திருநங்கைகள் வாழ்வில் முன்னேற்றம் அடைய கல்விதான் சரியான வழி. அந்தக் கல்வி எங்களுக்குச் சரியான முறையில் கிடைப்பதில்லை. சமுதாயக் கல்லூரிகளில் எங்களுக்கு இடம் தர வேண்டும். திருநங்கைகளுக்குத் தொழிற்பயிற்சி அளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு, சுயகாலில் நிற்கும் தன்னம்பிக்கையும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற முனைப்பும் வரும்.
கல்கி, திருநங்கை
மதிப்பெண் அதிகம் பெற்ற மாணவனே உயர்ந்தவன் என்று கூறிவிட முடியாது. அனைவருக்கும் ஏதாவது ஒரு திறமை உண்டு. பள்ளிப் படிப்பு வேறு, திறமை வேறு.
வெளிநாட்டில் உள்ளதைப் போல் ஊடகங்கள் புத்தகக் கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நல்ல புத்தகங்களின் மதிப்புரையாகவும் விவாதங்களாகவும் ஊடகங்கள் மாற வேண்டும். ஊடகங்களால் வாசிக்கும் பழக்கம் பெருகும். நல்ல நூல்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது ஊடகங்களின் கடமை.
தமிழண்ணல், தமிழறிஞர் நாங்கள் ஒருபோதும் சரணடைய மாட்டோம். தாய் நாட்டைக் காக்கப் போராடுவதில் உறுதியாக இருக்கிறோம். அதுவரை எங்களுக்கு ஓய்வோ தூக்கமோ இல்லை. எங்களது கொரில்லாத் தாக்குதல் நீண்டநாள்நீடிக்கும். புரட்சிக்காரர்களிடம் லிபியாவை மக்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். எனது செல்வத்தை அவர்கள் கொள்ளையடித்து வருகிறார்கள். இது எனது மக்களுக்குச் சொந்தமானது. புரட்சிப் படையினரிடம் சிக்கிய திரிபோலியை இஞ்ச் இஞ்சாக மீட்போம். அதேபோன்று மற்ற நகரங்களையும் மீட்போம்.
கடாபி, அதிபர், லிபியா
ஒவ்வொரு மக்களும் சிந்தும் கண்ணீரை மதம் சார்ந்து நோக்கக் கூடாது. அவர்கள் தமிழரோ முஸ்லிம்களோ சிங்களவரோ யாராக இருந்தாலும் சரி, இன மத வேறுபாடின்றி அத்தாய்மார்கள், சகோதரிகளின் கண்ணீரைத் துடைக்க தீர்க்கமான முடிவினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது எம் கடமை ஆகும். அனைத்துப் பெண்களும் தமது உறவுகளைத் தேடுவதில் உறுதிமிக்கவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களுடைய வாக்குமூலங்களை, சம்பவங்களை தனித்தனியாக கவனத்தில் எடுத்து இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்தோடு பாதுகாப்புப் படையினரின் செயற்பாடுகள் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டதாக அரசியலமைப்புக்கு முரணாகாத வகையிலே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
– நிமல்கா பெர்ணாண்டோ, இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர்
உலக அரங்கில் இந்தியா தூக்குத் தண்டனைக்கு எதிராகப் பேசி வருகிறது. ஆனால், அய்.நா. சபையில் தூக்குத் தண்டனைக்கு எதிரான சட்டப்பிரிவில் கையெழுத்திட மறுக்கிறது. அதோடு, 2010இல் அமெரிக்காவின் ஒரு மாகாணத்தில் தூக்குத் தண்டனைக்கு எதிரான ஒரு சட்டம் கொண்டு வந்தபோது, அதை இந்தியா ஆதரித்தது. ஆனால், உள்நாட்டில் மரண தண்டனைக்கு ஆதரவாக உள்ளது. ஆக, இந்தியா இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது.
– சையத் அப்துல் ரஹ்மான் கிலானி, மனித உரிமை ஆர்வலர்
ஏழைகள்தான் மரண தண்டனைச் சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பணம் படைத்தவர்கள் பிரபலமான வழக்குரைஞர்களை வைத்துத் தப்பிவிடுகிறார்கள். எனவே, இந்தச் சட்டப்பிரிவு தேவையில்லை.
அப்துல்கலாம், மேனாள் குடியரசுத் தலைவர்