ஆண்களுக்கான ஆய்வுகள்
மரு. இரா.கவுதமன்
ஆண்களின் விந்தும், ஆண் அணுக்களின் எண்ணிக்கையும், அதன் உற்பத்தியும் அதன் இயக்கத்தின் வேகமும், பெண் கருவுடன் இணையும் வாய்ப்பும் இணைந்து செயல்பட்டால்தான் ‘கருவுறுதல்’ (Fertilisation) நிகழும். ஆண்களுக்கு செய்யப்படும் ஆய்வுகள் இந்தத் தொடர் நிகழ்வில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்று அறியவும், அதற்கான மருத்துவம் செய்யவும் உதவும். உடலியல் அளவில் ஏதேனும் குறைபாடு (Physical Examination) உள்ளதா என்ற ஆய்வும், ஆய்வுக்கூட சோதனைகளும் செய்யப்பட வேண்டி இருக்கும். உடலியல் குறைபாடு ஏதும் இல்லாவிடில் ஆய்வுக்கூட ஆய்வுகள் (Laboratory test) மேற்கொள்ள மருத்துவர்கள் சொல்வர்.
விந்து ஆய்வு (Semen Analysis): விந்து ஆய்வுகள் ஒரு முறையோ, ஒரு சில முறைகளிலோ செய்ய வேண்டியிருக்கும். ஒரு சுத்தமான கண்ணாடிக் குழாயிலோ, வேறு ஏதாவது சிறிய குப்பியிலோ விந்தை அடைத்து ஆய்வுக் கூடத்தில் கொடுக்க வேண்டும். சில நேரங்களில் சிறுநீரில், ஆண் அணுக்கள் உள்ளதா என்று ஆய்வும் செய்ய வேண்டியதிருக்கும்.
ஊக்கி நீர் ஆய்வு (Hormone Testing): இரத்தத்தில் ஆண் ஊக்கி நீர், டெஸ்டோஸ்டிரான் (Testosterone) அளவை ஆய்வு செய்வதன்மூலம் ஊக்கி நீர் சுரப்பில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதைக் கண்டறியலாம்.
மரபணு குறைபாடு (Genetic Testing): சிலருக்கு மரபணு ஆய்வும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். மரபணு குறைபாட்டால் கருத்தரித்தல் நிகழாத நிலை இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்-.
விரைத்திசு ஆய்வு (Testicular Biopsy): சிலருக்கு ஆண் கரு உற்பத்தி விரைகளில் ஏதேனும் கோளாறு இருந்தால் சரியான அளவு உற்பத்தியின்மையோ அல்லது குறை-பாட்டோடு ஆண் அணுக்கள் உற்பத்தி-யாகவோ- கூடும். அதனால் கருத்தரித்தல் நிகழும் வாய்ப்பு தடைபடும். விரைத் திசு, சிறிதளவு எடுத்து, ஆய்வு செய்வதன் மூலம், இதை எளிதில் அறிய முடியும்.
உருவரைவு (Imaging): சில நேரங்களில், “மீள்ஒலி (Ultra-sound) ஆய்வை, விரைகளில் மேற்கொள்வதன் மூலம், விரைகளில் ஏதேனும் நோயோ, குறைபாடோ உள்ளதா என்பதை அறிய முடியும். சில நேரங்களில் ஆண் கரு உற்பத்தி உறுப்புகளில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை அறிய “காந்த அதிர்வு அலை’’ (Magnetic Resonance Imaging- MRI) ஆய்வும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். உருவரைவு ஆய்வுகள் விரைகளில் உள்ள குறைபாடுகளை தெளிவாக அறிய உதவும்.
தாயணை (DNA) ஆய்வுகளும் ஆண்களுக்கு சில நேரங்களில் செய்ய வேண்டியிருக்கும்.
மேற்கண்ட ஆய்வுகளின் மூலம் ஆண் மலட்டுத் தன்மைக்கான காரணத்தைக் கண்டறிய முடியும். பெரும்பாலானவர்களுக்கு, ஊக்கி நீர்க் குறைபாட்டாலோ, விந்துக் குறைபாட்டாலோதான் மலட்டுத் தன்மை ஏற்படக் காரணமாக இருக்கும். இக்குறைபாடுகளை மருந்துகள் மூலம் எளிதில் குணமாக்க முடியும்.
பெண்களுக்கான ஆய்வுகள்:பெண்களுக்கு ‘கருவுறுதல்’ (Fertilisation) நிகழ வேண்டி இருந்தால் பெண் கரு முட்டை (ovum) சீராக உற்பத்தியாகி வெளியேற வேண்டும். வெளியேறிய கருமுட்டை, கருக்குழாய் மூலம் சென்று, ஆண் அணுவோடு (sperm) இணையும் நிகழ்வு நடைபெற வேண்டும். அவ்வாறு இணைந்து உருவான கரு, கருப்பையை அடைந்து, கருப்பையின் (Uterus) உட்சுவரில் சரியாக ஒட்டிக்கொள்ள வேண்டும். பெண்கள் மலட்டுத்தன்மை என்பது இந்த செயல்பாட்டில் ஏதேனும் குறைபாடோ, தடங்கலோ ஏற்பட்டால் நிகழும் குழந்தையின்மையை உண்டாக்கும் குறைபாட்டை அறிய மருத்துவர்கள் பல ஆய்வுகளைச் செய்வர். இவ்வாய்வுகள் மூலம் குறைபாட்டை எளிதில் அறியலாம்.
கருமுட்டை வெளிப்பாடு (Ovulation) ஆய்வு: இயல்பான நிலையில் 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு நிகழும் 14ஆம் நாளில் கருமுட்டை வெளிப்பாடு நிகழும். பெண்களுக்கு சுரக்கும் “ஈஸ்ட்ரஜன்’’ (Oestrogen) ஊக்கி நீர் இந்த நிகழ்வுக்கு முக்கிய காரணியாகும். ஈஸ்ட்ரஜன் ஊக்கி நீர் குறைபாடு, கரு உருவாவதில் சிக்கலையும் கரு சரியான நேரத்தில் வெளியேறுவதில் சிக்கலையும் ஏற்படுத்தும். இதனால் பெண்-களுக்குக் கருவுறுதல் நிகழாத நிலை ஏற்படும்.
கருக்குழாய் அடைப்பு: கருப்பையிலோ, கருக்குழாயிலோ ஏதாவது சிக்கல் ஏற்படும் நிலை சில பெண்களுக்கு ஏற்படும். அதனால் கருத்தரித்தல், மகப்பேறு இல்லாத நிலை ஏற்படும். கருப்பையில் கோளாறு இல்லாவிட்டாலும், கருக்குழாயில் அடைப்பு சிலருக்கு இருக்கலாம். முதிர்ச்சியடைந்த கருமுட்டை, கருமுட்டைப் பையை விட்டு வெளியேறினாலும் கருக்குழாய் உள்ளே செல்ல முடியாது. அதேபோல் ஆண் அணுக்கள் கருக்குழாய்க்குள் செல்வதும் தடைபடும். அதனால் குழந்தையின்மை ஏற்படும் இவ்வாறு உள்ள கோளாறுகளைக் கண்டறிய ஓர் ஆய்வு செய்யப்படுகிறது. கருப்பை, கருக்குழாய் வரைவி (Hysterosalpingography) என்று இந்த ஆய்வுக்குப் பெயர். ஒரு சிறுகுழாய் மூலம் கருப்பையில் ஒரு நிறமியைச் செலுத்துவர். அதை ஊடு கதிர் நிழற் படம் மூலம் பார்க்கலாம். கருப்பை கோளாறையோ, கருக்குழாய் அடைப்பையோ இதன் மூலம் கண்டறிய முடியும். வேறு ஏதேனும் மற்ற கோளாறுகளையும் இந்த ஆய்வால் அறியலாம்.
சினை முட்டை, சினைப்பை ஆய்வு: (Ovarian reserve testing) சினைப்பையில் இருந்து முட்டை வெளிப்படுதலையும், அம்முட்டை முழு வளர்ச்சியுடன் உள்ளதா என்பதையும், முட்டை உருவாகவும், முழுமையாக வளர்ச்சி அடையவும் காரணமான ஊக்கிநீர் ஆய்வுகள் முட்டையின் நிலைப்பாட்டை அறிய உதவும்.
மற்ற ஊக்கி நீர் ஆய்வுகள்: (other Homone Testing) மற்ற ஊக்கி நீர்களான “பிட்யூட்டரி” (Pitutary) ஊக்கி நீர், கருமுட்டை வெளிப்பாட்டை சீராகச் செய்யும். இது ஊக்கி நீர் சுரப்பைக் கட்டுப்படுத்தும் பணியைச் செய்வதால் அதையும் ஆய்வு செய்ய வேண்டியிருக்கும்.
மீள் ஒலி (Ultra Sound) ஆய்வு: மீள்ஒலி ஆய்வு, கருப்பையில் அல்லது சினைப்பையில் உள்ள நோய்களை அறிய உதவும்.
கருப்பை ஒளி ஆய்வு (Hysteroscopy): மருத்துவர், நேரடியாக கருப்பையில் ஒரு ஒளி உமிழும் குழாயைச் செருகி ஆய்வு செய்யும் முறை.
வயிற்றறை உட்காண் மருத்துவம்(Laproscope): சில நேரங்களில் வயிற்றில் சிறு துளையிட்டு, உள்நோக்கி வழியாக நோயறியும் முறை. கருப்பையின் அமைப்பு, சினை முட்டைப் பையின் அமைப்பை இதன் மூலம் நேரடியாகக் கண்டறியலாம்.
குழந்தையின்மை- மருத்துவம்: குழந்தை யின்மைக்கான மருத்துவம் இன்று ஆய்வுகளுக்கு உட்பட்டு, சிறந்த மருத்துவ முறைகள் கிடைக்கின்றன. இந்த வளர்ச்சியின் காரணமாக பல இணையர்கள் குழந்தை பெறும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
= எந்தக் காரணத்தால் குழந்தை பிறக்க-வில்லை?
= எவ்வளவு காலமாகக் குழந்தை இல்லை?
= குழந்தை இல்லாத இணையர்கள் வயது?
சில இணையர்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள். ஆனால் சில இணையர்களுக்கு, சில குறைபாடுகள் ஏற்பட்டிருந்தால் மகப்பேறுக்கு வாய்ப்பே இல்லாத நிலை உண்டாகும். பலருக்கு மகப்பேறு மருத்துவம், மருந்துகள் மூலம் கருவுறுதலை நிகழ்த்த முடியும்.
ஆண்களுக்கான மருத்துவ முறைகள்: ஆண்களுக்கு குழந்தையின்மைக் குறைபாடு பெரும்பாலும் ஆண் கரு (Sperm) சீராக இல்லாததால் ஏற்படுகிறது. இந்நிலையைச் சீராக்க பல வழிகாட்டும் முறைகள் இன்று உள்ளன.