Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வைக்கம் சத்யாகிரக நினைவலைகள்- சிகரம்

நூல் குறிப்பு :
நூல் :
வைக்கம் சத்யாகிரக நினைவலைகள்
ஆசிரியர் : த.அமலா,
வெளியீடு : காவ்யா,
எண் : 16, இரண்டாம் குறுக்குத் தெரு,
டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம்,
சென்னை – 600 024.
போன்: 044-23726882/9840480232
பக்கங்கள் : 160
விலை : ரூ.150/-

 

பத்திரிகைகளை அடிப்படை ஆவணங்களாகக் கொண்டு இந்த அரிய வரலாற்று ஆவணத் தொகுப்பை நூல் வடிவில் தந்துள்ளார் த.அமலா அவர்கள்.

இந்நூலின் ஆசிரியர் உரையே அனைவரையும் விழிப்படையச் செய்யும் சிறப்புக்குரியது. விருப்பு வெறுப்போடு வரலாற்றை மதிப்பீடு செய்து கருத்துக் கூறுகின்றவர்களுக்கு கீழ்க்கண்ட இந்த உரை சரியான நீதி புகட்டுகிறது.

குணா, அரு.கோபாலன் போன்றவர்கள் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்தபொழுது, பெரியார் தொண்டர்கள் பலர் ஏற்கெனவே விளக்கம் அளித்து விட்டார்கள். வைக்கம் போராட்டத்துக்கும் எங்கள் குடும்பத்துக்கும் இடையே நீண்ட காலத் தொடர்பு உண்டு என்பதால், அதைப்பற்றி விளக்கமளிக்க விரும்புகின்றேன்.

1964இல் என் 6 வயதிலேயே, என் தாத்தா (அம்மாவின் அப்பா) பொன்னுமுத்து அவர்கள் (திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அவர்ண வகுப்பைச் சேர்ந்தவர்களில் முதன்முதலாக லாரி, பஸ் போன்றவற்றின் உரிமையாளராக இருந்தவர் இவர்; அன்று அவர்ண இனத்தவருக்கு இந்த உரிமை இருக்கவில்லை என்பது நினைவில் கொள்ளத்தக்கது) வைக்கம் போராட்டத்தைப் பற்றி என்னிடம் கூறினார். அதில் தந்தை பெரியாரின் பங்கு என்ன என்பதைப் பற்றியும் அவர் சொன்னார். என் தாத்தா தெலுங்கரோ, கன்னடரோ அல்ல. அவர் தமிழர், தந்தை பெரியாரின் பணிகளை வைக்கத்திலே – திருவிதாங்கூர் சமஸ்தானத்திலே நேரில் பார்த்தவர். அவரும் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்.

வைக்கம் போராட்டத்தை நடத்தியதாகச் சொல்லப்படுகின்ற கேசவன் யார்? அவருக்கும் அந்தப் போராட்டத்துக்கும் உள்ள சம்பந்தம் என்ன? பக்கங்களைப் புரட்டும்பொழுது தெரிந்துவிடும். பாடநூல் தயாரித்தவர்களுக்குப் பணம் கொடுத்து 1970இல் பாட நூல்களுக்குள் நுழைந்தவர் அவர். வைக்கம் போராட்ட வீரர்கள் பலர் – தந்தை பெரியார்,
கே.பி.கேசவமேனன் உள்பட பலர் உயிருடன் வாழ்ந்த காலக்கட்டத்திலேயே கேரள அரசுப் பாடநூல் நிறுவனம் இந்த ‘மகத்தான’ சாதனையைச் செய்தது.

வைக்கம் போராட்டத்தைத் தொடங்கியவர்கள் யார்? இதில் தந்தை பெரியாரின் பங்கு என்ன? காந்தியடிகளின் பங்கு என்ன? என்பவற்றை அந்தக் காலகட்ட வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் இங்கே வெளிப்படுத்துவதே என் நோக்கம்.

வரலாற்று ஆவணங்கள் யாவை? ஓலைச் சுவடிகள், கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள் ஆகியவை முற்காலங்களில் நிகழ்ந்த வரலாற்றுச் செய்திகளை நமக்கு அறிவிக்கின்றன. ஆனால், இன்று பத்திரிகையைவிடச் சிறந்த வரலாற்று ஆவணம் இல்லை எனலாம்.

மலையாள மனோரமா மாத்ருபூமி, கேரள கவுமுதி போன்ற புகழ்பெற்ற நாளிதழ்கள் அன்றன்று வைக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை வெளியிட்டுள்ளன. மட்டுமன்றி, வைக்கம் போராட்டம் சம்பந்தமாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பிற பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் அவை வெளியிட்டன. இவற்றைவிடச் சிறந்த வரலாற்று ஆவணங்கள் வேறு என்ன வேண்டும்?

அவற்றை இங்கே தொகுத்து அளித்திருக்கின்றேன். வரலாற்றைத் திரிக்க நினைப்பவர்கள் கூர்ந்து கவனிக்கட்டும்.

– த.அமலா

பெரியார் மதம், ஜாதி, இனம், மொழி கடந்த மானுடப் பற்றாளர். அவரின் அனைத்துச் செயல்பாடுகளும் அதன் அடிப்படையிலானவையே! அப்படியிருக்க அவரைக் கன்னடர் என்ற கட்டத்திற்குள் அடக்கிக் கருத்துக் கூறுகின்றவர்களின் அறியாமையை அல்லது கீழ்மையை மிகச் சரியாகச் சுட்டிக் காட்டுகிறார்.

‘‘வரலாறு தெரியாத – தெரிந்துகொள்ள விரும்பாத மிகச் சிலரே பெரியாரைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். அவர்கள் திருந்தவேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது’’ என்று நூலின் இறுதியில் அவர் கூறும் கருத்து மிகச் சரியானது.

நாராயண குருவின் முதன்மைச் சீடரான மகாகவி என் குமாரன் ஆசான் 1920 ஜூலை 27ஆம் நாள் திருவிதாங்கூர் சட்டசபையில், அவர்ண இன மக்களுடைய உரிமைகளைப் பற்றி எழுப்பிய வினாக்கள், அதற்கு அரசு அளித்த பதில்கள், திருநெல்வேலியில் 24.9.1922 அன்று காந்தியடிகளுடன் டி.கே.மாதவன் நடத்திய உரையாடலில் மாதவன் கேட்ட கேள்விகள் அதற்கு காந்தியளித்த பதில்கள் 11 பக்க அளவிலும், கோகநதா (காக்கிநாடா) மாநாட்டின்போது ஆச்சாரியா பி.சி.ராயுடன் டி.கே.மாதவன் நடத்திய நேர்காணல் 14 பக்க அளவிலும், காந்தியுடன் இண்ன் துருத்தி நடத்திய உரையாடல் கேள்வி பதிலாக 12 பக்க அளவிலும்; எம்.கே.இராமன்பிள்ளை, விஸ்வநாத அய்யர், ராமய்யர், காந்தி, ராஜாஜி இவர்களுக்கிடையே நடந்த உரையாடல் 23 பக்க அளவிலும்; காந்தி நாராயண குருவுடன் நடத்திய உரையாடல் 4 பக்க அளவிலும்,  காந்தியடிகள் கவிஞர் வள்ளத்தோள் இடையேயான உரையாடல் 3 பக்க அளவிலும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளமை இந்நூலின் சிறப்பை உணர்த்தி நிற்கின்றன. ஒவ்வொரு உரையாடலும் காலத்தால் அழியாத வரலாற்று ஆவணங்களாக அமைந்துள்ளன. இந்த உரையாடல்கள் வரலாற்றைப் பதிவு செய்வதோடு, ஒவ்வொருவருடைய உள்ளம், எண்ணம், சிக்கல்களை அணுகும் பாங்கு, நோக்கம், அவர்கள் ஒவ்வொரு சிக்கலிலும் கொண்டிருந்த நிலைப்பாடு, உறுதிப்பாடு இவற்றைத் தெளிவாகக் காட்டுவனவாய் உள்ளன.

எனவே, வைக்கம் போராட்டம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் தெள்ளத் தெளிவாக, திரிபுகளுக்கு இடம் இன்றி இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள பாங்கு பாராட்டுக்குரியது.

154 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் 40 பக்கங்கள் மட்டுமே வைக்கம் போராட்டம் பற்றிய விவரங்களைக் கூறுகின்றன. எஞ்சியுள்ள 114 பக்கங்கள் உரையாடல் பதிவு மற்றும் செய்தித் தாள் பதிவாகவும் உள்ளதால், இந்நூல் ஓர் அரிய வரலாற்று ஆவணமாகும். பெரியாரின் போராட்டங்கள் தண்டனைகள், சிறை அனுபவங்கள், பெரியாரை அரசு நடத்திய பாங்கு, பெரியாரின் பிரச்சார வலிமை, மக்களின் எதிர்வினை போன்றவற்றை விரிவாக, செறிவாகப் பதிவு செய்திருந்தால் இந்நூலின் சிறப்பு பன்மடங்கு கூடியிருக்கும்.

‘‘வைக்கம் போராட்டம் துவங்கக் காரணமானவர் டி.கே. மாதவன்தான்; அதை வெற்றிப் பாதைக்குக் கொண்டு சென்றவர் தந்தை பெரியார்தான். இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை’’ என்ற இந்நூலாசிரியர் த.அமலா அவர்கள் அழுத்தமாகக் கூறும் கருத்து மிகச் சரியான, உண்மையானது. திரிபுவாதிகளுக்கு இடந்தராது, உண்மை வரலாற்றைக் கூறும் அரிய ஆவணமாய் அமைந்துள்ள நூல், ஒவ்வொரு இல்லத்திலும் இருக்கவேண்டிய நூல் ஆகும்.  m