நாத்திக வாழ்வு

ஜூலை 01-15

100 வயது பெரியார் தொண்டர்

பெரியார் தொண்டர்களுக்கு சமூகத்தில் வாழ்த்துகள் அதிகம் கிடைப்பதில்லை. வசவுகளே கிடைக்கும். அதுவும் பெரியாரின் பிரச்சாரம் கடுமையாக இருந்த 1930 –  40களில் என்றால் கேட்கவே வேண்டாம். கருப்புச் சட்டைக்காரன், சுனா மானா, குடைத்துணிக் கூட்டம் என்றெல்லாம் ஏச்சுக்களும் பேச்சுக்களும் மலிந்த காலம் அது. சாமி இல்லை, ஜாதி இல்லை, மதம் இல்லை, பூதம் இல்லை என்று சொல்லுகிறார்கள் என மூடநம்பிக்கையில் ஊறிய மக்கள் ஏசிக்கொண்டிருந்த காலத்தில் பெரியாரின் வழியில் சென்ற பல்லாயிரக்கணக்கான தொண்டர்களில் ஒருவராகத் தன்னை இணைத்துக் கொண்டவர் இரா. ராதா கிருஷ்ணன்.

இரயில்வே துறையில் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இப்போது அவருக்கு வயது 100. இன்றும் சுறுசுறுப்போடு திகழும் இவர் நல்ல ஆரோக்கியத்தோடு காரைக்குடியில் வாழ்கிறார். இந்த ஜூன் 21இல் 100 வயதை எட்டிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு காரைக்குடி மாவட்ட தி. க. தோழர்கள் வாழ்த்துக் கூறி கேக் வெட்டச் செய்தனர். அவரது வாழ் விணையர் சொர்ணவல்லி அம்மாள் தனது 89 ஆவது பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி அவரது கணவருக்கு கேக் ஊட்டினார். பதிலுக்கு அய்யா ராதாகிருஷ்ணன் தனது துணைவியாருக்கு கேக் ஊட்டினார். இருவரும் மலர்மாலை மாற்றிக் கொண்டனர்.

இத்தனை ஆண்டு கால வாழ்க்கையில் கொள்கையில் இருந்து சற்றும் பிறழாமல் வாழ்ந்து வருவதைக் குறிப்பிட்டு கழகத் தோழர்கள் பாராட்டிப் பேசினர். மிக உற்சாகமாகப் பேசிய ராதாகிருஷ்ணன்,

எனது பதினெட்டு வயதில் திருச்சி தேவர் ஹாலில் நடைபெற்ற தந்தை பெரியார் கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கேற்றேன். அன்றிலிருந்து இன்றுவரை தந்தை பெரியாரின் கொள்கையில் உறுதியாக இருந்ததால்தான் நூறு வயதுவரை ஆரோக்கியமாக வாழ்ந்து  கொண்டிருக்கிறேன். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எனது மனைவியின் தாலியை அறுத்துவிட்டேன். அன்றைக்கு, எல்லோரும் என்னை, நீ சீக்கிரம் சாகப் போகிறாய் என்றார்கள். ஆனால் நான் நன்றாக ஆரோக்கியமாக உள்ளேன். எனது துணைவியாரும் இன்றைக்கு 89 வயதில் நன்றாக உள்ளார். காரைக்குடி மாவட்ட கழகம் சார்பில் எனக்கு இவ்வளவு பெரிய சிறப்புச் செய்து என்னைப் பெருமைப் படுத்தியதற்கு எனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

தீவிரமான கருப்புச் சட்டைக்காரரான ராதாகிருஷ்ணன், 1962இல் திருச்சி திருவெறும்பூர் தொண்டை மான்பட்டிக்கு ராஜகோபாலாச் சாரியார் வந்தபோது காலில் கிடந்த செருப்பை எடுத்து அதில் நாமம் போட்டுக் காட்டியுள்ளார். மயிலாடுதுறை அருகில் உள்ள ஆலதண்டாபுரம் ரயில் நிலையத்தில் பணிபுரிந்தபோது பொதுக்குளத்தில் பார்ப்பனப் படித் துறையில் இறங்கி கை கால்களைக் கழுவியதற் காக அவ்வூர்ப் பார்ப்பனர்கள் இவரைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்து அடித்தார் களாம். அதன் பிறகு அவ்வூர்ப் பார்ப்பானர் ஒருவர், ரயில் நிலையத்திற்குள் இருந்த தொலைபேசியை அனுமதி கேட்காமல் பயன் படுத்தியதைக் கண்டு கோபமுற்று சூத்திரன் உள்ள அலுவலகத்தில் ஏண்டா தொட்டாய் என்று அடித்து உதைத்து விரட்டியுள்ளார். இவரது உயர் அதிகாரி பார்ப்பனர் ராமசாமி என்பவர், உனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா? என வீம்புக்குக் கேட்டாராம். சற்றும் பயமின்றி கடவுள், ஜாதிப் பற்றே கிடையாது! என்ற பதிலைக் கூறியதும் பார்ப்பன அதிகாரி, பரவாயில்லை என்னிடமே தைரியமாக உண்மையைச் சொல்லிவிட்டாயே எனப் பாராட்டினாராம்.

கோயிலுக்கோ, திருவிழாவிற்கோ போனது கிடையாது. எந்த விரதமும் இருத்ததில்லை. தீபாவளி போன்ற மதம் சார்ந்த எதையும் கொண்டாடியது இல்லை.

முற்றிலும் மூடநம்பிக்கையின் விரோதிகளாக வாழும் இணையர்கள். இன்றுவரை இவர்களைப் பாதுகாத்து வருபவர்கள் ஒரே பேரன் ஆனந்தும், மருமகள் மங்கையர்க்கரசியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பெரும்பாலும் உள்ளூரில் எங்கு சென்றாலும் மிதிவண்டியிலேயே செல்வார். சில ஆண்டுகளுக்கு முன்புவரை கழக நிகழ்ச்சிகளுக்கு மிதிவண்டியிலேயே 5 கிலோ மீட்டர் தொலைவு என்றாலும் வந்துவிடுவார், மனதையும் இளமையாகவே வைத்திருப்பார். திட்டமிட்ட வாழ்க்கை, எந்த நேரமும் சுறுசுறுப்பாக வீட்டில் ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டிருப்பது, இதுதான் நாம் இவரைப் பார்க்கும்போதெல்லாம் கண்டது.

பொதுவாக நாத்திகர்களுக்கு சாபங்கள் அதிகம்; அந்த சாபங்களையெல்லாம் புறந்தள்ளி தன் ஒழுக்க வாழ்வால் நீண்ட ஆயுளைப் பெற்று சாதனை படைத்திருக்கும் பெரியார் பெருந்தொண்டர் ராதாகிருஷ்ணன் – சொர்ணவல்லி அம்மாள் ஆகியோரை நாத்திக உலகம் பாராட்டுகிறது. மனித ஆயுளுக்கும் ஆண்டவனுக்கும் சம்பந்தமில்லை என்பதை இன்னுமொரு நாத்திகர் நிரூபித்திருக்கிறார்.

செய்தி,படங்கள்:- தி. என்னாரெசு பிராட்லா, காரைக்குடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *