எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (76) : ஆரிய ஆதிக்கத்தை ஒழிப்பதே தமிழ் தேசியம்!

ஏப்ரல் 16-31,2021

நேயன்

தமிழ்த் தேசியத்தை தமிழ்ப் பண்பாட்டோடு, தமிழ் மரபுக்கு ஏற்ப, தன்மானத்தோடு, மூடத்தனம் இல்லா பகுத்தறிவு நோக்கில், ஜாதி மதங்களுக்கு இடமின்றி, நாத்திக_ஆத்திக சார்பற்று, தன்னாட்சி உரிமையோடு அமைத்துக் கொள்ள பெரியார் முயன்றார்.

‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பதில் நாத்திகமோ, மதமொழிப்போ, வகுப்பு எதிர்ப்போ இல்லை. இருக்கிறது என்று யாராவது சொல்வார்களானால் அவர்கள் அறியாதவராய் இருக்க வேண்டும் அல்லது விஷமப் பிரச்சாரம் செய்பவர்களாக இருக்க வேண்டும்.

(ஆதாரம் : தமிழர்_தமிழ்நாடு_தமிழர் பண்பாடு பக். 13)

திராவிட இயக்கம் தோன்றாமல் இருந்திருந்தால் தமிழ் நாட்டிலும் இந்திய தேசிய உணர்வே வேர் ஊன்றியிருக்கும். ஆனால், அது ஆழப் பதியாமல், தமிழ்த் தேசியம் உருவாவதற் கான தளம், களம், அதற்கான கருத்துவளம், விழிப்புணர்வு இவற்றைத் தந்தது திராவிட இயக்கம், அதிலும் குறிப்பாகத் தந்தை பெரியார்.

தந்தை பெரியார் திராவிட நாடு கோரிக்கை குறித்து, 1938 டிசம்பர் இறுதியில் நடைபெற்ற நீதிக் கட்சியின் 14ஆவது மாநாட்டின் தலைமையுரையில் மிகத் தெளிவாக, தர்க்கரீதியாகக் கூறுகிறார். (பெரியார் சிறையிலிருந்து விடுத்த அறிக்கை மாநாட்டில் படிக்கப்பட்டது)

“இந்தியாவை ஒரு நேஷன் என்பது எவ்வாறு பொருந்தும்? மொழிகளை அடிப்படையாக வைத்துப் பிரித்தால் இந்தியாவை அநேக நேஷன்களாகப் பிரிக்கலாம். அல்லது அங்கமச்ச அடையாளத்தின்மீது (உடற்கூறு அடிப் படையில்) பாகுபாடு செய்தாலும் ஆரியர்கள், திராவிடர்கள், மங்கோலியர்கள் என பல (நேஷன்) பிரிவுகளாகும். பழக்க வழக்க சமுதாயக் கோட்பாடுகளைக் கொண்டு பிரித்தாலும் அதுவும் பார்ப்பன_பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் எனப் பல ஜாதி வகுப்புகளாகப் பிரிக்கப்படும். மற்றும் எந்த வகையில் பார்த்தாலும், இந்திய நேஷன் என்பதற்கு இந்தியா முழுமையும் சேர்ந்த நிலப்பரப்பு என்று எவ்வாறு பொருள்படும்?

‘பர்மா பர்மியருக்கே’ என்று தீவிர கிளர்ச்சி செய்து வெற்றி பெற்றது நாம் அறிந்ததே! இலங்கைக்காரர்களும் அப்படியே…!

ஆந்திர தேசியவாதிகள் சென்னை மாகாணத்தை விட்டுப் பிரிந்து தனக்கென தனி மாகாணம் ஒன்றை ஏற்படுத்தி அதன் நிருவாகத்தை அவர்களே மேற்கொள்ள விரும்புகிறார்கள்.

அதேபோல், ஆரியர்களிடமிருந்தும், மங்கோலியர்களிடமிருந்தும் திராவிடர்கள் பிரிந்து போக வேண்டுமென்று நினைப்பது தேசியத்திற்கு விரோதமாகுமா?’’ என்று பெரியார் கேட்கிறார்.

எனவே, மேற்கண்ட கோரிக்கையில் பெரியார் ஆந்திரா பிரிந்து போவதையும் ஏற்று கருத்துக் கூறுவதால், பெரியார் இங்கு திராவிடர் என்பது தமிழரை மட்டுமே என்பது உறுதியாகிறது! எனவே திராவிட நாடு என்பது தமிழ்நாடுதான் என்பது தெளிவாகிறது.

மேலும், “அய்ரோப்பாவில் 3 கோடி, 4 கோடி மக்கள் தொகை கொண்ட பெல்ஜியம், ஹாலண்டு, சுவிட்சர்லாந்து, டென்மார்க் போல, சென்னை மாகாணமோ, தமிழ்நாடோ ஏன் தனி நாடாக இருக்கக்கூடாது. அது எங்ஙனம் சாத்தியமில்லாமல் போகும்?’’ என்று கேட்டார் பெரியார்.

“குஜராத்தி சுரண்டலும், சிந்தி மார்வாடி சுரண்டலும் தமிழ்நாட்டைப் பாப்பராக்குகிறது (ஒன்றுமில்லாததாக்குகிறது) இதற்கு எதிராய் நாம் துடிதுடித்தால் தேசிய விரோதமா?

திராவிட மக்கள் (தமிழ் மக்கள்) மீது ஆரியமதம் சுமத்தப்பட்டு, தமிழர் உழைப்பின் பலனை எல்லாம் தமிழரல்லா சிறு கூட்டத்தார் (ஆரியப் பார்ப்பனர்கள்) கொள்ளைபோல் சுரண்டுவதை, உறிஞ்சுவதை, இது நீதியா, முறையா, அடுக்குமா? என்று கேட்கப் புகுந்தால் அது தேச விரோதமா? தேசிய வேஷம் போட்டு நாம் அழுவதா?’’ என்று கொதித்துக் கேட்கிறார்.

இங்கு ஆரியப் பார்ப்பனர்களின் சுரண்டலை, ஆதிக்கத்தை எதிர்ப்பது போலவே, குஜராத்தி, மார்வாடி சுரண்டலையும் பெரியார் கடுமையாய் எதிர்த்திருக்கிறார் என்பது விளங்குகிறது. எனவே, பெரியார் குஜராத்தி மார்வாடிகளை எதிர்க்காமல், கண்டுங்காணாமல் ஆதரவாய் இருந்தார் என்று குணாக்கள் பொய்யாய் குற்றஞ்சாட்டுவது எவ்வளவு மோசடியானது என்பதைத் தமிழர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்!

அது மட்டுமல்ல; பெரியார் தமிழ்நாடு தனியே பெற்றாலும், சென்னை மாகாணத்தைத் தனியே பெற்றாலும் தனக்கு உடன்பாடே என்பதையும் பெரியார் தெளிவாக விளக்குகிறார். திராவிடர் கழகம் என்று பெயரிடப்பட்டது ஏன்?

சேலத்தில் 1944 ஆம் ஆண்டில் நடந்த மாநாட்டில் நீதிக் கட்சி எனப்பட்ட தென்னிந்திய நலவுரிமை சங்கத்தின் பெயரைத் ‘திராவிடர் கழகம்’ என மாற்றினார் பெரியார். ஆனால், கி.ஆ.பெ. விசுவநாதன், அண்ணல் தங்கோ, மு.தங்கவேலு, சவுந்திர பாண்டியன் ஆகியோர் நீதிக்கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என மாற்றுவதற்கு மாறாகத் ‘தமிழர் கழகம்’ என்று பெயரிட வேண்டும் என்று எவ்வளவோ போராடிப் பார்த்தனர். பெரியார் அடாவடித்தனமாக அதை ஏற்க மறுத்து விட்டார். தமிழகத்தில் விடாப்பிடியாகத் திராவிட மாயையை ஊன்றினார் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

இதற்கு நாம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லாமல் பெரியாரே பதில் சொல்லியுள்ளார்.

 

“ ‘திராவிடர்’ என்பதற்கு மாறாக, ‘தமிழர்கள்’ என்று ஏன் வழங்கக்கூடாது என்று சிலர் கேட்கிறார்கள். தமிழர்கள் என்று சொன்னாலே பார்ப்பனர்கள், நாங்களும் தமிழர்கள்தாம் என்று கூறி அதில் சேர்ந்துகொள்கிறார்கள். நாங்களும் தமிழ்நாட்டில் பிறக்கிறோம்; வளர்கிறோம்; தமிழே பேசுகிறோம்; தமிழ்நாட்டிலே இருக்கிறோம். அப்படியிருக்க எப்படி எங்களைத் தமிழர் அல்லர் என்று நீங்கள் கூற முடியும்? என்று கேட்கிறார்கள். ஒரு காலத்தில் தமிழர் என்பது தமிழ்ப் (திராவிட) பண்புள்ள மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்கக் கூடுமானால், இன்று அது மொழிப் பெயராக மாறிவிட்டிருப்பதால், அம்மொழியைப் பேசும் ஆரியப் பண்புடைய மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்று உரிமை பாராட்ட முன்வந்துவிடுகிறார்கள். அதோடு, ஆரியப் பண்பை நம்மீது சுமத்த அந்தச் சேர்க்கையைப் பயன்படுத்திவிடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில், நான் தமிழன் எனச் சொல்லிக்கொள்ள ஒப்புகிறேன். ஆனால் எல்லா கன்னடர்களும், மலையாளிகளும், ஆந்திராக்காரர்களும் அப்படி தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ள ஒப்பமாட்டார்கள். எனவேதான் (அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து) திராவிடச் சமூகத்தின் உறுப்பினர்கள் நாம்; நம் நாடு ‘திராவிட நாடு’ என்று வரையறுத்துக் கொள்வதில் இவர்களுக்கு மறுப்பு இருக்காது. அது நன்மை பயக்கும்’’ என்றார் பெரியார்.

ஆரியப் பார்ப்பனர்கள் உள்புகுவதைத் தடுக்கவும், உண்மையான தமிழர் இனத்தின் இரத்த உறவுகள் இன அடிப்படையில் ஒன்று சேரவும், அதன் மூலம் ஒரு விடுதலை பெற்ற திராவிட தேசத்தை (தமிழர் தேசத்தை) உருவாக்க முடியும் என்ற உயரிய நோக்கத்தில் தான் பெரியார் ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் சூட்டினார்.

காலச்சூழல் மாறிய பிற்காலத்தில் பெரியார் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, தமிழ்நாடு என்ற கோரிக்கையை வைத்தார். இது அவரது உள்ளத் தூய்மையின் அடையாளம். எனவே, பெரியாருக்குத் துரோக எண்ணம் ஏதும் இல்லை. எல்லாம் தமிழர் நலன் கருதியே செய்தார்.

பெரியார் மட்டுமல்ல, சோமசுந்தர பாரதியார் அவர்களும் இதே கருத்தையே கொண்டிருந்தார்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *