பா.ஜ.க.வின் முகமூடிகள்

ஜூலை 01-15

நாட்டில் ஊழல், லஞ்சத்தை ஒழிக்க எவரும் குறுக்கே நிற்க மாட்டார்கள். அப்படியே உள்ளுக்குள் விரும்பும் நபர்கள் ஆனாலும்கூட, வெளிப்படையாக அதை ஆதரிக்க எவருக்கும் துணிவு வராது.

ஊழலை, லஞ்சத்தை ஒழிக்க நம் நாட்டில் திடீர் அவதாரங்களும், புதிய டூப்ளிகேட் மகாத்மாக்களும் கதர் அணிந்தும், காந்தி குல்லா போட்டும், காவி உடை அணிந்தும் இந்த தேசத்தைக் காப்பாற்ற புதிய கோடீசுவரர்களும், வருமானத்தில் பகுதியைக் கணக்கில் காட்டாத கண்ணியவாதிகளும் திடீரென தேர்தலில் நிற்காமலேயே நாடாளுமன்றச் சட்ட வரைவைத் தயாரிக்கும் குழு உறுப்பினர்களாகிவிட்டார்கள் – மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையின் இரட்டை வேடத்தாலும், கையாலாகாத்தனத்தாலும்!

லோக்பால் மசோதா தயாரிக்கும் குழுவில் இடம் பெற்ற சிவிலிட்டி உறுப்பினர்கள் பஞ்சபாண்டவர்களுக்கு – அரசியல்  சட்டத்தின் எந்த விதிப்படி இடம் கிடைத்தது என்பது மத்திய அரசுதான் விளக்க வேண்டிய அரசியல் புதிர்!

இதைவிட இந்திய ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கி, நாடாளுமன்றத்தையே பரிகசிக்கச் செய்யும் கேவலம் உலக வரலாற்றில் எங்கு தேடினாலும் கிடைக்காது!

அதில் இன்னும் கொடுமை என்னவென்றால் உண்ணாவிரதம் என்ற பிளாக்மெயில் நாடகம்! அதற்கு இணங்கும் தவறான முன்மாதிரிகள்; பிறகு மேலும் அத்தகைய சட்டத்திற்கு அப்பால் அமைந்த    –  பஞ்ச பாண்டவர்கள் – ஹசாரே என்ற பேர்வழி தலைமையில் அவர் குறிப்பிட்டவர்களை – அப்பா – பிள்ளை ஒரே கமிட்டியில் உட்பட இடம் பெற்ற நிலையில், இன்றுதான் காலங்கடந்த ஞானோதயம் மத்தியில் ஆள்பவர்களுக்கு வந்து, சட்டவரைவை நாடாளுமன்றம்தான் செய்ய முடியும்; மற்றவர்கள் நிபந்தனை விதிக்க முடியாது! என்று கூறிடும் பரிதாப நிலை!

இந்தச் சூழ்நிலையில், ஹசாரேக்கள் ஜோக்பால் மசோதா இது; லோக்பால் அல்ல என்று (ஜோக்கர்களைச் சேர்த்ததால் அப்படிக் கூறுவது ஒரு வகையில் பொருத்தமாகக்கூட இருக்கலாம்) கூறுகிறார்கள்!

இந்தத் திடீர் ஹசாரேக்கள் மீண்டும் இந்திய (மத்திய) அரசை மிரட்டுகிறார்கள். மறுபடியும் உண்ணாவிரதம் என்கிறார்! அரசுக்கு ஆகஸ்ட் 15 என்று கெடு வைத்து சவால் விடுகிறார்!

வேலியில் கிடந்த ஓணானை எடுத்து காதுக்குள் விட்டு, பிறகு குத்துது; குடையுது என்று கூறலாமா என்று கிராமவாசிகள் கேட்பார்கள். அதுதான் நம் நினைவுக்கு வருகிறது!

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். காவிகள் மீண்டும் குறுக்கு வழியில் – அடுத்த தேர்தல் வரை காத்திருக்க முடியாமல் இடையில் (அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில்) – பதவிக்கு வர இப்படி பல முகமூடி முயற்சிகளை முன்னேற்பாடாகச் செய்து பார்க்கிறார்கள்!

மத்திய அரசின் தலைமையின் இந்த அணுகுமுறை மாறிட வேண்டும்.

இல்லையேல் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது; பாசிசம்தான் ஆட்சிபுரியும் என்பது உறுதி!

கி.வீரமணி, ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *