சிந்தனைத் துளி – தந்தை பெரியார்

செப்டம்பர் 16-30

புராணப் பண்டிதர்களைப் பொதுமக்கள் ஆதரிப்பது கொள்ளியை எடுத்து தலையைச் சொறிவது போன்றது.

மதக்குறி என்பது மாட்டு மந்தைக்காரன் தனது மாடுகளுக்குப் போடும் அடையாளம் போன்றதே.

கல்லைக் கடவுளாக்கும் மந்திரங்கள் ஏன் ஒரு மனிதனை மற்ற மனிதனுக்குச் சமத்துவமான மனிதனாக்கக் கூடாது?

மனிதனுக்கு இன்று வேண்டியது பணமோ, வீடு, வாகனமோ அல்ல. புத்தி வளர்ச்சிதான்.

மதக் கட்டளைகளையும் கடவுள் நம்பிக்கையையும் கொண்ட அடிமை ஒரு நாளும் விடுதலையடைய முடியாது.

மனிதனுக்கு வெட்கமும், ரோசமும் ஏற்படவே சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டது.

மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் பள்ளியில் படிக்கும் காலத்தை வீணடிக்கக் கூடாது.

கடவுள் என்று சொல்லப்படுவது உயர்குணப் பண்பே ஒழிய, அது ஒரு உருவமல்ல; வஸ்துவல்ல.

உங்களை ஆள்வது கடவுளோ, மதவாதிகளோ அல்ல; உங்கள் அறிவுதான்.

முன்னோர் சொல்லிப்போனது அற்புதமுமல்ல; அதிசயமுமல்ல. அதை அவர்களிடமே விட்டுவிட்டு, உன் அறிவுக்கு முதலிடம் கொடு.

மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும்.

சர்வ சக்தியுள்ள கடவுளுக்கு, தன்னைப் பற்றித் தெரிவித்துக் கொள்ள தன் உருவத்தை விளக்க சக்தி இல்லை.

பணம் சம்பாதிப்பதில் போட்டி போடுவதைவிட புத்தி சம்பாதிப்பதில் போட்டி போடு.

சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு.

பெண்கள், தங்களைப் பிறவி அடிமை என்று      நினைப்பதை மாற்ற வேண்டும்.

உழைப்பதெல்லாம் நம்மவர்களாக இருந்தும் கீழ்ஜாதியாகத்தானே வாழ்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *