அய்யாவின் அடிச்சுவட்டில் ….இயக்க வரலாறான தன் வரலாறு (266) விஜயவாடாவில் நாத்திகர் மாநாடு!

ஏப்ரல் 16-31,2021

கி.வீரமணி

தஞ்சையில் ரயில் மறியல் நடத்த முயன்றதமிழர் தலைவர் ஆசிரியரைகைது செய்யும் காவல்துறையினர்

தமிழர்களின் உரிமைப் பிரச்சினையான _ உயிர் பிரச்சினையான காவிரி நீர் உரிமை மீட்புக்காக தஞ்சாவூரில் 27.12.1995 அன்று எனது தலைமையில் ரயில் நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. தந்தை பெரியார் சிலையிலிருந்து ஊர்வலமாக இரயில் நிலையம் நோக்கிப் புறப்பட்டோம். எம்.ஜி.ஆர். சிலை அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளிடையே உரையாற்றுகையில், “காவிரியில் தண்ணீரின்றி தாளடி சம்பா பயிர் காய்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு விவசாயிகளின் கண்ணீரோடு விளையாட வேண்டாம் என்று மத்திய அரசை எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். நடுவர் மன்றத் தீர்ப்பினை ஏற்று தண்ணீர்விட மறுக்கும் கர்நாடக அரசின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். காவிரிப் பிரச்சினைக்காக நடுவர் மன்றம் அமைக்கச் சொன்னது திராவிடர் கழகம்தான். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் காவிரிப் பிரச்சினைக்காகக் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் நடுவர் மன்றம் அமைத்திட வற்புறுத்தினோம். நாங்கள் கேட்பது சலுகை அல்ல; கருணையும் அல்ல; சட்டப்படியான உரிமை. எங்கள் உரிமையை, கர்நாடக அரசிடம் வலியுறுத்திப் பெற்றுத் தரவேண்டியது டில்லி அரசின் கடமை. அப்படிச் செய்யாவிடில், தந்தை பெரியாரால் அறிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்ட தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தும்’’ என மத்திய அரசுக்கு எச்சரித்தோம். அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தோழர்கள் என்னோடு கைது செய்யப்பட்டனர்.

பி.எம்.சுந்தரவதனம்

தில்லையில் உள்ள ராமசாமி (செட்டியார்) உயர்நிலைப் பள்ளியில் மூத்த தமிழாசிரியராக இருந்து, சுயமரியாதை வீரர்கள் பலரைத் தயாரித்து தந்தை பெரியார் பாசறைக்கு அளித்த சீரிய பகுத்தறிவாளர் சுயமரியாதை வீரர் புலவர் நா.மு.மாணிக்கம் அவர்கள் 28.12.1995 அன்று மறைவுற்றார் என்கிற செய்தி கேட்டு மிகவும் துன்புற்றேன்.

அவர் நமது இயக்கத்திற்கு ஆற்றிய அரும்பணி வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் பணி. அப்பள்ளியில் ‘இளங்கோ மன்றம்’ நிறுவி, அதில் அறிஞர் அண்ணா போன்ற சுயமரியாதை வீரர்களை அழைத்து, மாணவச் செல்வங்களைப் பகுத்தறிவு வீரர்களாக்கிய உலைக்கூடம் அவர்!

தோழர் தில்லை வில்லாளன் அவரது தயாரிப்புதான்! அவர் கடலூருக்கு அடிக்கடி வருவார் – அந்நாளில்!!

கழகப் பணியில் அவர் கொண்ட ஈடுபாடு காரணமாக, ஈரோட்டிற்கு என்னுடைய ஆசிரியர் திராவிடமணி அவர்களை அழைத்துச் சென்றதுபோலவே அய்யா அவர்கள் அவரை அழைத்துச் சென்று, தமிழன் அச்சகப் பொறுப்பையும் தந்து அங்கே பல காலம் நீடித்தார்.

பிறகு, சென்னை வந்து தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். அதன்பின் ‘விடுதலை’ நாளேட்டின் ஆசிரியர் குழுவில் இணைந்து அருந்தொண்டாற்றினார்.

உடல்நிலை காரணமாக, செட்டிநாடு செல்ல அன்போடு அனுமதி கேட்டுப் புறப்பட்டு,

அங்கே குடும்பத்தாருடன் இருந்தார், இறுதிக் காலத்தில்!

திராவிட இயக்கத் தூண்களுள் ஒருவர் அவர்; அவரால் உருவாக்கப்பட்டவர்கள் பலர். சுயமரியாதை வீரராக செட்டிநாட்டுப் பகுதியில் அப்படி ஒருவர் ‘அத்திபூத்ததுபோல’ கிடைத்தார்.

தொண்டறம் பூண்ட அத்தூயவருக்கு நமது வீரவணக்கத்தைத் தெரிவித்து, அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, அவர்கள் துயரத்தில் பங்கு பெற்றோம்.

ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து பெரியார் திடலில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் உலக நாத்திகர் மாநாட்டில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களுடன் ஆசிரியர்

தமிழ்நாட்டின் முதுபெரும் மருத்துவ மேதை டாக்டர் பி.எம்.சுந்தரவதனம் அவர்கள் தமது 96ஆம் வயதில் 28.12.1995 அன்று காலமானார் என்பது அறிந்து மிகவும் வருந்தினேன்.

டாக்டர் ‘பி.எம்.எஸ்’ அவர்கள் தந்தை பெரியார் அவர்களுக்கு மருத்துவம் செய்தவராவார்.

டாக்டர் குருசாமி முதலியார், டாக்டர் சடகோபன் என்ற அந்த வரிசையில் டாக்டர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களுக்கான டாக்டர். அவரது மருத்துவமனையில் எத்தனையோ முறை தங்கி அய்யா அவர்கள் சிகிச்சை பெற்று நலமுடன் தொண்டுக்குத் திரும்புவார்கள்.

டாக்டர் அவர்கள் டாக்டர்களுக்கெல்லாம் டாக்டர்; பல ஆண்டுகள் மருத்துவ பட்டப்படிப்புத் தேர்வுக் குழுவில் நேர்மையுடன் பணியாற்றி சமூகநீதியை நடைமுறைப்படுத்திய மாமேதை; மனிதாபிமானி; இனப் பற்றாளர்; ஏழைப் பங்காளர்! அவர் மண்டல் கமிஷன் அமலாகப்பட வேண்டும் என்பதற்காக அவரே துளுவ வேளாளர் சங்கத்தின் முக்கிய தூணாக அமைந்து போராட்டத்திற்கு எல்லா வகை ஆதரவும் தந்த சமூக நீதியாளர்.

நீதிக்கட்சியின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்றாலும், அனைத்துக் கட்சியினர்பாலும் அன்பு பூண்டவர்; அனைவராலும் பாராட்டப் பெற்றவர். தனிப்பட்ட முறையில் அவர் எத்தனையோ முறை என்னை ஊக்கப்படுத்தி உற்சாகமூட்டியதை எண்ணும்போது என் உள்ளம் நெகிழ்கிறது.

மருத்துவமலை சாய்ந்தது என்பதைவிட சமூகநீதி அரண் ஒன்று வீழ்ந்தது என்பதே பெரிய உண்மை!

அவரது வாழ்வு நிறை வாழ்வு! 96 ஆண்டுவரை மருத்துவ அறுவைச் சிகிச்சை பார்த்து இளைஞர்போல உழைத்த வல்லுநர் அவர்!

உலக நாத்திகர் மாநாட்டில்கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களுடன் ஆசிரியர்

அவர் புகழ் என்றும் நிலைக்கும்! அவரது துணைவியார், சிறந்த மருத்துவர்களான அவரது செல்வக் குடும்பத்தினருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அறிக்கையில் குறிப்பிட்டோம்.

ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்தும், உலகத் தமிழர்களை ஓரணியில் திரட்டும் நோக்கில் 1.1.1996 அன்று பெரியார் திடலில் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. மாநாட்டில் இலங்கை அரசைக் கண்டித்தும், இந்திய அரசு செய்ய வேண்டிய முக்கியப் பணி பற்றியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஈழ ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். அதில், அய்.நா. பேரவை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் (1966) தேசிய இனத்திற்குக் கூறப்பட்டுள்ள வரைவிலக்கணத்திற்கு ஏற்ப அமைந்த தனித்துவமுடைய தேசிய இனமான ஈழத் தமிழினம் கடந்த 40 ஆண்டுகாலமாக சுய நிர்ணய உரிமையைப் பெறுவதற்காக 1966ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட அய்.நா.பேரவைப் பட்டயத்தில் குறிப்பிட்டுள்ள பொருளாதார, சமூக, கலாச்சார குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான முதலாவது விதியின் அடிப்படையிலேயே போராடி வருகிறது.

இந்தப் போராட்டம் நெருக்கடியான காலகட்டத்தை அடைந்துள்ளது. அவர்களுடைய மரபுவழித் தாயகத்திலேயே அவர்களின் உயிர், உடைமை, பாதுகாப்பு ஆகிய வாழ்வுரிமைகளை முழுமையாக இழந்து, அவர்களின் பாதுகாப்பே பெரும் கேள்விக்குறியாகி, அழிவின் எல்லையில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளனர். இலங்கை அரசு தமிழர்களுக்குத் தேவையான உணவு, மருந்து மற்றும் அடிப்படைத் தேவைக்கான பொருள்களைப் போகவிடாமல் தடுத்து, தமிழ் மக்களைப் பட்டினி போட்டுப் பணியச் செய்வதற்கான வேலையில் ஈடுபட்டும், போர் பற்றிய ஜெனீவா மாநாடு வகுத்த விதிமுறைகளை மீறியும் வருகிறது. தமிழர்களுக்கு உதவ வேண்டும் என அய்.நா.செயலாளர் நாயகம் டாக்டர் புட்ரோஸ்கலி விடுத்த வேண்டுகோளைக்கூட ஏற்க மறுத்து இலங்கை அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

ஜி.என்.சாமி

இருள்சூழ்ந்த இந்த நெருக்கடியான வேளையில் தாங்கொணாத் துயரங்களிலிருந்து ஈழத் தமிழர்களை மீட்க இந்திய அரசு முன்வரத் தயங்குமானால் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாங்கள் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக உலகத் தமிழர்களை ஓரணியில் திரட்டி அவர்களின் மூலம் உலக அமைப்புகளையும், பரிவு காட்டுகிற அரசுகளையும் அணுகி போராட்டமும் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதை இத்தீர்மானத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என முன்மொழிந்து முதல் கையொப்பமிட்டேன். மாநாட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழர் அமைப்புகளைச் சார்ந்த முக்கிய நபர்களும் கலந்துகொண்டு கையொப்பமிட்டு, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினார்கள்.

நான்காவது உலக நாத்திகர் மாநாடு ஆந்திரப்பிரதேசம் விஜயவாடாவில் உள்ள பென்ஸ் சர்க்கிளில் நாத்திக கேந்திரத்தில் 4.1.1996 அன்று துவங்கியது. மாநாட்டிற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாத்திகர்களும், அறிஞர்களும் வந்திருந்தனர். தமிழ்நாட்டிலிருந்து நம் கழகத் தோழர்கள் உள்பட 108 நாத்திகர்களுடன் கலந்து கொண்டோம். முதல் நாள் நிகழ்வில் வரவேற்புரையாற்றுகையில், “தந்தை பெரியாரின் நாத்திகப் பிரச்சாரத்தை விரிவாக எடுத்துரைத்தேன். மனித நேயத்தை வலியுறுத்தி பெரியார் ஆற்றிய தொண்டினை விளக்கிப் பேசினேன். இன்றைய சூழ்நிலையில் விஞ்ஞான சாதனங்களை தமக்குச் சாதகமாக்கி அஞ்ஞானத்தைப் பரப்புவதற்கு எதிராக தீவிரப் பிரச்சாரத்தைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்திப் பேசினேன். அந்த வரவேற்பு உரையோடு மாநாட்டுப் பிரதிநிதிகளின் கவனத்திற்கு மாநாட்டில் முக்கிய விவாதமாக எடுத்துக்கொள்ள பத்து யோசனைகளையும் முன்வைத்து அதனை இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.’’ அதனைத் தொடர்ந்து மாநாட்டிற்கு வந்திருந்த இங்கிலாந்து மனிதநேய சங்கத்தின் தலைவர் சர்.ஹெர்மன் பான்டி தலைமை உரையாற்றினார். நாடாளுமன்ற உறுப்பினரும், சிறந்த கார்ட்டூனிஸ்ட் மற்றும் பத்திரிகையாளர் அபு ஆபிரகாம், வி.சோபனதிரீஸ்வரராவ், சரசுவதி கோரா, கே.சுப்பாராஜு, விஜயவாடா நகர மேயர் டி.வெங்கடேசுவரராவ், பன்னாட்டு மனிதநேய கழகத்தின் தலைவர் ஜேன் லைன் வில்சன், அமெரிக்காவின் நாத்திகத் தலைவர் லீபேக்கர், ஆஸ்திரேலிய நாத்திக சங்கத்தின் பிரதிநிதி நார்மன் டைலர், அய்ரோப்பிய நாத்திக சங்கத்தின் உபதலைவர் ராபின் ஜோகன்னஸ் எனப் பல முக்கியமானோர் வந்திருந்தனர். அவர்களிடையே கருத்துப் பரிமாற்றத்தையும் செய்துகொண்டோம்.

தளவாய்

இரண்டாம் நாள் மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த நாத்திக அறிஞர்கள் சிறப்புரையாற்றினார்கள். மாநாட்டின் குறிக்கோளாக, “நம்பிக்கையான எதிர்காலத்திற்குப் பயனுள்ள நாத்திகம்’’“Positive Atheism for a Positive Future” என்கிற குறிக்கோளை முன்வைத்து மாநாடு நடைபெற்றது. கழகத்தின் சார்பில் வந்திருந்த ராஜதுரை, அருள்மொழி, சுனந்தா சேத், டாக்டர் நடராசன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். ஒரிசாவிலிருந்து வந்து உரையாற்றிய பேராசிரியர் ந.ராமச்சந்திரா தந்தை பெரியாரின் கருத்துகளால் நாத்திகவாதி ஆனதைச் சுட்டிக்காட்டினார். தந்தை பெரியாரின் சுயமரியாதைத் திருமணத்தை, தான் மேற்கொண்டதாகக் கூறினார்.

மாநாட்டின் இறுதி நாளில் நிறைவுரையாற்றுகையில், “மாநாட்டில் பங்கு கொண்டு உரையாற்றுவதிலே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் அமெரிக்காவிலிருந்து வந்த செய்தியைப் படித்து மிகவும் வியந்து அதனை பெரியாரின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன். தந்தை பெரியார் அந்தச் செய்தியைப் படித்துவிட்டு மிகவும் நிதானமாக, “மூடநம்பிக்கை என்பது இந்திய நாட்டிற்கு மட்டுமே உரித்தானது அல்ல; அது அமெரிக்கா மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் பரவியுள்ளது’’ என என்னிடம் குறிப்பிட்டார். ஆகவே, இந்த மாநாட்டின் தத்துவமாக, மனித நேயத்தை, நாத்திகத்தைப் பரப்புகின்ற ஒளிவிளக்குகளாக நாம் செல்ல வேண்டும். சுயமரியாதை கொண்ட வாழ்க்கையை அமைத்திட நாம் அனைவரும் கூட்டுப் போராளிகளாக இருப்போம். என்னிடம் பல வெளிநாட்டு நண்பர்கள், திராவிடர் கழகத்தினர் கருப்புச் சட்டை அணிந்துள்ளதற்கான காரணத்தைக் கேட்டனர். இந்தச் சமுதாயம் இன்றும் இருளில் உள்ளதை உலகுக்குத் தெரிவிக்கின்ற வகையில் நாங்கள் கருஞ்சட்டை அணிகிறோம் என்றேன். நாம் ஒரு அமைதியான புரட்சியைச் செய்கிறோம். பெரியார், கோரா, எம்.என்.ராய் ஆகியோரது கருத்துகளே நம்மை வழிநடத்துகின்றன.

டி.வரதன்

சுயமரியாதை, மனிதநேயம், பகுத்தறிவுச் சிந்தனைகள் ஆகிய இவையே உலகுக்கு வழிகாட்டக்கூடியவை! புதிய உலகை உருவாக்குவோம். இந்தப் பணியில் திராவிடர் கழகம் தனது முழு ஈடுபாட்டையும் செலுத்தும். வாழ்க பெரியார்!’’ என்பன போன்ற பல கருத்துகளை மாநாட்டில் தெரிவித்து நிறைவு செய்தேன்.

சென்னை மாநாட்டுப் பணிகளில் மும்முரமாக கழகப் பணிபுரிந்து கொண்டிருந்த வேளையில் 8.1.1996 அன்று இரண்டு துயரமான மறைவுச் செய்திகள் கழகத்தாரை மிகுந்த வேதனைக்குள்ளாக்கின.

தாராசுரம் ஜி.என்.சாமியின் மறைவு, அவர் முதுபெரும் பெரியார் தொண்டர், இலட்சிய வீரர்; கடுமையாக இயக்கத்திற்கு உழைத்த எடுத்துக்காட்டான கருப்பு மெழுகுவத்தி. அவரைக் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் _ திராவிடர் கழக மாணவரணி சுற்றுப் பயண காலம் முதல் அறிவேன். அய்யா, அம்மாவின் அன்பிற்கு உகந்தவர் அவர். சில மாதங்களாகவே உடல்நலக் குறைவுடன் அவர் இருந்தார்; அவரை தாராசுரத்தில் சந்தித்து நலம் விசாரித்தபோதுகூட கழகப் பணிகள்பற்றி பெருமிதத்துடன் மகிழ்ச்சியோடு பேசினார். அவரது குடும்பமே சுயமரியாதைக் குடும்பம்.

அதுபோலவே, சங்கரன்கோயில் முதுபெரும் பெரியார் தொண்டர் தளவாய் அவர்கள் மறைவும் மிகுந்த வேதனைக்குரியது. ஒவ்வொரு ஆண்டும் குற்றாலம் பயிற்சி முகாமின்போது தவறாது வந்து உதவி செய்து, முகாம் முடியும்வரை சுறுசுறுப்புடன் ஓர் இளைஞர் போல் உழைப்பார்; அழுத்தமான கொள்கைப் பிடிப்பாளர்.

இரண்டு சுயமரியாதை வீரர்களும் கொள்கைக் குன்றுகள்!

அவர்களது மறைவு -_ அவர்களின் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பைப் போலவே, இயக்கக் குடும்பத்திற்கும் பெரும் இழப்பாகும்!

அவர்களது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு இயக்கச் சார்பில் வீர வணக்கம் செலுத்துகிறோம் என்று அறிக்கை வெளியிட்டோம்.

திராவிடர் கழகத்தின் நெடுநாள் தோழரும், கழக மாநாடு ஒன்றைக் கூடத் தவறவிடாது கலந்து கொள்ளக் கூடியவரும், அடக்கமான அதே நேரத்தில் ஆழமான கொள்கைப் பிடிப்பாளருமாகிய மயிலை தோழர் டி.வரதன் 8.1.1996 அன்று மறைவுற்றார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தோம். கழகத்தின் சார்பில் முக்கிய பொறுப்பாளர்கள்  கலந்துகொண்டு மலர்வளையம் வைத்து இறுதி மரியாதையோடு வீர வணக்கம் செலுத்தினர்.

அதே நாளில், பகுத்தறிவாளர் கழகத் தோழரும், தீவிரமான நாத்திகக் கவிஞருமான ஆசிரியர் மெ.இலட்சுமிகாந்தன் (கவிஞர் காந்தன்) 8.1.1996 அன்று மறைவுற்றார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருந்தினோம். அவரது இறுதி ஊர்வலத்தில் கழகப் பொறுப்பாளர்களுடன் கலந்துகொண்டு அவரது உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினோம். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம்.

பன்னாட்டு நாத்திக பகுத்தறிவாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு அழைப்பாளர்களுடன் ஆசிரியர்

மாநிலப் பகுத்தறிவாளர் கழக மாநாடு சென்னை பெரியார் திடலில் 10.1.1996 அன்று வெகு சிறப்புடன் நடைபெற்றது. மாநாட்டையொட்டி மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், பெரியார் பிஞ்சுகள், இளைஞரணி, மகளிரணியினர், மாணவரணி, தொழிலாளரணி, பகுத்தறிவாளர்கள் என அனைவரும் கழகக் கொடியினை உயர்த்திப் பிடித்தவண்ணம் கலந்துகொண்டனர். ‘தீ மிதி’ நிகழ்வும், மாநாட்டு மேடையில் நடைபெற்றது. திராவிடர் கழக அமைப்பாளர் பேபி சமரசத்தின் மகன் செல்வன் எழிலனுக்கும், ஒசூர் மாணிக்கவாசகம் தனலட்சுமி ஆகியோரின் செல்வி செந்துவுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை கூறச் செய்து திருமணம் நடத்தி வைத்தேன்.

மாநாட்டில் தமிழக நிதி அமைச்சர் டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நடிகர் இனமுரசு சத்யராஜ், எம்.டி.கோபால கிருட்டினன், ஆந்திர மாநிலம் விஜயவாடா, கோரா நாத்திக மய்யத்தின் அமைப்பாளர் இலவணம், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாத்திக அமைப்பின் அதிகாரப் பூர்வப் பங்கேற்பாளரான நார்மன் டெய்லர், அமெரிக்காவைச் சேர்ந்த திருமதி பார்பராஸ் டாக்கர், ஜெர்மனியைச் சேர்ந்த ஃப்ராங்க் ஷீட், லண்டனைச் சேர்ந்த பிரிட்டீஷ் ஹுமனிஸ்ட் அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் ஹாரி ஸ்டோப்ஸ் ரோப் ஆகியோர் உரையாற்றினார்கள். முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுத் தலைமை உரையாற்றுகையில், “ஒரு காலத்தில் ரசல், இங்கர்சால் போன்றவர்களை நாம் இங்குக் கொண்டு வந்தோம். இன்று தந்தை பெரியாரை பிற நாட்டவர்கள் கொண்டு செல்கிறார்கள். இது ஒரு மகிழ்ச்சிக்குரிய திருப்பம்! தந்தை பெரியாரின் தத்துவம். தலைமுறை இடைவெளி யில்லாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நம்முடைய இயக்கம், தமிழகத்தைத் தாண்டி, எல்லைகளைக் கடந்து உலக மானிட இயக்கமாக வளர்ந்து கொண்டிருக்கிறது’’ என்பன போன்ற தந்தை பெரியாரின் பல கருத்துகளை எடுத்துக் கூறினேன்.

மாநிலப் பகுத்தறிவாளர் கழக மாநாட்டினைத் தொடர்ந்து, 11.1.1996 அன்று தஞ்சை வல்லத்தில் பன்னாட்டு நாத்திக பகுத்தறிவாளர்கள் Lasse Siren (Finland), Harie Bols (Holland), Robyn Johannes (Belgium), Robert Morgan (U.S.), Pertti Holopa Nien (Sweedish), Herma Mittendorff (Holland), Eric Jacob (Germany), Norman Taylor (Australia), G.Lavanam (Vijayawada), Everelt Cross ஆகியோர் ஒன்றிணைந்து கூட்டாகத் தந்தை பெரியார் முழு உருவச் சிலையினைத் திறந்து வைத்தனர். அறிஞர்களின் ஆங்கில உரையினை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கு.வெ.கி.ஆசான் அவர்கள் மொழிபெயர்த்துக் கூறினார். நிகழ்வில் நிறைவுரையாற்றுகையில், “சிலை அமைப்புக் குழுவினருக்கும், கழகத் தோழர்களும், சிலையினை அன்பளிப்பாக வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் கு.தங்கமுத்து, ஏணிப்படி அமைத்துத் தந்த கல்வி வள்ளல் ‘வீகேயென் கண்ணப்பன், சிலையின் அடிபீடத்தை சிறப்பாக உருவாக்கித் தந்த ஈஸ்வரனார், வேழவேந்தன் ஆகியோருக்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்தேன். நமது அழைப்பின் பேரில் கலந்துகொண்ட பன்னாட்டு நாத்திகர்களுக்கு நினைவுப் பரிசளித்து, பாராட்டையும் தெரிவித்து, பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகள் காலத்தைக் கடந்து என்றும் நாட்டிற்குத் தேவை’’ என பல கருத்துகளை கூறினேன். பன்னாட்டு நாத்திகர்களை வழி நெடுக கழகத் தோழர்கள் உற்சாகம் பொங்க வரவேற்றனர்.

(நினைவுகள் நீளும்…)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *