அறிவிலியாய்த் தமிழரையே ஆக்கி விட்ட
ஆரியத்தின் சூழ்ச்சியினை உணர்ந்தோ மில்லை!
பெரியாரின் பெருந்தொண்டால் பிணித்து வந்த
பேரிருளும் முடிந்தவரை விலகிற் றிங்கே!
சரியான நடைமுறையை அறியா வண்ணம்
சழக்கர்தம் சனாதனம் தடையாய் நின்று
முறையான முன்னேற்றம் முகிழ்த்தி டாமல்
மூடநெறி நமைஇறுகக் கவ்விற் றந்தோ!
பொல்லாதார் பொய், புரட்டை முழுதும் நம்பிப்
பொற்பிழந்தே மனிதத்தைப் புதைக்க லானார்!
இல்லாத கடவுளையே இருப்ப தாக
ஏமாற்றிப் பிழைப்போரால் இழிவை எய்திக்
கல்லானார்! புல்லர்க்கே அடிமை ஆனார்!
கடன்நேர்த்தி எனத்தலையில் உடைப்பார் தேங்காய்!
செல்லாத நாணயமாய் இருக்கக் கற்றார்
சீரிழந்தும் பண்பிழந்தும் சிறுமை ஏற்றார்!
புண்ணியத்தைச் சேர்ப்பாராய்ப் பார்ப்ப னர்கள்
புளுகெல்லாம் மந்திரமே என்பார்! மோட்சம்
உண்மையிலே உளதென்பார்! சோதி டத்தால்
உளம்நோவ இராசிபலன் பார்ப்பார்! துன்பம்
நண்ணிடவே மனமுடைந்து பரிகா ரத்தை
நம்பிடுவர்! ஆயிரங்கள் கொட்டித் தீர்ப்பார்;
பன்னரிய இடர்யாவும் பறந்து போகப்
பஞ்சாங்கம் தனில்இராகு கேது பார்ப்பார்!
திருவிழாக்கள் குடமுழுக்கு, தேரி ழுத்தல்
திவசமெனத் திதிதருதல் என்றே ஏய்ப்பார்
விருப்புடனே அணிந்திடுவார் கயிற்றைக் கையில்
விதிப்பயனே என்றுமனம் நோவார்! பல்லி
தருமொலிக்கே பலன்காண்பார்! தோசம் நீங்கத்
தகவின்றிப் பூசைகளை நாளும் செய்வார்!
நகும்படியே தீர்த்தமென அங்க ணத்துள்
நடத்துகிறார் கும்பமேளா நாணக் கேடே! m