உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்பார்களா? ஜாதி மறுப்பு திருமணங்கள்தான் சமூகப் பதற்றங்களைத் தணிக்கும் வழி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

ஏப்ரல் 16-31,2021

கர்நாடகாவைச் சேர்ந்த ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் தங்களது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பாதுகாப்புக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்த விசாரணையில், “சமுதாய விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு திருமணம் செய்துகொள்ளும் இளைஞர்களுக்கு நீதிமன்றங்கள் உதவுகின்றன. ஜாதி மறுப்புத் திருமணம் செய்யும் இளைஞர்கள், இந்தியாவில் ஜாதி மற்றும் சமூகப் பதற்றங்களைக் குறைக்க முன்னோக்கிச் செல்லும் வழியைக் காட்டுகிறார்கள். படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தாங்களே தேர்வு செய்கிறார்கள். இது ஜாதி மற்றும் சமூகம் முக்கிய பங்கு வகிக்கும் சமூகத்தின் முந்தைய விதிமுறைகளிலிருந்து விலகிச் செல்கிறது. இதுபோன்ற திருமணங்கள்தாம் ஜாதி மற்றும் சமூகப் பதற்றங்கள் குறையவும், முன்னோக்கிச் செல்லவும் இருக்கும் வழி’’ என்று தெரிவித்தது.

மேலும் நீதிபதி கவுல், “ஜாதியை நிர்மூலமாக்க உண்மையான தீர்வு திருமணமாகும் என்று நான் நம்புகிறேன். ரத்தத்தின் இணைவு மட்டுமே உறவினர் மற்றும் உறவினர் என்ற உணர்வை உருவாக்க முடியும். மேலும் இந்த உறவினரின் உணர்வு, அன்பாக இருப்பது’’ என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை அம்பேத்கரின் வரிகளை மேற்கோள்காட்டினார்.

மேலும், “ஜாதி மற்றும் சமூகத்தின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு திருமணம் செய்யும் இளைய தலைமுறை, பெரியவர்களிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறனர். இந்த இளைஞர்களின் உதவிக்கு நீதிமன்றங்கள் இருக்கின்றன. சில குடும்பங்கள் தங்கள் குழந்தைகளையும் வாழ்க்கைத் துணையையும் அந்நியப்படுத்த ஜாதி மற்றும் சமூகத்தைப் பயன்படுத்துவதற்கான நடைமுறை நீக்கப்பட வேண்டும். இத்தகைய நடைமுறை விரும்பத்தக்க சமூகப் பயிற்சியாக இருக்க முடியாது’’ என்றார்.

இதனை அடுத்து இரண்டு நீதிபதிகளும் சேர்ந்து, “வயதுவந்த இரண்டு நபர்கள் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டதும், அவர்களின் சம்மதத்திற்கு முதன்மையாக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். குடும்பம் அல்லது சமூகம் அல்லது குலத்தின் ஒப்புதல் தேவையில்லை.

எனவே, அடுத்த எட்டு வாரங்களில் போலீஸ் அதிகாரிகள் இந்த வழக்கு சார்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதுபோன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை எவ்வாறு கையாள்வது என்று சில வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சித் திட்டங்களை வகுக்க வேண்டும்’’ என்று கூறி உத்தரவிட்டனர்.

‘துக்ளக்கும்’ ‘விஜயபாரதமும்’ பார்ப்பனர் சங்கமும் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு என்ன பதில் சொல்லப் போகின்றன? ‘ஹிந்துத்துவா’ என்பது மதமல்ல – வாழ்வியல் முறை என்று உச்சநீதிமன்றம் கூறியது என்று உச்சநீதிமன்றத்தை முன்னிறுத்தி தங்களை வலிமைப்படுத்திக் கொள்ளும் பா.ஜ.க., சங்பரிவார்  –  உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்வார்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *