முனைவர் வா.நேரு
“அய்க்கிய நாடுகள் சபை, மக்கள் தொகை செயல்பாடுகளுக்கான நிதி’’ என்னும் ஓர் அமைப்பை உருவாக்கி, 1987 முதல் ஜூலை 11ஆம் நாளை “மக்கள் தொகை நாள்’’ என்று அறிவித்துள்ளனர். அந்த நாளில் மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சினைகள் மக்கள் தொகை அதிகரிப்பால் அவதிப்படும் நாடுகளில் அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற செயல்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு, 2022 ஜூலை 11ஆ-ம் தேதிக்கு, உலக மக்கள் தொகை நாளுக்கு UNFPA (United Nations Fund for Population Activities) அய்க்கிய நாடுகள் மக்கள் தொகை செயல்பாடுகளுக்கான நிதி அமைப்பு பெண்களின் சுகாதாரம் மற்றும் அவர்களின் உரிமைகளை முதன்மைப்படுத்துவது மற்றும் கோவிட்_19 கொரனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து முதன்மைப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்னும் நோக்கத்தை அறிவித்திருக்கிறது.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது என்று வருகின்றபோது பெண்களின் உடல் நிலை, சுகாதாரம் மற்றும் அவர்களின் உரிமைகளை முன்னிறுத்திச் சிந்திப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று இந்த 2022ஆம் ஆண்டு அய்க்கிய நாடுகள் அமைப்பு சொல்வதையும், தந்தை பெரியார் 1930-இல் கர்ப்பத்தடை என்னும் தலைப்பில் எழுதியிருப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பெரியாரின் தொலைநோக்கு வியப்பை அளிக்கிறது.
“கர்ப்பத்தடை, அவசியத்தை விளக்குவோமாயின், பெண்ணானவள் திட சரீரமில்லாமலும் காயலாவுடனும் சரியான அமைப்பு பொருந்திய சரீரமில்லாமலும் இருக்கின்ற சமயத்தில் கர்ப்பம் தரித்துப் பிள்ளைகளைப் பெறுவதென்பது அவளுக்கு மிக அபாயகரமானதாகும். சயரோகத்தாலும், நீரிழிவு வியாதியாலும், நெஞ்சுத் துடிப்பினாலும் பீடிக்கப்படுகின்ற பெண்களும், பிள்ளை பெறும் துவாரம் மிகச் சிறுத்து இருக்கும் பெண்களும் கர்ப்பம் தரிப்பது மிகவும் ஆபத்தாகும். பிரசவத்தினால் சரீர மெலிவும் பலக்குறைவும் ஏற்படுகின்ற சுபாவ சரீரமுடையவர்கள் மறுபடியும் மறுபடியும் கர்ப்பமானால் சரீரம் மிகவும் பலவீனமடைந்துவிடும்…” (‘குடியரசு’ கட்டுரை 1.-3.-1931) என்று ஆரம்பித்து தந்தை பெரியார் அவர்கள் பெண்களின் உடல் நலிவு, முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடைவெளி அதிகம் இல்லாமல் பிள்ளை பெறுவதால் முதல் குழந்தைக்கு ஏற்படும் உடல் நலிவு, பெண்ணுக்கு சக்தி இல்லாமல் போகும் நிலைமை, ஆணும் பெண்ணும் போதிய வயது இல்லாமல் திருமணம் முடித்து குழந்தை பெறுவதால் பிறக்கும் குழந்தை நோஞ்சானாக, பலமில்லாமல் பிறக்கும் நிலைமை, பெண் ருதுவானவுடன் திருமணமாகி, உடனே கர்ப்பமாகிவிட்டால் ‘கொஞ்ச காலமாவது தம்பதிகள் இயற்கை இன்பம், கலவி இன்பம் அடைவதற்கு சாவகாசமில்லாமல் போய்விடும்” என்று அடுக்கடுக்காய் பேராசிரியர் வகுப்பிலே பாடம் நடத்துவதைப் போல 1930_-31களிலேயே பொதுமக்களுக்கு ‘குடிஅரசு’ பத்திரிகை மூலமாகப் பாடம் எடுத்திருப்பது வியப்பாகத்தான் இருக்கிறது.
சிசேரியன் போன்ற அறுவை சிகிச்சை முறை எல்லாம் இல்லாத காலம் 1930கள் என்பது. அந்தக் காலத்தில் தந்தை பெரியார் எவ்வளவு விளக்கமாகச் சொல்லி இருக்கின்றார்! தந்தை பெரியார் சொல்கிற அத்தனை நலிவுகளும், ஆப்பிரிக்க நாடுகளில் இன்றைக்கும் அப்படியே பொருந்துவதைப் பார்க்கலாம். ஏன் இந்தியாவின் வட மாநிலங்களில் கூட பெண்களுக்கு கர்ப்பத்தடை இல்லாமல் இருக்கும் நிலைமைகளைப் பார்க்க முடிகிறது.
தந்தை பெரியாரின் கருத்தினை அப்படியே உள்வாங்கிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள், ‘தவிப்பதற்கோ பிள்ளை’ என்னும் தலைப்பினிலே கர்ப்பத்தடை குறித்து கவிதையை 1933-களில் இயற்றினார்.
“தொத்துநோய், ஏழ்மை, பணக்காரர் தொல்லை
தொடர்ந்தடிக்கும் சூறையிலே பிள்ளையோ பிள்ளை!
காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக்
கதவொன்று கண்டறிவோம். இதிலென்ன குற்றம்?
சாதலுக்கோ பிள்ளை? தவிப்பதற்கோ பிள்ளை?
சந்தான முறைநன்று; தவிர்க்குமுறை தீதோ?”
என்னும் கவிதையின் மூலம் இந்தியாவிலேயே கர்ப்பத்தடை பற்றி, குடும்பக் கட்டுப்பாடு பற்றிப் பாடிய முதல் கவிஞர் என்னும் வரலாற்றுப் புகழ் பெற்றார்.
பெண் உரிமைக்காக குடும்பக் கட்டுப்பாடு என்னும் கர்ப்பத்தடை பற்றிப் பேசிய தந்தை பெரியார் அதற்கான வழிமுறைகளையும் கொடுத்தார். பெண்கள் திருமணம் ஆகாமலேயே தனித்து வாழ்வதை ஊக்கப் படுத்தினார். இன்று பல்லாயிரக்கணக்கான பெண்கள் அப்படி வாழ்கின்றனர். தங்கள் தங்கள் துறைகளில் குடும்பம், பிள்ளைப்பேறு என்னும் தொல்லைகள் இல்லாமல் சாதிக்கின்றனர்.
“பெண்கள் குழந்தை பெறாவிட்டால் மனித சமூகம் விருத்தியடையாதே?’’ என்ற கேள்விக்கு, “மனித சமூகம் விருத்தியடையாவிட்டால் என்ன, மற்ற ஜீவராசிகள் விருத்தியடையட்டுமே! பெண்களை ஒடுக்கும் மனித சமூகம் விருத்தி அடைந்தால் என்ன, அடையாவிட்டால் என்ன?’’ என்று பதில் அளித்தவர் தந்தை பெரியார்.
அதைப்போல பெண்களின் திருமண வயது உயர்த்தப்பட வேண்டும் என்று யாரும் சொல்லாத காலத்தில் சொன்னவர் தந்தை பெரியார். பெண்களை 22 வயதுவரை படிக்க வைக்க வேண்டும், அதுவரை அவர்களின் திருமணத்தைப் பற்றி பெற்றோர்கள் நினைக்கக் கூடாது என்று 1930-களில் சொன்னவர் பெரியார். இப்போதுதான் ஒன்றிய அரசு பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21-ஆக உயர்த்தப் போவதைப் பற்றி அமைச்சரவையில் முடிவு எடுத்திருக்கிறது. மத்திய அமைச்சரவை சார்பாக எடுக்கப்பட்ட இந்த முடிவினை வரவேற்று திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திசம்பர் 2021-இல் அறிக்கை வெளியிட்டார். இதற்காக ஒன்றிய அரசினைப் பாராட்டுகிறோம் என்றும் குறிப்பிட்டார். ஆனால் சில முற்போக்காளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், பெண்ணின் திருமண வயதை 18-லிருந்து உயர்த்தக்கூடாது என்று அரைவேக்-காடுகளாய் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். 80, 90 ஆண்டுகளுக்கு முன்னாலேயே பெண்களுக்கு 10, 12 வயதில் திருமணம் நடந்து கொண்டிருந்த காலத்தில் பெண்ணின் திருமணம் 22 வயதிற்குப் பிறகு நடக்க வேண்டும் என்று கூறியவர் தந்தை பெரியார். ஒரு பக்கம் மக்கள் தொகை கட்டுப்பாடு, இன்னொரு பக்கம் பெண் விடுதலை என்னும் நோக்கில் பெண்ணின் திருமண வயதைப் பற்றிச் சிந்தித்தவர் தந்தை பெரியார்.
3, 4 பெண் குழந்தைகளைப் பெற்ற பின்பும் ஆண் குழந்தை வேண்டும் என்று அடுத்த பிள்ளைக்கு முயலுவதைப் பார்க்கின்றோம். இதன்முலம் குடும்பக் கட்டுப்பாடு தகர்க்கப்படுகிறது.
உலக மக்கள் தொகை கூடிக்கொண்டே போகிறது. இன்று உலக மக்கள் தொகை 800 கோடியைத் தாண்டி விட்டது. 1987இ-ல் மக்கள் தொகை நாளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அய்க்கிய நாடுகள் சொன்னபோது, உலக மக்கள் தொகை 500 கோடி. இன்று உலக மக்கள் தொகை 800 கோடி. மக்கள் தொகை கூடக்கூட வறுமையும் நோயும் பஞ்சமும் வளர்ந்து கொண்டே போகின்றன. ஆதலால் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்னும் குரல் எழுகிறது. சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மக்கள் தொகையின் வளர்ச்சி மிக அதிகமாக உள்ளது. இந்தியா மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சிவிடும் என்று சொல்கின்றனர். இந்தியாவை விட சீனாவின் பரப்பளவு மூன்று மடங்கு பெரியது. மக்கள் அடர்த்தியிலும் இந்தியா முன்னணி வகிப்பது கொடுமையான ஒன்று.
மக்கள்தொகைப் பெருக்கத்தினால் உணவு கிடைக்காமை, நீர் கிடைக்காமை, சுற்றுச்சூழல் மாசாகி பூமிக்கே அச்சுறுத்தல் ஏற்படும் நிலைமை, சுகாதாரப் பிரச்சினைகள், வேலையின்மை, போக்குவரத்து நெரிசல், நிலப் பற்றாக்குறை, வீடுகள் இல்லாமல் தெருவில், சாலையோரங்களில் படுத்துத் தூங்கும் நிலைமை போன்றவை உலகில் முக்கியப் பிரச்சனைகளாக உள்ளன.
எனவே, உலக மக்கள் தொகை நாளான ஜூலை 11, -2022ஆம் நாள் தொடங்கி இந்த ஆண்டு முழுவதும் நடைபெறுகின்ற மக்கள் தொகை விழிப்புணர்வை தந்தை பெரியாரின் கொள்கைகளோடு இணைத்துச் சொல்வோம். தந்தை பெரியாரின் ‘கர்ப்பத்தடை’ பற்றிய கருத்துகளை ஆங்கிலத்தில் அய்க்கிய நாடுகள் சபைக்கும், மற்ற இந்திய, உலக மக்களுக்கும் பல மொழிகளில் பெயர்த்துச் சொல்லும் முயற்சியும் அரசு செய்ய வேண்டும்.ஸீ