குழந்தை மனநிலை

ஜூலை 01-15

பெற்றோர் கடமை என்ன?

– மு.வி.சோமசுந்தரம்

எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும். கல்வி என்றால் இவை இரண்டும் தேவை என்பர். அடிப்படைக் கல்விக்கு 3ஆர் ‘3‘R’s’ என்று கூறுவர். படிப்பது, எழுதுவது, கணக்கு அறிவு என்பவை இம்மூன்றும் ஆங்கிலத்தில் Reading, Writing, Arithmetic  என்று கூறுவர். குழந்தை ஒவ்வொன்றுக்கும் இந்த மூன்று அறிவும் கல்வியின் துவக்கம் என்பர். முழுமைக் கல்விக்கு மேலும் மூன்று தேவை என்பர். கல்வியில் உளநூல் வல்லுநர், டாக்டர் ஜான் இர்வின் இதுபற்றிக் கூறுவதாவது: பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துதல், தங்களுக்குள்ள பொறுப்புகளை உணர்தல், தம்மை ஒத்த வயதுடையோருடன் பழகும் தன்மை.

பெற்றோர்கள் இக்குணநலன்களை வளர்ப்பது எப்படி? படிப்பதால் இவை கிடைப்பதல்ல. சூழ்நிலைப் பிடிப்பில் வரவேண்டியது. இந்த அடிப்படைப் பண்புகள், கல்வி அறிவு மேம்பாட்டிற்கு வலுவூட்டத் துணை செய்யும். வெற்றி வழி கல்வி கற்க உதவும் நல்வழி அணுகுமுறைகள் நான்கைக் கூறலாம். அவை: செயல்பட உந்துசக்தியாக இருத்தல் (Motivation), தன்னம்பிக்கை வளர்த்தல், (Confidence) விடாமுயற்சி, (Persistence) எதிர்கொள்ளும் துணிவு (Resilience).

இந்த நான்குவகைச் செயல்பாடுகளும் எல்லாக் குழந்தைகளிடத்தும் உள்ளவையே. பள்ளியில் பயிலும் குழந்தைகள், ஒவ்வொரு நிலையில் இதன்வழிச் செயல்படுகின்றன. இவர்களை பெற்றோர்கள் எப்படித் தழைக்கச் செய்வது என்பதே முக்கியம்.

உந்துசக்தியாக இருத்தல்

பெரும்பாலும் குழந்தையைச் செய்யச் சொல்லும் ஒரு காரியம் நாம் விரும்பும் ஒன்றின் நோக்கமாகத்தான் இருக்கும். குழந்தைகள் மண்டுகள் அல்ல. குழந்தைகள் நன்கு கணிக்கும். உடனோ அல்லது பிறகோ மோதல்தான் ஏற்படும். குழந்தை நாம் கூறுவதைத் தேவை என்று ஏற்றுக்கொள்வதாக இருக்கவேண்டும். இல்லையென்றால் வளரும் காலத்தில் எதிர்ப்பு உணர்வு தலையெடுக்கும். அதன் தேவையைக் கவனித்துச் செயல்படத் தூண்டவேண்டும். நாம் திணிப்பாக இருக்கக்கூடாது. இதனை எப்படிச் செய்வது?

வாழவேண்டும் என்ற எண்ணம், தன்னுடையது என்று நினைப்பது, தன்னிடமும் சக்தி உள்ளது என்று எண்ணுவது, சுதந்திரம், மகிழ்ச்சியான பொழுதுபோக்கு ஆகிய வகையில் குழந்தை வளர வேண்டும்.

தந்தை, தாய், நண்பர்களுடன் நேரத்தைக் கழிப்பது, குழு விளையாட்டுகளில் பங்குகொள்வது ஒன்று.

வீட்டில், வீட்டுத் தேவைக்கான சிறு வேலையில் ஈடுபடுவது, பொறுப்பை ஏற்றுக்கொள்வது. (குளியல் அறையைச் சுத்தம் செய்வது, வீட்டு நாய், பூனையைக் கவனிப்பது, வீட்டுப் பொருள்களைத் துடைத்து சுத்தம் செய்வது போன்ற வேலைகள்) கைச்செலவுக்கு என்று பணம் பெறுவது, அதனைத் திட்டமிட்டுச் செலவு செய்தல், தன் தனி சக்தியை வெளிப்படுத்த உதவும்.

சுதந்திரமும், பொழுதுபோக்குவதும் என்ற வகையில், சுற்றுலா செல்லத் திட்டமிடுதல், தோழர்களைத் தேர்ந்தெடுத்தல், நண்பர்களை வீட்டுக்கு அழைத்தல், நூலகத்திலிருந்து புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வருதல், தான் செய்யவேண்டிய வேலைகளின் நேரத்தைக் கணக்கிட்டு ஒதுக்குதல் என்ற வகையில் பயிற்சி பெறலாம்.

தன்னம்பிக்கை

கல்வி மேம்பாட்டிற்குத் தன்னம்பிக்கை முக்கியம். தன்னம்பிக்கை, தன் மதிப்பைத் தேடித் தருகிறது. எந்த ஒரு புதிய பணியையும், விருப்பத்துடன் செய்து முடிக்க, அதன் மூலம் அறிவு பெற தூண்டுகோலாக இருப்பது தன் மதிப்பு குணம்.

பெற்றோர்களை, குழந்தைகள் முன் மாதிரியாகக் கொள்கின்றன. பெற்றோர்கள், தன்னம்பிக்கையற்றவர்களாக, திறமை அற்றவர்களாக, ஏக்கம் மிக்கவர்களாக இருப்பின் பிள்ளைகள் அப்படியே இருப்பர் என்பதில் வியப்பேதும் இல்லை. செயல் சிறப்பாக அமைந்தால் பாராட்டுங்கள், தொடர்ந்து செய்யத் தட்டிக்கொடுங்கள். புதிய சவால்களை எதிர்கொள்ள ஊக்கப்படுத்துங்கள். அவர்கள் பேசுவதை விருப்பமுடன் செவிமடுக்க வேண்டும். பேச்சைக் கவனியுங்கள். ஒழுக்கத்தை நிலைநிறுத்த, தவறான செயலின் தன்மையைச் சுட்டுங்கள். தவறு செய்த குழந்தையை அல்ல. குழந்தையுடன் சேர்ந்து சிரியுங்கள். அது, நம்மைக் குழந்தையுடன் ஒன்றாக இணைக்கும்.

விடா முயற்சி

விடா முயற்சி குணம் இல்லாத குழந்தை, எடுத்த செயலை இடையில் விட்டுவிடும். ஒன்றுக்கு உடன் விடை தெரியவில்லையென்றால், முகம் சுளிக்கும், ஆத்திரப்படும். இது கடினமான வேலை. நான் இதைச் செய்யமுடியாது என்று தட்டிக் கழிப்பர். குழந்தைகளின் முயற்சிக்குக் கைகொடுங்கள். முழு விடையைக் கொடுக்காதீர்கள். யூகிக்கச் செய்யுங்கள். குறிப்புகளைக் கொடுங்கள். விடையை வழங்காதீர்கள். விடை கொடுக்க நினைத்தால் படிப்படியாகக் கூறி, விளக்கமும் கூறுங்கள். சிறு வயதில், குழந்தைகள் ஏதேனும் ஒரு தேடுதல், அல்லது ஆய்வுவகையான முயற்சியில் ஈடுபட்டால், நாம் அதில் தலையிட்டு அதை எளிமையாக்க வேண்டாம். குழந்தைகள் முயலட்டும். மீண்டும் முயன்று பார்க்கட்டும். சிறிது தோல்வி கண்டாலும் சரியே. முயற்சியைப் பாராட்டினால் மீண்டும் அதனைத் தொடர்வர்.

பெரிய பணியை ஒப்படைக்காதீர். சுமையான பணியை பகுதி பகுதியாக்கிக் கொடுங்கள். கட்டம் கட்டமாகச் செய்யட்டும்.

எதிர்கொள்ளும் துணிவு

குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்க ஆசைப்படுகிறோம். சில சமயம் ஏமாற்றம் அடைகிறோம். எதனையும் எதிர்கொள்ளும் குணம் கொண்ட குழந்தை தன்னம்பிக்கையுடன் இருக்கும். இத்தகையோர் பிரச்சினையுடன் வாழமாட்டார்கள். பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலும் ஈடுபடுவர். விழிப்புடன் இருப்பர். மற்றவர் உதவியை நாடுவதில் நாட்டமில்லாதவர்கள்.

சில செயல்கள், எதிர்கொள்ளும் துணிவைப் பாழடித்துவிடும்.  அவர்களுக்கு, பாதுகாப்பு என்ற எண்ணத்தில் பிடிக்காத ஒன்றிலிருந்து அவர்களை ஒதுங்கச் செய்தல், சலிப்பில் இருக்கும்போதோ, சங்கடத்தில் இருக்கும்போதா, நாம் வலிய சென்று தலையிட்டு, அவர்கள் சவால்களைச் சமாளிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுவது, இந்தப் பண்பை வளர்க்க உதவியாக இருக்காது.

சில நேரங்களில் துன்பமோ, சலிப்போ கொள்ளும்போது, அதை அங்கீகரித்து, அந்தச் சூழ்நிலையின் படிப்பினை அறியவும், நடப்பவை நல்லதாக இருக்க முயற்சிக்கவும் கூறலாம். நகைச்சுவையை காலம் அறிந்து பயன்படுத்தி துன்ப மனநிலையை நீக்கலாம். நிபந்தனையற்ற அன்பைக் காட்டவும். மற்றவர்கள் கூறுவதைப் புறந்தள்ளி நாம் குழந்தையை நேசிக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *