உலகப் பகுத்தறிவாளர்

ஜூலை 01-15

கிறிஸ்டோஃபர் ஹிட்சென்ஸ்

– சு.அறிவுக்கரசு

எல்லா மத நம்பிக்கைகளுமே, கெட்டவையாகவும் வளர்ச்சி பெறாத தன்மையிலுமே உள்ளன என்றார் ஹிட்சென்ஸ். நம் ஊர் இந்து முன்னணிக்காரர்கள் போலவே, சிலர் அவரைக் கேட்டார்கள், கத்தோலிக்கர்கள் என்றாலே உங்களுக்கு வெறுப்புபோல என்று!  அதற்குத்தான் அவர் மேற்காணும் பதிலைக் கூறினார்.  நெருப்புத் துண்டங்களில் முன் துண்டம் என்றாலும் பின் துண்டம் என்றாலும் நெருப்புதானே!

ஹிட்சென்ஸ், கிறித்துவராகவே வளர்க்கப்பட்டவர்.  கிறித்துவ போர்டிங் பள்ளிகளில் படித்தவர்.  ஆனாலும்கூட, சிறுவயதிலிருந்தே பிரார்த்தனை செய்யாதவராக இருந்தார்.  அவர் பாதி யூதர் என்பது அவரின் தம்பி திருமணம் செய்து கொண்டபோதுதான் இவருக்குத் தெரிய வந்தது.  தன்னுடைய 90 வயதுப் பாட்டியிடம் தம் மனைவியை அறிமுகப்படுத்திய இவரின் தம்பியிடம் பாட்டி இவள் யூதப் பெண் அல்லவா? என்று கேட்டாராம். உங்களுக்கெல்லாம் ஒரு சேதி சொல்லப் போகிறேன் என்று கூறிய பாட்டி, தாம் யூத வம்சம் என்றும், தம் குடும்பப் பெயர் LYNN அல்ல; LEVIN என்பதாகும் எனக் கூறிவிட்டு, தம்முடைய கொள்ளுப் பாட்டி யூத மதத்திற்கு மாறி கொள்ளுத் தாத்தாவைக் கல்யாணம் செய்து கொண்டதாகக் கூறினார். அதன்படி, தாய் வழியில், ஹிட்சென்ஸ் யூத மதம் சார்ந்தவர் எனும் ரகசியத்தை உடைத்தார்.

(இதில் நாம் கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு.  பெயர்களையும், குடும்பப் பெயர்களையும் வைத்து ஒருவரின் மதம், நாடு, மொழி போன்றவற்றைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அங்கே இருக்கிறது.  பிரதீப், பிரகாஷ், ரமேஷ் உமேத் என்றெல்லாம் பெயர்கள் வைத்துக் கொள்ளும் இங்கே அத்தகைய வாய்ப்பு உண்டா?)

இதுபற்றி ஹிட்சென்ஸ் கூறும்போது, நான் யூதத்தை எதிர்ப்பவன்.  பாலஸ்தீனம் என ஒன்று இல்லாமலும் பாலஸ்தீனியர்கள் என்போர் இல்லாமல் இருந்தாலும்கூட, யூதர்களின் வழித்தோன்றலாக இருப்பது தவறுதான் என்றே கூறி, தம் யூத எதிர்ப்பை உறுதிப்படுத்தினார்.

2006இல் பெனிசில்வேனியாவில் நடைபெற்ற வாதப் போரில் யூத வாழ்வு முறைகள்பற்றி மார்ட்டின் அமிஸ் என்பவருடன் வாதிடும்போது (யூதரான) கார்ல்மார்க்சின் பொருள்முதல்வாதம் உண்மையானது, முதலாளித்துவத்தின் உண்மையான முகத்தைப் புரிந்து கொள்ளவில்லை எனக் குறிப்பிட்டார்.

சேகுவாராவின் செயல்பாடுகள் அவரைக் கவர்ந்தன.  அவருக்கு ஏற்பட்ட கொடிய முடிவு அவரை மிகவும் பாதித்தது.  நான் இப்போது சமதர்மவாதி (சோஷலிஸ்ட்) அல்ல என்றாலும் நான் மார்க்சிஸ்ட் எனக் கூறிக்கொண்டார்.

சோவியத் நாட்டின் வி.அய். லெனின், லியோன் ட்ராட்ஸ்கி ஆகிய இருவருமே சிறப்பானவர்கள் எனக் குறிப்பிட்ட அவர், மதநீக்கம் செய்யப்பட்ட (SECULAR) ரஷ்யாவை உருவாக்கியதற்காக லெனினைப் பாராட்டினார்.  அதே வேகத்தில், ரஷ்ய பழமை வாத சர்ச்களை செல்வாக் கிழக்கச் செய்ததற்காகவும் லெனினைப் புகழ்ந்தார்.  அவை பிற்போக்குத்தனம், கேடு கெட்ட மூடநம்பிக் கைகளின் உறைவிடமாக விளங்கின எனக் காரணம் கூறினார்.  உண்மை தானே!

கடவுள் ஒன்றும் பெரிதல்ல எனும் நூல் நாட்டளவில் சிறந்த நூல் என்கின்ற விருதுக்கு 2007 இல் பரிந்துரைக்கப்பட்ட பெருமையைப் பெற்றது.  உலகம் முழுக்க விற்பனையில் சாதனை படைத்த நூலாகும்.  தேசிய மதவிலக்கு (செக்யுலர்) சங்கத்தின் முக்கியமான நான்குபேர்களில் ஒருவராக இவர் ஆக்கப்படுவதற்குக் காரணமான நூலாகவும் இது அமைந்துள்ளது. சுமார் 300 பக்கங்கள் கொண்ட இந்நூல் மதங்களின் மாய்மாலங்களை, முரண்பாடுகளை, பொய்க்கருத்துகளை அக்குவேறாக ஆணி வேறாக அலசி ஆய்ந்து பிய்த்துப்போட்டுவிட்டது.

கொடுமைகளின், கேடுகளின் உச்சத்திற்கே மனிதர்களை மதங்கள் துரத்தி அடித்திருக் கின்றன என வருணிக்கும் ஹிட்சென்ஸ், ஆதாரங்களை அடுக்கடுக்காகத் தந்துள்ளார். ஆண் – பெண் சேர்க்கையின்றி கடவுள்கள் பிறந்துள்ளன என்பதற்குக் கிறித்துவக் கதையைப் போலவே, பிற மதக் கதைகளை எடுத்துக் கூறுகிறார்.  கிரேக்கக் கடவுள் ஜூபிடர் கண்ணிப் பெண்ணானடானே மீது தங்கத்தால் குளிப்பாட்டியபோது குழந்தை பிறந்த கதை, காட்லிகஸ் என்பவள் இறகுப்பந்து ஒன்றைத் தன் மார்போடு அணைத்தபோது கருத்தரித்தது, மாதுளம் பழம் ஒன்றை மரத்திலிருந்து பறித்து மார்பில் அடக்கிய நானா, குழந்தைக் கடவுள் அட்டிசைப் பெற்றெடுத்த கதை, மங்கோலிய மன்னனின் மணமாகாத மகள் பெருத்த வெளிச்சம் தன்மீது பட்ட காரணத்தால் செங்கிஸ்கானைப் பெற்ற கதை, இகிசுக்குப் பிறந்த ஹோரஸ், கன்னிப்பெண் மையாவுக்கு மெர்க்குரி பிறந்தது என பல கதைகளை எடுத்துக் காட்டிக் கிண்டல் செய்துள்ளார்.

பைபிளின் பழைய ஏற்பாடு செய்த கேடுகளைவிட புதிய ஏற்பாடு அதிகக் கேடுகளைச் செய்துள்ளது என்பதை எண்பித்துள்ளார். யூத, கிறித்துவ மத நூல்களின் செய்திகளை எடுத்துப்போட்டு எழுதப்பட்டது குர்ஆன் என ஆதாரங்களோடு மெய்ப்பிக்கிறார்.

கத்தோலிக்க மதத்தில் சிலரைப் புனிதர் என்றாக்கும் சடங்கு ஒன்று உண்டு.  யேசுவுடன் தொடக்கத்தில் சீடர்களாக இருந்தவர்களை இம்மாதிரி புனிதர்கள் (SAINT) என அழைப்பது உண்டு.

12 புனிதர்களோடு நின்றுவிடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ, கத்தோலிக்கம் இப்பட்டத்தைப் பலருக்கும் தந்து வருகிறது.  இதற்கான தகுதி என அவர்கள் வைத்திருப்பது அற்புதங்கள் நிகழ்த்தியிருக்க வேண்டும் என்பதுதான்.  அற்புதங்களைச் செய்யாவிட்டால் மதங்களே கிடையாது.  மதங்களை யாரும் நம்ப மாட்டார்கள்.  குறிப்பாக கிறித்துவம் அற்புதங்களின் அடித்தளத்தில் எழுப்பப்பட்டு வளர்க்கப்பட்ட மதம்தான்.  அந்நிலை இன்றளவும் தொடர்கிறது.

இதற்காக போப் ஒரு விசாரணை நடத்துவார்.  அற்புதங்களுக்கு எதிரானவர்கள் கூட அழைக்கப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள்.  இந்தமாதிரி ஆள்கள் சாத்தானின் வக்கீல்கள் (DEVIL’S ADVOCATES) என்று அழைக்கப்படுவார்கள்.  (இந்தத் தலைப்பில் புதுடெல்லி தொலைக்காட்சியில் கரண்தாப்பர் நடத்தும் நிகழ்ச்சி உண்டு) அப்படி சாத்தானின் வக்கீலாக அழைக்கப்பட்ட பெருமையும் ஹிட்சென்சுக்கு உண்டு.

அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி, ஒரு கன்னியாஸ்திரிக்குப் புனிதர் பட்டம் கொடுப்பது பற்றியது. அல்பேனியா நாட்டைச் சேர்ந்த ஆக்னஸ் போஜக்ஜியு என்பவர் தொடர்புடையது. இயற்பெயரால் அறியப்பெறாமல் சூட்டிக் கொண்ட பெயரால் உலகம் முழுக்கத் தெரிந்தவரான மதர் தெரசாதான் அவர். மால்கம் முகரிட்ஜ் எனும் சுவிசேஷப் பிரசங்கி இப்பெண்மணி அற்புதங்கள் செய்ததாகக் கதை கட்டிவிட்டவர்.  பி.பி.சி. தொலைக்காட்சியில் இவர் எடுத்த விவரணப்படத்தின் மூலம் செய்தி உலகுக்குப் பரப்பப்பட்டது.  தெரசா செய்த அற்புதம் ஒன்றும் பிரமாதமானதல்ல.  அவர் நடத்திய மரண இல்லம் (HOUSE OF THE DYING) கட்டடத்தில் படப்பிடிப்புக்குப் போனபோது, அது போதுமான இயற்கை வெளிச்சமோ, ஒளி விளக்குகளோ இல்லாமல் இருந்தது. படம் பிடித்தால் சரியாக வருமா எனும் அய்யம் இயக்குநருக்கு ஏற்பட்டது காமெராமேன் கென் மாக்மில்லன் என்பார் மிகவும் நம்பிக்கையுடன், புத்தம்புதிய கோடக் (KODAK) ஃபிலிம் வைத்திருக்கிறேன், அதில் படம் எடுத்துப் பார்க்கலாம் என்று நம்பிக்கையுடன் கூறிப் படம் எடுத்து முடித்தார்.  பிறகு கட்டடத்திற்கு வெளியேயும் படம் எடுத்தார்கள்.

இரண்டு மாதங்கள் கழித்து படம் எடுத்தவரையில் ரஷ் போட்டுப் பார்த்தபோது,  கட்டடத்தின் உள்ளே எடுத்தவை மிகப் பிரமாதமான ஒளி அமைப்பில் படம் எடுக்கப்பட்டிருந்தது.  வெளியே எடுத்த படம் அவ்வளவு தெளிவாக வரவில்லையாம்.  ரஷ் பார்த்த மால்கம் முகரிட்ஜ் ஆ!  இதுதான் தெய்வீக ஒளி!  அதுதான் மதர் தெரசா!  அதுதான் அவருடைய தெய்வீக ஒளி என்று கூச்சல் போட்டார்.  அந்தக் கூச்சல்தான் மதர் தெரசாவின் அற்புதத்தை உலகுக்கு அறிவித்தது.

இன்னொரு கதையும் அன்னை தெரசா நிகழ்த்திய அற்புதமாகக் கூறப்பட்டது.  1997 இல் தெரசா இறந்தார்.  அவர் அணிந்திருந்த ஓர் அலுமினிய மெடலைத் தன் அடிவயிற்றில் வைத்துக் கொண்டிருந்த மோனிகா பெஸ்ரா எனும் பெண்ணுக்கு, நீர்த்தாரையில் ஏற்பட்டு இருந்த கட்டி குணமாகிவிட்டதாம்.  தெரசாவின் உடலில் இருந்த மெடலுக்கே இந்தச் சக்தி இருந்தது என்று அவர் இறந்து ஒரு ஆண்டுக்குப் பிறகு கதை பரப்பப்பட்டது. இதனை மோனிகா பெஸ்ராவின் கணவர் செல்கு முர்முவும் நம்பவில்லை.  மோனிகாவுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் மஞ்சு முர்ஷத், டி.கே. பிஸ்வாஸ், ரஞ்சன் முஸ்டாபி ஆகிய யாருமே ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் கத்தோலிக்கக் கிறித்துவர்கள் அவர்களின் தலைவர் போப் போன்ற மோசடிக் கும்பல் நம்புவதாகக் கூறி புனிதர் பட்டம் வழங்கப் போகிறார்கள்.

மிகச் சிறந்த நாத்திகரான ஹிட்சென்ஸ் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆள்பட்டுப்போய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுவிட்டார்.  தொண்டையிலிருந்து வயிறுவரை இருக்கும் உணவுக் குழாயில் புற்றுநோய்ப் பாதிப்பு ஏற்பட்டு அதன் விளைவாக, பேச இயலாமல் சிரமப்படுகிறார்.  அதன் விளைவாக இந்த ஆண்டு (2011) அமெரிக்க நாத்திக அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.  மாநாட்டுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் என்னுடைய பேச்சுக் குரலை எழுப்ப இயலாத நிலை ஒன்றுதான் நான் உங்களோடு இருக்கமுடியாத நிலையை உண்டாக்கிவிட்டது. அதுவும்கூட, காலின் கொடுங்கோலுடன் நான் வாதம் செய்துவருவதால் ஏற்பட்ட விளைவுதான்  என்றே நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில், கடவுள் உண்டா? எனும் தலைப்பில் இவருடன் வாதிட்டவரான அறிவியல் அறிஞர் ஃபிரான்சிஸ் காலின்ஸ் என்பவர் தேசிய நலவாழ்வு மய்யத்தின் இயக்குநராக இருக்கிறார்.  அவர்தான் இவருக்கு மருத்துவம் செய்கிறார்.  எதிர் எதிரான கொள்கைகள் இருந்தாலும் இருவரும் இனிய நண்பர்கள்.  காலின்ஸ் தம் நண்பரான ஹிட்சென்சுக்காகப் பிரார்த்தனை செய்வதாகவும் அது தெய்வீக சக்தியின் உதவியை நாடுவதற்காக அல்ல என்றும் மருத்துவமுறைகளின் மூலம் அற்புதங்கள் ஏதும் நிகழாதா எனும் எதிர்பார்ப்புக்காக மட்டுமே என்றும் வாஷிங்டன் போஸ்ட் ஏட்டில் எழுதியுள்ளார்.

மதவாதியால் நேசிக்கப்படும் உறுதியான நாத்திகரான ஹிட்சென்ஸ், தாம் மரணத்துடன் போராடி வருவதாகவும், இப்போராட்டத்தில் இதுவரை யாரும் வென்றது  கிடையாது என்பதைத் தாம் உணர்ந்திருந்தாலும் போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.  நாத்திகர்கள் அனைவரும் அரசையும் மதத்தையும் பிரிப்பதற்கும் அரசு விசயங்களில் மதங்களின் தலையீட்டைத் தடுத்திடவும், மத, கடவுள் நம்பிக்கைகளை விட்டுவிடச் செய்வதற்கு உழைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இறப்பது என்பது இயற்கையானது.  அதனைத் தடுத்திட முடியாது.  அதனை எதிர்கொள்ள வேண்டும்.  இறுதிக் காலத்தில் சங்கரா, சங்கரா எனக் கூப்பாடு போட்டுப் பிழைத்துக் கொள்ளலாம் என்பதோ, செய்த தவற்றிற்காகப் பிராயச்சித்தம் தேடிக் கொள்ளலாம் என்பதோ முட்டாள்தனமானது என்பதைத் தெளிவாகத் தெரிவித்துள்ள ஹிட்சென்ஸ் இன்னும் 5 ஆண்டுக் காலம் வாழலாம் என மருத்துவர்கள் கூறியிருப்பதால், மருந்துகளால் நோய் தீருமா?  எனும் எதிர்பார்ப் புடன் மட்டுமே இருந்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *