடிப்படைக் கருத்து, மனித மனத்தையும் இதயத்தையும் பயன்படுத்துவதுதான்.
ஒரு மனிதனிடம் என்ன இருக்கிறது, எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதை வைத்து நாம் அவனை மதிப்பது இல்லை. அவனிடம் ஒரு பங்களா மற்றும் கார் இருந்தால் அவன் ஒரு பெரிய மனிதன் ஆகிவிடுகிறான். ஆனால், ஒரு மனிதனிடம் உள்ள விழுமியங்களையும், பண்பையும் வைத்துத்தான் தந்தை பெரியார் அவனை மதிப்பிடுகிறார். அவரைப் பொறுத்த வரையில் ஒரு மனிதனின் சொத்து அல்லது சமூக அந்தஸ்தை வைத்து அவனை மதிப்பிட முடியாது; அவனுடைய மனிதத்தன்மை மற்றும் மனிதனை மனிதனாக நடத்தும் பண்பை வைத்துத்தான் மதிப்பிட முடியும்.
தந்தை பெரியாரின் லட்சியங்களை உலகம் முழுவதும் பரப்புவதற்காக நம் தோழர் திரு.கி.வீரமணி எடுக்கும் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். அனைவரின் ஒத்துழைப்பு மற்றும் உதவியுடன் அவர் தமது முயற்சிகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்று தமது உரையில் வி.பி.சிங் குறிப்பிட்டார்.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் இறுதியாக நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை கழக உதவிப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொகுத்து வழங்கினார். பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திருச்சி பெரியார் மாளிகையில் எனது தலைமையில் 30.1.2001 அன்று மாநில இளைஞரணி கலந்துரையாடல் நடைபெற்றது.
1. சமஸ்கிருத கல்வியை எதிர்த்து நாடு தழுவிய அளவில் சைக்கிள் பேரணி
2. மார்ச் 1, 2, 3 நாள்களில் 100 ஊர்களில் பெரியார் புத்தகச் சந்தை
3. 5000 பேர் கொண்ட இளைஞர் பணிக்குழு.
இன்னும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்-பட்டன.
தஞ்சையில் திராவிடர் கழகத்தின் சார்பில் மதவெறிக் கண்டனக் கூட்டம் 30.1.2001 அன்று இரவு 7:00 மணிக்கு தஞ்சை ஆப்ரகாம் பண்டிதர் சாலை ராஜா கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. தஞ்சை நகர பொருளாளர் இரா.கோபாலகிருட்டினன் அனைவரையும் வரவேற்றார். கோ.தங்கராசு தலைமை வகித்தார். மதவெறி மனித குலத்தை நாட்டை எந்த அளவுக்கு அழித்தது என்பதையும்; இந்த மதவெறி மகாத்மா காந்தியின் உயிரை எப்படிக் குடித்தது என்பதையும் விளக்கி சிறப்புரையாற்றினேன்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘பெரியாரின் சமுதாய அறிவியல் பார்வை’ என்னும் தலைப்பில் 7.2.2001 அன்று மாலை 3:30 மணிக்கு செனட் ஹாலில் ஆய்வுச் சொற்பொழிவு நிகழ்த்தினேன்.
அத்திவெட்டியில் தந்தை பெரியார் சிலை மற்றும் படிப்பகத்தினை 25.2.2001 அன்று திறந்து வைத்தேன்.
பெண்கள் மேம்பாடு மற்றும் மறுமலர்ச்சிக்-கான பெரியார் அமைப்பு (Power) சார்பில் 26.2.2001 அன்று பெண்களை விளம்பரக் கருவிகளாகப் பயன்படுத்துவதை எதிர்த்து, தஞ்சையில் நடைபெற்ற பேரணியைத் துவக்கி வைத்து உரையாற்றினேன்.
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 5-ஆம் ஆண்டு நிறைவு விழா சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 27.2.2001 அன்று நடைபெற்றது. இசைச்செல்வி டி.கே.கலா, ‘தினத்தந்தி’ அய்.சண்முகநாதன், ‘இரணியன்’ செ.திருஞானம், வீதி நாடகம் பெரியார்நேசன் ஆகியோருக்கு பெரியார் விருது வழங்கிப் பாராட்டினேன்.
தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற விழா இரண்டாம் நாள் விழா சென்னை பெரியார் திடலில் 28.2.2001 அன்று இரவு 7.00 மணிக்குச் சிறப்பாக நடைபெற்றது. ‘புரட்சிக்காரன்’ திரைப்படம் நூறாவது நாள் வெற்றிக்குக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் பாராட்டப்பட்டனர். புரட்சி இயக்குநர் வேலு பிரபாகரன், இயக்குநர் ஜெயதேவி ஆகியோர் ‘வீரவாள்’ ஒன்றினை எமக்கு அளித்தனர். நடிகர்கள் எஸ்.எஸ்.இராஜேந்திரன். சத்யராஜ், ‘மக்கள் கலையரசி’ மனோரமா ஆகியோர் உடனிருந்தனர். இனமுரசு சத்யராஜ் அவர்களுக்கும் புரட்சி வேங்கை வேலு பிரபாகரனுக்கும் பெரியார் விருது வழங்கிப் பாராட்டினோம்.
உரத்தநாடு வட்டம் கண்ணந்தங்குடி கீழையூர், மேலையூர் திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணியினர் நடத்திய திராவிடர் கழகக் கொள்கை விளக்க மாநாடு 10.3.2001 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் எமக்கு வெள்ளி மணிமகுடம் சூட்டி வெள்ளியிலான பேனாவும் அளித்தனர், இம்மாநாட்டில் திருஞானம் _- மாதவி வாழ்க்கை இணைஏற்பு விழாவையும் நடத்தி வைத்தேன். டில்லிபெரியார் மய்யத் திறப்பின் போது எமக்கு அணிவிக்கப்பட்ட மோதிரம் கண்ணந்தங்குடி கீழையூரில் ஏலம் விடப்பட்டது. அதனை ரூ.10,000க்கு வலங்கைமான் பொறியாளர் நடராசன் ஏலம் எடுத்தார்.
திருச்சியில் 10.3.2001 அன்று காலை பெண்கள் ஆபாசப் பொருள்களாக சித்தரிக்-கப்படுவதைக் கண்டித்து பெண்களின் விழிப்புணர்வுப் பேரணியைத் தொடங்கி வைத்து உரையாற்றினோம். திருச்சியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர் ‘பெரியார் பெருந்தொண்டர்’ ம.சிவானந்தம் அவர்களுக்குச் சிறப்பு செய்தோம்.
20.3.2001 அன்று காலை 9:00 மணிக்கு எனது வாழ்விணையர் மோகனா அம்மையார் அவர்களுடன் தேவசகாயம் அவர்களின் மருமகனான மறைந்த தெய்வராசன் இல்லத்-துக்குச் சென்று, அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். பே.தேவசகாயம், அன்னத்தாயம்மாள், தெய்வராசன் துணைவியார் தெ.தமிழரசி ஆகியோருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எங்கள் இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்தோம்.
மதுரையில் 20.3.2001 அன்று காலை 10:00 மணிக்கு திருப்பாலையில் அமைந்துள்ள யாதவர் கல்லூரி கோவிந்தராசன் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் குருநானக் ஆய்வகம் – மதுரை காமராஜர் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையும் யாதவர் கல்லூரியும் இணைந்து நடத்திய ஒருநாள் கருத்தரங்கில், ‘அகாலி, திராவிட இயக்கங்களின் பார்வையில் இந்தியக் கூட்டாட்சி அமைப்பு’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினேன்.
அன்று மாலை மதுரை வடக்கு மாசி வீதியில் நடந்த நிகழ்வில் கழகத் தோழர்களும் பொதுமக்களும் எனது எடைக்கு நாணயங்களை வழங்கினர்.
பேராவூரணியில் வரலாற்றுச் சிறப்புமிக்க மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி மாநாடு, பட்டுக்கோட்டை வட்டம் பேராவூரணியில் 21.3.2001 அன்று மாலை 4:00 மணியளவில் பேராவூரணி வி.எஸ்.குழந்தை நினைவு அரங்கத்தில் சுயமரியாதைச் சுடரொளிகள் சி.த.சூரியமூர்த்தி அ.அ.தா.க.அ.அருளப்பன், மு.கணேசன் ஆகியோர் நினைவு மேடையில் நடைபெற்றது. மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினோம்.
இம்மாநாட்டில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் சீனி.கண்ணன் அவர்கள் தன் துணைவியார் சுலோச்சனா அவர்களின் தாலியை ஆயிரக்கணக்கானோர் முன்னணியில் அகற்றினார். மாநாட்டில் கூடியிருந்தோர் பலத்த கையொலி எழுப்பிப் பாராட்டினர்,
பட்டுக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் நகர துணைத் தலைவர் நாடிமுத்து அவர்கள் 18.3.2001 அன்று இயற்கையெய்தினார். 21.3.2001 அன்று நாடிமுத்து அவர்களது இல்லத்துக்குச் சென்று படத்துக்கு மாலை அணிவித்து அவரது குடும்பத்தினருக்கு எங்களுடைய இரங்கலையும் ஆறுதலையும் கூறினோம். உடன் துணைப் பொதுச்செயலாளர் துரை.சக்ரவர்த்தியும் மற்றும் கழகத் தோழர்களும் வந்திருந்தனர்.
திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூரில் 22.3.2001 அன்று மாலை 6.00 மணிக்கு பெரியார் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள மகளிர் மேம்பாடு மற்றும் மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பின் சார்பில் தொழிற் பயற்சி மய்யத்தை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சி.உமாசங்கர் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
‘பவர்’ அமைப்பின் ஆட்சிக்குழு உறுப்பினர் என்கிற முறையில் தலைமையுரை ஆற்றினேன்.
சென்னை பெரியார் திடலில் 3..4-.2001 அன்று இரவு 7:00 மணிக்கு அண்ணா பேருரைகள் மற்றும் மக்கள் யார் பக்கம் என்ற குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழரசி நடராசன் அவர்கள் உருவாக்கிய அண்ணா அவர்களின் பேருரைகள் அடங்கிய குறுந்தகட்டை மதுரை ஆதின கர்த்தர் வெளியிட சி.என்.ஏ.பரிமளம் பெற்றுக் கொண்டார். நிறைவாக நான் சிறப்புரையாற்றினேன்.
சென்னை புது வண்ணையில் 4-.4-.2001 அன்று இரவு சுயமரியாதைச் சுடரொளி
க. பலராமன் நினைவு நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்ட மேடையில் “தந்தை பெரியார் உடற்பயிற்சி மன்றத்தை’’ திறந்து வைத்து உரையாற்றினேன்.
கோட்டூரில் 8-.4-.2001
அன்று மாலை 5:00 மணியளவில் கிராமிய பகுத்
தறிவு மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரையும் பெரியார் பெருந்தொண்டர் வீ.பாலசுப்ரமணியன் வர
வேற்று உரையாற்றினார். அறிவுலக ஆசான் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்து நான் நிறைவுரையாற்றினேன்.
தஞ்சை மாவட்டம் மாத்தூரில் 9-.4.-2001 அன்று நடைபெற்ற மாநில தொழிலாளரணிச் செயலாளர் வெ.ஜெயராமன் அவர்களின் இல்லத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு இல்லத்தினைத் திறந்து வைத்து உரையாற்றினேன்.
பெரியார் பெருந்தொண்டர் சென்னகுணம் கு.இராமலிங்கம் அவர்களது நினைவிடத்தில் 27.-5.-2001 அன்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினேன்.
பெரியார் மணியம்மை மகளிர் பொறியியற் கல்லூரி தாளாளர் வருமான வரித்துறை வல்லுநர் எஸ்.ராஜரத்தினம் அவர்களின் பெயர்த்தி பிரீதி, எம்.ஜி.சக்ரபாணி அவர்களின் பேரன் பிரசன் ஆகியோரின் மணவிழா 3.6.2001 அன்று காலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இம்மணவிழாவில் நானும் எம்..ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினோம்.
வடசென்னை, தென்சென்னை தாம்பரம் வட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில் 4-.6.-2001 மாலை 6:00 மணிக்கு எனது தலைமையில் மிகச் சிறப்பாக
நடைபெற்றது. இதில் எனது 5 அம்ச திட்டங்
களை அறிவித்தேன். இக்கூட்டம் நடந்து
கொண்டிருந்தபோது பெரியார் பெருந்தொண்
டர் மதுரை கல்வி வள்ளல் பே.தேவசகாயம் இயற்கையெய்தினார் என்ற செய்தி எனக்குக் கிடைத்தது. இச் செய்தியை உடனே கூட்டத்தில் அறிவித்ததோடு அவரைப் பற்றி மிகுந்த துயரத்துடன் இரங்கலுரையை நிகழ்த்தினேன்.